லாலி பாடிய தேசிய கீதம்.

ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் பட்டமளிப்பு நிகழ்ச்சியில், நேற்று பங்கேற்ற, கவர்னர் கல்யாண் சிங், பேசியதாவது: 'ஜன கண மன' என துவங்கும், நமது தேசிய கீதத்தின் முதல் வரியில், அதிநாயக ஜெயகே என உள்ளது. 
அந்த வார்த்தை, சுதந்திரத்திற்கு முன், நம் நாட்டில் ஆட்சியில் இருந்த பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை பாராட்டும் வார்த்தை. இப்போது, நாம் சுதந்திரம் பெற்று விட்டதால், அந்த வார்த்தையை நீக்கிவிட்டு, மங்கள என்ற வார்த்தையை சேர்க்கலாம்.

இது என் கருத்து மட்டுமே. தேசிய கவி ரவீந்திரநாத் தாகூர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இவ்வாறு, கல்யாண் சிங் கூறினார்.
பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கல்யாண் சிங். உ.பி., மாநில முன்னாள் முதல்வர்களில் ஒருவரான இவர், மத்தியில், பா.ஜ., தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதும், ராஜஸ்தான் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.
கல்யாண் சிங் கருத்து வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
இன்று பாஜக ,ஆர் .எஸ்.எஸ்,.கூட்டத்தினர் இந்திய வரலாற்றையே திருத்தி இந்துத்துவா முறைக்கு தக்கப்படி எழுதுகிற போது இந்த ஒரு கருத்து மட்டும் அவர்களை மீறி உண்மையின் பக்கம் வந்துள்ளது.
தாகூர் பிரிட்டிஷ் இளவரசர் இந்திய வருகையின் போது அவரை வரவேற்று லாலி பாடியதுதான் இன்றைக்கு நமக்கு தேசிய கீதம்.
இந்திய அன்றைய இந்திய மாகாணங்களின் புகழ்களை சொல்லி விட்டு இவ்வளவையும் ஆளும் புகழ் பெற்றவ்ர் நீங்கள்அவைகளை விட புகழ் பெற்றவ்ர். வாழ்க .அது பாரதிய நாட்டின் பாக்கியம் என்ற அர்த்தத்தில் தாகூர் பாடிய வாழ்து பாடல் தான் அது.
கல்யான் சிங் கூறியபடி அதில் சில திருத்தங்களை செய்து இந்தியாவை மட்டும் புகழும் பாடலாக மாற்றிவது நல்லதுதான்.
இந்திய தேசிய பாடலில் பிரிட்டீஷ் புகழை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும் .
இந்த ஒரு விடயத்தில் பாஜக  தலைவர் ஒருவர்  கருத்து சரியான திசையில் உள்ளது.
========================================================================
இன்று,
ஜூலை-08.

  • வாஸ்கோ ட காமா, இந்தியாவிற்கான முதல் நேரடிப் பயணத்தை துவக்கினார்(1497)
  • ம.பொ.சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன(2006)
  • வால் ஸ்ட்ரீட் ஜர்னல், முதலாவது இதழ் வெளியானது(1889)
  • இந்தியாவின் 11வது பிரதமர் சந்திரசேகர் இறந்த தினம்(2007)
========================================================================
திட்டமிட்டே அ .தி.மு.க  

அரசால் பாழடிக்கப்படும் 

மின் திட்டங்கள் .

அணு மின்சாரம் தயாரிப்பு மிகவும் ஆபத்து என்கின்றனர் . 
அதற்கான கட்டமைப்பு செலவு பல ஆயிரம் கோடிகளை தாண்டும். விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை யார் ஏற்பது என்கிற விவாதம் இன்றுவரை ஓயவில்லை. இந்நிலையில், அணுமின்சாரம் தயாரிக்க ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு யுரோனியம் தர மறுக்கிறது. 
இந்தியாவும் பலமுறை வேண்டுகோள்விடுத்தும் செவிடன் காதில் ஊதிய சங்குபோல அதை கண்டுகொள்ளவில்லை. 
இது ஒரு புறம் இருக்கட்டும். சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் அனல்மின்சாரம். நிலக்கரி, நாப்தா உள்ளிட்டவை நாளுக்கு நாள் விலை ஏறிக் கொண்டே போகிறது. நிலக்கரி கொண்டு வந்து சேர்ப்பதற்குள் அனல்மின் நிலையங்களுக்கு நுரை தள்ளிவிடுகிறது.
 இதுவும் காஸ்ட்லியான திட்டங்களில் ஒன்றாகவே இதுவரை இருந்து வருகிறது. 
ஆனால், நீர்மின் திட்டம் ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் திட்டம். சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை. ஒரே நீரை வைத்து பல இடங்களில் நீர்மின்நிலையத்தை அமைத்து மின்சாரத்தை தயாரிக்கலாம். உற்பத்தி செலவு குறைவு என்பதால், அரசு பணம் வீணாவது தடுக்கப்படும்.  இவ்வளவு சாதகமாக உள்ள நீர்மின்திட்டத்தை அதிமுக தலைமையிலான அரசு ஆதரிக்கவில்லை.
 புதியதாக உருவாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நீர்மின் திட்டத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ஒரு ரூபாய்க்கும் குறைவு. 
சூரிய ஒளி மின்சாரத்தில் சமீபத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.7 கொடுத்து வாங்க வேண்டும்.

சாதனை பின்தங்கியது எப்படி?

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் நீர்மின் திட்டத்தில் 2,284.4 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் பல மாநிலங்களை ஒப்பிடுகையில் 50 ஆண்டுக்கு முன்பு வரை நீர்மின் உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் இருந்தது. மற்ற மின் உற்பத்திக்கான செலவீனங்களை ஒப்பிடுகையில் நீர்மின் உற்பத்திக்கு தொடர் செலவீனங்கள் குறைவு. நீர்மின் திட்டத்தை பொறுத்தவரை அணைகளில் தண்ணீர் இருக்கும் போது தான் உற்பத்தியை மேற்கொள்ள முடியும். 

தமிழகத்தில் அனைத்து அணைகளிலும் போதிய நீர் உள்ள காலங்களில் கூட சரிவர மின் உற்பத்தி நடப்பதில்லை. அதாவது 2,284 மெகாவாட் உற்பத்தி திறன் இருந்தும் தினசரி 50 சதவீதத்துக்கும் குறைவாகவே மின் உற்பத்தி நடைபெறுகிறது. கோடை காலங்களில் மின் உற்பத்தி 10 சதவீதம் கூட இருக்காது.

 நீர்மின் உற்பத்தியில் ரொட்டேட்டர், ஜெனரேட்டர் போன்றவை பழுது ஏற்பட்டாலும் அதை சரி செய்வதில் போதிய அக்கரை செலுத்துவதில்லை. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

எவ்வளவு மின்சாரம் கிடைக்கிறது 

நீலகிரி மாவட்டத்தில் முதன் முதலாக பைக்காராவில் முதலில் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் பவானி நீரை பயன்படுத்தி 12 இடங்களில் நீர்மின் நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு மட்டுமே சுமார் 840 மெகாவாட் அளவுக்கு நீரை ஆதாரமாக பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.  இதேபோல் காவிரியாற்றிலும் நீர் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 

மேட்டூர் அணை மின் நிலையத்தில் 50 மெகாவாட், சுரங்கமின் நிலையம் மூலம் 200 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது.

காவிரியாற்றின் குறுக்கே மேட்டூரில் இருந்து ஈரோடு வரை செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, குதிரைக்கல்மேடு, ஊராட்சிக்கோட்டை, சமயசங்கிலி ஆகிய இடங்களில் தலா 30 மெகாவாட் திறன் கொண்ட உற்பத்தி நிலையங்கள் செயல்படுகின்றன. 

இந்த மின் நீிலையங்கள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 80 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தமுடியும். 
காவிரியாற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவை பொறுத்து 95 மில்லியன் யூனிட் வரை உற்பத்தி செய்யமுடியும்.

நீண்ட வாழ்நாள்

பொருளாதார நோக்கில் மற்ற மின் உற்பத்தியை ஒப்பிடும் போது நீர் மின்சாரம் எரிபொருள் செலவை குறைக்கிறது.

 உலகம் முழுவதும் எரிபொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. 
ஆனால் நீர்மின் உற்பத்திக்கான செலவு பல மடங்கு குறைவு. நீர்மின் நிலையங்கள் எரிபொருள் மூலம் இயங்கும் வெப்ப ஆற்றல் மின்நிலையங்களை விட நீண்ட வாழ்நாள் கொண்டவை.
 தற்போது இயக்கத்தில் இருக்கும் பெரும்பாலான நீர்மின் நிலையங்கள் பல ஆண்டுக்கு முன் கட்டப்பட்டவை. 

வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பு

நீர்மின் திட்டத்துக்கு தேவைப்படும் மனித வளம், செலவு குறைகிறது. 

ஒரு ஆறு அல்லது நதியின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டி தண்ணீரை தேக்கி வெளியேற்றும் போது அதனுடன் குறைந்த செலவில் கட்டப்படும் நீர்மின் நிலையம் அணையினை பராமரிக்க போதுமான வருவாயை தருகிறது. நீர்மின் நீர்த்தேக்கம் மூலம் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் பல திட்டங்களையும் செயல்படுத்தமுடியும். 
இயற்கை பூங்கா, நீர் விளையாட்டுகள் ஆகியவை பல நாடுகளில் அமைக்கப்படுகின்றன.
 வேளாண்மை சார்ந்த நிலப்பகுதிகள் அருகில் இருந்தால், தேக்கப்படும் நீர் வேளாண்மைக்கு பயன்படுகிறது. மேலும், நீர் மின் அணைகள் வெள்ளப்பெருக்கைத் தடுக்கவும் பயன்படுகின்றன.


உற்பத்தி விலை எவ்வளவு
நீர்மின் உற்பத்திக்கு ஆகும் செலவுகள் மிகவும் குறைவு. அதாவது ஒரு யூனிட்டுக்கு 50 பைசா. 

அனல் மின்நிலையங்கள், காற்றாலை மின்சாரத்திற்கு ரூ.6முதல் ரூ.14 வரை கூடுதலாக விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டி உள்ளது. சூரிய சக்தி மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு அதானியிடம் வாங்க சமீபத்தில் ரூ.7 வரை விலையில்ஒப்பந்தம்
 செய்யப்பட்டுள்ளது.
அரசு அலட்சியம்

நீலகிரி மாவட்டத்தில், குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ் ஏழாவது புதிய மின் நிலையம், ரூ.1200 கோடி மதிப்பில் எமரால்டு அருகே, காட்டுக்குப்பையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதற்காக, எமரால்டு பள்ளத்தாக்கில், 30 ஏக்கர் மாற்று நிலம், மின் வாரியம் சார்பில் வாங்கப்பட்டது. இங்கு அமைக்கப்படும், 4 யூனிட்டில், தலா, 125 மெகாவாட் அளவில், மொத்தம், 600 மெகாவாட், மின் உற்பத்தி மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 
இத்திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல், வனத் துறை அனுமதி கிடைத்த, ஐந்து ஆண்டுக்குள் கட்டுமான பணிகளை துவக்க வேண்டும்.
ஆனால், கடந்த ஆண்டு, ஜூன் மாதத்துடன், ஐந்து ஆண்டு கால அவகாசம் முடிந்தது. இதன் பின், மாநில அரசு விடுத்த கோரிக்கையை அடுத்து, மேலும், ஓராண்டு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
இந்த திட்டம் 2017க்குள் செயல்வடிவம் பெறவேண்டும். பணி தொடங்கிய சில மாதங்களிலேயே மின் உற்பத்திக்காக தண்ணீர் கொண்டு வரப்படும் ராட்சத குழாய் திடீரென வெடித்தது.
 இதனால், அணையிலிருந்து நீர்மின் நிலையத்தில் தண்ணீர் புகுந்தது. இதனால் 3 மாதங்களுக்கு மேல் நீர்மின் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது.

40 ஆயிரம் கோடி நஷ்டம்

தமிழ்நாடு மின்வாரியம் சுமார் ரூ.40,375 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக சட்டமன்றத்திலேயே முதல்வர் ஜெயலலிதா கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் அறிவித்தார்.

 திவால் நிலையில் இருக்கும் மின்வாரியத்தை மீட்க மின் கட்டணத்தை அரசு உயர்த்தியது. 
ஆனாலும், மின்வாரியம் நஷ்டத்தில்தான் தள்ளாடி வருகிறது. 
தனியாரிடம் கொள்முதல் செய்யும் மின்சாரத்திற்கு தமிழக அரசு ஆண்டு தோறும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் கொட்டி கொடுக்கிறது.
 தமிழகத்தின் தற்போதைய பிரதான தேவைகளில் ஒன்று மின்சாரம் என்பதில் மறுப்பதற்கில்லை. 
ஆனால் அதை வாங்க செலவிடும் பணம் அதிகமாக வேண்டுமென்றே கொடுக்கப்படுவதுதான் ஊழல் பற்றிய ஐயத்தை எழுப்புகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன் சூரிய மின் திட்டத்திற்காக தமிழக அரசு, 


அதானி குழுமத்துடன் செய்துள்ள ஒப்பந்தம் பல சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 
ஒரு யூனி்்ட் மின்சாரத்தை ரூ.7.01 கொடுத்து 25 ஆண்டுக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 
நீர்மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு 50 பைசா தான் மின்வாரியத்திற்கு செலவு. இயற்கையில் கிடைக்கும் சூரிய மின்சாரத்திற்கு ஒரு யூனிட் ரூ.7 கொடுத்து வாங்குவதன் பின்னணி குறித்தும் பல சந்தேங்கள் எழுந்துள்ளன. அதனால் தான் பல அரசியல் கட்சிகள் இந்த திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கின்றன.


வீ ணாகும் நீரை தேக்க கையாலாகா  அரசு
தமிழகத்தில் பாயும் பல ஆறுகளில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. 

குறிப்பாக காவிரியில் வெள்ளப்பெருக்கு காலங்களில் 100 டிஎம்சி வரை தண்ணீர் வீணாகிறது. 
தற்போது கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் நீர்மின் திட்டம் என்ற பெயரில் தான் தடுப்பணைகள் கட்ட தீவிரம் காட்டி வருகிறது. 
ஆனால் குந்தா, மேட்டூர், வெள்ளமலை ஆகிய இடங்களில் 1200 ெமகாவாட் திறன் கொண்ட புதிய நீர்மின் திட்டங்கள் செயல்படுத்துவதாக அறிவித்தது. அறிவிப்பு வந்து இரண்டு ஆண்டுகளாகியும் குந்தாவில் மட்டுமே பணிகள் தொடங்கியுள்ளன. 
அதேபோல் 25 மெகாவாட்டுக்கும் குறைவான திறன் கொண்ட சிறு புனல் மின் நிலையங்கள் அமைக்கும் திட்டமும் கிடப்பில் கிடக்கிறது. இந்த திட்டங்கள் செயல்படுத்தினாலே தமிழகத்தின் மின் தேவைகள் பூர்த்தியாகும். தண்ணீர் விரயத்தையும் தடுக்க முடியும்.
வழி காட்டும் சீனா

தமிழகத்தின் தற்போதைய நிலவரப்படி 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. 

ஒரு மாநிலத்திற்கே தேவைப்படும் மின்சாரத்தை நீர்மின் சக்தி மூலமே உற்பத்தி செய்கிறது சீனா. அங்குள்ள யாங்கட்சி ஆற்றின் குறுக்கே மிக நவீன தொழில்நுட்பங்களுடன் 32 ராட்சத டர்பைன்களை பயன்படுத்தி உலகிலேயே மிகப்பெரிய நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நிறுவு திறன் 18,200 மெகாவாட் என்பது நம்மை மலைக்க வைக்கும் விஷயம்.

தமிழகத்தில் மின் உற்பத்தி நிலவரம்
அனல்மின் நிலையங்களில் இருந்து - 2970 மெகாவாட்.

நீர்மின் நிலையங்களில் இருந்து - 2288 மெகாவாட்.
மரபுசாரா எரிசக்தியில் இருந்து - 996 மெகாவாட்.
அரசு காற்றாலைகளில் இருந்து - 19 மெகாவாட்.
தனியார் காற்றாலை மற்றும் நிறுவனங்களிடம் இருந்து 7,388 மெகாவாட் மின்சாரம்.
மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்குக் கிடைப்பது 3045 மெகாவாட்.

மதகுகள் பராமரிப்பிலும் அலட்சியம்
காவிரியாற்றில் உள்ள நீர்மின் அணைகள் அனைத்தும் மின்வாரியம், பொதுப்பணித்துறை இரண்டுமே இணைந்து பராமரித்து வருகின்றன. காவிரியில் தண்ணீர் திறப்புக்கு முன்பாக நீர்மின் அணைகளின் மதகுகள் கூட சரியாக பராமரிப்பதில்லை. 

கடந்த இரு வாரங்களுக்கு முன் மேட்டூர் அடுத்த செக்கானூரணி அருகே நீர்மின் நிலைய மதகு உடைந்து தண்ணீர் வெளியேறியது.
 இதனால் 3 நாட்கள் வரை தினமும் 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மற்ற கதவணைகளிலும் மதகுகள் பழுதடைந்த நிலையில் தான் உள்ளன. அவற்றை பராமரிக்கவும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் குறைந்த நீர்வரத்து காலத்தில் மதகு உடைந்தால் கூட ஒட்டு மொத்த பாதிப்பு ஏற்படும். 
இதை அதிகாரிகள் கண்டுகொள்வதேயில்லை.

தண்ணீரே அதிகம் வராத கொல்லிமலை திட்டம் சாத்தியமா?
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 4500 - 5000 அடி உயரத்தில் உள்ளது. 

இங்குள்ள அரப்பள்ளீஸ்வரர் கோயில் அருகில் ஐந்து இடங்களில் இருந்து பிரிந்து வரும் அய்யாறு என்ற நீர் ஊற்று ஒரு இடத்தில் ஒன்றிணைந்து அருவியாக கீழே விழுகிறது.
 தமிழ்நாடு மின் வாரியம் தண்ணீர் பிரிந்து வரும் ஐந்து இடங்களில் தலா ஒரு அணை கட்டி தண்ணீரை தேக்க முடிவு செய்தது. 
அந்த தண்ணீரை 3.50 கி.மீ. துாரம் சுரங்க வழித்தடம், 1.50 கி.மீ. நீர் அழுத்த குழாய் மூலம் மலை பகுதிக்கு கீழ் உள்ள புளியஞ்சோலை என்ற இடத்திற்கு கொண்டு வர திட்டமிட்டது.
இந்த நீரை பயன்படுத்தி புளியஞ்சோலையில் 20 மெகாவாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட நீர்மின் நிலையம் அமைக்க 10 ஆண்டுக்கு முன் திட்டமிடப்பட்டது.
ஆனால் கடந்த 6 மாதத்திற்கு முன் கொல்லிமலை நீர்மின் நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள தகுதி வாய்ந்த ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய மின் வாரியம் ‘’டெண்டர்’’ கோரியது.
 போதிய நீர்வரத்து உள்ள இடங்களில் மின் திட்டத்திற்கு ரூ.100 கோடி வரை செலவு ஏற்படும்.
 கொல்லிமலை திட்டத்திற்கு ரூ.300 கோடிக்கு மேல் செலவு செய்யக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 
கொல்லிமலையில் மின் உற்பத்திக்கு ஏற்ற அளவு தொடர்ந்து தண்ணீர் கிடைக்குமா என்ற சந்தேகம் நிலவுகிறது. ஆனாலும் இந்த திட்டம் செயல்படுத்த டெண்டர் கோரியது ஆச்சரியமாக உள்ளது. செயல்படுத்தக்கூடிய பல திட்டங்கள் இருக்கும் போது பலனில்லாத இத்திட்டத்தின் மீது ஆர்வம் காட்டுவது ஏன் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
நன்றி:தினகரன். 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?