முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

”மெர்ஸ”லாக கூடாது.

"""ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு புதிய நோய் வந்து உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளில் பல்லாயிரம் பேரைக் கடுமையாகப் பாதித்தது எபோலா நோய். அதன் விளைவால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் பரவி மக்களை மரண பீதிக்குள் உறைய வைத்தது. "
இந்த வரிசையில் ‘மெர்ஸ்’ எனும் பெயரில் இப்போது 
வந்திருக்கிறது மற்றொரு புதிய அபாயம்.
எபோலாவைப் போலவே மெர்ஸ் நோயும் ஒரு ஆட்கொல்லி நோய்தான். ‘மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சின்ட்ரோம்’ என்பதன் சுருக்கம் ‘மெர்ஸ்’ (MERS). 
இதுவும் ஒரு வைரஸ் நோய்தான்;
 கொரானா வைரஸ் கிருமிகளின் தாக்குதலால் வருகிறது.
 2012-ல் முதன் முதலாக சவுதி அரேபியாவில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்து இது கத்தார் ஜோர்டான், குவைத், லெபனான், ஏமன், ஐக்கிய அரேபிய நாடுகள் போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளுக்குப் பரவிய காரணத்தால், இந்த நோய்க்கு ‘மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சின்ட்ரோம்’ - ‘மெர்ஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இப்போது தாய்லாந்து, தென்கொரியா, பிலிப்பைன்ஸ், சீனா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட 25 நாடுகளில் இந்த நோய் உள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. 
இதுவரை 700-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயால் இறந்திருக்கிறார்கள். 6,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
 சமீபத்தில் தென்கொரியாவில் இந்த நோய் தாக்கிய 170 பேரில் 20 பேர் இறந்துவிட்டனர். 2000-க்கும் அதிகமானோர் அங்கு சிகிச்சையில் உள்ளனர்.

எகிப்தைச் சேர்ந்த அலி முகமது ஜகிர் எனும் மருத்துவர்தான் இந்த வைரஸைக் கண்டுபிடித்தார். 
இந்த வைரஸ் முதலில் வௌவால்களிலிருந்து ஒட்டகங்களுக்குப் பரவியது. ஒட்டகப் பண்ணைகளில் வேலை செய்பவர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவியதாகக் கருதப்படுகிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர் தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியைக் காறித் துப்பினாலோ கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி மற்றவர்களுக்கும் நோயை உண்டாக்கும். நோயாளியின் மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் வைரஸ் கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும்.
 அந்த இடங்களைத் தொட்டுவிட்டு, அதே கைவிரல்களால் அடுத்தவர்களைத் தொட்டால் கிருமிகள் அவர்களுக்கும் பரவிவிடும். நோயாளி பயன்படுத்திய கைக்குட்டை, உடை, தட்டு, போர்வை, துண்டு, சீப்பு, தலையணை, கழிப்பறைக் கருவிகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினால் நோய் எளிதாகப் பரவிவிடும்
. மெர்ஸ் நோயாளியுடன் நெருக்கமாகத் தொடர்பு உள்ளவர்கள் 6 நாட்களில் இந்த நோய்க்கு உள்ளாக நேரிடும். நோய் வந்த 10 பேரில் 4 பேர் உயிரிழப்பது உறுதி. அந்த அளவுக்குக் கொடூரமானது மெர்ஸ்.
அறிகுறிகள்
சாதாரண ஃபுளு காய்ச்சலைப் போலவே நோய் தொடங்கும். மிதமான காய்ச்சல், இருமல், தும்மல், மூக்கு ஒழுகுதல், தொண்டைவலி, உடல்வலி, தலைவலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தெரியும். நிமோனியா நோயின் அறிகுறிகளான மூச்சுவிடுவதில் சிரமம் உண்டாவது, சளியில் ரத்தம் வெளியேறுவது.
 நெஞ்சுவலி ஆகியவை தொல்லை கொடுக்கும். சுவாசக் கோளாறு அதிகமாகும்போது உயிரிழப்பு ஏற்படும்.

ஒட்டகப் பண்ணைகளில் வேலை செய்கிறவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், ஊட்டச்சத்து குறைந்தவர்கள், முதியவர்கள், ஏற்கெனவே சிறுநீரக நோய், நீரிழிவு நோய், கல்லீரல் நோய், இதயநோய், புற்றுநோய் உள்ளவர்கள் ஆகியோரை இந்த நோய் மிகச் சுலபத்தில் பாதித்துவிடுகிறது.
 இவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
சிகிச்சை? 
இன்றைய நிலவரப்படி மெர்ஸ் நோய் வைரஸை அழிக்க மருந்தோ, தடுப்பதற்குத் தடுப்பூசியோ கிடையாது.
 இந்த நோயின் அறிகுறிகள் தென்பட்டதும் அவர்களின் ரத்த மாதிரிகளைப் பரசோதனைக்கு அனுப்பி, நோய் உறுதி செய்யப்பட்டால், அவர்கள் தனி அறையில் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். 
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான மருந்துகளை அவர்களுக்கு மருத்துவர்கள் கொடுப்பார்கள். அத்துடன் உயிர் காக்கும் மற்ற சிகிச்சைகளையும் தொடர்ச்சியாகத் தந்துகொண்டிருப்பார்கள்.
 இந்த நோய் ஒருவருக்கு இருப்பது ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியப்பட்டால், அதற்குரிய தீவிர சிகிச்சைகளைக் கொடுத்து அவரைக் காப்பாற்ற முடியும்.
தடுப்பது?
மெர்ஸ் நோய் ஒருவருக்கு ஏற்பட்டால் 40 சதவீதம் வரை மரணத்துக்கான வாய்ப்பு உள்ளது.
 இது நோயாளியுடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கு உடனே பரவி விடும் என்பதால், இந்த நோய் குறித்த விழிப்புணர்வை நோயாளிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஏற்படுத்த வேண்டும்.
 மேலும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் மேற்கொள்வதன் மூலமே இந்த வைரஸ் நோயின் தாக்குதலில் இருந்தும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கலாம்.
கைகளையும் முகத்தையும் சோப்புப் போட்டு 20 நிமிடங்களுக்குச் சுத்தமாகக் கழுவுவது, இருமும்போது முகத்தைக் கைக்குட்டையால் மறைத்துக்கொள்வது, வெளியில் போய்விட்டு வீட்டுக்கு வந்ததும் கை,கால்களைச் சுத்தப்படுத்துவது, நோயாளி பயன்படுத்திய பொருள்களைத் தொடாமல் இருப்பது போன்ற சுகாதார முறைகளைக் கடைப்பிடித்தால் மெர்ஸ் நோய் பாதிப்பதை ஓரளவு குறைக்க முடியும்.
இந்த நோய் இந்தியாவில் பரவ அதிக வாய்ப்பில்லை என்று இந்தியச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
 என்றாலும், சவுதி அரேபியா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் உள்ள பலருக்கும் இந்த நோய் பரவியுள்ள காரணத்தால், அங்கிருந்து வரும் பயணிகளால் இந்தியாவுக்குள் இது பரவ வாய்ப்புள்ளது.
 மேலும் இந்தியா சுகாதார விஷயத்தில் மிகவும் மோசமாக உள்ளது. இதனால், மெர்ஸ் நோய் ஏதாவது ஒரு வழியில் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டால் அது காட்டுத் தீ போல் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
எனவே நம் மத்தியச் சுகாதாரத்துறை இந்தியாவுக்குள் இது பரவாமல் இருக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 இதன் முதல் கட்டமாக இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் அரேபிய நாடுகள், தாய்லாந்து தென்கொரியா ஆகிய வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளைத் தீவிரமாகப் பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான தடுப்புப் பணிகளை அதிகப்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

பன்றிக் காய்ச்சல் 
அண்மையில் இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கான தகுந்த முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய காரணத்தால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்தனர்.

 இந்த அனுபவத்துக்குப் பிறகாவது மெர்ஸ் போன்ற கொடிய நோய்களைத் தடுக்கும் தடுப்பு வழிகளை நடைமுறைப்படுத்த மருத்துவக் குழுக்கள், மருந்துகள், மருத்துவத் தளவாடங்கள் போன்றவற்றை உரிய முறையில் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

ஏனென்றால், மெர்ஸ் நோய் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டால், வருடக்கணக்கில் அந்நோயுடன் போராட வேண்டி இருக்கும். 
அதன் விளைவுகள் மிகவும் விபரீதமாக இருக்கும்.
 சுருக்கமாகச் சொன்னால், இந்நோயைச் சமாளிப்பது இந்திய மருத்துவத் துறைக்கு மிகப் பெரிய சவாலாகவே இருக்கும்.
========================================================================
Posters_Travel_Health_Advisory_OUTBOUND

மெர்ஸ் பரவுதை தடுக்க மக்களுக்கு எச்சரிக்கை தரும் சிங்கப்பூர் அரசு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?