=======================================================
ஒரு கடி வெங்காயத்தில் ஒரு பிடி ‘பழங்கஞ்சி’ குடிக்கிற ஏழ்மையில் மட்டுமல்ல. 
பணக்கார‘பர்கரிலும்’ வெங்காயம் முக்கியம்.. இப்படி வெங்காயம் ஒரு ‘பொதுமை’ காட்டி நிற்கிறது. 
இது ஒரு பழமையான மூலிகைப்பயிர். 
முற்காலத்து யூதர்களின் உணவு. 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் ருசித்தது. 
இதன் அதிக பயன்பாட்டை அரேபியர்களிடம் பார்க்கலாம்.
 நேபாளத்தில் கடவுளுக்கு நிவேதனம் செய்யும் பொருளே வெங்காயம்தான். 
‘மருத்துவ தந்தை’ ஹிப்போகிரேட்ஸ் வெங்காய மருத்துவத்தை சொல்ல மறக்கவில்லை. 
அமெரிக்கா, இங்கிலாந்து என பல நாடுகளில் மருத்துவ பொருளாகவே வெங்காயம் மதிக்கப்படுகிறது. தலைவலித்தால் வெங்காயத்தை தட்டிப்போடுகிற நம் பாட்டி வைத்தியமும் இதையே பறைசாற்றி நிற்கிறது. அசைவம், சைவமென அத்தனை வழி சமையலிலும், தாளிப்பு துவங்கி பஜ்ஜி, பக்கோடா என அத்தனையிலும் வெங்காயம் இருக்கிறது.

தென்னிந்தியர்களின் பிரதான உணவாகி, தென்மாவட்ட மக்கள் வாழ்வுடன் இரண்டறக் கலந்த இது வாழ்வின் முக்கிய அங்கமாய் நடை தொடர்கிறது. 
வெங்காய காரத்திற்கு ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ வேதிப்பொருளே காரணமாம்.
 இதுவே நெடி நிரப்பி, கண்ணீர் வரவழைக்கிறது. எனவேதான் வெட்டுபவனையே அழவைத்து விந்தை செய்யும் வெங்காயத்தை தமிழ் இலக்கியங்களும் விட்டுவைக்கவில்லை. 
மரத்தில் தொங்கும் ‘தேன் ராட்டு’ எடுக்க, வெங்காயத்தை மென்று ஊதி ஈ துரத்துவதை கிராமத்துச் சிறுவர்களிடம் இன்றும் காணலாம். வகுப்புக்கு விடுமுறை பெற ‘கொஞ்ச நேர காய்ச்சலுக்காக’ பெரிய வெங்காயத்தை இரண்டாக வெட்டி கைகளின் ‘அக்குள்’களில் சிறிது நேரம் வைக்கும் நகர விடுதி மாணவர்களும் இருக்கின்றனர். 
இன்றும் திருமண வீடுகளில் வழங்கும் சீர்பொருட்களில் ஒரு தட்டு வெங்காயமும் இடம் பிடிக்கிறது.

சந்தனத்திற்கு மாற்றாக வெற்றிலையுடன் வெங்காயம் சேர்த்து அரைத்த கலவையை புண், வேனற்கட்டு வராதிருக்க குழந்தைகளின் மொட்டைத் தலைகளில் தடவுதல் தென்மாவட்டத்தில் தொடர்கிறது. 
தவறுக்கு தண்டனையாய் கண்களில் வெங்காயச் சாறிடுதல் தென்னக கிராமங்களில் இருக்கிறது. மயங்கியவரை எழுப்பிட வெங்காயம் முகரச் செய்தலும் உண்டு. 
வெங்காயத்தில் புரதம், தாது உப்புகள், வைட்டமின்கள் என உடம்புக்கான ஊட்டச்சத்து அதிகம். 
இதய சக்தி தருகிறது.
 நரை, தலை வழுக்கையை தடுக்கிறது. 
உடல் வெம்மை தணித்து, ரத்த விருத்தி, எலும்பு வலிமை நிறைக்கிறது. 
பித்த, கண், வாத நோய்கள் தீர்க்கிறது. 
பாலில் இட்டு காய்ச்சிக் குடித்தால் சளி, இருமல் பறக்கிறது. இன்னும் உணவே மருந்தாக வெங்காயம் செய்யும் விந்தைகள் ஏராளம்.
======================================================
இன்று,
ஜூலை-07.
  • சாலமன் தீவுகள் விடுதலை தினம்(1978)
  • இந்தியாவில் முதல் முறையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது(1896)
  • கனடாவில் ஆங்கிலத்துடன் பிரெஞ்சு மொழியும் அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டது(1969)
  • இந்தியாவின் தாஜ்மஹால் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது(2007)
======================================================

சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து திமுக சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
வருமானத்திற்கும் அதிகமாக ரூ.65 கோடி சொத்து சேர்த்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட  நான்கு பேருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 27ல் தீர்ப்பளித்தது. 
ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியே 1 லட்சமும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா ரூ. 10 கோடியே 10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் அடிப்படையில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 
சுமார் 42 நாட்கள் நடந்த இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி கடந்த மாதம் 11ம் தேதி தீர்ப்பளித்தார்.
அதில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று 2 நிமிடத்தில் தீர்ப்பை வாசித்தார்.  தீர்ப்பில் ஜெயலலிதாவின் வருமானத்தை அவர் வாங்கிய வங்கி கடனில் ஈடுகட்டி, அதன் அடிப்படையில் வருமானத்தைவிட 8.12 சதவீதமே அதிகம் சொத்து சேர்த்துள்ளார் என்று விளக்கமளித்து விடுதலை செய்யப்படுகிறார் என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் கடந்த மாதம் 23ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் 2377 பக்கங்கள் அடங்கிய 9 வால்யூம்கள் கொண்ட மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 8.12 சதவீத சொத்துக்களையே சேர்த்துள்ளதாக கூறியுள்ளார்.  
ஆனால், ஜெயலலிதா தரப்பினர் பெற்ற கடன் தொகை குறித்து நீதிபதி தீர்ப்பில் பட்டியலிட்டிருப்பதை கூட்டி கணக்கிட்டால் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 76.7 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்துள்ளது தெரியவரும். ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்து மதிப்பு ரூ. 65 கோடியாகும்.

ஜெயலலிதா வழக்கில் கட்டுமானச் செலவுகள், வளர்ப்பு மகன் திருமண செலவு, ஜெயா பப்ளிகேஷன் ஆகியவற்றை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தெளிவாக கணக்கிட்டு அதன் அடிப்படையில் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். 
ஆனால், சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை ஆய்வு செய்யாமல் ஒருதலைப்பட்சமாக உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மிகப்பெரிய பிழை உள்ளது. 
தீர்ப்பில் பட்டியலிடப்பட்ட கணக்கை சரியாக கூட்டிப்பார்த்தால் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்திருக்க முடியாது. 
ஆனால், அந்த முக்கியமான விஷயத்தை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கவனிக்கத் தவறியதுடன் ஒருதலைப்பட்சமாக தீர்ப்பளித்துள்ளார்.
  எனவே, இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.
 முதல் கட்டமாக கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்ததை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் இன்று மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் கூட்டல் கழித்தலில் பெரும் தவறை செய்துள்ளது. 
அந்த கணக்கின் அடிப்படையில்தான் வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதாக கூறியுள்ள உயர் நீதிமன்றம் அந்த கணக்கிலேயே தவறை செய்துள்ளது.
மேலும், ஜெயலலிதா உள்ளிட்டோர் கூட்டு சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் ஏராளம் உள்ளது. அதை நீதிமன்றத்தில் வாதங்களில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால், கூட்டுச்சதிக்கான ஆதாரங்களை உயர் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டது. 
எனவே, எந்தவித சரியான காரணமும் இல்லாமல் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். 
அந்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவும் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவும் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
=======================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?