டெங்கு (தமிழ்) நாடு

தமிழகத்தின் மிக முக்கியமான சுகாதார பிரச்சனையாக உருவெடுத்துள்ளது டெங்கு காய்ச்சல். சுமார் 100க்கும் மேற்பட்டவர்களை கடந்த மூன்றே மாதத்தில்பலி வாங்கியிருக்கிறது. 

வயது வித்தியாசம் பாராமல், பலரைத் தாக்கியுள்ளது. கொசுக்களால் பரவும் இந்த காய்ச்சல் மழைக்காலம் துவங்குவதற்கு முன்பே பலரின் வாழ்வைப் புரட்டிப்போட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் வெளியாகும் டெங்கு பாதிப்பு செய்திகள் அதிர்ச்சியைஅளிக்கின்றன. 

அந்த அதிர்ச்சியின் உச்சக்கட்டம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்அருகே நடந்துள்ள மரணச்சம்பவம். ராசிபுரம் அருகே உள்ள பேளுக்குறிச்சியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி பெரியசாமி என்பவரின் 6 வயது ஆண் குழந்தைசர்வீனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குழந்தையை காப்பாற்ற முடியாது என்று எண்ணி குழந்தையுடன் பெரியசாமியின் மனைவி அன்புக்கொடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மர்மக் காய்ச்சல் என்று தமிழக அரசால் பெயர் வைக்கப்பட்டுள்ள டெங்குகாய்ச்சலுக்கு தமிழகம் முழுவதும்11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான உடல் வலி, கடும் காய்ச்சல், மூட்டு வலி, வாந்தி என ஒவ்வொருதனிநபரும் வெவ்வேறு குறியீடுகளோடு மருத்துவமனைகளில் குவிந்து வருகிறார்கள். 
முதியவர்கள், குழந்தைகள்என யாரையும் டெங்கு விட்டுவைக்கவில்லை.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இரத்தபரிசோதனை நிலையங்களில் வரிசையில்காத்திருக்கும் நோயாளிகளின் உறவினர்கள், இரத்த வங்கிகளில் முன்பதிவிட்டு அன்றாடம் காத்திருப்போர், நண்பர்களிடம், சமூகவலைத்தளங்களில், முகநூலில் இரத்தம் கேட்டு பதிவேற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளது. 

சரியாக கடந்த சில ஐந்தாண்டுகளில் தான் இந்த நோய் பெரும் தாக்கத்தினை உருவாக்கியுள்ளது. 
மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகம் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 

சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் இந்தஆண்டின் பருவ மழைக் காலத்திற்கு முன்னதாகவே 10 மாவட்டங்களில் டெங்குகாய்ச்சல் தாண்டவமாடுகிறது. குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு இந்த நோய் தாக்கினால் ஒட்டு மொத்த குடும்பமே தடுமாறுகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்படும் போது மேலும் நிலைமை மோசமாகிறது. 

பரவும் நோய்…பார்வையாளராக அரசுதமிழகத்தைப் பொறுத்தவரையில் டெங்கு காய்ச்சல் புதியதல்ல.கடந்த 7 ஆண்டுகளாக இதனால் பாதிப்பும், இறப்பும் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.அதனால் அரசு நிர்வாகத்துக்கு இதில் நிச்சயம்அனுபவம் இருக்கும். ஒரு மாநிலத்தில், அதிலும் குறிப்பாக உயிரிழப்புக்கள் வரை சென்ற இந்த பிரச்சனையில் தற்போது உள்ள அரசு எதுவுமே நடக்காதது போலவும், அல்லது எல்லாமே சரியாக நடப்பதைபோலவும் தோற்றத்தை உருவாக்குகிறது.

டெங்கு காய்ச்சல் சேலம்,ஈரோடு, கோவை,திருப்பூர் என கடுமையான பாதிப்புக்களை உருவாக்கியவுடனேயே போர்க்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்க வேண்டும். ஆனால் சுகாதார அமைச்சகம் விளம்பரம் செய்வதை மட்டுமே வேலையாக கொண்டிருந்தது. அவ்வப்போது அமைச்சர்கள் நிலவேம்பு நீர் விநியோகம் என போஸ் கொடுத்தனர்.

தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்தப் பிரச்சனையை மையமான பிரச்சனையாக எடுத்திட கோரிக்கை வைத்தன. 

தமிழ்நாட்டில் உயிர்ப்புடன் இருக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் என அவரவர்சக்திக்கேற்ப மக்கள் பணியை செய்தன. ஆனால் அரசு தேவையான பணிகளைச் செய்யவில்லை. 

அரசு மருத்துவமனை தயார் நிலையில் இல்லாமல் இருந்தது. அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை எடுத்து கொடுப்பது மிக முக்கியப் பணி. அதில் இருக்கும் காலிப்பணியிடங்களைக் கூட இந்த அரசு நிரப்பவில்லை. எல்லா மருத்துவமனைகளிலும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு வார்டுகள் துவக்கப்பட்டது. இது ஒரு சாதாரண நடவடிக்கையே. 

ருஅசாதாரண நிலையில் செயல்பட வேண்டிய துரித வேலைகள் எதையும் இந்தஅரசு செய்யவே இல்லை என உறுதியாகக் கூற முடியும். என்ன செய்திருக்க வேண்டும்? 
டெங்கு காய்ச்சல் ஏடிஸ் வகைக் கொசுவால் ஏற்படுகிறது என்பது எல்லோரும் அறிந்ததே.

நோய் நாடி அது முதல் நாடி என்பதை போல் ஒரு தொலைநோக்கோடு அரசு செயல்படவில்லை என்பது நம் விமர்சனம். தென் மேற்குப் பருவமழை துவங்கியவுடனேயே அல்லது பருவம் தப்பி, பொழியும் மழை காரணமாக கொசுக்கள் அதிகமாக முட்டையிடும் காலத்தினை கணக்கில் கொண்டு கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புக்களின் அனுபவங்களோடு முன்னெச்சரிக்கை பணிகளை செய்திருக்க வேண்டும்.
இந்தியாவிலேயே தென் மாநிலங்களில் தான் டெங்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதாக தேசிய நுண்ம நோய் தடுப்பு திட்ட செய்திக் குறிப்பு சொல்கிறது. 
அதிலும் குறிப்பாக தமிழ்நாடு, கேரளம், கர்நாடகத்தில் மட்டும் நாட்டின் ஒட்டு மொத்த டெங்கு பாதிப்பில் 80ரூ எனவும் புள்ளி விபரம் சொல்கிறது. டெங்குவை உண்டாக்கும் கொசு வகைகள் ஒவ்வொரு ஆண்டும் மாறும்.

இதனை பூனாவில் செயல்படும் தேசிய ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்து அவ்வப்போது தகவலாக சொல்லும். 
இதையெல்லாம் அரசு முன்கூட்டியே திட்டமிட்டுமாறும் சூழலுக்கேற்ப தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

இப்போது கூட டெங்கு அல்லது நாள்பட்ட காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மர்ம காய்ச்சல் என்றே சொல்லி டெங்கு அறிகுறி இல்லை என்றும் பொதுவாக ஊடகங்களுக்கு சொல்கிறார்கள். மக்களிடம் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறோம், இருந்த போதிலும் மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு என்பதே அமைச்சர்கள், அதிகாரிகள் சொல்கிறார்கள். 

இன்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மட்டுமே சிறப்பு மற்றும் நோய் தொற்று தடுப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. 

பொதுவாகவே அரசு இதுபோன்ற நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைத்து தான் சொல்லும்.
இதோ ஒருபுள்ளி விபரம்: (தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியீட்டிலிருந்து) 
ஆண்டு       பாதிப்பு இறப்பு
2010            2051 8
2011            2501 9
2012          12,686 66
2013                6122 0
2014                2804 3
2015              4535 12
2016                 2531 5
2017                  6515 15 (ஆகஸ்ட் வரை மட்டும்) 
இது எந்த விதத்திலாவது நம்பும்படியாக உள்ளதா?
உண்மை நிலைமைக்கும் இந்த விவரத்திற்கும் தொடர்பு உள்ளதா? 

டெங்குவினால் 100 பேர்கள் இறந்தால் டெங்குவினால் 30 பேர்களும்,மர்மக்காய்ச்சலால் 70 பேர்களும் பலி என தமிழ் நாடு அரசு புள்ளி விபரம் வெளியிடுகிறது.

வெற்று அறிவிப்புக்கள் வேதனையை அதிகமாக்கும்டெங்கு காய்ச்சல் தான் என உறுதிப்படுத்தப்பட்ட நோயாளியின் வீட்டை கண்டறிந்து அதை சுற்றியுள்ள வீடுகளில் பிளீச்சிங்பவுடர், தேங்காய் மட்டைகளை அகற்றுவது, அப்பகுதியில் மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் என இரண்டு நாள் முகாமிட்டு, அரசு சொன்ன வேலையை செய்கிறார்கள். அவ்வளவு தான்.

அந்த குறிப்பிட்ட நோயாளி வீட்டில்இருந்த போது தான் கொசுவின் தாக்குதலுக்கு ஆட்பட்டாரா என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் விளம்பரம் மட்டும் செய்து என்ன பயன்?



டெல்லியில் இருந்து விமானத்திலும், மதுரை,கோவையில்  இருந்து குளிர்சாதன  ஆம்னி பேருந்துகளிலும்  டெங்கு கொசுக்கள் வந்து தமிழ் நாடு முழுக்க டெங்குவை பரப்புவதாக மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு பெற்ற சுகாதார அமைச்சர்  அறிக்கை வெளியிடுகிறார்.
அதை படிக்கையில் நாமே கொசுவை கடிக்கவைத்து டெங்குவால் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று இருக்கிறது.
அதற்கு ஸ்டாலின் கொடுத்த பதில் கொஞ்சம் ஆறுதல்.
"வட மாநில வியாபாரிகளிடம் குட்காவுக்கு கையூட்டு வாங்கி விற்க அனுமதித்தது போல் வட மாநில கொசுக்களிடமும் அவர் கையூட்டு வாங்கி தமிழக மக்களை கடிக்கவும் ,அதை தடுக்க ஏற்பாடுகள் செய்யாமலும் இருப்பது  போலவும் தெரிகிறது." 

ஆயிரக்கணக்கில் பலியானாலும் கொசுவினால் பரவும் நோய்களை கட்டுப்படுத்திட இந்த ஆண்டு தமிழக அரசு வெறும்  13.95 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. ஜெயலலிதா சமாதிக்கு 50 கோடிகள் ஒதுக்கீடு.

நடமாடும் மருத்துவமனைகள் 416 அமைத்துள்ளனர். 
கொசு மருந்து புகை அடிப்பான்கள் 10,182 பயன்படுத்தப்படுகின்றன.

இது தான் அடிப்படை. கோடிக்கணக்கான மக்களுக்கு ஒதுக்கப்படும் தொகை வெறும் 13.95.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் கொள்ளை லாபம்ஈட்டி வருகின்றன.
நோயாளியின் நிலைமை சிக்கலானால் அரசு மருத்துவமனைக்கு கடைசியாக அனுப்புவது என்று சாகசம் செய்கிறார்கள். 

தனியாரை கட்டுப்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டாமா? 
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் வடகிழக்குப் பருவ மழை காலம் துவங்க உள்ள சூழலில் அரசு விழித்து கொள்வது நல்லது.
 இல்லையேல் தமிழ்நாடு “ டெங்கு நாடு” ஆகி விடும். 
செய்தி தொகுப்பு: என்.சிவகுரு
=====================================================================================
ன்று,
அக்டொபர்-04.
 சுப்பிரமணிய சிவா

  • உலக வன விலங்குகள் தினம்.

  • இந்திய விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த தினம்(1884)

  • மெக்சிகோ குடியரசானது (1824)

  • இந்திய விடுதலை போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்த தினம்(1904)

  • முதலாவது செயற்கை கோள் ஸ்புட்னிக் 1 பூமியை சுற்றி வர விண்ணுக்கு அனுப்பப்பட்டது(1957)
=======================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?