ஏழைகளைக் கொலைசெய்யும்
தேசிய சுகாதார கொள்கை
இந்தியாவில் பேறுகால இறப்பு விகிதமும் குழந்தை இறப்பு விகிதமும் பெரிய அளவில் குறைந்துள்ளது. இருந்த போதும் தொற்று நோய்கள், தொற்று அல்லாத நோய்களின் பாதிப்புகள் இந்திய சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதுபோலவே, சுகாதாரத்தின் மீதான வணிகம்மிகப்பெருமளவில் அதிகரிப்பது இரண்டாவது பிரச்சனையாகும். மூன்றாவது பிரச்சனை, சுகாதாரத் தேவைகளுக்காக மக்கள் செலவளிக்கும் பணமும், அதன் மூலம் மக்கள் வறுமையில் தள்ளப்படுவதுமாகும். இது 2017, மார்ச் 16 அன்று மத்திய அரசு அறிமுகம் செய்த தேசிய சுகாதாரக் கொள்கையில் மிக முக்கியமாக பதிவுசெய்யபட்டுள்ள கருத்து ஆகும்.
இக்கருத்து சுகாதாரத்துறையில் நடைபெற்றுள்ளது. 2008ஆம் ஆண்டு வரையிலும் மாற்றங்கள் கவலைப்படும் விதமாக இருப்பதாகவே காட்டுகிறது. ஆனால் 2017ன் சுகாதாரக் கொள்கையை ஆழமாக ஆய்வு செய்தால் மருத்துவச் சேவையில் இருந்து மத்திய அரசு வெளியேறுவது நன்கு புரியும். 2015ல் தயாரிக்கப்பட்ட வரைவோ, தாமதமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பின்புதான் கொள்கையாக அமலாக்கப்பட்டிருகிறது. இது மோடி அரசு மிக மெதுவாக இயங்குவதையே காட்டுகிறது.
1983ல் வெளியான முதல் தேசிய சுகாதாரக் கொள்கை இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு முழு சுகாதாரம் என்கிற லட்சியத்தோடு இயற்றப்பட்டது. ஆனால் ‘2000 ஆண்டில் முழு சுகாதாரம்‘ என்கிற லட்சியத்தை எட்ட அக்கொள்கையால் முடியவில்லை. அதனால் தேசிய சுகாதாரக் கொள்கை 2002அறிமுகம் செய்யப்பட்டது, மற்ற அனைத்துத் துறைகளைப் போலவே சுகாதாரத்துறையிலும் இந்தக் கொள்கை தனியாருக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு என்.டி.ஏ அரசாங்கம் வெளியிட்டுள்ள தேசிய சுகாதாரக் கொள்கை (2017) இதன் தொடர்ச்சியாகவே இருக்கின்றது. பாசிச சிந்தனையோடும், காங்கிரஸ் அரசை விட மிக வேகமாக நாட்டின் பொதுத்துறைகளைத் தனியாருக்கு விற்பனை செய்வதில் என்.டி.ஏ அரசு கவனம் செலுத்துவதன் தொடர்ச்சியாக சுகாதாரத் துறையையும் தனியாருக்கு விற்பனை செய்து அதனை முடக்க முயற்சிக்கிறார்கள். பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இந்திய மக்களை இது பெருமளவில் பாதிக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் (2012-2017) குறிப்பிட்டபடி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதம் சுகாதார செலவீனத்திற்காக ஒதுக்க வேண்டும் என்பதற்கு செவிகொடுக்காமல் இதை நடைமுறைப்படுத்துவதற்கான கால அளவை2020 ல் இருந்து 2025 க்கு மாற்றியிருப்பது தேசிய சுகாதாரக் கொள்கை (2017)ல் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். 12-ம் ஐந்து ஆண்டு திட்டத்தில் 2017ல் சுகாதார பாதுகாப்புக்கான ஒதுக்கீடு உள்நாட்டு உற்பத்தியில் 1.87 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் 2016-17 ஆண்டில் 1.4 சதவீதம் என்ற அளவிலேயே அதிகரிக்க முடிந்துள்ளது என்பது பொருளாதார ஆய்வறிக்கை விபரங்களைக்காணும்போது தெரியவருகிறது.
இதை மையமாக வைத்துப் பார்த்தால் 2025 லும் தேசிய சுகாதார கொள்கையின் லட்சியம் நிறைவேறுமா எனும் கேள்வி சாதரணமாக எழும்.
இந்திய மக்களின் சுகாதார நிலை மிகவும் குறைந்திருக்கும் இந்தச் சூழலில்,இந்திய அரசு ஏன் மெதுவாக நகரும் கொள்கையை கடைப்பிடிக்கிறது? 2015 ஆம் ஆண்டு முன்வைத்த தேசிய சுகாதார கொள்கை 2017 வரைவு அறிக்கையின் படி ஒரு நாடு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5-6 சதவீதமாவது சுகாதாரப்பாதுகாப்பிற்காக செலவு செய்யாவிட்டால், அதனால் ஒருபோதும் அடிப்படை சுகாதாரத் தேவைகளை பூர்த்திசெய்ய இயலாது.
இந்நிலையில் ‘டிஜிட்டல் இந்தியா‘வில் சுகாதாரத் துறையில் செலவு செய்ய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5சதவீதம் கூட ஒதுக்குவதில் தோல்வி அடைந்திருப்பது புதிய கொள்கையின் வாயிலாக பொது சுகாதாரத் துறையை தனியாருக்கு விற்பதற்காகவே.
முழு சுகாதாரப் பாதுகாப்பிற்கு மத்திய அரசின் மையச் செயல்பாடுகளைக் குறித்து தேசிய சுகாதாரக் கொள்கை 2017 எதுவும் சொல்லவில்லை. பொது சுகாதாரத்துறையில் முழுமையான, இலவச சுகாதாரச் சேவையையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்குப் பதிலாக மருத்துவக் காப்பீட்டு திட்டங்களை முன்வைக்கிறது தேசிய சுகாதாரக் கொள்கை 2017.
பொதுத்துறை மருத்துவ சேவையை ஓரம்கட்டிவிட்டு தனியார் காப்பீட்டு நிறுவனங்களையும் தனியார் மருத்துவ நிறுவனங்களையும் இணைக்கும் சேவையை தேசிய சுகாதாரக் கொள்கை முன்வைக்கிறது. ஆனால் நாட்டின் சுகாதாரத் தேவைகளான மருத்துவர் – நோயாளி விகிதம், நோயாளி – படுக்கை விகிதம்,செவிலியர் – நோயாளி விகிதம் போன்றவைகளை உறுதி செய்யாமல் சுகாதாரத்திற்கான உரிமையை உறுதிசெய்ய முடியாது. அத்தோடு இச்சேவைகள் சாதாரண மக்களுக்குக் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
பாராளுமன்ற நிலைக்குழு கணக்குகளின் படி இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு அதன் அளவுகோலில் இருந்து குறைந்திருக்கிறது. உலக நாடுகளில் சுகாதாரத்திற்காக மிகக் குறைந்த அளவு செலவு செய்யும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. இந்தியாவின் பட்ஜெட் செலவீடு உலக சராசரியான 5.99 சதவீதத்தை விடக் குறைவாகவே இருக்கிறது. மொத்த பட்ஜெட்டில் 1.15 சதவீதம் மட்டுமே இந்திய சுகாதாரத் துறை செலவு செய்கிறது. இந்தியாவை விட உள்நாட்டு உற்பத்தி குறைவான வங்காளதேசமும் இலங்கையும் உள்ளிட்ட இதர நாடுகளில் சாராசரி மனித ஆயுள் 75 வயது. இந்தியாவில் இப்போதும் 67.5 ஆகவே இருக்கிறது. இந்நிலையில் தான் சாராசரி மனித ஆயுளை 70 ஆக உயர்த்துவது என்கிற லட்சியத்தில் தேசிய சுகாதாரக் கொள்கை 2017 அமலாக்கப்பட்டுள்ளது. இத்தோடு தேசிய அளவிலும் மாநில அளவிலும் பிறப்பு விகிதத்தை 2.1 ஆகக் குறைக்கவும் இக்கொள்கை இலட்சியம் கொண்டுள்ளது. இதற்காக அரசு முன்வைக்கும் கட்டாய கருத்தடை திட்டம், பெண்களிடையே பெரிய அளவில் நடைமுறைப்படுத்த முயலுகிறது. மக்கட் தொகையைக் கட்டுப்படுத்தவும், தெரியப்படுத்தாத வேறு ஏதோ சில காரணங்களுக்காகவும் அமல் படுத்தப்படவிருக்கும் கட்டாயக் கருத்தடை பெண்களிடம் மட்டும் அமலாக்கப்படுவதென்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பில்லாதIntra – uterine devices உம் injectables உம் பயன்படுத்தி இந்தியாவின் 17 முதல் 49வயது வரையிலான பெண்களில் கருத்தடை நடத்த ஆலோசனை வழங்கும் இக்கொள்கை, இதனால் பெண்கள் சந்திக்க இருக்கும் மோசமான உடல்நிலையைக் கண்டுகொள்ளவில்லை. மக்கள் தொகை கட்டுப்படுத்த என்று சொல்லி பெண்களிடம் மட்டும் கருத்தடை செய்யும் அரசின் கொள்கைக்குப் பின் சங்பரிவாரின் ரகசிய அஜண்டா இருக்கிறதா என்கிற சந்தேகத்திற்கு இது இடமளிக்கிறது.
2025ல் 5 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளின் இறப்பு விகிதத்தினை 23 ஆகக்குறைக்கவும், 2019ல் குழந்தை இறப்பு விகிதத்தினை 28 ஆகக் குறைக்கவும்,மகப்பேறு கால இறப்பு விகிதம் 2025 ல் 100 ஆகக் குறைக்கவும், பச்சிளம் குழந்தை இறப்பு விகிதத்தை 16 ஆகக் குறைப்பதும் ஆகிய இலட்சியங்களை நாம் அங்கீகரிக்க வேண்டும். ஆனால் குழந்தை இறப்பிற்கும், மகப்பேறுகால தாய் இறப்பிற்கும் காரணமாக இருக்கும் சுகாதாரமற்ற நிலைக்கும், வறுமை, உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைவு போன்ற பிரச்சனைகளுக்கு எந்தத் தீர்வையும் தேசிய சுகாதாரக் கொள்கை 2017 தெளிவுபடுத்தவில்லை. பொது விநியோக திட்டத்தை முடக்குவதும், மானியத்தைக் குறைப்பதும், குழந்தைகளுக்கான மதிய உணவை முறையாக வழங்காமலும் என அனைத்தையும் அலங்கோலப்படுத்திய அரசால் எப்படி உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், வறுமையை ஒழிக்கவும் திட்டங்களைத் தீட்டவும் அமலாக்கவும் முடியும்? இத்தகைய அடிப்படை சுகாதாரப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமல் எப்படி மேற்குறிப்பிட்ட இலட்சியங்களை அடைய முடியும்? ஆகவே பொதுமக்களின் கண்களில் மண்ணைத் தூவுவதே தேசிய சுகாதாரக் கொள்கை 2017.
பொதுத்துறையை வலுப்படுத்தியும் சுகாதாரத் துறையில் தொடர்ச்சியாக பங்களித்துக்கொண்டும் பொது விநியோகத் திட்டத்தை முறையாக வலுப்படுத்தி வருகிற கேரளா போன்ற சிறிய மாநிலத்தில் மேற்குறிப்பிட்ட இலட்சியங்களை எட்ட முடிந்ததெனில் மத்திய அரசுக்கு அது சாத்தியமற்ற விஷயமல்ல. ஆனால் சுகாதாரத்துறையிலிருந்தும், சுகாதாரப் பாதுகாப்பிலிருந்தும் அரசு வெளியேறி அனைத்தையும் தனியாருக்கு வழங்குவதே மத்திய அரசின் முடிவு என்பதை இந்தக் கொள்கை வெளிக்காட்டுகிறது.
கேரள மக்களுக்கு கிடைக்கிற சத்தான உணவு, வாழ்க்கை நிலை, பேறுகாலப்பாதுகாப்பு, மருத்துவர்கள் – செவிலியர்கள் சேவைகள் தான் கேரளாவை முன்னோடியாக மாற்றியது. கேரளாவில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம்1000க்கு 6 ம், 5 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000க்கு 7 ம் என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தத்தேவையான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும்பொழுது மட்டுமே சுகாதார வாழ்வை உறுதி செய்ய முடியும்.
தேசிய அளவில் சராசரி மனித ஆயுள் 67.5 வயது ஆக இருக்கும் பொழுதும் கேரளாவில் சராசரி மனித ஆயுள் 75 வயது. வருமானம் அதிகமிருக்கக்கூடிய ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிடும்போது கேரளாவின் வளர்ச்சி பெரிதாகவே இருக்கும். ஹரியானாவில் குழந்தை இறப்பு விகிதம் ஒவ்வொரு ஆயிரம் பிறப்பிற்கு 33 ம், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 41 ம் ஆகும்.குஜராத் மாநிலத்தில் குழந்தை இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 33 ம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 43 ம் ஆகும்.
பெண்களையும் குழந்தைகளையும் பாதிக்கிற, அனைத்து சுகாதாரப்பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணம் இரத்த சோகை. ஆண் பெண் விகிதம் சாதகமாக இருக்கக்கூடிய கேரளம் தவிர மற்ற மாநிலங்களில் பெண்களும் குழந்தைகளும் சந்திக்கும் மிக முக்கிய சுகாதாரப் பிரச்சனையாக இரத்த சோகை மாறியிருக்கிறது. நாட்டில் 15 வயது முதல் 49 வயது வரையிலான பெண்களில் 53சதவீதமும் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள் என புள்ளிவிபரங்கள் காட்டுகிறது. கடந்த முப்பதாண்டுகளாக இப்பிரச்சனைக்குத் தீர்வு காண நம் நாட்டிற்கு முடியவில்லை.
தேசிய அளவில் 6 முதல் 59 மாதம் வரையிலான 58.4 சதவீதம் ஆண் குழந்தைகளில்22.7 சதவீதமும் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் தான். பெண்கள் பிரசவ காலத்தில் போலிக் ஆசிட் மாத்திரைகள் உட்கொண்டு இரத்த சோகையில் இருந்து பாதுகாத்துக் கொள்கிறார்கள். இம்மாத்திரை வெறும் 30.3 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. வட இந்தியாவின் பல மாநிலங்களில் இம்மாத்திரை இன்றும் கிடைப்பதில்லை. அதே வேளையில் உயர்ந்த பொதுச் சுகாதாரச் சேவையும், தனியார் மருத்துவமனைகளும் குறைவாக இருக்கும் கேரளாவில் இரத்த சோகையின் அளவு தேசிய அளவை விடக் குறைவாக உள்ளது. (பெண்கள் – 35.6%, குழந்தைகள் – 34.2%, ஆண்கள் – 11.33%)
பெண்களின் உடல்நிலை குறித்துப் பேசுகையில் நாட்டில் பிரசவகாலப் பாதுகாப்பு கிடைக்கிற தாய்மார்களின் அளவு வெறும் 2.1 சதவீதம் மட்டுமே. பிரசவகாலங்களில் முறையாக மருத்துவரை சந்திப்பதற்கும், பரிசோதனைகள் செய்வதற்கும் தனியார் மருத்துவமனைக்கோ அல்லது சர்வீஸ் சார்ஜ் வாங்குகிற பொது மருத்துவ மனைகளுக்கோ செல்வதற்கு இந்தியாவின் சாதாரண ஏழை பாமர மக்களுக்கு சாத்தியமில்லை. குழந்தை பிறந்து 2 நாட்களுக்குள் மருத்துவப்பரிசோதனை செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை வெறும் 24 சதவீதம் மட்டுமே.
ஆணாதிக்கப் பொருளாதாரச் சூழலில் பெண்கள் சந்தித்து வரும் குடும்ப வன்முறைகளும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியக் குறைவிற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. மூடநம்பிக்கைகளில் வீழ்ந்தும்,கல்வியறிவின்றியும், பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணமாகவும் உள்ள பெண்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவாலாக குடும்ப வன்முறை இருக்கிறது. தேசிய அளவில் சுமார் 80% பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். மகப்பேறு காலத்தில் பெண்கள் சந்திக்கும் வன்முறைகள் தாய் மற்றும் குழந்தையின் உடல்நிலையைப் பெருமளவில் பாதிக்கிறது. இது குழந்தை இறப்பிற்கு முக்கியக்காரணியாக அமைகிறது. தமிழ்நாடு, பீஹார், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 40% பெண்கள் மிகக் கொடூரமாக குடும்ப வன்முறைக்கு ஆளாகிறார்கள். ஹிமாசல் பிரதேசம், கேரளா, காஷ்மீர், உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இப்பிரச்னைகள் குறைவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொழுநோய், காச நோய் உள்ளிட்ட தொற்று நோய்கள் 2018ம் ஆண்டோடு இல்லாத சூழல் உருவாகும் என்று தேசிய சுகாதாரக் கொள்கை சொன்னாலும் இதற்குக்காரணமான வாழ்க்கை நிலையின் பிரச்சனைகளையோ, வறுமையையோ மாற்றுவதற்கான எந்தச் செயல் திட்டமும் முன்வைக்கப் படவில்லை. தொற்று நோய்களைத் தடுப்பதற்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கட்டமைக்க முயற்சிகள் எடுக்காமல், கனவுகளை முன்வைத்து சுகாதாரத் துறையை தனியார்துறைக்கு விற்கும் முற்சிகள் நடைபெறுகின்றன.
வேலையின்மையும் வறுமையும் வறட்சியும் அடிப்படை வசதியின்மையும் வளர்ந்துவரும் இந்திய மக்களின் வாழ்வில் நோய்களும் உடல் நலக்குறைவும் வாழ்கையோடு ஒட்டி உறவாடுகின்றன. ஆனால் இதைச் சந்திக்கும் சக்தியை இந்திய மக்கள் இழந்து கொண்டிருக்கின்றனர். உலக வர்த்தக நிறுவனத்தின் ஒப்பந்தத்தின்படி 2005 காப்புரிமைச் (pattent) சட்டத் திருத்தத்தின்படி மருந்துகளின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. இன்றைய சூழல் மிகவும் மோசமாக உள்ளது.காப்புரிமைச் (pattent) சட்டத் திருத்தத்தின் பிறகு மருத்து விற்பனை மற்றும் விநியோகத் துறையும் மருந்து விலை நிர்ணயமும் எந்தவித நிபந்தனையுமில்லாமல் மாறியிருக்கிறது. 80% சுகாதாரச் செலவுகள் மருந்துகளுக்காக மட்டும் செலவு செய்யப்படுவது சாபமாக மாறியுள்ளதற்கு உயர்ந்துவரும் மருந்துவிலையே காரணம்.Indian Drugs & Pharmaceuticals Limited, Rajasthan Drugs & Pharmaceuticals Limited உள்ளிட்ட 5 பெரும் பொதுத்துறை மருந்து உற்பத்தி நிலையங்களை மூடப்போவதாக தேசிய சுகாதாரக் கொள்கை 2017 சொல்கிறது. இதன் விளைவாக மருந்துகளின் விலை தற்போது இருப்பதிலிருந்து பல மடங்கு உயரும் என்பதில் சந்தேகமில்லை. தனியார் துறை எந்நேரமும், எந்த விதத்திலும் மருத்துவத்துறையிலும், சுகாதார பாதுகாப்புத் துறையிலும் நுழைந்து சாதாரண மக்களைக்கொள்ளையடிக்க புதிய சுகாதாரக் கொள்கை 2017 வழிவகுத்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பொதுத்துறை மருந்து நிறுவனங்களை மூடுவதால் கான்சர் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளின் விலை லட்சத்தைத் தாண்டும்.(ஜெர்மன் நிறுவனம் உற்பத்தி செய்கிற சோராஃபெனிப் டோசிலேட் [Sorafenib tosylate] என்கிற கான்சருக்கான மருந்து தயாரிப்பதற்கான கட்டாய லைசன்சிங் இந்திய நிறுவனத்திற்கு வழங்கியபோது 4200 ரூபாய்க்கு உற்பத்தி செய்ய முடிந்தது.) வெளிநாட்டுத் தனியார் கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கி,அவர்களுக்கு ஒத்திசை பாடும் மோடி அரசு சுகாதாரத் துறையில் அதைச் செய்திட இக்கொள்கையின் மூலம் முயற்சி செய்கிறது.
======================================================================================இன்று,
அக்டொபர் -05.
- உலக ஆசிரியர்கள் தினம்
- சன்மார்க்க சிந்தனையாளர் ராமலிங்க அடிகளார்(வள்ளலார்) பிறந்த தினம்(1823)