வெள்ளி விழா.

உலகநாயகன்

சில ஆண்டுகளுக்கு முன் அரசியல் பிரவேசம் செய்யப்போவதாக அறிவித்த கமல்ஹாசன் அறிவித்த கையோடு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் தொடங்கிவிட்டார் அரசியலில் முழு கவனம் செலுத்த இருப்பதால் விரைவில் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தப் போவதாக அறிவித்திருந்தார். இதனால் மனமுடைந்திருந்த அவருடைய ரசிகர்களுக்கு மாபெரும் ஆறுதலாக அமைந்தது நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ‘இந்தியன் 2’ திரைப்படம் பற்றிய அறிவிப்பு.

லைகா தயாரிக்க ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக நடித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது கரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சூழலில் ‘இந்தியன் 2’ படத்தின் முதல் பாகமான ‘இந்தியன்’ படத்தை நினைவுகூர்வதற்கான தருணம் நமக்குக் கிடைத்துள்ளது. 24 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில்தான் (1996 மே 9) கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் ஆகிய இரண்டு மாபெரும் ஆளுமைகள் முதல் முறையாக இணைந்த, அவர்கள் இருவருடைய வாழ்விலும் முக்கியமான திரைப்படமாக அமைந்த ‘இந்தியன்’ வெளியானது.

பிரம்மாண்ட இயக்குநர் என்று அறியப்படும் ஷங்கர் இயக்கிய மூன்றாவது படம் இது. முதல் இரண்டு படங்களில் பாடல் காட்சிகளில் புதுமையான கிராஃபிக்ஸ்கள் உள்ளிட்டவற்றின் மூலமாக மட்டுமே ரசிகர்களை வாய்பிளக்க வைத்தார் ஷங்கர். பாடல்கள், படமாக்கம் ஆகியவற்றோடு கதையளவிலேயே பிரம்மாண்டத்தை உள்ளடக்கியிருந்த படம் ‘இந்தியன்’ சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தையும் மீண்டும் திரையில் உருவாக்கியிருந்தார்.

அன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் நிலையை ஒப்பிட்டால் இது 

வியக்கவைக்கும் இமாலய சாதனை. இந்தப் படமும் இதற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியும் வரவேற்பும் ஒரு திரைப் படைப்பாளியாக ஷங்கரின் இமேஜை வடிவமைத்ததில் முக்கியப் பங்காற்றின என்றால் அது மிகையில்லை.

கமல்ஹாசனுக்கு பல வகைகளில் முக்கியமான படம் ‘இந்தியன்’. இந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு மூன்றாம் முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அதோடு முதல் முறையாக பிராஸ்தடிக் மேக்கப்பைப் பயன்படுத்தி 70 வயது முதியவராக இந்தப் படத்தில் நடித்திருந்தார். 42 வயது நடிகர், 70 வயது முதியவராகத் திரையில் தோன்றியபோது யாருக்கும் அவருடைய நிஜ வயது நினைவில்லை.

சேனாபதியாக நடித்தவர் கமல் என்று சொல்லியிருக்காவிட்டால் அது கமல் என்றே பலருக்கும் தெரிந்திருக்காது. அந்த அளவு பிராஸ்தடிக் மேக்கப் என்னும் தொழில்நுட்பத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்த இந்தப் படத்தின் மூலம் வித்திட்டார் கமல்ஹாசன்.

மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் சேனாபதியின் மகன் சந்துரு கதாபாத்திரத்தின் வழியாக எதிர்மறை குணாம்சங்கள் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கமல். வணிக ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது ‘இந்தியன்’. அதுவரை வெளியான தமிழ்த் திரைப்படங்களில் மிக அதிக வசூலைக் குவித்த படம் என்ற புகழைப் பெற்றது. அதன் மூலம் கமல் மாற்று முயற்சிகளில் ஈடுபடும் கலைஞன் மட்டுமல்ல வணிக வெற்றிகளைக் குவிக்கும் நட்சத்திர நடிகனும்தான் என்பது மீண்டும் நிரூபணமானது.

இவை தவிர 'இந்தியன்' படத்துக்கு மேலும் பல சிறப்புகள் உள்ளன.

• அரசு அலுவலகங்களில் விரவிக் கிடக்கும் ஊழலை எதிர்க்கும் படம். அதற்குப் பிறகு தமிழில் வெளியான பல ஊழல் எதிர்ப்புப் படங்களின் முன்னோடி.

• சுதந்திரப் போராட்ட காலகட்டத்தைக் காட்டி 1990-களின் இளைஞர்களுக்கு சுதந்திரப் போராட்டம் குறித்த அறிமுகத்தை ஏற்படுத்திய படம்.

• சுதந்திரப் போராட்ட காலகட்டத்தைக் கச்சிதமாக மீளூருவாக்கம் செய்த கலை இயக்குநர் தோட்டா தரணிக்கும் தேசிய விருது கிடைத்தது.

• இயக்குநர் ஷங்கரும் எழுத்தாளர் சுஜாதாவும் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம். இதற்குப் பின் சுஜாதா உயிரோடு இருக்கும்வரை ஷங்கர் இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் ( ‘ஜீன்ஸ்’ தவிர) வசனம் எழுதினார் சுஜாதா.

• கமல் படத்துக்கு முதன் முறையாக இசையமைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான். பாடல்கள் அனைத்தும் மிகப் பெரும் வெற்றி. இன்றளவும் ரஹ்மானின் சிறந்த ஆல்பங்களில் ஒன்றாக 'இந்தியன்' நிலைத்திருக்கிறது. வாலி, வைரமுத்துவின் பாடல் வரிகளும் பாடல்களின் எவர்க்ரீன் அந்தஸ்துக்கு வித்திட்டன.

• ’ரங்கீலா’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான இந்தி நடிகை ஊர்மிளா நடித்த ஒரே தமிழ்ப் படம். படத்தில் ‘அக்கடாங்கு நாங்க உட போட்ட’ பாடலில் இவருடைய நவீன ஆடைகளும் ஆட்டமும் ரசிகர்களை ‘அட’ போட வைத்தன.

• அந்தக் காலகட்டத்தில் மிக அதிக பொருட்செலவில் உருவான மிக அதிக வசூலைக் குவித்த தமிழ்த் திரைப்படம்.

• சேனாபதியின் மனைவியாகவும் சுதந்திரப் போராட்ட வீராங்கனையாகவும் நடித்திருந்தார் சுகன்யா. இவரும் பிராஸ்தடிக் மேக்கப்புடன் முதியவராக காண்பிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் நடிகைகள் பலர் இதுபோன்ற சோதனை முயற்சிகளுக்குத் தயங்குவார்கள்.

• தேசிய விருது மட்டுமல்லாமல் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றார் கமல்ஹாசன்.

இன்றும்கூட தொலைக்காட்சியில் எப்போது போடப்பட்டாலும் அதிக ரசிகர்களால் பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது ‘இந்தியன்’. யூடியூபிலும் அமேசான் பிரைமிலும் காணக் கிடைக்கிறது. வணிக வெற்றி, பரிசோதனை முயற்சிகள், தரமான ரசனைக்கு உகந்த படமாக அமைந்தது என தமிழ் சினிமா வரலாற்றில் ஒரும் முக்கிய அந்தஸ்தையும் பெற்றுவிட்ட ‘இந்தியன்’ எப்போதும் தமிழ் ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

---------------------------------------------------------------

கார்பரேட் கொலைகார்ர்களும்,

துணை போகும் அரசுகளும்.

நின்று கொண்டு இருக்கும்போதே ஒரு பெண் மயங்கிச் சரிகிறார். பேச்சுமூச்சின்றிக் கிடக்கும் சிறுவர்களும், சிறுமிகளும் அவசரஊர்தியில் ஏற்றப்படுகின்றனர். மயங்கிக் கிடக்கும் தனது தாயின் முகத்தைத் தட்டி எழுப்பப் போராடுகிறாள் ஒரு சிறுமி. நாய்களும் கால்நடைகளும் வாயில் நுரைதள்ளி துடித்துச் சாகின்றன. பார்க்கும்போதே குலைநடுங்கி நம்மை பதட்டம் கொள்ளச் செய்கிறது விசாகப்பட்டிணம் விசவாயுக் கசிவு தொடர்பான காட்சிகள்.

விசாகப்பட்டிணத்தின் புறநகர்ப்பகுதியான கோபாலப்பட்டிணத்தில் இயங்கிவரும் LG பாலிமர்ஸ் நிறுவனத்தில் கடந்த வியாழக்கிழமை (07.05.2020) அதிகாலை சுமார் 2.30 மணியளவில் இந்த விசவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த விசவாயுக் கசிவில் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஒரு சிறுமி உட்பட 12 பேர் இறந்துள்ளனர்.
மூச்சுவிடுவதில் சிரமம், கண் எரிச்சல், தொடர் வாந்தி, சுயநினைவற்ற நிலை (கோமா), மயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தன்னார்வலர்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ஆந்திர மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வீட்டிற்குள் பாதிப்புக்குள்ளாகி மயங்கிக் கிடந்த மக்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். சுற்றுப்பகுதி கிராமத்தில் இருக்கும் வளர்ப்புப் பிராணிகளும், கால்நடைகளும் மரணமடைந்துள்ளன.

ஆலைகளுக்கு அருகிலேயே குடியிருக்கும் நவீன் என்ற இளைஞர், நடந்த சம்பவங்களைக் கூறுகிறார். “அதிகாலை 2.30 மணியளவில், மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதையடுத்து முழிப்பு தட்டியது. வீதிக்கு வந்து பார்த்த போது பெரும் புகைமூட்டம் சூழ்ந்திருந்தது. வீட்டிலிருக்கும் அனைவரும் முகக்கவசம் மாட்டிக் கொண்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டோம். நாங்கள் கிளம்பிச் செல்கையிலேயே பகுதியிலிருந்து வெளியேறிச் சென்ற மக்கள் பலரும் மயக்கமடைந்து விழுந்தனர். ஆலையின் அதிகாரிகள் தங்களது கார்களில் மக்களை மீட்டுச் செல்ல வாய்ப்பிருந்தும் அமைதி காத்தனர்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் ”இரண்டாண்டுகளுக்கு முன்னரே இதைப் போன்ற ஒரு வாயுக் கசிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதை மூடி மறைத்து விட்டனர். இந்த ஆலை உடனடியாக மூடப்பட வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்.

காற்றில் பரவிய “ஸ்டைரின் மோனோமர்” என்ற வாயுவைக் குறைவான அளவில் சுவாசித்தால் அது கண்களிலும், தோல்களிலும் சுவாசக் குழாயிலும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உபாதைகளையும் ஏற்படுத்தும். அதிகமான அளவில் சுவாசிக்கப்பட்டால், மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். கோமா நிலை ஏற்படுத்தும். தொடர்ச்சியான சுவாசம் மரணத்திற்கு இட்டுச் செல்லும். இதன் பின்விளைவுகளாக, சிறுநீரகப் பிரச்சினை, புற்றுநோய் போன்றவை ஏற்படும்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமான LG பாலிமர்ஸ் நிறுவனம், தென்கொரியாவைச் சேர்ந்த LG (மின்னணு சாதன உற்பத்தி) குழுமத்தைச் சேர்ந்தது. இந்நிறுவனம் பாலி-ஸ்டைரீனால் உருவாக்கப்படும் நெகிழி, நாரிழைக் கண்ணாடி உள்ளிட்டவற்றைத் தயாரித்து வருகிறது. உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களில் முக்கியமானது ஸ்டைரீன் மோனோமர் எனப்படும் இரசாயனம். தீப்பற்றத்தக்க, திரவ நிலையிலான இந்த இரசாயனம்தான், அதிக வெப்பத்தில் வாயுவாக மாறி அழுத்தம் தாளாமல் வெளியேறி பலரது உயிரையும் வாழ்வாதாரத்தையும் பறித்துள்ளது.

இந்த விசவாயுக் கசிவு எப்படி ஏற்பட்டது ? LG பாலிமர்ஸ் நிறுவனம் விட்டுள்ள அறிக்கையில், ஸ்டைரீன் மோனோமரைத் தேக்கி வைத்துள்ள தொட்டியில் ஏற்பட்ட வெப்ப மாற்றம், அதனை மீச்சேர்மமாக்கலுக்கு (Polymerization) உள்ளாக்கி வாயுவாக மாற்றியிருக்கிறது என்று தெரிவித்துள்ளது. விசவாயுக் கசிவு சமயத்தில் சுமார் 1800 டன் ஸ்டைரீனை அந்த நிறுவனம் தேக்கியிருக்கிறது.

இந்நிறுவனம், ஆபத்துமிக்க இந்த இரசாயனத்தைத் தேக்கி வைக்க முறையான அனுமதியும், மாசுக் கட்டுப்பாட்டு மற்றும் சுற்றுச் சூழல் அனுமதி என எதுவும் பெற்றதாகத் தெரியவில்லை. கடந்த 1997 முதல் 2019 வரை, இவ்வளாகத்தில் இயங்கி வந்த பெட்ரோ கெமிக்கல் ஆலைக்கு எந்தவித சுற்றுச் சூழல் அனுமதியும் பெறாமலேயே செயல்பட்டிருகிறது என்பதை அந்த நிறுவனமே கடந்த மே 10, 2019 அன்று தாக்கல் செய்த ஒரு அறிக்கையில் ஒத்துக் கொண்டுள்ளது.

தனது உற்பத்தித் திறனை நாளொன்றுக்கு 415 டன்னில் இருந்து 655 டன்னாக உயர்த்திக் கொள்ள அனுமதி வேண்டி முன் வைத்த கோரிக்கை மனுவில் தான் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்து, “இனி அதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளது.

யுனைடெட் ப்ரூவெரீஸ் குழுமத்தைச் (UB Group) சேர்ந்த மெக்டவல் நிறுவனம், கடந்த 1982 முதல் 1997 வரை இந்நிறுவனத்தை நடத்திவந்தது. அந்தப் பகுதியில் மக்கள் தொகை நெருக்கம் அதிகரித்து வந்த சூழலைக் கணக்கில் கொண்டு, ஸ்டைரீன் மற்றும் சாராய உற்பத்தியை நிறுத்திக் கொள்ள அந்நிறுவனம் முடிவெடுத்தது. கடந்த 1997-க்குப் பிறகு இந்த நிறுவனத்தை தென் கொரிய நிறுவனமான எல்.ஜி கெமிக்கல்ஸ் (LG Chem) வாங்கியது. இறக்குமதி செய்யப்பட்ட ஸ்டைரீனைக் கொண்டு பாலி-ஸ்டைரீன், விரியத்தக்க பாலி-ஸ்டைரீன் மற்றும் அல்பெய்ட் உள்ளிட்ட பொருட்களைத் தயாரிக்கத் துவங்கியது.

இந்த ஆலையின் பிரதான மூலப் பொருளாகிய ஸ்டைரீன், “ஆபத்துமிக்க மற்றும் விசத்தன்மை வாய்ந்த இரசாயனம்” என்று இந்திய அரசால் வகைப்படுத்தப்பட்ட ஒன்று. ஸ்டைரீன் மோனோமெர் என்ற இரசாயனத்தை 17 டிகிரி செல்சியசுக்குக் குறைவான வெப்பநிலையில்தான் சேமித்து வைக்க வேண்டும். அப்படி இல்லாத சமயத்தில் இதன் அழுத்தம் அதிகமாகி கொள்கலன்களை வெடிக்கச் செய்யும் தன்மை கொண்டது.

கோவிட்-19 நோய்த்தொற்றை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து ஆலைகளும் செயல்பாட்டை நிறுத்தி வைத்திருந்த நிலையில், இந்நிறுவனம் இந்த இரசாயனத்தி பாதுகாப்பிற்குத் தேவையான குளிர்ச்சியான வெப்பநிலையை தக்கவைக்கத் தவறியிருக்கலாம். அதன் காரணமாகவே இந்தக் கசிவு ஏற்பட்டிருக்க முடியும். ஏனெனில் திரவ நிலையில் உள்ள இந்த இரசாயனம் வாயுநிலைக்கு மாறுவதற்கு அடிப்படையான தேவை அதிகரித்த வெப்பம்தான்.

ஆனால் ஆந்திர தொழில்துறை அமைச்சர் மேகாபதி கவுதமனோ, அந்நிறுவனம் ஒழுங்குமுறையை மீறியதாக விசாரணையில் தெரியவந்தால் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேச போலீசும், பிரிவு 278, 284, 285, 337.338 மற்றும் 304(II) போன்ற பல மொன்னையான (கவனக் குறைவால் ஏற்பட்ட குற்றம், காற்று, சுற்றுச் சூழல் மாசுபாடு, கொலையல்லாத நிகழ்ந்த மரணம் விளைவிக்கும் குற்றம் உள்ளிட்ட) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் மத்திய ஆற்றல்துறை செயலர் ஈ.ஏ.எஸ். சர்மா, ஆந்திர மாசுக்காட்டுப்பாட்டு வாரியம் இவ்வளவு நாட்களாக எவ்வித ஒழுங்குமுறையும் அற்று இந்நிறுவனம் செயல்பட அனுமதியளித்துள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ளார். அந்த நிறுவனத்தின் மீதும் அதற்கு அனுமதியளித்த அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு அனுப்பியுள்ள தனது கடிதத்தில், இந்த நிறுவனம் ஆட்சிக்குவரும் அனைத்து அரசாங்கங்களாலும் தொடர்ந்து பாதுக்காப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், நூற்றுக்கணக்கான கோடி மதிப்பிலான அரசாங்க நிலத்தின் மீது தனது ஆலையை விரிவுபடுத்தியிருக்கும் இந்நிறுவனத்திடமிருந்து அந்த நிலங்களை மீட்க அரசு முயற்சிக்கையில், அதனைக் கொடுக்காமல் அரசாங்கத்தை நீதிமன்றத்திற்கு இழுத்துள்ளது இந்நிறுவனம் என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்த வழக்கு நிலுவையிலிருக்கும் நிலையில் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளைப் பற்றி துளியும் அக்கறையில்லாமல் இந்த நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கான அனைத்து ஒப்புதல்களையும் அதிகாரிகள் வழங்கியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டுகிறார் சர்மா.

“இந்தச் சம்பவம் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும், அதிகாரிகளுக்குமிடையிலான கூட்டை சுட்டிக் காட்டுகிறது. இத்தகைய மாசுபடுத்துவோர், அனைத்து மட்டங்களிலுமுள்ள அரசியல்வாதிகளின் ஆதரவைப் பெற்றிருப்பார்கள் என்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை” என்று குற்றம் சாட்டியிருக்கிறார் சர்மா.

மேலும் இரண்டாம் கட்ட லாக்-டவுனிற்குப் பிறகு இந்நிறுவனம் இயங்க மத்திய அமைச்சரகத்திலிருந்து தடையில்லாச் சான்றையும் இந்நிறுவனம் பெற்றுள்ளதாகவும், “அவசியமான தொழிற்சாலை” என்ற அடிப்படையில் இந்த அனுமதி கொடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார் சர்மா.

டில்லியில் செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில், “ஸ்டைரீனை அதற்குப் பொருத்தமான வெப்ப நிலையில் வைக்கத் தவறியதே இந்தப் பிரச்சினையின் காரணமாகும். அதிக வெப்பம், அதிக அழுத்தத்தை கொள்கலன்களில் ஏற்படுத்தியதன் விளைவாக, பாதுகாப்பு வால்வுகள் உடைந்து ஸ்டைரீன் வாயு வெளியேறியுள்ளது. மேலும் ஸ்டைரீனை சேமிக்கப் பயன்படுத்திய கொள்கலன்கள் பழையனவாகவும், முறையாகப் பராமரிக்காமலும் விடப்பட்டிருக்கின்றன” என்று தெரிவித்துள்ளது.

மேலும், கொள்கலனில் உள்ள ஸ்டைரீனின் நிலையை கண்காணிக்கும் பொறிமுறை எதுவுமே அந்த ஆலையில் நிறுவப்பட்டிருக்கவில்லை என்கிறது அந்த அறிக்கை.
“மீண்டும் ஆலையைத் துவக்கும் அவசரத்தில், பராமரிப்புக்கான முன்னெச்சரிக்கை செயல்முறைகளை ஆலை நிர்வாகம் பின்பற்றத் தவறியதும், போதுமான வெப்பநிலையில் ஸ்டிரைன் கொள்கலன்களை பராமரிக்காததும் இந்த பாதிப்பிற்கு முக்கியக் காரணம்.” என்று தெரிவிக்கிறது இந்த அறிக்கை.

அறிவியல் துறைசார் வல்லுனர்கள் மற்றும் சுற்றுச் சூழலியல் வல்லுனர்களின் கூற்றுப்படி, இந்த ஆலை போதுமான அனுமதியில்லாமல், போதுமான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல், செயல்பட்டு வந்ததே 13 அப்பாவிகளின் மரணத்திற்கு அடிப்படைக் காரணமாகும். விசவாயுக் கசிவு, விபத்து என்றெல்லாம் அழைக்கப்பட்டு வரும் இந்த நிகழ்வை சரியாகக் குறிப்பிடவேண்டுமெனில், LG பாலிமர்ஸ் நிறுவனத்தின் இலாப வெறிக்காக நிகழ்த்தப்பட்ட படுகொலை என்றுதான் குறிப்பிட முடியும்.

1984-ல் நடந்த போபால் விசவாயுப் படுகொலைக்குச் சற்றும் குறைவில்லாத நிகழ்வு இது. போபாலை ஒப்பிடுகையில் அங்கு கசிந்த மெத்தில் ஐசோ சையனைட் (methyl isocyanate) என்ற இரசாயனத்தின் நச்சுத் தன்மையை விட ஸ்டைரீன் மோனோமெர் (Styrene Monomer) ஒப்பீட்டளவில் குறைவான நச்சுத்தன்மை கொண்டதாக இருந்ததால் மட்டுமே மரணம் 13-ஆக இருந்தது. இல்லையெனில் போபாலைப் போல இங்கும் ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்திருப்பர்.

இன்னும் இரண்டு வாரங்களில் (மே 22) ஸ்டெர்லைட் நிறுவனத்தின் லாபவெறியாட்டத்தின் குறியீடான தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நினைவுநாள் அனுசரிக்கப்படவிருக்கும் நிலையில், LG பாலிமர்ஸ் நிறுவனத்தின் லாபவெறியாட்டத்தின் குறியீட்டை மே 7-ல் விசாகப்பட்டிணம் சந்தித்திருக்கிறது.

போபால் தொடங்கி தற்போது விசாகப்பட்டிணம் வரை கார்ப்பரேட் லாபவெறியின் குறியீடுகள் கெக்கலித்துக் கொண்டேதான் இருக்கின்றன. நாமும் சில வாரம் அவற்றை அங்கலாய்த்துவிட்டுக் கடந்து கொண்டுதான் இருக்கிறோம். கார்ப்பரேட் – அரசு கூட்டு அவ்வப்போது கோரமாக அம்பலமான பின்னரும், இந்த அரசு நம்மைக் காப்பாற்றத்தான் இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் நம்புகிறோமெனில் கசாப்புக் கடைக்காரன் தன் பசியைப் போக்கத்தான் தீனி போடுகிறான் என நம்பும் ஆட்டுக்கும் நமக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.

--------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?