திரைமறைவுப் பின்னணி!

மக்கள் கண்காணிப்பகத்தில் சோதனை! 

மக்கள் கண்காணிப்பகத்தில் சோதனை! திரைமறைவுப் பின்னணி!

-ச.மோகன்

முதலாளித்துவ சனநாயக நாட்டில் அரசதிகாரத்தின் மீறல்களைச் சுட்டிக் காட்டித் தட்டிக் கேட்போர் மீது பழிவாங்கல் நடவடிக்கை பாய்வதென்பது புதிதல்ல. வாடிக்கையான ஒன்றே! இந்த வரிசையில் இப்போது மக்கள் கண்காணிப்பகம் மீது ஒன்றிய அரசதிகாரம் பாய்ந்துள்ளது. 

மனித உரிமைத் தளத்தில் கால் நூற்றாண்டுக்கு மேலாக இந்திய அரசமைப்பினுடைய சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு களப்பணியாற்றி வரும் மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தில் கடந்த 8.1.2022 அன்று மத்திய புலனாய்வுத் துறையினர்(CBI) எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நடுநிலையுடன் செயற்படவேண்டிய ஊடகங்கள் ஒருதலைப் பட்சமாய் முதல் தகவல் அறிக்கையில் உள்ளபடி சேதி வெளியிட்டன.

 இது மக்கள் கண்காணிப்பகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக உள்ளது. எனவே உண்மையை உலகறிய உரக்கச் சொல்ல வேண்டியது காலத்தின் அவசியம்.

திட்டமிட்ட சோதனை:

திடீர் சோதனை நடத்துவதற்கு முன் 6.1.2022 அன்று வழக்குப் போட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். 

அதற்கு மறு நாள் 7.1.2022 அன்று மதுரை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (Chief Judicial Magistrate Court) மூலம் “சோதனையிடல் உத்தரவு” (search warrant) பெற்றுள்ளனர். 

அதன்படி கடந்த 8.1.2022 அன்று மத்திய புலனாய்வுத் துறையினர்(CBI) 2008 முதல் 2012 வரையிலான வங்கிக் கணக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பார்வையிட வேண்டும் என்று கூறினர்.

துணை கண்காணிப்பாளர் (CBI-DSP) தலைமையில் பத்து பேர் சோதனையில் ஈடுபட்டனர். 

மிகுந்த மரியாதையுடன் நாகரிகமாக நடந்து கொண்டனர். அதற்கேற்ப அவர்களின் முகக் குறிப்பறிந்து மக்கள் கண்காணிப்பகம் பணியாளர்களும் மிகுந்த ஒத்துழைப்புடன் துளி கூட அச்சமின்றி நடந்து கொண்டனர். மக்கள் கண்காணிப்பகத்தின் வழக்கமான பணி தங்கு தடையின்றி தெளிந்த நீரோடையாய் சென்று கொண்டிருந்தது. பையில் பணம் இருந்தால் தானே பயண வழியில் பயம் இருக்கும்.

அரசதிகாரத்தின் மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து சட்ட ரீதியாகத் தலையீடு செய்து பாதிப்புற்றோர்க்கு நீதியும், நிவாரணமும் பெற்றுத் தரும் மக்கள் கண்காணிப்பகத்தின் சமூகப் பணி கால வரலாற்றில் காணக் கிடப்பது போல் அதன் வங்கிக் கணக்கும், அதற்குரிய முறையான தணிக்கை அறிக்கையும் இணையத்தில் (http://cpsc-fcra.blogspot.com/) பதிவேற்றம் செய்யப்பெற்று வெளிப்படைதன்மையுடன் வெகுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது உலகறிந்த ஒன்றாகும். 

இது ஒன்றிய அரசும், மத்திய புலானாய்வுத் துறையும் அறியாத ஒன்றல்ல. இருப்பினும் காலை சுமார் 10.30 மணிக்கு ஆரம்பித்த சோதனை முன்னிரவு 7.30 மணிவரை தொடர்ந்தது. 

அவர்களுக்குத் தேவையான சில ஆவணங்களைக் கையில் எடுத்துச் சென்றனர். அரசதிகாரத்தின் பழிவாங்கல் நடவடிக்கைக்கான காரணம் பற்றிப் பேசும் முன் மக்கள் கண்காணிப்பகம் என்றால் என்ன என்பதைப் பற்றித் தெளிவு ஏற்படுத்த வேண்டிய ஓர்அவசியம் உள்ளது.

மக்கள் கண்காணிப்பகம் என்பது 

மனித உரிமைகளைப் பாதுகாத்து, வளர்த்தெடுக்கும் பெரு நோக்கில் ‘’சமுக சிந்தனை வளர்ச்சி மையம்” (Centre for Promotion of Social Concern-CPSC) என்ற அரசு சாரா அமைப்பு முறையாகப் பதிவு செய்யப்பெற்று தமிழ் நாட்டில் 1982 ஆம் ஆண்டு முதல் இலாப நோக்கின்றி செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இருபதாம் நூற்றாண்டின் நிறைவில் ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் ‘வியன்னா’வில் 1993 ஆம் ஆண்டு ஜூன்14 முதல் 25 வரை அகில உலக மனித உரிமை மாநாடு நடைபெற்றது.

 மனித உரிமைகள் மீது மட்டுமே கவனஞ் செலுத்திய இம்மாநாடு மனித உரிமைகளின் சிந்தனைப் போக்கில் செல்வாக்கு செலுத்தியது.

இம்மாநாட்டில் உலகம் முழுவதும் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் விவாதிக்கப்பட்டு தீர்வை நோக்கித் திசைப்படுத்தப்பட்டன. 

இது உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக தூங்கா நகரமான மதுரை மண்ணில் 1995 ஆம் ஆண்டு விழிப்புடன் தொடங்கப்பட்ட ஒரு திட்டத்தின் பெயர் தான் மக்கள் கண்காணிப்பகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் கண்காணிப்பகம் என்பது ஒரு திட்டம். பதிவு பெற்ற நிறுவனமோ அமைப்போ அல்ல. இதற்கென்று தனியாக வங்கிக் கணக்கு கிடையாது. தனியாகப் பணியாளர்கள் கிடையாது. 

மக்கள் கண்காணிப்பகம் என்ற திட்டம் சமூக சிந்தனை வளர்ச்சி மையம் (CPSC) என்ற பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது. எனவே சமூக சிந்தனை வளர்ச்சி மையம் (CPSC) என்ற அறக்கட்டளையின் பெயரில் வெளிநாட்டில் இருந்து நிதி பெறும் வங்கிக் கணக்கு (FCRA) உள்ளது. 

இந்த அறக்கட்டளையும், மக்கள் கண்காணிப்பகமும் இலாப நோக்கு ஏதுமின்றி மனித உரிமைத் தளத்தில் செயல்பட்டு வருகின்றன. சமூக சிந்தனை வளர்ச்சி மையத்தின் (CPSC) அறங்காவலர்கள் தான் மக்கள் கண்காணிப்பகத்தின் திட்டத்தை செயற்படுத்துகின்றனர்.

மத்திய புலனாய்வுத் துறை (CBI) சோதனை ஏன்?

மக்கள் கண்காணிப்பகம் திட்டத்தின் மனித உரிமைப் பணிகள் ஆட்சியாளர்க்கு நெருக்கடியை ஏற்படுத்தின. 

குறிப்பாக அரசதிகாரத்தின் மீறல்களுக்கெதிராய் தலையீடு செய்யும் போதெல்லாம் முதலாளித்துவ சனநாயக ஆட்சியாளர்களின் பொய் முகம் பொதுவெளியில் அம்பலப்படுகிறது. 

இதையுந் தாண்டி, ஐ.நாவின் தேசிய மனித உரிமை ஆணையங்களுக்கான “பாரிஸ் கோட்பாடுகளை” அடியொற்றி, இந்திய தேசிய மனித உரிமை ஆணையம் செயற்படவில்லை என்று, மக்கள் கண்காணிப்பகம் உறுப்பினராக இருக்கும் ‘தேசிய, மாநில மனித உரிமைகள் நிறுவனங்களுடன் பணிபுரியும் அமைப்புசாரா நிறுவனங்கள், தனிமனிதர்களின் அகில இந்திய கூட்டமைப்பின் ((All India Network of NGOs and Individuals working with National and State Human Rights Institutions-AiNNI) சார்பில் “நிழல் அறிக்கை” (Shadow Report) பன்னாட்டு அமைப்பான GANHRI-யிடம் (Global Alliance for National Human Rights Institutions) அளிக்கப்பட்டது.

இந்நிறுவனம் உலக நாடுகளில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையங்களின் செயற்பாடுகள் அடிப்படையில் அவற்றின் தர மதிப்பீட்டை அளவீடு செய்து வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2011 சனவரி மாதம் இந்தியா வருகை புரிந்த ‘ஐக்கிய நாட்டவையின் மனித உரிமைக் காப்பாளர்க்கான சிறப்பு பிரதிநிதி’ இங்குள்ள மனித உரிமைக் காப்பாளர்களை நேரில் சந்தித்து உரையாட ஏற்பாடு செய்த நிகழ்வு போன்றவை இந்திய ஒன்றிய அரசுக்கு நெருக்கடி கொடுத்தது.

இவையாவும் பன்னாட்டு மனித உரிமைத் தரத்தில் இந்திய அரசு மீதான மதிப்பைக் குறைத்தது.

 இதன் காரணமாகச் சினமுற்ற அன்றைய ஆளும் அரசான காங்கிரஸ் கட்சியின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனது அரசதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் கண்காணிப்பகம் செயற்பாட்டிற்காக, சமூக சிந்தனை வளர்ச்சி மையம்(CPSC) வெளிநாட்டில் இருந்து நிதி பெறும் வங்கிக்கணக்கை (FCRA) 2012, ஜூலை மாதம் உள்துறை அமைச்சகம் மூலம் முடக்கியது தான் பழிவாங்கலின் ஆரம்பம்.

இதன் தொடர்ச்சியாய் பத்தாண்டுகள் கழித்து இப்போது பாரதிய சனதா அரசின் மத்திய புலனாய்வுத் துறை மூலம் சோதனை செய்துள்ளது. பத்தாண்டுகளில் நடந்தது என்ன என்பது பற்றி இனி காண்போம்.

தடை- மேல்முறையீடு - தடை விலக்கம்:

முதலில் சமூக சிந்தனை வளர்ச்சி மையம் (CPSC) வெளிநாட்டில் இருந்து நிதி பெறும் வங்கிக்கணக்கை (FCRA) ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் (காங்கிரஸ்)180 நாட்கள் முடக்கி 16.7.2012 அன்று தடை அறிவித்தது.

முதல் 180 நாட்கள் முடியும் முன் 179 ஆவது நாளில் 18.2.2013 அன்று இரண்டாவதாக மேலும் 180 நாட்கள் முடக்கிச் செயற்பட தடை அறிவித்தது. 

இரண்டாவது 180 நாட்கள் முடியும் முன் மூன்றாவது முறையாக 16.9.2013 அன்று 180 நாட்கள் முடக்கிச் செயற்பட தடை விதித்தது.

மூன்றாவது முறை இதனை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் சமூக சிந்தனை வளர்ச்சி மையம் (CPSC) மேல்முறையீடு (W.P. (C) 1594 of 2014) செய்தது. 

இதன் விளைவாக ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் 2012 மே மாதம் தொடர்ந்து ஐந்து நாட்கள் மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தில் சோதனை செய்தனர். பின்னர் 2014 ஆம் ஆண்டும் சோதனை செய்தனர். 

இதனைத் தொடர்ந்து சமூக சிந்தனை வளர்ச்சி மையம் (CPSC) வெளிநாட்டில் இருந்து நிதி பெறும் வங்கிக் கணக்கு செயற்படுவதில் எவ்விதத் தடையும் இல்லை என்று தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் 2014 மே மாதம் 9ஆம் தேதி தடை நீக்கப்பட்டது.

இதன் பின்னர் 2014 முதல் 2016 வரை சமூக சிந்தனை வளர்ச்சி மையம்(CPSC) வெளிநாட்டில் இருந்து நிதி பெறும் வங்கிக் கணக்கு செயற்பட்டது. நீதிமன்ற உத்தரவில் சமூக சிந்தனை வளர்ச்சி மையம் (CPSC) மீது எவ்விதக் குற்றச்சாட்டும் கூறப்படவில்லை என்பது இங்கே கவனத்திற் கொள்ளத் தக்கது. இத்துடன் இந்த வழக்கு முடிவுற்றது.

வங்கிக் கணக்கைப் புதுப்பிக்க (Renewal) மறுப்பு:

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளி நாட்டில் இருந்து நிதி பெறும் வங்கிக் கணக்கு புதுப்பிக்கப்பெற வேண்டும். 

இதன் படி சமூக சிந்தனை வளர்ச்சி மையம் வெளிநாட்டில் இருந்து நிதி பெறும் வங்கிக்கணக்கின் பதிவைப் புதுப்பிக்க (Renewal) முந்தைய பாஜக ஆட்சியில் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விண்ணப்பித்தது. இந்த விண்ணப்பம் 29.10.2016 அன்று நிராகரிக்கப்பட்டது.

“களஆய்வின் அடிப்படையில்” (Field Study Report) புதுப்பித்தலுக்கான அனுமதி நிராகரிக்கப்படுவதாக ஒற்றை வரியில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. 

இந்த நிராகரிப்பின் மீதான மேல்முறையீடு (W.P.(C) 10527/2016) தில்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் மத்திய புலனாய்வுத்துறை (CBI) சமூக சிந்தனை வளர்ச்சி மையத்தின் (CPSC) மீது எவ்வித கிரிமினல் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை என்பது இங்கே குறிப்பிட த்தக்கது.

இதில் வேடிக்கை யாதெனில் வங்கிக் கணக்கு புதுப்பிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதே வங்கிக் கணக்கை மீண்டும் 2017 ஆம் ஆண்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. 

இதனை எதிர்த்து சமூக சிந்தனை வளர்ச்சி மையம் (CPSC) தில்லி உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தனது கவனக்குறைவை உணர்ந்த உள்துறை அமைச்சகம் 17.5.2017 அன்று அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொண்டது.

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் 08.07.2014 அன்று பேசிய உள்துறை இணை அமைச்சர்(பாசக), “சமூக சிந்தனை வளர்ச்சி மையம் (CPSC) மீதான வழக்கை ஒன்றிய உள்துறை அமைச்சகம் (காங்கிரஸ்), 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு கூடுதல் காவல்துறை இயக்குநர் அவர்களிடம் (ADGP) ஒப்படைத்துள்ளது. 

இது 2.12.2020 தேதியிட்ட G.O.(2D) எண்.309- மூலம் உறுதி செய்யப்படுகிறது. இந்த விசாரணையில் என்ன நடந்தது என்பது இது வரை சிதம்பர மர்மமாகவே உள்ளது.

தமிழ்நாடு கூடுதல் காவல்துறை இயக்குநர் (ADGP) அவர்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லாமல், எட்டு ஆண்டுகள் நடந்ததைப் பற்றி எதுவும் கூறாமல், மத்திய புலனாய்வு துறை (CBI) விசாரணை செய்ய 2.12.20 அன்று தமிழ்நாடு அரசு (அதிமுக) எட்டு ஆண்டுகள் கழித்து அனுமதி வழங்கியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து மொத்தத்தில் பத்தாண்டுகள் கழித்து மத்திய புலனாய்வுத் துறையால் (CBI) முதல் தகவல் அறிக்கை (FIR) 7.1.2022 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்தாண்டுகளுக்குப் பின் முதல் தகவல் அறிக்கை

தில்லி உயர்நீதிமன்றத்தால் 2014 மே மாதம் 9ஆம் தேதி தடை நீக்கப்பட்டு, குற்றம் ஏதும் குறிப்பிடப்படாமல் முடிவுற்ற வழக்கின் மீது பத்தாண்டுகளுக்குப் பின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு மூவர் குற்றவாளிகளாகக் காட்டப்பட்டுள்ளனர். 1) சமூக சிந்தனை வளர்ச்சி மையத்தின் அறங்காவலர்கள், 2) மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர், 3) முகமறியா நபர்கள். மேற்கண்ட மூவகையினரும் இந்திய தண்டனைச் சட்டப்படியும் (IPC), வெளிநாட்டு நிதி பெறும் விதிப்படியும் (FCRA), குற்றம் இழைத்தவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர்.

மத்திய புலனாய்வுத் துறையின் முதல் தகவல் அறிக்கையில் குற்றமிழைத்ததாகக் கூறப்படும் அறங்காவலர்களாக தற்போது திரு. கிறிஸ்துதாஸ் காந்தி IAS (ஓய்வு), பேராசிரியர் தேவசகாயம், மூத்த வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, MUTA அமைப்பில் முக்கிய பங்காற்றிய பேரா.கிருஷ்ணமூர்த்தி, காந்தியவாதி திரு. பி.வி. இராஜகோபால், ஐ.நாவின் போதுமான குடியிருப்பு வசதி உரிமைக்கான முன்னாள் சிறப்பு பிரதிநிதி திரு. மிலூன் கோத்தாரி, காவல் வன்முறையால் கொலை செய்யப்பட்ட திரு. குருவையாவின் மனைவி திருமதி. அங்கம்மாள் ஆகியோர் உள்ளனர்.

இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் விபிசிங் அவர்களிடம் நேர்முக உதவியாளராக இருந்த திரு.வேணுகோபால் அவர்களும் அறங்காவலராக இருந்தார். 

இவர்களுள் திருமிகு அங்கமாளைத் தவிர, யாவரும் சமூக வெளியில் சேவை நோக்கில் மாசற்றுப் பயணித்து மதிப்புறு நிலையில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ஹென்றி திபேன் ஆசிய கண்டத்திலேயே முதன் முதலாக 2016 ஆம் ஆண்டு அம்னெஸ்டி-ஜெர்மனியின் மனித உரிமைக்கான விருது பெற்றவர். 

இந்தியாவில் மனித உரிமைகளுக்காக ஓய்வின்றி அச்சமின்றி உழைத்ததை மெச்சி வழங்கப்பட்டது.

மேலும் இந்திய தேசிய விருதுகளில் மிகவும் உயரிய விருதான நானி .ஏ.பல்கிவாலா விருதை சமூக மாற்ற செயற்பாடுகளுக்காக 2018 ஆம் ஆண்டு ஹென்றி திபேன் அவர்களுக்கு அப்போதைய உச்சநீதிமன்ற நீதியரசர் நாரிமன் அவர்களால் வழங்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் விருது வழங்கப்பட்டது. இவ்விருதுகள் யாவும் உள்நாடும், உலக நாடுகளும் இவருடைய நேரிய பணிக்கு, சீரிய உழைப்பிற்கு ஒப்புதல் அளிப்பவை.

நீதிபதி எழுப்பிய கேள்வி

2016 ஆண்டு வெளிநாட்டில் நிதி பெறும் வங்கிக்கணக்கை புதுப்பிக்க மறுத்ததை எதிர்த்து தில்லி உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட பதிலுரையில், “மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் வெளிநாட்டில் இருந்து நிதி பெற்று ஐக்கிய நாட்டவையின் பல சிறப்பு பிரதிநிதிகளிடம் அறிக்கை அளிக்கிறார். 

மேலும் வெவ்வேறு நாட்டு தூதரகங்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று எழுத்துப்பூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்குப் பதிலுரைத்த நீதியரசர் “கணக்குகளை மட்டுமே பாருங்கள், அவர்கள் அளிக்கின்ற அறிக்கைகளைப் பார்க்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியதை இங்கு நினைவூட்டுகிறோம்.

திடீர் சோதனையின் திரை மறைவுப் பின்னணி!

வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு ஏறத்தாழ 2600 நாட்களைக் கடந்த நிலையில் நிதி நெருக்கடியுடன் மனித உரிமைக் களத்தில் மக்கள் கண்காணிப்பகம் தொய்வின்றி தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.

எடுத்துக்காட்டாக ஆந்திராவில் சேசாசலம் வனப்பகுதியில் இருபது தமிழர் சுட்டுக் கொலை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொலை, சாத்தான்குளம் காவல் சித்திரவதையில் தந்தை-மகன் படுகொலை, கோட்டைப்பட்டினம் மீனவர் மரணம், ஆந்திராவில் தமிழ் பழங்குடியினர் இருவர் வனக் காவலில் மரணம் போன்றவை மக்கள் கண்காணிப்பகம் தலையீட்டுப் பணியின் மைல் கற்கள்.

இப்பணிகள் யாவும் அரசதிகாரத்தின் மீறல்களை பொது வெளியில் அம்பலப்படுத்துபவை. 

குறிப்பாக ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோது ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதிகள் ஏழு பேர் கண்டனம் தெரிவித்தனர். 

இது இந்திய அரசுக்கும், வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கும் எதிபாராத நெருக்கடியை ஏற்படுத்தியது.

உலகளாவிய கால வரைவு மீளாய்வின் (Universal Periodic Review) 40ஆவது அமர்வு 2022 , சனவரி 24, பிப்ரவரி 4, 41ஆவது அமர்வு நவம்பர்7,18 ஆகிய நாட்களில் ` நடைபெறுகிறது. இதில் ஐ.நாவின் உறுப்பு நாடுகள் பங்கேற்கும், உலகம் முழுவதும் நடைபெற்ற மனித மீறல்கள் பற்றி விவாதித்து மீளாய்வு செய்யும். இதிலும் இந்தியா அதே நெருக்கடியைச் சந்திக்கும் என்று மனித உரிமை ஆர்வலர்களும், காப்பாளர்களும் தெரிவிக்கின்றனர். இது தான் மத்திய புலனாய்வுத் துறை நடத்திய திடீர் சோதனையின் திரை மறைவுப் பின்னணி என்ற கருத்தும் சமூக வெளியில் எழுகிறது. பொதுவெளியில் பேசப்படுகிறது.

இறுதியாக.....

நியாயத்தின் நிலைப்புக்காக மனித உரிமைத் தளத்தில் களம் காண்போர் இது போன்ற மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சியதாக வரலாறு இல்லை. 

ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கும், அடக்கு முறைகளும், புனையப்படும் பொய் வழக்குகளும், குற்றச் சாட்டுகளும் நீதி மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அம்பலப்படும் என்பதே வரலாறு. நீதியும், நியாயமும், உண்மையும் வெல்லும். அதைக் காலம் சொல்லும்.

கட்டுரையாளர் குறித்து:

மும்பையில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய ச.மோகன், தற்போது மதுரை மக்கள் கண்காணிப்பகத்தில் இணை இயக்குநராக இருக்கிறார். பல்வேறு சமூகப் பிரச்சினைகளை நேரடியாக அணுகி பாதிக்கப்பட்டவர்களுடன் பேசி உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறார்

வெறித்தனம் நடனம்.

https://youtu.be/BWV7NTCh32w




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?