ஆளுநருக்கு எதிராக முரசொலி
தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து நீண்ட கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. ஆளுநரின் குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் இடம்பெற்றிருந்த கருத்துகளை தி.மு.க. ஏற்கனவே கண்டித்திருந்த நிலையில், மேலும் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.
முரசொலியின் கடைசிப் பக்கத்தில் இன்று ''கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி'' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அந்தக் கட்டுரையில் ஆளுநரின் குடியரசு தின வாழ்த்துச் செய்தியை மையமாக வைத்து கடுமையான கருத்துகள்
தெரிவிக்கப்பட்டுள்ளன.
"அவர் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்து, ஓய்வுக்குப் பின்னர் கவர்னராக அமர்த்தப்பட்டவர். மிரட்டல் உருட்டல் பாணிகள் காவல் துறைக்குத் தேவை. பல நேரங்களில் அந்த பாணி கைகொடுக்கும். ஆனால், அது அரசியலில் எடுபடாது என்பதை அவர் உணர்ந்திட வேண்டும்.
குடியரசு தின விழாவை ஒட்டி ஆளுநர் விடுத்துள்ள செய்தி, அவர் தனது பொறுப்புணராது தமிழக மக்களின் தன்மானத்தை உரசிப் பார்க்க நினைப்பதாகத் தோன்றுகிறது. நீட்டுக்கு எதிராக தமிழக சட்டமன்றம் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி மாதங்கள் சில கடந்தும் அது கிடப்பிலே கிடக்கிறது.
அதன் நிலை என்னவென்று தெரியாத நிலையில், நீட் வருவதற்கு முன்பு இருந்த நிலையைவிட நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பு சேர்க்கை அதிகரித்துள்ளது என்று கூறியிருக்கிறார்.
ஒட்டுமொத்தத் தமிழகமுமே நீட்டை எதிர்த்து நிற்கும் நிலையில், தமிழகத்தின் சட்டப்பேரவையே அதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், அது அவரது பரிசீலனையில் இருக்கும் நிலையில், ஒரு ஆளுநர் இப்படி அறிவிப்பது என்ன நியாயம்?
ஒரு கட்சி தனது கொள்கைகளைச் சொல்லி மக்களிடம் வாக்குப் பெற்று ஆட்சி பீடம் ஏறுகிறது. மக்களும் அந்தக் கட்சி அவர்களது எண்ணைத்தை நிறைவேற்றும் என்று எண்ணி வாக்களிக்கிறார்கள். அந்த மக்களின் எதிர்பார்ப்பை தீர்மானமாக்கி அனுப்பும்போது அதை ஓர் ஆளுநர் அலட்சியப்படுத்துவது என்பது சுமார் ஏழு கோடி மக்களை அவமதிப்பது என்பதை உணர வேண்டும்.
முரசொலியில் ஆளுநரை விமர்சித்து வெளியாகியுள்ள கட்டுரை
தமிழக அரசியல்வாதிகள் பல கருத்துகளில் ஒன்றுபடுவதில்லை. பல ஜீவாதார உரிமைகளில் அவர்கள் ஒன்றுபட்டு நிற்பார்கள். அங்கே கட்சி வேறுபாடுகளைக் காண முடியாது. அப்படிப்பட்ட உரிமைகளில் ஒன்றுதான் நீட் வேண்டாம் என்பது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இருமொழிக் கொள்கைதான். இதில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் மாறுபட்ட கொள்கையில்லை. மற்றொன்று நீட் வேண்டாமென்பது.
ஆளுநர் ரவி இதனை உணர்ந்து உரிய தகவலை மேலிடத்திற்குத் தெரிவித்து ஒட்டுமொத்தத் தமிழகத்தின் உரிமைக் குரலுக்கு அங்கீகாரம் வாங்கித்தர முயல வேண்டும். அதனை விடுத்து இங்கே பெரியண்ணண் மனப்பான்மையோடு அரசியல் செய்ய நினைத்தால் "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா" எனும் பழங்கதை மொழியை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். அதாவது இது நாகாலாந்து அல்ல, தமிழகம் என்பதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்" என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே, குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்த கருத்துகளுக்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையான அறிக்கை ஒன்றின் மூலம் பதில் அளித்திருந்தார்.
"தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையினை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்திட முன்வர வேண்டும் என்ற கருத்து உருவாகும் வகையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள், பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களைப் போல நம்முடைய தமிழ் நாட்டுப் பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் பயில வேண்டும் எனவும் பிற இந்திய மொழிகளின் அறிவை நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது சரியல்ல எனவும் தனது குடியரசு நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து அது ஊடகங்களிலும் பரவலாக வெளிவந்திருக்கின்றது.
தமிழ் நாட்டின் மொழிப்போராட்ட வரலாறை அறிந்தோருக்குப் பிற இந்திய மொழிகள் என்பது இந்தியை முன்னிலைப்படுத்தும் சொற்பிரயோகம் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.
இரு மொழிக் கொள்கையால் தமிழ் நாட்டு மாணவர்களின் கல்வித் தகுதியிலோ அல்லது பெரும் பொறுப்புகளில் அவர்களில் இடம் பெறும் வகையில் பெறும் வாய்ப்புகளிலோ யாதொரு பின்னடைவோ குறைகளோ ஏதுமில்லை.
தமிழ்நாடு சட்டமன்றத்திலும் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றப் பட்டு அது மாண்புமிகு ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கின்றது.
ஆளுநர் அவர்கள் அந்த சட்ட முன் வடிவிற்குத் தன்னுடைய இசைவினையும் விரைவில் அளித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களின் மருத்துவப் படிப்பு கனவுகளை நிறைவேற்றத் துணை நிற்பார் என நான் நம்புகின்றேன்" என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.
தமிழ்நாடு அரசு VS ஆளுநர் ஆர்.என். ரவி: முரண்பாடு ஏற்பட்டது ஏன்?
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் ஆளுநர் ஆர்.என். ரவி (கோப்புப்படம் )
தமிழ்நாட்டின் ஆளுநராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டபோதே, அவரது நியமனம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன. இந்த நிலையில் நீட் தேர்வு தொடர்பான மசோதாவை மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பிவைக்காதது தொடர்ந்து நெருடலாகவே இருந்தவந்தது.
சில நாட்களுக்கு முன்பாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க தமிழ்நாடு எம்.பிக்களுக்கு நேரம் வழங்கப்படாத நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர். பாலு, ஆளுநர் குறித்து கடுமையான கருத்துகளைத் தெரிவித்தார். "ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக வேண்டும்" என்று கூறினார்.
இதற்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றும் வகையில் அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் புதிய சட்டத் திருத்தம் கொண்டுவரப் போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்த நிலையில்தான், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை கேள்விக்குட்படுத்தும் வகையில் அறிக்கை வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி.
ஆளுநரின் வாழ்த்துச் செய்தியில் இருந்த கருத்துகளும் ஆளும் தி.மு.கவின் சார்பில் அடுத்தடுத்து வெளிவரும் அறிக்கைகளும் ஆளும் தரப்பிற்கும் ,அதன் கொள்கை முடிவுகளுக்கும் எதிராகவும் பா.ஜ.க கொள்கைகளை ஆதரிக்கும் ஆளுநருக்கும் இடையில் மோதல் இருப்பதை வெளிக்காட்டுகின்றன.
------------------------------------------------------------------------------