ஞாயிறு, 1 ஜூலை, 2018

தமிழ் மொழி..தமிழர்கள்.
தமிழர்களுக்கு மிகவும் பிடித்தமான மொழி மட்டுமில்லை தமிழ் வரலாற்றை படித்த ஒவ்வொருவரையும் அதிகம் பிடிக்க வைக்கும் மொழியும் கூட. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி எதுவென்றால் அது தமிழ்நாடு என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. 
ஆனால் தமிழ்நாட்டை தவிர தமிழர்கள் அதிகம் எங்கு வாழ்கின்றனர்? 
 உங்களுக்கு சரியான விடை தெரியுமா?
நாடு விட்டு நாடு.. கண்டம் விட்டு கண்டம்னு பறந்துகிட்டு இருக்காங்க.. படிப்பாகவும், வேலைக்காவும் , குடும்ப சூழ்நிலை காரணமாக எவ்வளவோ தமிழர்கள் சொந்த ஊரைவிட்டு வேறு மாநிலங்களுக்கு சென்று பொழப்பு நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ்நாட்டை தவிர தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற மாநிலம் குறித்து புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது. 
கடந்த 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்த புள்ளி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 
புள்ளி பட்டியல்  பலரை  அதிர்ச்சி அடைய வைத்துள்ளது . 
ஆம் முதல் இடத்தில் இருப்பது கர்நாடகா மாநிலம் தான்.நாம் தண்ணீருக்காக யாருடன் போராடிக்கொண்டிருக்கிறோமோ அதே கர்நாடக மாநிலம்தான்.அங்கும் பெரும்பாலோர் பெங்களூரு பகுதியிலேயே உள்ளனர்.
புள்ளி கணக்கிடுப்படி கர்நாடகாவில் அதிகபட்சமாக 21,10,128 தமிழர்கள் வசிக்கின்றனர்.
அண்டை மாநிலமான கர்நாடகாவுடன் நடந்து வரும் காவிரி பிரச்சனை நாடு அறிந்த ஒன்று. 

ஆனால் அதே கர்நாடகாவில் தான் அதிகமான தமிழர்களும் வாழ்ந்து வருவது தான் பலரையும் வியக்க வைத்துள்ள செய்தி. 

இந்த புள்ளி பட்டியலில் தமிழ்நாட்டை தாண்டி வேறு எந்த மாநிலங்களில் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்று கணக்கீடும் வெளியாகியுள்ளது. 
அதன் விபரம்.
1. கேரளா – 5,02,516
2. மகாராஷ்டிரா -5,09,887
3. ஆந்திரா – 7,13,848
4. புதுச்சேரி- 11,00,976
5. டெல்லி – 82,719.
இந்த புள்ளிவிபரத்தை வைத்துக்கொண்டு வாட்டாள் நாகராஜ் புதிய போராட்டம் துவக்கிவிடக்கூடாது.
===================================================================================
ன்று,
ஜூன்-30.
  • இந்திய மருத்துவர்கள் தினம்
  • இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலை வழங்க பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முடிவு (1947)
  • சோமாலியா விடுதலை தினம்(1960)
  • ஐரோப்பிய சமூகம் உருவாக்கப்பட்டது(1967)
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது(2002)
=====================================================================================
 வைட்டமின், 'டி'  குறைபாடாக என்ன காரணம்?

நீரிழிவு, உடல் பருமனை தொடர்ந்து, வைட்டமின், 'டி' குறைபாடு, இன்று பொதுவான பிரச்னையாகி விட்டது; 10ல் ஐந்து பேருக்கு இக்குறைபாடு இருக்கிறது.

சூரிய ஒளியிலிருந்து, நம் தோல் தன்னிச்சையாக உற்பத்தி செய்து கொள்ளும், மிக அவசியமான நுண்ணுாட்டச் சத்து. உணவில் இருந்து கிடைக்கும் பல்வேறு சத்துக்கள் முழுமையாக உடலில் சேர வேண்டும் என்றால், வைட்டமின், 'டி' அவசியம்.

வெப்ப மண்டல நாடுகளில் வசிக்கும் நம்மை போன்றவர்களுக்கு, இக்குறைபாடு வரவே கூடாது; ஆனால், வாழ்க்கை முறை மாற்றத்தால், இது பொதுவாகி விட்டது. வெயில் மேலே படுவதே இல்லை. அலுவலகம், பள்ளி செல்பவர்கள் கை, கால், முகம் என்று சூரிய ஒளி படும் பகுதிகளை, துணியால் மறைத்து விடுகின்றனர்.

தோலில் உள்ள வியர்வை துவாரங்கள் மூடாமல் இருந்தால், சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள், அகச் சிவப்புக் கதிர்கள் உதவியுடன், மாசுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள, தேவையான எதிர்ப்பு சக்தியை, உடம்பு தானே உருவாக்கிக் கொள்ளும். பாதுகாப்புக் கவசம் என்ற பெயரில், சன் ஸ்கிரீன் லோஷன் உட்பட, நாம் பின்பற்றும் வழிகள் அனைத்தும், இதை தடுத்து விடுகிறது.

வைட்டமின், 'டி' ஏன் அவசியம்?

கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களை, தேவையான அளவு, நம் உடம்பு கிரகித்துக் கொள்ள, வைட்டமின், 'டி' போதுமான அளவு இருக்க வேண்டும். 

1900களில், ரிக்கெட்ஸ் நோய் பெருமளவு பாதித்தது.
இந்த நோய் பாதிப்பில், எலும்புகள் வலுவிழந்து, மெலிந்து, அடர்த்தி குறைந்து, எளிதில் உடைந்து விடும் அபாயமும், முட்டிகள் இரண்டும் வெளிப்பக்கம் வளைந்து, 'டைமண்ட்' வடிவிலும் காணப்படும். 
குழந்தைகளை பெருமளவு பாதித்த இந்த நோய்க்கு காரணம், கால்ஷியம் பற்றாக்குறை எனக் கண்டறிந்து, கால்ஷியம் மாத்திரைகள் உட்பட, சில சிகிச்சை முறைகளை அப்போது கொடுத்தனர். ஆனால், நாம் சாப்பிடும் உணவில் இருந்து, போதுமான அளவு, கால்ஷியம் எலும்புகளில் சேர்ந்து, எலும்புகள், பற்கள் வலிமையாக இருக்க, இது மிகவும் அவசியம். ஆனால், வைட்டமின், 'டி' குறைபாடு இருந்ததால் தான், ரிக்கெட்ஸ் பிரச்னை என்பது அப்போது தெரியவில்லை.

குழந்தைகளுக்கு, 8 வயதில் பால் பற்கள் விழுந்து, அடுத்த, 10 நாட்களுக்குள் வளர ஆரம்பித்து விடும். தற்போது, 6 வயதிலேயே பற்கள் விழுந்து விடுகின்றன; புதிய பற்கள் முளைப்பதற்கு பல மாதங்கள் ஆகிறது. இதற்கும் காரணம் வைட்டமின், 'டி' குறைபாடே!

'மெலனின்' என்ற நிறமி அதிகம் இருந்தால், தோலின் நிறம், அடர்த்தியாக (கறுப்பு, பிரவுன் போன்ற) இருக்கும். மெலனின் குறைவாக இருப்பவர்களுக்கு (மஞ்சள், பிங்க்) தோலின் நிறம் வெளிறி இருக்கும். மெலனின் அதிகம் இருந்தால், வைட்டமின், 'டி' உற்பத்தி மெதுவாக நடக்கும். 

நீரிழிவு, மன அழுத்தம், துாக்கமின்மை போன்ற பிரச்னைகள் இருப்பவர்களில், 10ல், ஐந்து பேருக்கு இக்குறைபாடு உள்ளது. 
இதனால், 30 வயதிலேயே எலும்புகள் பலவீனமடைவது அதிகரித்து வருகிறது. குடல், மார்பக, பிராஸ்டேட் கேன்சர் இருப்பவர்களுக்கு, இந்தக் குறைபாடு இருப்பது, உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தொடர்ந்து இந்த குறைபாடு இருந்தால், 'டைப் 1, 2' நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். சூரிய ஒளியில் இருந்தால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் உள்ளது; ஆனால், கட்டுக்குள் இருக்கும் என்பது தான் உண்மை. தோலின் மேல் பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, சீரான ரத்த ஓட்டத்திற்கு வழி செய்யும்.


மூளை வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், வைட்டமின், 'டி' மிகவும் அவசியம்; முக்கியம். இக்குறைபாட்டால், பார்கின்சன்ஸ், அல்சைமர், மன அழுத்தம், மனப் பதற்றம் உட்பட, பல பிரச்னைகள் வரும்.
வைட்டமின், 'டி' இருந்தால், செரடோனின் ஹார்மோன் நன்றாக சுரக்கும்; நேர்மறையான எண்ணங்கள் வரும்; இரவில் ஆழ்ந்த துாக்கம் இருக்கும்; துாக்கத்தில் மட்டுமே சுரக்கும், மெலடோனின் ஹார்மோன், உடலின் உள் செயல்பாடுகளின் புதுப்பித்தலுக்கு அவசியம்.
அடிக்கடி சளி, இருமல் போன்ற மேல் சுவாச பாதையில் ஏற்படும் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்கள், கண்டிப்பாக, வைட்டமின், 'டி' பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
காசநோய், ருமடாய்டு ஆர்த்தரட்டீஸ் இருப்பவர்களுக்கு இக்குறைபாடு இருந்தால், ஆன்டிபயாடிக் மருந்துகளின் வீரியம், முழுமையாக உடம்பிற்குள் செல்லாது. இக்குறைபாட்டை சரி செய்யும் போது, விரைவாக குணம் பெறுவதைப் பார்க்கிறோம்.

இக்குறைபாட்டால் அறிகுறிகள் 
அலுப்பு, உடல், தலைவலி, வறட்சி, எலும்பு, மூட்டுகளில் வலி, படிக்கட்டு ஏறும் போது, உட்கார்ந்து எழும் போது, நீண்ட துாரம் நடந்தால் அலுப்பு.

இந்த சத்து அதிகம் உள்ள உணவுகள் 
மீன் வகைகள், மீன் எண்ணெய், பசும் பால், முட்டை, காளான், ஆரஞ்சு பழம், பூசணி விதை, ஆளி விதை, சிறு தானியங்கள், சூரிய காந்தி விதை போன்றவற்றில், வைட்டமின், 'டி' உள்ளது. 

காலையில், 10:00 மணி வரை அல்லது மாலையில், 3:00 மணிக்கு மேல் சூரிய ஒளியில் இருப்பது அவசியம். கறுப்பு, பிரவுன் போன்ற அடர் நிற தோல் உடையவர்கள், குறைந்தது, 30 நிமிடங்களும், வெளிர் நிற தோல் இருப்பவர்கள், 15 நிமிடங்களும் இருக்க வேண்டும்.
சூரிய ஒளி உடலில் போதுமான அளவு படுவது ஒன்று தான், பல பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் கவசம்.
'குறிப்பிட்ட நேரம் தினமும் வெயிலில் இருக்கிறேன்; ஆனாலும், இந்தக் குறைபாடு உள்ளது' என்று சொல்பவர்களுக்கு துாக்கமின்மை, மன அழுத்தம் இருக்கும். இதனால், வைட்டமின், 'டி' போதுமான உற்பத்தி இல்லாமல் போகலாம்.

                                                                                                                                                                          
டாக்டர் ஒய்.தீபா(தினமலரில்)

                BJP னா சும்மாவா...?
                   எங்க கட்சி மீட்டிங் க்கு ஒரு நாயும் வரலேன்னு எவனும் சொல்ல முடியாது.