தகுதியே இல்லாதவர் வாய்பேசலாமா?
" சாத்தான்குளத்தில் தமிழக காவல்துறை நிகழ்த்திய இரட்டை கொலையை மூச்சுத்திணறலால் ஒருவரும், உடல்நலக்குறைவால் ஒருவரும் இறந்தார்கள் என காவல்துறையை கையில் வைத்துள்ள பொறுப்புள்ள முதலமைச்சரே அறிவித்தது கொலையை மறைக்க சொல்லப்பட்ட பச்சைப் பொய் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்று குறிப்பிட்டு, அதனால் அதற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று நான் கொடுத்த வலைதள பேட்டிக்கு பதிலளிப்பதாக நினைத்துக் கொண்டு தன் தற்குறித்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் .
அமைச்சர் உதயகுமார்.
உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து சாத்தான்குளத்தில் காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட இரட்டை கொலையை விசாரணைக்கு ஏற்று, கோவில்பட்டி நீதித்துறை நடுவர் மூலமாக புலன் விசாரணையை மேற்கொண்டதில்தான், நடைபெற்றது கொடூரமான கொலை என்று தெரியவந்தது.
அதுவரை தமிழக முதலமைச்சரைப் பொறுத்தவரை இது மூச்சுத்திணறல் மற்றும் வயோதிகம் காரணமாக ஏற்பட்ட இயற்கை இறப்பு என்றே சொல்லப்பட்டது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரே, கொடூரமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையை மறைத்து இயற்கையான மரணம் என்று சொன்னால் கொலையை மறைத்த குற்றத்திற்காக அவரே குற்றவாளியாகிறார். எனவே, குறைந்தபட்சம் தார்மீக பொறுப்பேற்று உள்நோக்கத்தோடு கொலையை மறைக்கும் வகையில் பொய்யான செய்தியை வெளியிட்ட முதலமைச்சர் பதவி விலகவேண்டும் என்று நான் குறிப்பிட்டேன்.
இதுவரை தான் சொன்ன பச்சைப் பொய் குறித்து முதலமைச்சர் மன்னிப்பு கோரியதாகவோ, வருத்தம் தெரிவித்ததாகவோ தெரியவில்லை. தன் ஆளுகையில் உள்ள ஒரு காவல் நிலையத்தை, காவல்துறையை நம்பாமல் வருவாய்த்துறைக்கு கீழ் கொண்டுவந்து உண்மையை கொண்டுவர உயர்நீதிமன்றம் எடுத்த முயற்சிகளும் முடிவுகளும் முதலமைச்சரின் ஆளுமைக்கும், அவருடைய நம்பகத்தன்மைக்கும் கொடுக்கப்பட்ட சவுக்கடிகளாகும்.
ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற ஊழலில் முதலமைச்சருக்கு எதிரான ஊழல் புகாரில் போதுமான முகாந்திரம் இருப்பதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்பும், உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்ற ‘தடித்ததோலு’க்கு சொந்தக்காரர்தான் எடப்பாடி பழனிசாமி என்பதை நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவருக்கு முட்டுக்கொடுத்து என்னை வசைபாட வேண்டிய அவசியத்திற்கு அமைச்சர் உதயகுமார் ஆளாகியிருப்பது புரியாத புதிரல்ல.
12000-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு கண்ணாடியிழைக் கம்பி (Optic Fiber Cable) இணைப்புகள் அமைப்பதற்காக சுமார் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட்ட திட்டத்திற்கான ஒப்பந்த நிபந்தனைகள் முறைகேடு செய்வதற்கு ஏதுவாக தளர்த்தப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக உறுதி செய்த மத்திய அரசு, அந்த ஒப்பந்தத்தையே இரத்து செய்திருப்பது உதயகுமாரின் நேர்மைக்கு கொடுக்கப்பட்ட பட்டயம். அ.தி.மு.க. அமைச்சர்களின் எல்லா முறைகேடுகளையும் மூடிமறைக்க எல்லா விதத்திலும் முயற்சிக்கும் மத்திய அரசாலேயே மறைக்க முடியாத இத்தகைய முறைகேட்டை செய்த இந்த சாமர்த்தியசாலிதான் இப்போது என் தகுதி பற்றி பேசுகிறார். அவருக்கு மட்டுமல்ல; அ.தி.மு.க. அமைச்சரவைக்கே என்ன தகுதி இருக்கிறது? “அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஏராளமான சொத்துக்களை சட்டவிரோதமாக குவித்து ஜனநாயக அமைப்பினை குலைக்கும் ஆபத்தான செயலுக்கு ஜெயலலிதாவும் மற்ற குற்றவாளிகளும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்" என்று நீதிபதி குன்காவும், "நமது ஜனநாக அரசியலுக்கு அடிப்படையாகவுள்ள அரசியல் சட்டக்கோட்பாடுகள் கொண்டுள்ள இலட்சியத்தின் மீது நடத்திய மன்னிக்க முடியாத படுகொலைதான் இந்த ஊழல்" என்று ஜெயலலிதா மறைந்தபிறகு மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றமும் உதிர்த்த கண்டனங்களுக்கு இன்னமும் நாங்கள் வாரிசுகள்தான் என்று பறைசாற்றும் விதத்தில்
v நெடுஞ்சாலைத்துறை ஊழல்
v வீட்டுவசதி அனுமதி ஊழல்
v உள்ளாட்சி ஒப்பந்த ஊழல்
v குட்கா ஊழல்
v ஆவின் ஊழல்
v சத்துணவு-முட்டை/துவரம்பருப்பு கொள்முதல் ஊழல்
v மணல்குவாரி ஊழல்
v தேர்வாணைய முறைகேடு ஊழல்
என்று பொதுவாழ்வில் ஈனப்பிழைப்பை நாளும் நடத்தும் உலுத்தர்களில் ஒருவரான உதயகுமார் என் தகுதி பற்றி பேசுவது வேடிக்கையாகவும் விந்தையாகவும் உள்ளது
என் மீதான வழக்கை நானே எதிர்கொண்டு- உங்கள் "அரசியல் புனிதத் தாயை"ப் போல் ஆண்டுகள் பலவாக ஓடி ஒளியாமல் - ஒரு நாள்கூட வாய்தா வாங்காமல்- நானே சாட்சி கூண்டில் ஏறி , சிபிஐ-யின் குறுக்கு விசாரணையை எதிர்கொண்டு வழக்கை வென்றவன் என்பது மட்டுமல்ல; என் மீது தொடுக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கை ‘ஜோடிக்கப்பட்டது’ (choreographed charge-sheet) என்று நீதிமன்ற தீர்ப்பிலேயே உறுதி செய்யப்பட்டது என்பது உதயகுமார் போன்ற அரசியல் அடிவருடிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தன் மீதான ‘பாரத் நெட்’ ஒப்பந்த முறைகேட்டில் மத்திய அரசுக்கு பணிந்து தன் பதவியை எடுத்து விடுவாரோ என்ற பயத்தில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழும் எடப்பாடிக்காக இன்னொரு ஊழல் பேர்வழி பரிந்து பேசுவதில் நமக்கொன்றும் வியப்பில்லை. பாவம், விபத்தில் விளைந்த பதவியும் பவிசும் முடிவுக்கு வரும் நேரம். அணையப்போகும் திரி கடைசி நிமிடத்தில் கூடுதல் வெளிச்சம் காட்டுவது மாதிரி உதயகுமாரின் உளறல் உரத்து ஒலிக்கிறது. விரைவில் அமைய இருக்கும் தி.மு.க. ஆட்சியில் தகுதியற்ற இவர்களின் தகுதி தக்க நேரத்தில் தீர்மானிக்கப்படும். அதுவரையாவது இவர்கள் அமைதி காப்பது அவர்களுக்கு நல்லது."
- ஆ.ராசா
---------------------------------------
காலத்தை வென்ற சே...
காலம் என்கிற சக்கரத்தின் எல்லாப் பற்களிலும் பொறிக்கப்படக் கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்வதென்பது அவ்வளவு கடினமான விஷயமல்ல என வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கிறான் ஒருவன். சே குவேரா!
காலம் தாண்டி நிலைபெற சே குவேரா நமக்குத் தரும் வழி மிக சுலபமானது. மானுடத்தை நேசித்தல்! ஆனால் அந்த நிலையை அடைவதற்கான வழிமுறை மிகக் கடினமானது. மாபெரும் ஒழுங்கும் இரக்கமற்ற சுயவிமர்சனமும் தேவை.
சே குவேராவின் பிறந்ததினமான இன்று அதே மாபெரும் ஒழுங்கோடும் இரக்கமற்ற சுயவிமர்சனத்துடன் இந்தியாவை அணுக வேண்டிய நிலையில் இருக்கும் நமக்கு சே குவேரா தரும் சேதி என்ன? இந்திய சமூகத்துக்கும் சே குவேராவுக்கும் இடையே சரடைப் பொருத்திப் பார்த்தால் என்னவெல்லாம் நமக்குக் கிட்டும் என்பதை நினைக்கையிலேயே அலாதியாக இருக்கிறது. அப்படியொரு சரடை 1959-ம் ஆண்டிலிருந்து எடுத்துப் பார்ப்போம்.
க்யூபாவில் இருந்த பாடிஸ்டாவின் ஆட்சியை தூக்கியடித்து ஃபிடல் தலைமையிலான சோசலிச ஆட்சி உருவான பிறகு, சே குவேரா க்யூபா நாட்டின் தூதுவராக உலக நாடுகளுக்கு அனுப்பப்பட்டார். 1959-ம் ஆண்டின் ஜூன் 12-ம் தேதி க்யூப தலைநகர் ஹவானாவை விட்டு குவேரா கிளம்பினார். தனது 31-ம் பிறந்தநாளை ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் கொண்டாடிவிட்டு, எகிப்தின் கெய்ரோ வழியாக இந்தியாவுக்கு ஜூன் 30-ம் தேதி இரவு வந்து சேர்ந்தார். சே குவேராவுடன் வெறுமனே ஓர் ஐந்து பேர் மட்டும் வந்திருந்தார்கள். ஒரு பொருளாதார நிபுணர், ஒரு கணக்காளர், ஒரு கட்சிக்காரர், கொரில்லா படையின் தலைவர் ஒருவர் மற்றும் ஒரு மெய்க்காப்பாளர். அவரவர் மூட்டை முடிச்சுகளை அவரவரே தூக்கிக்கொண்டு நின்றிருந்த கோலம் இந்தியாவுக்குப் புதிதாக இருந்தது. க்யூப நாட்டுடனான இந்திய நாட்டு உறவை உருவாக்க இரண்டு வார கால பயணமாக சே குவேரா இந்தியா வந்திருந்தார். கோஸ்லா என்ற அதிகாரி சே குவேரா உள்ளிட்ட அறுவரையும் வரவேற்றார்.
சோசலிச புரட்சி வென்று சோவியத் ஒன்றியம் உருவானதிலிருந்து பத்து வருடங்கள் கழிந்து பிறந்தவன் குவேரா. கண் முன்னேயே ஒரு மிகப்பெரும் கனவுலகத்தை கண்டு, ரசித்து, உணர்ந்து, விரும்பி, கற்று வளர்ந்தவன். மார்க்சியம் உலகளவில் ஒரு முக்கியமான போக்கை சோவியத்தின் மூலம் அடைந்திருந்த வேளையில், அதற்கு இணையான மற்றொரு போக்கை உருவாக்கி அதை வென்றெடுக்க உதவியவன். சோவியத்தின் காலத்தையும் தாண்டி இன்றும் லத்தீன் அமெரிக்காவின் இதயமாக துடிக்கும் கம்யூனிசத்தை கட்டி நிர்மாணித்தவன். அவன் பார்வையில் இந்தியா என்னவாக இருந்திருக்கும்?
அன்றைய பிரதமராக இருந்த நேருவை சந்தித்து உணவருந்திய சே குவேரா மற்றும் அவரது குழு தொடர்ந்து வணிகம் என பல துறை சார்ந்த அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சந்தித்து பேசினர். இந்தியாவைத் தொடர்ந்து பின்னர் பங்களாதேஷ், இலங்கை போன்ற பிற நாடுகளுக்கும் பயணித்தார். இந்திய பிரதமரின் புகைப்பழக்கம் அறிந்திருந்த சே குவேரா, உலகப் புகழ்பெற்ற ஹவானா சுருட்டுகளை நேருவுக்கு பரிசளித்தார். யானைத் தந்தத்தின் கைப்பிடி கொண்ட சிறு வாளை குவேராவுக்கு நேரு பரிசளித்தார்.
சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, க்யூபாவுக்கு சென்ற பின், தன் அனுபவங்களை அறிக்கையாக தந்த சே குவேரா இந்தியாவை பற்றியும் பதிவு செய்திருக்கிறார். அதிலிருக்கும் வழக்கமான ‘இரு நாடுகளுக்கு இடையேயான உறவுக்கான லாவணிகளை’ ஒதுக்கிவிட்டு பார்த்தால் பல அழகான அம்சங்களை எடுக்க முடிகிறது.
முதல் விஷயமாக அவர் இந்தியச்சமூகத்தில் கண்டது சமூக ஏற்றத்தாழ்வு.
‘இந்தியாவில் இருக்கும் சமூக அநீதி, ஏற்றத்தாழ்வு மிகுந்த நிலப்பகிர்வை உருவாக்கியுள்ளது. சிலரிடம் மட்டுமே எல்லாமும் இருக்கிறது. பலரிடம் எதுவுமே இல்லை.’
இந்த நொடி வரை இந்தியாவின் நிலை இப்படியாகத்தான் இருக்கிறது. நிலம் பிடுங்கப்பட்டதைப் பற்றி பல நூறு வருட வரலாற்றை இன்னுமே பேசிக் கொண்டிருக்கும் சூழலைத்தான் நாம் கொண்டிருக்கிறோம். இந்நிலைக்கு ‘சமூக அநீதி’ என சரியான வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் இரண்டு வாரகாலமே இந்தியாவில் தங்கிச் சென்ற சே குவேரா.
முதல் பார்வைக்கு எந்த ஐரோப்பியருக்கும் எளிதாக புரியாத இந்தியச்சமூகம் அதே அனுபவத்தை சே குவேராவுக்கும் கொடுத்திருக்கிறது. ஆனால் பிற சமூகங்களில் கண்டிடாத வித்தியாசத்தை முதல் பார்வையிலேயே சே குவேரா கண்டிருக்கிறார்.
‘நாம் வாழும் காலங்களில் எழும் சமூகச்சிக்கல்களுக்கு நாம் உருவாக்கக்கூடிய தீர்வுகள் எவற்றுக்குமே பொருந்தாத சமூக நிறுவனங்களையும் சடங்குகளையும் இந்தியா கொண்டுள்ளது’ என குறிப்பிடுகிறார்.
தொடர்ந்து இந்தியாவை குறிப்பிட்டு, ‘இரு நாடுகளும் ஒரே வகையான அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பை கொண்டிருக்கிறோம். ஒரே மாதிரியான அவமானமும் காலனியாதிக்கமும் கொண்ட கடந்த காலத்தைக் கொண்டிருக்கிறோம். ஒரேவித இலக்கை நோக்கித்தான் பயணிக்கிறோம். எனினும் இலக்குக்கான இரு நாட்டின் பாதைகளும் இரவுக்கும் பகலுக்கும் உள்ள அளவு வேறுபாட்டைக் கொண்டிருக்கிறது. விவசாய சீர்திருத்தம் ஒரேயடியாக நில உடைமையாளர்களின் கைகளில் இருந்த நிலங்களை ஏழை விவசாயிகளுக்கு க்யூபாவில் கொடுத்துவிடும்போது, இந்தியா அதிக தயக்கத்தைக் கொள்கிறது. நிலங்களை விவசாயிகளிடம் கொடுப்பதற்காக நிலப்பிரபுக்களிடம் கெஞ்சுகிறது. சமாதானம் பேசுகிறது. மனித குலத்திலேயே பெரும் கொடுமையிலும் வறுமையிலும் இருக்கும் வறிய மக்களுக்கான நியாயம் கிடைக்கும் வாய்ப்பை இல்லாமல் ஆக்குகிறது’ என பெரும் விமர்சனத்தையும் வைக்கிறார்.
மேலுமொரு பத்து நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்தால் சாதியின் வேரைப் பிடித்திருப்பார். இரண்டாம் நாள் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ண மேனனை சந்தித்து பேசுகிறார். பிறகு திட்ட கமிஷன் உறுப்பினர்களையும் சந்திக்கிறார். விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தையும் தேசிய இயற்பியல் கூடத்தையும் பார்வையிடுகிறார். அப்போதுதான் அறிமுகமாகி பரிசோதனையில் இருந்த ‘மெட்டல் டிடெக்டரை’ எடுத்து தன் சட்டையில் வைத்து பரிசோதனை செய்து பார்த்துக் கொள்கிறார்.
இந்தியா வரும் எவருக்குமே மிக எளிதாக எதிர்ப்படும் ஓர் அன்றாட விஷயம் சே குவேராவுக்கும் எதிர்ப்படுகிறது. புகைப்படக் கலையில் நாட்டம் கொண்ட சே குவேரா கொல்கத்தா நகரம் சென்றிருந்த போது எடுத்தது மூன்றே மூன்று புகைப்படங்கள். மூன்றிலுமே இருந்தது இந்தியாவின் அன்றாட விஷயம். மாடு!
“இந்தியாவில் முன்னோர்களுக்கு பசு புனித விலங்காக இருந்திருக்கிறது. நிலங்களை உழுவதாலும் பால் கொடுப்பதாலும் எரிபொருளாக மாட்டுச்சாணம் கிடைத்ததாலும் அந்த நிலை இருந்திருக்கிறது. இங்கு க்யூபாவில் அப்படியொரு நிலை இல்லை. இதன் காரணமாகவே இந்திய விவசாயி, பசுவைக் கொல்ல தயங்குகிறான். அதை புனிதமாக்குகிறான். ஒரு சமூகத்தின் உற்பத்தி சக்தியாக இருக்கும் ஒரு விலங்கின் மேல் மரியாதை ஏற்படுத்த மதம் என்கிற நிறுவனத்தை பயன்படுத்திக் கொள்கிறான்” என்கிறார்.
அன்றாடம் சாலைகளில் மிக இயல்பாக மாடுகளும் வாகனங்களுடன் பயணிப்பதை பார்த்து சே குவேரா வியக்கிறார். வியப்பதோடு நின்றுவிடாமல், அதற்குப் பின்னிருக்கும் சமூகக் காரணியை அசல் மார்க்சிஸ்டாக அலசி ஆராய்கிறார். இந்திய உற்பத்திமுறையில் மாட்டின் முக்கிய பங்கை உணர்ந்த சே குவேரா, அதற்கான கலாசார காரணியைக் கண்டுபிடித்து மாற்றியிருந்தால், என்னவாகியிருக்கும் என யோசிக்கவே மெய்சிலிர்க்கிறது. ஹ்ம்.. அதற்கு சே குவேரா இந்தியாவில் இருந்திருக்க வேண்டும்.
புது பூமியான இந்தியா பலதரப்பட்ட அனுபவங்களை கொடுத்தாலும் மானுட நேயம் குவேராவை ஆக்கிரமித்தே இருந்திருக்கிறது. அவரோடு இந்தியா வந்த ஐவர் குழுவில் ஒருவர் இந்தியப்பயணத்தின் போதும் புரட்சி பரவுவதை பற்றி சே சிந்தித்திருந்ததை குறிப்பிட்டிருக்கிறார். ஓர் இந்திய இரவின்போது சே குவேரா, ‘தென்அமெரிக்காவில் உயரமான ஒரு பீடபூமி இருக்கிறது. பிரேசில், உருகுவே, பெரு, அர்ஜென்டினா ஆகிய நாடுகளின் எல்லைகளை ஒட்டி பொலிவியாவும் பராகுவேவும் இருக்கின்றன. நாம் அங்கு கொரில்லா படையாக நுழைந்தால், தென்அமெரிக்கா முழுக்கப் புரட்சியை பரவச் செய்திட முடியும்’ என கூறியதாக நினைவுகூர்கிறார்.
தொடர்ந்து இந்தியாவில் பயணத்தைத் தொடர்ந்த சே குவேரா சமூக வளர்ச்சித் திட்டங்களை தில்லிக்கு அருகே இருக்கும் பிலானாவில் பார்வையிடுகிறார். விவசாயி ஒருவர் மாலையிட்டு குவேராவை வரவேற்கிறார். அங்கு தொடங்கியிருந்த பள்ளிக்கூடத்தில் இருக்கும் மாணவர்களின் ஆரோக்கிய குறைபாட்டை பற்றியும் கவலையுடன் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
அலெய்டா இல்லாத சே எப்படி இருக்க முடியும்? புரட்சியையே காதலாகப் பார்க்கும் ஒருவன் இந்திய அனுபவத்துக்குப் பிறகு தன் மனைவிக்கு இப்படி கடிதம் எழுதுகிறான்:
“நான் இன்னுமே தனிமை நிறைந்த அதே மனிதனாகவே இருக்கிறேன். உதவி ஏதும் இல்லாமல் எனக்கான பாதையை தேடுபவனாகவே நீடிக்கிறேன். ஆனால் ஒரு வரலாற்றுக் கடமை எனக்கிருக்கும் உணர்வைப் பெற்றிருக்கிறேன். எனக்கென வீடேதும் இல்லை. பெண் இல்லை. குழந்தைகள் இல்லை. பெற்றோர் இல்லை. சகோதர சகோதரிகள் இல்லை. இந்நேரத்தில் என்னோடு ஒத்த சிந்தனை கொண்டவர்களே எனது நண்பர்களாக இருக்கிறார்கள். ஆனாலும் என்னுள் ஒரு திருப்தி இருக்கிறது. என் வாழ்க்கையில் முக்கியத்துவத்தை உணர்கிறேன். நான் எப்போதும் உணரும் சக்திவாய்ந்த ஆன்மபலம் மட்டுமல்லாமல் அதை மற்றவருக்கும் உருவாக்கும் என் வாழ்க்கையில் அடிப்படை நோக்கம் நான் கொண்டிருக்கும் அச்சத்தையெல்லாம் உதறித் தள்ளிவிடுகிறது. ஏன் இதையெல்லாம் உனக்கு எழுதுகிறேன் என தெரியவில்லை. என் நாட்டிலிருந்து தள்ளியிருக்கும் இந்திய வானம் கொண்ட ஒரு புயலிரவில் நான் இதை எழுதுவதாக எடுத்துக் கொள்”
புரட்சியை ஆன்ம வெளியீடாகச் செய்தவன் சே குவேரா. அவன் ஒரு சமூகத்தை வெறும் புறக்காரணிகளை கொண்டு மட்டுமே நிர்ணயிக்க விரும்பவில்லை. அந்தச் சமூகம் கொண்டிருக்கும் கூட்டு மனதுக்குள் செல்ல விரும்புகிறான். அதன் ஆழத்தில் ஒளிந்திருக்கும் இயங்கியல் பண்புகளை கலாசார ரீதியாக தட்டியெழுப்ப முனைகிறான். மனிதப்பரிணாமம் முழுமையாவது கம்யூனிசத்தால் மட்டுமே எனப் புரிந்து புது மனிதனை சமைக்க விழைகிறான். அதற்கான சரடையும் தொடர்பையும் காலங்களை தாண்டி நமக்கு விட்டுச் சென்றிருக்கிறான். இன்னும் அவை இங்கேயேதான் இருக்கின்றன.
- ராஜசங்கீதன்.