திங்கள், 29 ஆகஸ்ட், 2016

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ..,

 நாகர்கோயில் அருகிலுள்ள ஒழுகினசேரியில்தான் கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணன்பிறந்தார். 
தந்தையார் சுடலைமுத்துப் பிள்ளை, தாயார் இசக்கி அம்மாள். 

இவர்களுடைய மூத்த மகன் தான் தமிழகத்தில் புகழின் உச்சியில் இருந்த என்.எஸ்.கே. எனும் என்.எஸ்.கிருஷ்ணன். இவர் படித்தது என்னவோ நான்காம் வகுப்புதான். தமிழும் மலையாளமும் இவருக்கு நன்கு தெரியும். தந்தைக்கு பெயருக்கு ஒரு வேலை இருந்தது. 

தாயார் ஒரு குடும்பத் தலைவிதான். மேல் வருமானத்துக்காக இவர் ஒரு சோற்றுக்கடை வைத்து நடத்தி வந்தார். மிக ஏழ்மையான குடும்பம். அப்போதெல்லாம் சினிமா கொட்டகைகள் கிடையாது.
கிருஷ்ணன் நாடகக் கொட்டகைக்குச் சென்று அங்கு சோடா, கலர் விற்கத் தொடங்கினார். 
 

எல்லா ஊர்களிலும் நாடகம் போட் ஒரு கொட்டகை இருக்கும். 1924இல் கிருஷ்ணனின் தந்தை தன் மகனை ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ப்பதற்காக அழைத்துச் சென்றார். அந்தக் காலத்தில் பல ஊர்களில் பாய்ஸ் நாடகக் குழுக்கள் இருந்தன. 

அவற்றில் பெரும்பாலும் சிறுவர்கள்தான் நடித்து வந்தனர். அவர்களுக்குப் பகலில் ஒரு வாத்தியார் பாடம் எடுத்து கதை, வசனங்கள் என்று சொல்லிக் கொடுப்பார்கள். பாடத் தெரிந்த பையன்களுக்கு கிராக்கி அதிகம். அப்படியொரு நாடகக் கம்பெனியில் கிருஷ்ணன் சேர்ந்தார். 

அங்கு பின்னாளில் பிரபல நகைச்சுவை நடிகராம இருந்த டி.எஸ்.துரைராஜ் என்பவரும் இருந்தார். 

இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். 

பிரபல நாடக, சினிமா நடிகரும், தேசியவாதியுமான டி.கே.சண்முகம் அவர்கள் ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவை நடத்தி வந்தார். டி.கே.எஸ். அண்டு பிரதர்ஸ் என்று இவர்கள் பிரபலமானார்கள். அவருடைய நாடகக் குழுவின் என்.எஸ்.கிருஷ்ணன் சேர்ந்தார். 

அங்கு என்.எஸ்.கே. சகலகலா வல்லவனாக விளங்கினார். எந்த நடிகராவது இல்லையென்றால், அவருடைய பாத்திரத்தை ஏற்று நடிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார். பல ஊர்களிலும் நாடகங்கள் நடித்து வந்த இவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அப்படி இவர் நடித்த முதல் தமிழ்ப்படம் 'சதி லீலாவதி' எனும் படம். எம்.ஜி.ஆர். அவர்களும் அந்தப் படித்தில்தான் முதன்முதலாக நடித்துப் புகழ்பெற்று, சினிமாத் துறையின் உச்சிக்குச் சென்றார். 

திரைப்படங்களில் நடித்தாலும் என்.எஸ்.கே. அவர்களுக்கு நாடகம்தான் முக்கியம். இவர் ஒரு முறை புனே நகருக்கு படப்பிடிப்புக்குச் சென்றபோது உடன்வந்த ஒரு நடிகையின் நட்பு கிடைத்தது. அவர்தான் டி.ஏ.மதுரம். இவர் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர். 

புனேயில் இருந்த நாளிலேயே இவ்விருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு முன்பாகவே என்.எஸ்.கே. 1931இல் நாகம்மை எனும் பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். டி.ஏ.மதுரம் இரண்டாம் மனைவி. அதன்பின் மதுரத்தின் தங்கை வேம்பு என்பவரை மூன்றாம் மனைவியாகவும் திருமணம் செய்து கொண்டார். 

நாகம்மைக்கு கோலப்பன் எனும் மகனும் டி.ஏ.மதுரத்துக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. வேம்புவுக்கு ஆறு குழந்தைகள், நான்கு மகன்கள், இரண்டு பெண்கள். மதுரத்தைத் திருமணம் செய்து கொண்ட பிறகு இவ்விருவரும் சேர்ந்து நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்கத் தொடங்கினர். 

இவர்களுக்கு நல்ல புகழ் கிடைத்து வந்தது. ஓடாத படங்களில் கூட கிருஷ்ணன் மதுரை ஜோடியின் நகைச்சுவைக் காட்சிகளை ஓட்டி வெற்றி பெற்ற படங்களும் உண்டு. 

இவருடைய நகைச்சுவைக் குழுவில் பல நடிகர்கள் சேர்ந்து கொண்டார்கள். புளிமூட்டை ராமசாமி, சி.எஸ்.பாண்டியன், (குலதெய்வம்) ராஜகோபால், கவிஞர் சுப்பு ஆறுமுகம் போன்றோர் இவருடன் இருந்தவர்கள். 

இவருடைய மூளையில் உதயமாகி திரையில் உலாவந்து பிரபலமான சில நிகழ்ச்சிகள் உண்டு. அவை "கிந்தனார் காலக்ஷேபம்", "ஐம்பது அறுபது" நாடகம் போன்றவற்றைச் சொல்லலாம். இவருடைய பாடல்கள், நாடகங்கள் இவற்றில் புரட்சிகரமான சீர்திருத்தக் கருத்துக்கள் இருக்கும். 

ஆகையால் இவரை உரிமை கொண்டாடி பல அரசியல் கட்சிகளும் முயன்றாலும், இவர் திராவிட இயக்கத்தின் பால் இருப்பதைப் போன்ற ஒரு நிலைமையை உருவாக்கி யிருந்தது . 

அறிஞர் அண்ணா அவர்களிடம் இவருக்கு இருந்த நெருக்கமும் அந்த நிலைமையை உறுதி செய்வதாக இருந்தது. "நல்லதம்பி", "பணம்", "மணமகள்" போன்ற இவருடைய படங்கள் அன்றைய நாளில் புரட்சிகரமான கருத்துக்களை வெளிப்படுத்தின. 

இந்தச் சூழ்நிலையில் தான் சென்னையில் 1944இல் "இந்துநேசன்" பத்திரிகை ஆசிரியர் லக்ஷ்மிகாந்தன் கொலைசெய்யப்பட்ட வழக்கில் இவரும் அன்றைய காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர் மற்றும் கோவை திருப்பட முதலாளி, இயக்குனர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கைதாகினர். 

சென்னையில் வழக்கு நடந்து முடிந்து என்.எஸ்.கே., பாகவதர் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தமிழ் நாடே அழுதது. இவர்கள் இருவரும் லண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலுக்கு மேல்முறையீடு செய்தனர். முடிவில் 1946இல் இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலைக்குப் பின் என்.எஸ்.கிருஷ்ணன் சோர்ந்துவிடவில்லை. 

புதிய நட்புகள், ஆதரவாளர்கள், திரைப்படத் துறையில் புதிய சிந்தனை, புதிய வளர்ச்சி இவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு என்.எஸ்.கே. தன்னை புதிய சூழ்நிலைக்கு ஏற்ப உருவாக்கிக் கொண்டார். 
சமூகப் படங்களை எடுத்து வெளியிட்டார். 

நன்றாக சம்பாதித்தார், நன்றாகவும் தான தர்மங்களைச் செய்து, பிறருக்கு உதவிகள் செய்து அவற்றை நல்ல முறையில் செலவிடவும் செய்தார். தன் கையில் இருப்பதை அப்படியே தானம் செய்துவிடும் நல்ல பண்பு அவரிடம் இருந்தது. 

அவரால் பயனடைந்தவர்கள் ஏராளம். 
அவருக்கு வயிற்றில் ஒரு கட்டி வந்து தொல்லை கொடுத்தது. 
சென்னை பொது மருத்துவ மனையில் சேர்ந்து வைத்தியம் செய்து கொண்டும் பலன் இல்லாமல் 1957 ஆகஸ்ட் 30ஆம் நாள் என்.எஸ்.கிருஷ்ணன் இயற்கை  எய்தினார். 
=====================================================================================
இன்று,
ஆகஸ்டு-30.
  • சர்வதேச காணாமல் போனோர் தினம்.

  • ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது(1835)

  • கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணன் இறந்த தினம்(1957)

  • =====================================================================================
கடுகு சிறுத்து காரம் குறைகிறது?

டெல்லி பல்கலைக்கழகம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதையை உற்பத்தி செய்து அதற்கு DHARA MUSTARD HYBRID 11 என பெயர் சூட்டியுள்ளது. 
இந்த கடுகை வர்த்தக ரீதியாக சாகுபடி செய்ய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மரபணு மாற்றுப் பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழு அனுமதி அளித்துள்ளது.  
மரபணு மாற்றம் செய்யப்படாத உயர்ரக விதைகள் ஏற்கனவே, சந்தையில் கிடைக்கும்போது, இந்தியாவில் அதனைக் கொண்டு வருவதற்கான அவசியம் என்ன என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

நாட்டின் சமையல் எண்ணெய் தேவை உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக இருப்பதால், எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மரபணு மாற்ற தொழில்நுட்பங்கள் தேவைப்படுவதாக பதிலளிக்கின்றனர் விஞ்ஞானிகள். 

ஏற்கனவே, உற்பத்தி அதிகரிப்பிற்காக, மரபணு மாற்றப்பட்ட பருத்தி ரகம் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு பெரும் இழப்பை சந்தித்த விவசாயிகளில் ஆயிரக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டதை சுட்டிக் காட்டும் விவசாயிகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை அனுமதித்தால், பருத்தி விவசாயிகளுக்கு ஏற்பட்ட நிலைமையே தங்களுக்கும் ஏற்படும் என வேதனை தெரிவிக்கின்றனர். 

அதுமட்டுமின்றி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் பாதுகாப்பானதா என்பதற்கான ஆய்வுகள் 
இதுவரை நடத்தப்படவில்லை என்றும், விதையை விற்கும் மான்சாண்டோ நிறுவனமே ஆய்வை மேற்கொண்டு வருவதாகவும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். 
எனவே, மரபணு மாற்றக் கடுகு சாகுபடி குறித்து, கருத்துக் கேட்பு நடத்தப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் அரசு வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

கடுகு விளைசல் இந்திய நாடு மக்கள் தேவைக்கு போதிய அளவில் இருக்கையில் இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட கடுகை மோடி அரசு கொண்டுவர என்ன தேவை இருக்கிறது என்பதுதான் இன்றைய முக்கிய கேள்வி.
=====================================================================================
ஏழு லடசம் ரூபாய் சேலை?
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது, தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த ஸ்மிரிதி இரானி தற்போது ஜவுளித்துறையை கவனித்து வருகிறார். 

அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டதிலிருந்து அத்துறையின் செயலாளராக உள்ள ரேஷ்மி வர்மாவுடன் அவர் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில் ஜவுளித்துறைக்கு கீழ் இயங்கும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஸ்மிரிதி இரானி, சில லட்சம் ரூபாய் மிதிப்புள்ள சேலைகளையும், விநாயகர் சிலை ஒன்றையும் வாங்கியுள்ளார். 
இதற்கான பணத்தை கொடுக்காமல், ஜவுளித்துறையின் கணக்கில் இதனை சேர்க்கும்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு  தெரிவித்த துறை செயலாளர் ரேஷ்மி, சொந்த செலவுகளுக்கு அரசு பணம் வழங்க முடியாது எனக் கூறி பணம் வழங்க மறுத்துள்ளார். 

மேலும் இது தொடர்பாக பிதரமர் அலுவலகத்திலும் ரேஷ்மி புகார் அளித்தாகவும் கூறப்படுகிறது. இந்த புகாரை முற்றிலுமாக மறுத்துள்ள ஸ்மிரிதி, இதனை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளார். 

இருப்பினும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள தனக்கு நெருங்கியவர்கள் மூலமாக ரேஷ்மியின் குற்றச்சாட்டு அடங்கிய கோப்புகளை அப்புறப்படுத்தவும் ஸ்மிரிதி முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.
==================================================================================================

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

இந்தியாவில் இணையம்.

முதல் இணைய தளத்தையும் அதனைத் தேடி அறிய பிரவுசரையும் தந்தவர் டிம் பெர்னர்ஸ் லீ. 
URL, HTML, மற்றும் HTTP போன்ற பெயர்களை எல்லாம் அவர்தான் கொடுத்தார். தொடக்கத்தில் இணையம், யார் வேண்டுமானாலும் மேம்படுத்தக் கூடிய தகவல் மையமாகவும், அனைவரும் தங்களுக்குத் தேவையான தகவலைத் தேடி எடுத்துக் கொள்ளக் கூடிய தகவல் களஞ்சியமாகவும் தான் வடிவமைக்கப்பட்டது. 
அப்படி துவக்கப்பட்ட இணையம் 1991ல் செயல்படத் தொடங்கி  ஆகஸ்ட் 6 அன்று தனது வெள்ளி விழா ஆண்டாகிய 25 ஐ அடிந்துள்ளது.
“கல்வி சார்ந்த தகவல்கள் அனைத்தும், அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும்” என்ற  நோக்கம்தான்  டிம் பெர்னர்ஸ் லீ இணையதளம் தோற்றுவிக்க  யொசனையை தூண்டியது. 
அந்த நோக்கத்துடன் 1989ல் பணியாற்றத் தொடங்கி, 1990ஆம் ஆண்டு இதனை வடிவமைத்து சோதனை செய்திட்டார் பெர்னர்ஸ் லீ. 
தகவல் மையமாக அமைந்தாலும், அங்கு அந்த தகவல் உள்ளது என எப்படி அறிவது? என்ற கேள்வி, இணையத்தை  அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது . 
மேற்கண்ட  கேள்விக்கான விடையை, முதலில் உருவான இணைய நிறுவனங்களில் ஒன்றான யாஹூ தந்தது. ஸ்டான் போர்டு பல்கலையின் மாணவரான ஜெர்ரி யங் மற்றும் தொழில் நுட்ப வல்லுநரான டேவிட் பைலோ இணைந்து, இணைய தளங்களின் பட்டியலை உருவாக்கினார்கள். 
வகை வகையாக இணைய தளங்களைப் பிரித்துக் காட்டினார்கள். 
இணையத்தின் டைரக்டரியாக அவர்கள் உருவாக்கிய பட்டியல் இருந்தது. அதன் பின்னர், டிஜிட்டல் எக்விப்மெண்ட் கார்ப்பரேசன் (DEC), அல்டா விஸ்டா (Alta Vista) என்ற தேடல் பொறியைத் தந்தது. ஹாட்பாட் (Hot Bot) என்னும் தேடல் சாதனம் அதனைத் தொடர்ந்தது. 
அதன் உச்சக்கட்ட தேடலின் விடையாகத்தான் இன்று கூகுள் தேடல் மக்களை அடைந்துள்ளது.
ஒரு சில சொற்களை அமைத்து, தேவையான தேடல் சாதனத்தில் கொடுத்து, உலகின் அனைத்து இணைய சர்வர்களை உள்ளடக்கிய உலக வைய விரிவலை (World Wide Web) யிலிருந்து தேவைக்கதிகமாகவே தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் சாத்தியத்தை, இணைய வல்லுநர்கள் அளித்து வருகின்றனர். 
'வெப்' என அழைக்கப்படும் வைய விரிவலையும் இணையமும் ஒன்றல்ல. இணையம் என்பது, வைய விரிவலையைத் தாங்கிப் பிடிக்கும் கட்டமைப்பாகும். கேபிள்கள், கம்ப்யூட்டர்கள், சர்வர்கள் மற்றும் அவை சார்ந்த அனைத்தும் இணைந்த கட்டமைப்பே இணையமாகும். 
பல நெட்வொர்க்குகள் இணைந்த நெட்வொர்க் தான் இணையம்.
இதைப்படிக்கும் நேரத்தில் உலகமெங்கும் நூற்றுப் பத்து கோடி இணைய தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 
தினந்தோறும் 340 கோடி மக்கள்  இணைய தளங்களை  பயன்படுத்தி வருகின்றனர். 
ஒவ்வொரு நிமிடத்திலும், பல கோடி கணக்கில் தகவல்கள் அனுப்பப் படுகின்றன. 
பல கோடி படங்கள் பரிமாறிக் கொள்ளப் படுகின்றன. 
தினசரி குறைந்தது 1.5 கோடி டாலர் மதிப்பில் வர்த்தகம் .இணைய தளங்கள் மூலம் நட்க்கின்றது.
 இணையத்தில் அதிக ஆதிக்கம் செலுத்துவது, சமூக வலைத் தளங்களே. 
அடுத்தபடியாக தேடல் பொறிகளும், வர்த்தக தளங்களும் உள்ளன. 
நிலையாக இணைய தளங்கள் இருந்த நிலை மாறி, இன்று நம்மோடு பேசி உறவு கொள்ளும் இணைய தளங்கள் உயிர்த் துடிப்புடன் இயங்குகின்றன. 
ஆங்கிலம் மட்டுமே இணைய மொழியாக இருந்த நிலை மாறி, உலகின் அனைத்து மொழிகளும் இணையத்தின் மொழிகளாக மக்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றன. 
வெறும் தகவல் தளங்களாகத் தொடங்கி, இன்று படங்கள், காணொளிப் படங்கள், நகரும் வரைவுகள் கொண்ட தளங்களாக இணையம் இயங்குகிறது. இணையம் கம்ப்யூட்டரிலிருந்து சற்று விலகிச் சென்று பல மொபைல் சாதனங்கள் வழியாக மக்களைச் சென்று அடைகிறது. 
“எங்கும் எதிலும் இணையம்” (internet of things) என்ற இலக்கினை நோக்கி இணையம் சென்று கொண்டிருக்கிறது. 
 அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும், இணையத்தில் இணைக்கப்பட்டு 
மக்கள் இணையத்தை அணுக வேண்டிய தேவையும்   நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது. 
 உலகில் அதிக அலவில் மென் பொருள் தயாரிப்பு  நிறுவனங்கள் இந்தியாவில் பெயர் பெற்றதாக இருந்தாலும்  இன்றைய தேதியில்  86.4 கோடி இந்தியர்கள் இணைய இணைப்பில்லாமல்தான் இருக்கிறார்கள். 
ஆண்கள் 27%  பெண்கள் 17%  இணையத்தில் உலாவி  வருகிறார்கள் என்று  ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. இணைகின்றனர். 
பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருக்க காரணம் பெண்களுக்கு இணையம் பாதுகாப்பானது அல்ல என்ற கருத்து உலகம் முழுக்க இருப்பதால்தானாம்.
 இந்தியாவில் இணைய இணைப்பு வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் 1986 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. 
முதலில் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டும் இணைய இணைப்பு பெற Educational Research Network (ERNET) என்ற நெட்வொர்க் அமைக்கப்பட்டது. 
இந்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் துறையும் (Department of Electronics (DOE)) ஐக்கிய நாடுகள் சபையின், நாடுகளின் வளர்ச்சிக்கான United Nations Development Program (UNDP) துறையும் இணைந்து இந்த முயற்சிகளை மேற்கொண்டன. 
பின்னர், 1988ல், அரசின் தேசிய தகவல் மையம் (National Informatics Centre) அரசின் பல்வேறு துறைகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றத்திற்கென NICNet என்னும் நெட்வொர்க்கினை ஏற்படுத்திச் செயல்படுத்தியது.
இந்தியாவில் இணைய சேவை, 15 ஆகஸ்ட் 1995 அன்று, வி.எஸ்.என்.எல். நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. 
அப்போது பொதுத்துறை நிறுவனமாக இருந்த விதேஷ் சஞ்சார் நிகாம் நிறுவனம் (Videsh Sanchar Nigam Limited (VSNL)) இதனை வழங்கியது. 
அதற்கென Gateway Internet Access Service (GIAS) என்றொரு பிரிவினை இந்நிறுவனம் அமைத்து, இணைய இணைப்பினை வழங்கியது. 
ஆறு மாதத்தில் 10 ஆயிரம் பேர் இணைப்பு பெற்றனர். 1995, ஜூலை 31ல், மொபைல் போன் சேவை தொடங்கப்பட்டது. 
இந்தியாவில் இணையப் பயன்பாடு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 2000 ஆம் ஆண்டில், 105.34,81,072 மக்களில் 0.5% பேர் (55,57,455) மட்டுமே இணையத்தை அணுகிப் பயன்படுத்த முடிந்தது. 2012 ஆம் ஆண்டில், மொத்த ஜனத்தொகையில் (126,35,89,639) 12.6% பேர் (15,89,60,346) இணையத்தைப் பயன்படுத்தி வந்தனர். இன்று, 2016 ஜூலை 1 அன்று எடுத்த கணக்கின்படி, மொத்த ஜனத்தொகையில் (132,68,01,576) 34,8% பேர் (46,21,24,989) பயன்படுத்தி வருகின்றனர். 
 தொடக்கத்தில் விநாடிக்கு 9.6 கிலோ பிட்ஸ் என்ற அளவில் தொடங்கிய இணைய இணைப்பு வேகம், பின்னாளில் மிக வேகமாக வளர்ந்து தற்போது மெகா பிட்ஸ் என்ற அளவை எட்டியுள்ளது. லீஸ்டு லைன் எனப்படும் தனிப்பட்ட சர்வர் இணைப்பு தற்போது குறைந்த கட்டணத்தில் நொடிக்கு கிகா பிட்ஸ் வேகத்தில் கிடைக்கிறது. 
இந்திய நகரங்களில், அதிக எண்ணிக்கையில், இணையத்தைப் பயன்படுத்துவோர் பட்டியலில், தமிழ்நாடு முதல் இடத்தைப் பெற்றுள்ளது. 
 மார்ச் மாத இறுதியில் எடுத்த கணக்கீட்டின்படி, மொத்தம் உள்ள 23.1 கோடி பேரில் 9% பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். 
2.1 கோடி பேர் தமிழக நகரங்களில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். மஹாராஷ்ட்ரா, டில்லி மற்றும் கர்நாடகா மாநில நகரங்களில் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை, முறையே 1.97 கோடி, 1.96 கோடி மற்றும் 1.7 கோடி ஆக இருந்தது.
மொத்த இந்தியாவில், 34.2 கோடி பயனாளர்களில், கிராமப் புறங்களில் இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 11.2 கோடியாக இருந்தது. 
கிராமப் புறங்களைப் பொருத்த மட்டில், உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு பிரிவில், 1.12 கோடி பேர், நகர்ப்புற இணையப் பயனாளர்களுக்கு இணையாக உள்ளனர். இந்த வகையில், மஹாராஷ்ட்ரா மாநிலம் 97 லட்சம் பேரையும், ஆந்திர மாநிலம் 90 லட்சம் பேரையும் கொண்டிருந்தது. 
விரைவில், 'பாரத் நெட்' என்ற திட்டத்தின் கீழ், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் கிராமப் பஞ்சாயத்துகளில், ஆப்டிகல் பைபர் மூலம் பிராட்பேண்ட் இணைப்பு தரப்பட உள்ளது. 
இந்த வசதி ஏற்படுத்திக் கொடுத்த பின்னர், கிராமப் புறங்களில், இணைய இணைப்பு மிக வேகமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம், இந்தியா முழுவதும் மூன்று கட்டமாக அமல்படுத்தப்படும். 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளிலும், டிசம்பர் 2018க்குள், மீதம் உள்ள 1.5 லட்சம் பஞ்சாயத்துகளிலும் இந்த திட்டம் மேற்கொள்ளப்படும்.
சென்ற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் எடுத்த கணிப்புப்படி, இந்தியாவில் தரப்படும் சராசரியான இணைய இணைப்பு, விநாடிக்கு 3.5 மெகா பிட்ஸ் ஆக இருந்தது. 
இது உலக அளவில், இந்தியாவிற்கு 114 ஆவது இடத்தையே பெற்றுத் தந்துள்ளது.
இந்தியாவில் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களில் பார்தி ஏர்டெல் நிறுவனம், 9 கோடியே 5 லட்சத்து 30 ஆயிரம் இணைய சந்தாதாரர்களைக் கொண்டு முதல் இடத்தைப் பெற்றுள்ளதாக, அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 
இதற்கு அடுத்த நிலையில், வோடபோன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், பி.எஸ்.என்.எல்., ஏர்செல், டாடா டொகோமோ மற்றும் டெலிநார் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.====================================================================================
இன்று,
ஆகஸ்டு-29.

மைக்கேல் பாரடே
  • இந்திய தேசிய விளையாட்டு தினம்

  • செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் உருவாக்கப்பட்டது(708)

  • பிரேசிலை தனி நாடாக போர்ச்சுக்கல் அறிவித்தது(1825)

  • மைக்கேல் பாரடே மின்காந்த தூண்டலை கண்டுபிடித்தார்(1831)
====================================================================================