மோடி ஊடகம்?

 ல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் (Reporters Sans Frontières) என்ற சர்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்பு ஆண்டுதோறும் 180 நாடுகளுக்கான உலக பத்திரிகை சுதந்திர குறியீடு தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 

2014-ஆம் ஆண்டில் உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் 140-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2023-ஆம் ஆண்டில் 161-ஆவது இடத்திற்குச் சரிந்தது.


மோடி பிரதமராகப் பதவியேற்றது முதல் இந்தியாவில் நடந்த எந்த செய்தியாளர் சந்திப்பிலும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததில்லை. பத்திரிகையாளர்களைச் சந்தித்தாலும் தனது உரையை மட்டும் நிறைவு செய்துவிட்டுச் சென்றுவிடுவார்.


 பத்திரிகையாளர்கள் என்றாலே அவருக்கு ஒவ்வாமை தான். டென்மார்க் நாட்டில் மே, 2022-இல் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்பதற்காக மோடியை சூழ்ந்துகொண்ட போது “ஓ மை காட்” என்று அவர் பயந்தோடியது உலகறிந்ததே.


 வெளிநாடுகளில் மட்டும் இரண்டு முறை, 2015-இல் இங்கிலாந்திலும் 2023-இல் அமெரிக்காவிலும், மோடி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது பத்தாண்டுக்கால பதவிக்காலத்தில் 117 பத்திரிகையாளர் சந்திப்புகளில் பங்கேற்றுள்ளதாக, 2012 மற்றும் 2014 காலகட்டத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராக இருந்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி மோடி மீதான தனது விமர்சனத்தை முன்வைக்கும் போது கூறினார்.


பத்திரிகையாளர்கள் நாடாளுமன்றம் மற்றும் மத்திய அமைச்சகங்களை அணுகுவதில் தடைகளை எதிர்கொண்டு வருகின்றனர். சான்றாக, 2019 ஆம் ஆண்டில், அதிகாரிகளைச் சந்திக்க விரும்பும் பத்திரிகையாளர்களுக்கு முன் அனுமதி முறையை (system of prior appointment) நிதி அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. 


கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பிறகு, ஊடகவியலாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்தியாவில் வெளிநாட்டு பத்திரிகையாளர்களும் மோடி ஆட்சியில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். 2018-ஆம் ஆண்டு முதல் காஷ்மீரில் இருந்தும், 2019-ஆம் ஆண்டு முதல் அசாமில் இருந்தும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் செய்தி அறிக்கை அளிக்க வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் அனுமதியைப் பெறவேண்டும் என்று மோடி அரசு கூறியது. 


வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி, விசா ஆகியவை இந்திய அதிகாரிகளால் அதிகளவில் நிராகரிக்கப்படுகின்றன.

2023-ஆம் ஆண்டில், 2002 குஜராத் இனப்படுகொலையில் மோடியின் பங்கை விமர்சிக்கும் பி.பி.சி ஆவணப்படத்தின் மீதான தடையும், அதனைத்தொடர்ந்து டெல்லி பி.பி.சி அலுவலகத்தில் நடந்த சோதனைகளும் வெளிநாட்டு பத்திரிகையாளர்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.


பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களின் போது அவருடன் பத்திரிகையாளர்களை அழைத்துச் செல்லும் நடைமுறை இந்தியாவில் இருந்தது. அந்த நடைமுறையையும் பிரதமர் மோடி முடிவுக்குக் கொண்டுவந்து விட்டார்.


இந்தியாவின் செய்தித் துறையின் முக்கிய வருவாய் ஆதாரமாக விளம்பரங்கள் உள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது பதவிக்காலத்துடன் ஒப்பிடும்போது, 2014 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், மோடி அரசு அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் விளம்பரங்களை உயர்த்தியுள்ளதாக அரசின் தகவல்கள் காட்டுகின்றன. 


ஆனால் 2017 முதல், இந்த எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.

விமர்சனப்பூர்வமாக செய்திகளை வெளியிட்டதற்காக, 2019 ஆம் ஆண்டில், டைம்ஸ், ஏபிபி (ABP) மற்றும் இந்து (Hindu) ஆகிய மூன்று செய்தித்தாள் குழுக்களுக்கு அரசு விளம்பரங்களை நிறுத்திவிட்டது.


மேலும், இணையத்தை ஒழுங்குபடுத்துதல் என்ற பெயரில் மோடி அரசு டிஜிட்டல் ஊடகங்களை தணிக்கை செய்யும் வகையில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை உருவாக்கியது.


தொலைக்காட்சி செய்தி சேனல்களுக்கு உரிமங்களை வழங்குவதிலும் மோடி அரசு தன்னிச்சையாக செயல்படுகிறது. புதிய சேனலைத் தொடங்குவதற்காக குவின்டில்லியன் மீடியா மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ப்ளூம்பெர்க் மீடியா ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான ”ப்ளூம்பெர்க் குயின்ட்”, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் உரிமத்திற்காக மூன்று ஆண்டுகளாக காத்திருந்தது.


 உரிமம் கிடைக்காததால் இந்த திட்டத்தை கைவிட்டுவிட்டது. 


ஆனால், சங்கி அர்னாப் கோஸ்வாமியின் செய்தி சேனலான ”ரிபப்ளிக் டிவி” தொடங்கப்படுவதற்கு மிக விரைவாக சில மாதங்களிலேயே அரசால் உரிமம் வழங்கப்பட்டது.


அதேபோல், மலையாள செய்தி சேனலான ”மீடியா ஒன்”னின் உரிமத்தைப் புதுப்பிக்க ஜனவரி 2022-இல் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மறுத்துவிட்டது. பின்னர் ஏப்ரல் 2023-இல் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அனுமதி அளிக்குமாறு கூறியது.


மோடி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுவது நான்கு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (Committee to Protect Journalists) சேகரித்த தரவுகளின்படி, 2014 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 36 பத்திரிகையாளர்கள் இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


 ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்த எண்ணிக்கை 8 ஆக இருந்தது.

எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் (Reporters Sans Frontières) நிறுவனத்தின் தரவுகளின்படி, மோடி ஆட்சியில், 2014 முதல் 2024 வரை, இந்தியாவில் 28 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


கருப்புச் சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் கீழ் மோடி அரசு 16 பத்திரிகையாளர்களின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்களில் 7 பேர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். 2019-ஆம் ஆண்டு திருத்தத்திற்குப் பிறகு இச்சட்டம் மிகவும் கடுமையானதாக மாற்றப்பட்டுள்ளது.


பத்திரிகையாளர்களுக்கு எதிராக அரசின் கண்காணிப்பு மற்றும் ஸ்பைவேர் பயன்பாடு, செய்தி நிறுவனங்களில் வருமான வரி ’ஆய்வுகள்’, இளம் பத்திரிகையாளர்களின் வீடுகளில் அச்சுறுத்தும் வகையிலான சோதனைகள் ஆகியவை பாசிச மோடி ஆட்சியில் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன.


பாசிஸ்டுகளிடம் கருத்துச் சுதந்திரத்தைக் கோரிப் பெற முடியாது. பாசிசத்தை வீழ்த்துவதன் மூலம் மட்டுமே, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்பதன் மூலம் மட்டுமே, நமது ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள முடியும்.


                                                    --பொம்மி

வினவு



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?