இனியும் தொடரலாமா?
கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு வழங்கியதற்கான தொகையைக் கொடுக்காததால் காஞ்சிபுரம் மாவட்டாட்சியர் கார் பறிமுதல்.
சனாதன தர்மத்துக்கு எதிராக விஷத்தை கக்கும் கட்சியுடன் காங்கிரஸ் ஏன் கூட்டணி வைத்துள்ளது என புரியவில்லை” - மோடி
(சனாதனம்தான் விஷம்)
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள்: ராமதாஸ்.
பாஜக உண்மையை மட்டும் தான் பேசும், பொய் பேசாது - வானதி.
‘நீட்’ ரத்து கிடையாது: அண்ணாமலை .
''இந்தியை திணிக்க வேண்டும் என்ற உங்களை போல் ஆணவம் கொண்ட ஒருவரை நான் பார்த்ததே இல்லை...'' - வைக்கோ .
“மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தால், மணிப்பூரில் நடப்பதைபோல எல்லா மாநிலங்களிலும் நடக்கும்” - கடுமையாக எச்சரித்த நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர்.
இனியும் தொடரலாமா?
மோடிக்கு விடை கொடுப்போம் .
மூன்றாவது முறையாக பிரதமர் ஆக ஆதரவு கேட்கிறார் நரேந்திர மோடி. அவருக்கு விடை கொடுத்து அனுப்ப இந்திய நாடு தயாராகி விட்டது!
எந்த அரசாக இருந்தாலும் ஆபத்து காலத்தில் மக்களை அந்த அரசு எப்படிக் காக்கிறது என்பதே மிகமிக முக்கியமான ஆட்சியியல் நெறிமுறை ஆகும். ஆபத்து காலத்தில் கைவிட்டதுதான் மோடி ஆட்சியாகும். கொரோனா காலத்தை இந்தியாவின் இருண்ட காலமாக மாற்றி விட்டார் பிரதமர் மோடி. நம் கண் முன்னே கொத்து கொத்தாக கொரோனா மரணங்கள் நிகழ்ந்த கொடுமை மோடி ஆட்சியில் நடந்தது. இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்த 2020 ஜனவரியில் சானிடைசர், வென்டிலேட்டர், மாஸ்க் உள்ளிட்ட உயிர் காக்கும் பொருட்கள் வழக்கத்துக்கு மாறாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி ஆனது.
அதே ஜனவரியில்தான் இந்தியாவில் கொரோனா நோயாளிகளும் கண்டறியப்பட்டனர். மூன்று மாதங்கள் சும்மா இருந்துவிட்டு, 2020 மார்ச் 24-ம் தேதி முதல், இந்தியா முழுவதும் 21 நாள் பொது முடக்கத்தை அறிவித்தார் பிரதமர் மோடி. மூன்று மாதங்களுக்கு முன்பே சர்வதேச விமான நிலையங்களை மூடி நாட்டை காப்பாற்றத் தவறிவிட்டு, இந்தியாவையே லாக் டவுனில் மூடினார்கள்.
உயிர்க் காக்கும் பொருட்களை எல்லாம் மொத்தமாக வாரிக் கொடுத்துவிட்டு, கடைசியில் நாம் கையேந்தி நின்றோம். கொரோனா பேரிடரை அறிவியல் பூர்வமாக மோடி அணுகாமல் டெல்லி சவுத் பிளாக்கில் உட்கார்ந்து கொண்டு கையை தட்டச் சொன்னார், மணியை ஆட்டக் கட்டளை போட்டார்; டார்ச் அடிக்க கோரினார்; ஒலி எழுப்ப உத்தரவு போட்டார்; வீட்டில் விளக்கு ஏற்ற வைத்தார். ஆனால், மக்களை காக்கத் தவறினார். இரண்டாவது அலையின் போது, தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல், மாநில அரசுகளே அதைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது போல ஒதுங்கி நின்றது மோடி அரசு. கொரோனா உயிர்க் காக்கும் மருந்துகளுக்கும் கருவிகளுக்கும் வரியை விதிக்கும் அரசை உலகில் எங்காவது பார்க்க முடியுமா? அதையும் செய்தார்கள்.
கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கு கூட ஜி.எஸ்.டி. வரி போட்டார்கள். பாரத தாயின் பிள்ளைகளுக்கு கொரோனா தடுப்பூசியை போதிய அளவில் தராமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது மோடி அரசு. 'தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனை தமிழகத்திற்கு தர முன்னுரிமை வழங்க முடியாது!' என உச்சநீதி மன்றத்தில் அடாவடி பேசியது மோடி அரசு.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த உண்மைத் தகவல்களையே பா.ஜ.க. அரசு மறைத்தது. "உண்மைகளைச் சொல்வதில் உங்களுக்கு என்ன தயக்கம்?” என நீதிமன்றமே கேள்வி எழுப்பியது. "மோடிஜி, எங்களது குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்?” என்று கொரோனா பேரிடரில் டெல்லியில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. தடுப்பூசிகளை வழங்காத மோடி அரசு, போஸ்டர்கள் ஒட்டிய 25 பேரை தேடிப் பிடித்து கைது செய்தது. கொரோனாவை தடுப்பதில் முற்றிலும் முடங்கிப் போன மோடி அரசால், பல லட்சம் பேர் வேலை இழந்து வாழ்வாதாரங்களைத் தொலைத்துவிட்டு நின்றார்கள்.
கொரோனா பேரிடரில் புலம்பெயர் தொழிலாளர்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் நடக்க வைக்கப்பட்டார்கள். ரயில் பாதை தண்டவாளத்தின் வழியாகச் சொந்த ஊருக்குச் செல்ல முயன்று, மகாராஷ்டிராவில் சரக்கு ரயில் மோதி 16 தொழிலாளர்கள் மாண்டார்கள்! பங்களாதேஷ், மியான்மர், பூட்டான், நேபாளம், மாலத்தீவுகள் எனப் பல நாடுகளுக்கு இந்தியா சுமார் 1 கோடித் தடுப்பூசிகளை இலவசமாகக் கொடுத்தது. ஆனால் தடுப்பூசிகளை மாநிலத்தின் தேவைகளை உணர்ந்து தட்டுப்பாடு இல்லாமல் கொடுக்கத் தவறியது மோடி அரசு.
அச்சம் அடைந்த மக்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளக் குவிந்த போது பலருக்குத் தடுப்பூசி கிடைக்கவில்லை. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனாத் தடுப்பூசி உலகம் முழுக்கச் சென்றது. ஆனால், இந்தியர்களுக்கு உடனே கிடைக்கவில்லை.
இந்திய மக்கள் தடுப்பூசிக்காக அல்லாடிய நேரத்தில் வெளிநாடுகளுக்கு வாரி கொடுத்துவிட்டு இந்தியாவின் பெருமையை பேசினார் மோடி!
ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு என தேசமே தவித்த போது, இவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு சரிசெய்ய வேண்டிய பொறுப்பில் இருந்த பிரதமர் மோடி மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார்.
பேரச்சம் சூழும் காலத்தில் அரசு நம்மைக் காக்கவேண்டும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மக்களை மோடி அரசு கைவிட்டது. இத்தகைய மோடி அரசு மீண்டும் தேவையா?
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் செய்த முதல் காரியம் ரயில்வேக்கு என இதுவரை போடப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட்டை ஒழித்தார்கள்.
ரயிலையே அரசாங்கத்தின் வசம் இருந்து கழற்றி விடுவதற்கான முதல் திட்டம் அதுதான். பல ஆண்டுகளாக மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண கட்டணத்தில் 50 சதவிகிதம் வரை வழங்கப்பட்டு வந்த சலுகையை அநியாயமாக பறித்தது மோடி அரசு.
டைனமிக் கட்டணத்தால் சாதாரண மக்கள், பிரீமியம் ரயில்களை பயன்படுத்த முடியவில்லை. "ஹவாய் செப்பல் (செருப்புகள்) அணிந்தவர்களை ஹவாய் ஜஹாஜ் (விமானம்) மூலம் பயணிக்க வைக்க ஆசைப்படுகிறேன்” என்ற மோடியின் வார்த்தைகள் பொய்யாகின.
ஹவாய் செருப்பு அணிந்தவர்கள் கூட ரயில்களில் போக முடியாத நிலையை உருவாக்கினார்.
ஏழைகள் காலடி எடுத்து வைக்க முடியாத 'எலைட் ரயிலின்' படத்தை காட்டி மக்களை ஏமாற்றினார். விளம்பரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ரயிலுக்கு முன்னுரிமை அளித்து சாமானியர்கள் பயணிக்கும் ரயில்களை மோடி செயலிழக்க செய்தார். ரயிலை நம்பியிருக்கும் 80 சதவிகித ஏழை, நடுத்தர வகுப்பினரை மோடி புறக்கணித்தார்.
பாசஞ்சர் ரயில்களை சிறப்பு விரைவு ரயில்கள் என்று பெயர் மாற்றி, சிறப்பு விரைவு ரயில்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை பயணிகளிடம் இருந்து மோடி அரசு வசூலித்தது.
5 முதல் 12 வயது குழந்தைகளுக்கு ரயிலில் தனி படுக்கையோ, இருக்கையோ பாதி கட்டணம் தான் என்று அளிக்கப்பட்டு வந்த சலுகையை 2016 ஏப்ரலில் பறித்தார்கள். குழந்தை களுக்கு தனி படுக்கையோ, இருக்கையோ பெறப்பட்டால், அதற்கு முழு கட்டணம் செலுத்த வேண்டும் என மாற்றினார்கள்.
ஏழைத் தாயின் மகன் ஆட்சியல்ல இது. ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் ஆட்சி. இத்தகைய மோடி ஆட்சி இனியும் தொடரலாமா?