கையது கொண்டு

 வாயது பொத்திய நடுநிலை (நக்கி) ஊடகங்கள்!

2023-ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில், 143 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் எதேச்சதிகார முறையில் தொலைத்தொடர்பு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. 

டிசம்பர் 18 அன்று மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு டிசம்பர் 20 அன்று நிறைவேற்றப்படுகிறது; 

டிசம்பர் 21 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்படுகிறது; டிசம்பர் 24 அன்று குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாசிச மோடி அரசு காட்டிய அதீத அக்கறைக்கான காரணத்தை தற்போது தேர்தல் நிதிப் பத்திரம் தொடர்பான விவரங்கள் வெளிவந்த பின்னர் தான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

இச்சட்டமானது, போட்டி ஏலங்கள் இல்லாமல் செயற்கைக்கோள் அலைக்கற்றை (satellite spectrum) ஒதுக்கீட்டை நிர்வாக உத்தரவு மூலம் மேற்கொள்ள வழிவகை செய்கிறது. 

மேலும், ஏலம் விடும் முறையைப் பின்பற்றாமல் இருப்பதற்கான ஒப்புதலை வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

மன்மோகன் சிங் அரசாங்கத்தில் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது வழங்கப்பட்ட 122 தொலைத்தொடர்பு அலைக்கற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) உரிமங்கள் உச்ச நீதிமன்றத்தால் கடந்த 2012-ஆம் ஆண்டில் இரத்து செய்யப்பட்டன.

 அவ்வழக்கில் அலைக்கற்றை உரிமங்கள் ஏலம் வழியாக மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவு “ஊழலுக்கு எதிரான சம்மட்டி அடி” என்று ஊடகங்களால் அப்போது கொண்டாடப்பட்டது. 

2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் வெற்றிக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடும் முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

2012-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை புறந்தள்ளி விட்டுத்தான் தற்போது பாசிச மோடி அரசு செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை மேற்கொள்ள இருக்கிறது.

புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின்படி, செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்பு சேவைகளை வழங்குவதற்கு, ஒரு நிறுவனம் இரண்டு அனுமதிகளைப் பெற வேண்டும். 

முதலாவது, தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து GMPCS உரிமத்தை (Global Mobile Personal Communications by Satellite licence) பெற வேண்டும். இரண்டாவது, இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையதின் (Indian National Space Promotion and Authorization Centre IN-SPACe) அனுமதியைப் பெற வேண்டும்.

ஒன்வெப் இந்தியா (OneWeb India) என்ற நிறுவனம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் யூடெல்சாட் ஒன்வெப் (Eutelsat OneWeb) என்ற சர்வதேச செயற்கைக்கோள் மற்றும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தின் இந்திய கிளையாகும். 

ஒன்வெப் இந்தியா நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீட்டாளராக இருப்பது தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஏர்டெல்-இன் (Airtel) தாய் நிறுவனமான பார்தி எண்டர்பிரைசஸ் (Bharti Enterprises) ஆகும்.

ஒன்வெப் இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் 24, 2021 அன்று தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து GMPCS உரிமத்தைப் பெற்றுவிட்டது. இந்தியாவில் இந்த உரிமத்தைப் பெற்ற முதல் நிறுவனம் இதுதான்.

அடுத்ததாக நவம்பர் 9, 2023 அன்று பா.ஜ.க-விற்கு 100 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் பார்தி குழுமம் அளிக்கிறது. இதை நவம்பர் 13 அன்று பணமாக மாற்றி கொள்ளும் பாஜக, நவம்பர் 21 அன்று IN-SPACe இன் அனுமதியை இந்நிறுவனத்திற்கு வழங்குகிறது.

இதனைத்தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் புதிய தொலைத்தொடர்பு மசோதா அதிவிரைவாக மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலையும் பெற்று சட்டமாகிறது. 

ஜனவரியில் பார்தி குழுமம் மீண்டும் 50 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க-வுக்கு அளிக்கிறது. ஜனவரி 12, 2024 அன்று பா.ஜ.க அதையும் பணமாக மாற்றிக் கொள்கிறது.

இந்த 150 கோடி ரூபாய் மட்டுமல்ல, 2019 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், பார்தி குழும நிறுவனங்கள் 247 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. 

இதில் 95 சதவிகிதத்துக்கும் அதிகமான நிதி பா.ஜ.க-வுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பத்திரங்கள் அல்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் இணைந்து தேர்தல் நிதி அளிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்தியேக அமைப்பு தேர்தல் அறக்கட்டளை (Electoral Trusts) எனப்படுகிறது. 

2013-ஆம் ஆண்டு முதல் இந்த அறக்கட்டளைகள் கார்ப்பரேட்களால் அமைக்கப்படுகின்றன. மொத்தமுள்ள 18 தேர்தல் அறக்கட்டளைகளில் முதன்மையானது புரூடெண்ட் தேர்தல் டிரஸ்ட் (Prudent Electoral Trust) நிறுவனம். 2013 ஆம் ஆண்டில் பாரதி குழுமத்தால் முன்கையெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்நிறுவனம், 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது பா.ஜ.க-வுக்கு 218 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளது. 

இதில் பார்தி குழுமத்தால் மட்டும் 27.25 கோடி ரூபாய் நேரடியாக இந்த அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு பார்தி நிறுவனத்திடம் கையூட்டு பெற்றுக்கொண்டு ஏலம் / டெண்டர் முறை இல்லாமல் செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் வழங்க சட்ட வழிவகையை உருவாக்கியுள்ளது பாசிச பா.ஜ.க அரசு. 

’ஊழல் ஒழிப்பு நாயகன்’ என்று பாசிச கும்பலால் கட்டமைக்கப்பட்ட மோடியின் பிம்பம் தற்போது சுக்குநூறாக நொறுங்கியுள்ளது.

தற்போது மோடி அரசு கையாண்டுள்ளதைப் போன்றதொரு வழிமுறையைப் பயன்படுத்தி, 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்பட்ட போது கூச்சலிட்ட மோடி ஆதரவு ஊடகங்களும், அண்ணா ஹசாரே, கிரண் பேடி, பாபா ராம்தேவ் உள்ளிட்ட பா.ஜ.க-வின் நண்பர்களும் தற்போது தங்களின் நவ துவாரங்களையும் பொத்திக்கொண்டு அமைதிகாத்து வருகின்றனர்.


-பொம்மி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?