E.D,-IT ,-C.B.I.,ஏவலர்கள்

அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை ஆகியவை ஒன்றிய அரசின் ஏவல் துறையாகவும், எதிர்க்கட்சி தலைவர்களை முடக்குவதற்கான ஆயுதமாகவும் பாஜ அரசால் பயன்படுத்தப்படுகிறது என்ற விமர்சனம் அனைத்து தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. 

காரணம், அந்த அளவுக்கு தங்களை எதிர்க்கும் எதிர்க்கட்சி தலைவர்களை அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் மிரட்டி பணிய வைப்பதை ஒன்றிய பாஜ அரசு ஓர் உத்தியாகவே பயன்படுத்தி வந்திருக்கிறது என்பது, கடந்த பத்தாண்டு கால வரலாறு காட்டும் உண்மை. 

அதிலும், தேர்தல் நெருங்கும்போதெல்லாம் இந்த நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. விசாரணை அமைப்புகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என பாஜ அமைச்சர்கள், தலைவர்கள் தொடர்ந்து கூறி வந்தாலும், இது நம்பும்படியாக இல்லை என்பதை எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தொடர்ச்சியாகப் போடப்பட்டு வரும் வழக்குகள் நிரூபித்து வருகின்றன.


அந்த வரிசையில் கடைசியாகப் பாய்ந்திருப்பது, ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் மீதான அமலாக்கத்துறை வழக்கு. தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என காரணம் காட்டி, சரியாக தேர்தல் நேரத்தில் அவரது பிரசாரத்தை முடக்கிப்போட பாஜ அரசு மேற்கொண்ட சதி இது என்பதை பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். 


தேர்தலில் நேர்மையாக போட்டியிட்டு மக்கள் தீர்ப்பால் மகுடம் சூட்டுவதுதான் ஆட்சியாளர்களுக்குப் பெருமை. அதை விடுத்து, எதிர்க்கட்சிகளை இயங்கவிடாமல் வழக்குகள் போட்டு முடக்கி வைத்து விட்டு வெற்றி பெற நினைப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என்பதை யாராலும் மறுக்க முடியாது.


 ஆனால், அதைத்தான் பாஜ அரசு செய்து வருகிறது. இதுவரை ஒன்றிய புலனாய்வு அமைப்புகளின் பிடியில் சிக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் அவர்கள் மீதான வழக்குகள் விவரம்:

கவிதா: தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை இவரை கைது செய்தது. தொடர்ந்து சம்மன் அனுப்பியும் இவர் ஆஜராகாத நிலையில், கடந்த 15ம் தேதி ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் 5 மணி நேர சோதனைக்கு பிறகு அவரை அமலாக்கத்துறை கைது செய்தது.




வீணா விஜயன்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள்.

மோடி தலைமையிலான அரசை எதிர்க்கும் மாநில அரசுகளில் கேரளாவும் ஒன்று. வீணா விஜயன் ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார்.

வீணா விஜயனும், அவரது ஐடி நிறுவனமும் தனியார் மினரல் நிறுவனத்திடம் இருந்து முறைகேடாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ இவரை கைது செய்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இவர் சிறையில் இருக்கிறார். பாஜவுக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருக்கு எதிராக ஒன்றிய புலனாய்வு அமைப்பு மேற்கொண்ட முதல் கைது நடவடிக்கை இது.


ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்வந்த் சிங்: பஞ்சாப் மாநிலம் மொஹாலி தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏவான இவர் மீது மதுபான கொள்கை முறைகேடு வழக்கு போடப்பட்டு, டெல்லி மற்றும் பஞ்சாபில் மொஹாலி, அமிர்தசரஸ், லூதியானாவில் இவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது.


ரோகித் ஓரன்: ஜார்க்கண்ட் அமைச்சர் ராமேஸ்வர் ஓரனின் மகன். மதுபான முறைகேடு வழக்கில் இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

 பண பரிவர்த்தனை பிஎம்எல்ஏ தடுப்பு சட்டத்தில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


மிசா பாரதி: லாலு பிரசாத் யாதவின் மகள். லாலு பிரசாத் 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேயில் சிலருக்கு பணி நியமனம் செய்ததற்கு ஈடாக லாலுவின் மனைவி ராப்ரி தேவி மற்றும் மகள் மிசா பாரதி பெயரில் நிலம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

 சிபிஐ இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளது. 

இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாத இறுதியில் மிசா பாரதி வீட்டில் சோதனை நடத்தி, அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.


விஜயபாஸ்கர்: அதிமுக ஆட்சியில் 8 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர். இவர் மீது குட்கா முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. 

சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது.

 ஏற்கெனவே 2021ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை செய்து பல ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை விஜயபாஸ்கர் வீட்டில் சமீபத்தில் சோதனை நடத்தியது. 

பாஜ கூட்டணியில் அதிமுக சேர மறுத்ததைத் தொடர்ந்து இந்த ரெய்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.


மஹூவா மொய்த்ரா: திரிணாமுல் காங்கிரஸ் எம்பியாக இருந்தவர் இவர். அதானி குழுமத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம், பரிசுப் பொருட்கள் பெற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

பின்னர் நன்னடத்தைக் குழு அறிக்கைப்படி இவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. இவருக்கு திரிணாமுல் கட்சி மீண்டும் போட்டியிட சீட் வழங்கியுள்ளது. இந்நிலையில், மேற்கண்ட விவகாரத்தில் அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட விதி மீறல் வழக்கில் இவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.


ஷேக் ஷாஜகான்: திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான், சந்தேஷ்காலி தீவுப்பகுதியில் பழங்குடியின நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், பழங்குடியின பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பண மோசடி சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, ₹12.78 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளது.


ஹேமந்த் சோரன்: ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், நில மோசடி தொடர்பான சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜனவரி 31ம் தேதி நள்ளிரவு, 7 மணி நேர விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 

இவர் கைது செய்யப்பட்ட பிறகு கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார்.


மகேஷ் ஜோஷி: ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் மகேஷ்ஜோஷி மீது, அந்த மாநிலத்தில் ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்துவதில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, இவருக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகிறது.


வைபவ் கெலாட்: ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன். அந்நிய செலாவணி பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் இவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

மெரீஷியசில் உள்ள நிறுவனத்திடம் இருந்து இவர் சட்டவிரோதமாக பணம் பெற்றதாகவும், அதனை ஓட்டல் பங்குகளில் முதலீடு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இவரது வீடுகளில் ஜனவரி மாதம் ரெய்டு நடத்தப்பட்டது.


கிரண் தேவி: பீகாரில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக ராஷ்ட்ரீய ஜனதா தள (ஆா்ஜேடி) எம்எல்ஏ கிரண் தேவி, அவரின் கணவரும் முன்னாள் எம்எல்ஏவுமான அருண் யாதவுக்கு தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை கடந்த பிப்ரவரியில் சோதனை நடத்தியது.

 சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தில் அருண் யாதவ் மற்றும் அவரது மனைவி கிரண் தேவி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியிருந்தது.


அமோல் கீர்த்திகர்: கொரோனா காலக்கட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மும்பை மாநகராட்சி சார்பில் கிச்சடி வழங்கப்பட்டதில் ₹6.37 கோடி ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில் உத்தவ் சிவசேனா கட்சியைச் சேர்ந்த சூரஜ் சவான், எம்பி சஞ்சய் ராவத்தின் சகோதரர் சந்தீப் ராவத் மற்றும் அமோல் கீர்த்திகர் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

 இது தொடர்பாக சூரஜ் சவானின் ₹88.51 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை, சந்தீப் ராவத்தின் வாக்குமூலத்தையும் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, அமோல் கீர்த்திகரை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. 

உத்தவ் சிவசேனா கட்சி சார்பில் அமோல் கீர்த்திகர் மும்பை வடமேற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அதே நாளில் இந்த சம்மன் அனுப்பப்பட்டது.


ரோகித் பவார்: மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு துறையில் சர்க்கரை ஆலைகளை மோசடியான முறையில் விற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது. 

இதன் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவாரின் பேரனும் எம்எல்ஏவுமான ரோகித் பவாருக்கு சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 

பின்னர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ரோகித்பவார் நேரில் ஆஜரானார்.

காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் டொட்டாசரா: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் இவர். 

அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஜெய்ப்பூர் மற்றும் சிகார் பகுதியில் உள்ள இவரது அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.


மேற்கு வங்க அமைச்சர் ஜோதிபிரியோ மாலிக்: ஆம் ஆத்மியை போல ஒன்றிய பாஜ அரசால் அதிகமாக குறிவைக்கப்பட்ட கட்சி திரிணாமுல் காங்கிரஸ்தான். 

மேற்கு வங்க அமைச்சரான இவர் மீது, கொரோனா காலத்தில் ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் பல கோடி முறைகேடு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.


ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானுல்லா கான்: பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் டெல்லியில் இவரது வீடு அலுவலகங்களில் சுமார் 12 மணி நேரத்துக்கு மேல் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்: ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்பியான இவரிடம், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. 

இந்த வழக்கில் இவரது அலுவலக ஊழியர்களிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.


பஞ்சாப் முன்னாள் அமைச்சர் பாரத் பூஷன் ஆஷூ: பஞ்சாபில் உணவு தானிய முறைகேடு வழக்கு தொடர்பாக இவர் மற்றும் இவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். 

அப்போது இவர் பஞ்சாப் மாநில உணவு மற்றும் பொது விநியோகம், நுகர்வோர் விவகார அமைச்சராக இருந்தார். இவர் மீது அமலாக்கத்துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. சொத்துகள் மற்றும்₹6 கோடி பணத்தை பறிமுதல் செய்தது.


சிபிஐ (எம்) எம்எல்ஏ மொய்தீன்: கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவான இவர் மீது, கருவன்னூர் கூட்டுறவு வங்கியில் ₹100 கோடி முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அமலாக்கத்துறையால் ரெய்டு நடத்தப்பட்டது.

ஹரியானா எம்எல்ஏ கோபால் கண்டா: ஹரியானா லோகித் கட்சி எம்எல்ஏவான இவர் மீது பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து ரெய்டு நடத்தினர்.


பிரியங்கா, ராபர்ட் வதேரா: 2006ம் ஆண்டு பரிதாபாத்தில் ரியல் எஸ்டேட் ஏஜென்டிடம் இருந்து நிலத்தை வாங்கியது மற்றும் அந்த நிலத்தை அதே ஏஜென்டிடம் 2010ம் ஆண்டு விற்றது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பரில் பிரியங்கா மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதுபோல், பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா வின் பெயர், ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தொடர்பான மோசடி வழக்கில் இடம் பெற்றுள்ளது. 

சஞ்சய் பண்டாரியின் லண்டன் வீட்டை புதுப்பிக்க ராபர்ட் வதேரா நிதியுதவி செய்ததாகவும், அந்த வீட்டில் வதேரா தங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


கார்த்தி சிதம்பரம்: வேதாந்தா குழுமம் பஞ்சாபில் அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக 2011ம் ஆண்டு 260 சீனர்களுக்கு விசா பெற்றுத்தர கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், இதற்காக அவர் ₹50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. 

இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பரில் இவர் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.


பூபேஷ் பாகல்: சட்டீஸ்கர் முதல்வராக இருந்தவர். கடந்த ஆண்டு சட்டீஸ்கரில் தேர்தல் நடப்பதற்கு முன்னதாக, மகாதேவ் சூதாட்ட ஆப்ஸ் நிறுவனம் இவருக்கு ₹508 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, இவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது.


பூபேஷ் பாகல் ஆலோசகர்: மதுபான கொள்கை வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம், அப்போதைய சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலின் அரசியல் ஆலோசகர் வினோத் வர்மா மற்றும் முதல்வரின் சிறப்பு அதிகாரிகள் மணீஷ் பஞ்சோர், ஆஷிஷ் வர்மா ஆகியோரின் வீடு அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.


கர்நாடகா காங். எம்எல்ஏ நாரா பரத் ரெட்டி : கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, சட்ட விரோத பரிவர்த்தனை மூலம் ₹42 கோடி திரட்டியதாக கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ நாரா பரத் ரெட்டி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி தொடங்கி தொடர்ந்து 3 நாட்களாக அவரது வீடு அலுவலகங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது.


காங்கிரஸ் எம்பி தீரஜ் சாகு: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், காங்கிரஸ் எம்பி தீரஜ் சாகுவுக்கு சொந்தமாக ஒடிசா மாநிலம் பாலாங்கிர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

 ஜார்க்கண்டில் இவருக்கு சொந்தமான அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. பின்னர், கடந்த மாதம் தொடர்ந்து 2 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு இவர் ஆஜரானார்.


செந்தில் பாலாஜி: தமிழ்நாடு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

தேர்தல் நெருங்கிய நிலையில் கடந்த பிப்ரவரி மாதமும் அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர்.

ரவீந்திர வாய்கர்: மும்பை ஜோகேஸ்வரியில் சொகுசு ஓட்டல் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாகவும், மும்பை மாநகராட்சியுடன் மேற்கொண்ட ஒப்பந்த விதிகளை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது கடந்த ஆண்டு செப்டம்பரில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. 

பின்னர் ரவீந்திர வாய்கரின் வீடு, அலுவலகங்களில் கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


பொன்முடி: கடந்த 2006 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாடு அமைச்சரவையில் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி இருந்ததார்.

 அப்போது அவருடைய மகன் கவுதம சிகாமணி, மற்றும் அவரது உறவினர்கள் அந்தப் பகுதியில் செம்மண் எடுக்க 2007 பிப்ரவரியில் விண்ணப்பித்திருந்த நிலையில், குறுகிய காலத்தில் அனுமதி வழங்கப்பட்டதாகவும், அளவுக்கு மீறி மண் எடுத்து அரசுக்கு ₹28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்திதாக பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. 

பின்னர் பொன்முடியின் வீடு அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?