காவி நெடி.......

மோடி பிரச்சாரத்தில் அதிகரிக்கும் காவி நெடி

ஸ்லாமியர்கள் குறித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வது பா.ஜ.க-வினருக்கு புதிதல்ல. அதிலும், தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வின் அடிமையாக மாறியுள்ள நிலையில், வெறுப்பு அரசியலின் மூலம் பிரச்சாரம் செய்வதை பா.ஜ.க. கும்பல் தனது பிரதான உத்தியாக கொண்டுள்ளது. 

2022 உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் “இது 80% எதிர் 20% போட்டி” என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரடியாகவே இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்களை தூண்டியது; 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர்கள் கரையான்களை போன்றவர்கள் என்று அமித்ஷா பேசியது ஆகியவை இதற்கான சான்றுகளாகும்.

இந்நிலையில், கடந்த ஆண்டுகளாக “வளர்ச்சி நாயகனாக” முன்னிறுத்தப்பட்டு வந்த மோடியின் ‘வளர்ச்சி’ முகமூடி மக்கள் போராட்டங்களால் கிழித்து தொங்கவிடப்பட்டுள்ளதையடுத்து, முகமூடியை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நேரடியாக வெறுப்பு அரசியலை கையிலெடுத்துள்ளார் மோடி. 2023 கர்நாடகா சட்டமன்ற தேர்தல், கடந்தாண்டு இறுதியில் நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வேகமெடுத்த மோடியின் வெறுப்பு பிரச்சாரம் தற்போதைய 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தீவிரமடைந்துள்ளது.

கடந்த வெள்ளிக் கிழமையன்று, ஜம்மு காஷ்மீரில் உள்ள உதாம்பூரில் தேர்தல் பிரச்சார பேரணியில் கலந்துகொண்டு பேசிய மோடி, சம்மந்தமே இல்லாமல் கடந்த ஆண்டு செப்டம்பரில் ராகுல் காந்தி மற்றும் லாலு பிரசாத் ஆட்டிறைச்சி சமைக்கும் காணொளி வெளியானது குறித்து பேசினார். அதில் “காங்கிரசும் மற்ற இந்தியா கூட்டணி உறுப்பினர்களும் நாட்டின் பெரும்பாலான மக்களின் உணர்வுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. சவானின் போது (இந்து நாட்காட்டியில் ‘மங்களகரமான’ மாதம்) குற்றவாளியின் வீட்டிற்குச் சென்று ஆட்டிறைச்சி சமைப்பது மட்டுமல்லாமல், நாட்டு மக்களையும் கிண்டல் செய்கின்றனர்” என்றார்.

மேலும், “சட்டம் யாரையும் எதுவும் சாப்பிடுவதை தடுக்கவில்லை, மோடியும் தடுக்கவில்லை, 

ஆனால் அவர்களின் எண்ணம் வேறு. முகலாயர்கள் தாக்கியபோது, ​​ராஜாவை மட்டும் தோற்கடிப்பதில் அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. கோவில்களை அழித்து முடிக்கும் வரை அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. இதைப் போலவே, சாவான் மாதத்தில் வீடியோவைப் பதிவேற்றுவதன் மூலம், அவர்கள் (எதிர்க்கட்சிகள்) முகலாய காலத்தின் எண்ணங்களை வெளிப்படுத்தி, மக்களைக் கிண்டல் செய்து தங்கள் வாக்கு வங்கியைப் பலப்படுத்த முயற்சிக்கின்றனர்,” என்று அப்பட்டமான வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

தேஜஸ்வி மற்றும் விகாஷ்-ஷீல் இன்சாஃப் கட்சியின் (வி.ஐ.பி.) தலைவர் முகேஷ் சாஹ்னி ஆகியோர் ஹெலிகாப்டரில் மீன், ரொட்டி மற்றும் மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக சாப்பிடும் வீடியோ பகிரப்பட்டது குறித்து பேசிய மோடி, காளி அல்லது துர்கா தேவிக்காக ஒன்பது இரவுகள் பிரார்த்தனை செய்யும் நவராத்திரியின் போது, தேஜஸ்வி இறைச்சி உண்பதாக கூறினார். 

மேலும், “மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி யாரைப் பிரியப்படுத்தப் பார்க்கிறீர்கள்? 

இப்படிச் சொன்னதற்காக இவர்கள் இப்போது என்மீது அவதூறுகளைப் பொழிவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், கோடுகளைத் தாண்டும்போது எது சரி என்று மக்களுக்குச் சொல்வது ஜனநாயகத்தில் என் கடமை. நாட்டின் பெரும் பகுதியினர் அவர்களின் வீடியோக்களைப் பார்த்து அசௌகரியம் அடைகிறார்கள்” என்றார் மோடி. 

பா.ஜ.க-வின் இணைய வானரப் படையும் சமூக வலைதளங்களில் இதே பிரச்சாரத்தை கையிலெடுத்தது.

இதற்கு பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட தேஜஸ்வி, அக்காணொளி நவராத்திரி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு எடுக்கப்பட்டதாகவும் பாஜக மற்றும் கோடி மீடியா ஆதரவாளர்களின் ஐ.க்யூ-வை (நுண்ணறிவு அளவு) சோதிப்பதற்காக காணொளி பதிவேற்றப்பட்டதாகவும் கூறினார். 

மேலும், மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்ன அணிந்துகொள்கிறார்கள் என்பதுதான் பா.ஜ.க-வின் அரசியல்; அவர்கள் மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்றார். மேலும், அண்மையில் வெளியான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பேசியபோதும், “சுதந்திரப் போராட்டத்தின் போது முஸ்லிம் லீக்கில் இருந்த அதே கருத்தைத்தான் காங்கிரஸ் அறிக்கையும் பிரதிபலிக்கிறது” என்றார்.

‘வளர்ச்சி நாயகன்’ என்ற ஊதிப்பெருக்கப்பட்ட பொய்யின் மூலம் ஆட்சியை பிடித்த மோடியின் ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, வறுமை, விவசாயிகளின் தற்கொலை தலைவிரித்து ஆடுகிறது. 

மோடியின் இத்தோல்வியை மூடிமறைத்து இவற்றின் மூலம் இந்து-முஸ்லிம் என வாக்காளர்களை துருவப்படுத்தி தேர்தலில் வெற்றிபெற பா.ஜ.க. கும்பல் துடித்துக்கொண்டிருக்கிறது. அதனை மோடியே முன்னின்று செய்துகொண்டிருக்கிறார். 

இதுவரை இல்லாத அளவிற்கு பா.ஜ.க. வகுப்புவாதத்தில் ஈடுபட்ட ஒரு அத்தியாயமாக 2024 மக்களவைத் தேர்தல் வரலாற்றில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது என்று பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளதே அதற்கு சான்று.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?