போர் சைக்கோ அமெரிக்கா?
ஈரான்
தூதரகம் மீதான தாக்குதல்:
நேற்று (13.04.2024) மாலை, இசுரேலுக்கு சொந்தமான கப்பல் ஒன்றை, ஹொர்மோஸ் ஜலசந்தியில் ஈரான் பிடித்து வைத்துள்ளது.(சிரியாவில் ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, ஈரான் நேற்று இரவு இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்துள்ளது. நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளதன் மூலம் நேரடித் தாக்குதலைத் தொடங்கிவிட்டது.
இது மிகத் தீவிரமான போராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
தற்போது பிரசுரமாகியுள்ள இக்கட்டுரை தாக்குதல் தொடங்கப்படுவதற்கு முன்பு எழுதப்பட்டது.)
பாலஸ்தீனத்தின் மீதான ஆறு மாத கால போரின் விளைவாக இதுவரை 35,000-க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸை அழிப்பது என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் போருக்கு அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
இதனால், துருக்கி உள்ளிட்ட அமெரிக்க நட்பு நாடுகள் கூட, பாலஸ்தீனத்தின் மீதான போரைக் கண்டிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
மத்திய கிழக்கு ஆசியாவில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் வகையில், சீனா-ரசியா மேற்கொள்ளும் முயற்சிகள் அமெரிக்கா-இசுரேல் கும்பலுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வந்தது.
குறிப்பாக, பல ஆண்டுகளாக பகையாக இருந்த சவுதி அரேபியா – ஈரானுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தியது சீனாவின் முக்கியமான சர்வதேசப் போர்த்தந்திர முக்கியத்துவமுள்ள வெற்றியாகும்.
இதன் விளைவாக, அமெரிக்க-இசுரேல் கும்பலின் பாலஸ்தீன இன அழிப்புப் போருக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கின.
இத்துடன், ஹிஸ்புல்லா, ஹவுதி போன்ற அமைப்புகள் இசுரேலுக்கு எதிராகவும் இசுரேலை ஆதரிக்கும் நாடுகளுக்கு எதிராகவும் நடத்திய தாக்குதல்கள் அமெரிக்காவை நிலைகுலைய வைத்தன.
இதனால், செங்கடல் பிராந்தியத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும் உலக வினியோகச் சங்கிலி அறுபடுவதுடன், அமெரிக்கப் பொருளாதாரம் மிகப்பெரும் அளவுக்கு சீர்குலையும் நிலைமை உருவானது.இ
ந்நிலையில், செங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவின் கப்பல்களை இலக்கு வைத்து ஹவுதி நடத்திய தாக்குதல்களின் போது, அமெரிக்கா பாலஸ்தீனத்தின் விடுதலைக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறத் தொடங்கியது.
உண்மையில், பாலஸ்தீனத்தை இரண்டு அரசுகளாகப் பிரித்து, நாடுகளுக்கான அந்தஸ்த்தை வழங்குவது என்ற தீர்வை முன்தள்ளி வருகிறது.
அமெரிக்கா திருந்திவிட்டது என்று கருத வேண்டாம். இது போருக்கான புதிய தயாரிப்பு என்பதைத்தான் அதன் அண்மைகால சில நகர்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
மார்ச் 01-ஆம் தேதி சிரியாவின் டாமஸ்கசில் உள்ள ஈரானின் துணை தூதரகத்தின் மீது இசுரேல் நடத்தியதாகக் கருதப்படும் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஈரானின் பிரிகேடியர் ஜெனரல் மொகம
த் ரெடா அல்-ஜாஹெதி (Mohamed Reda al Zahedi) கொல்லப்பட்டார்.
இது ஈரானுக்குப் பெரிய இழப்பாகும். அமெரிக்க-இசுரேல் கும்பலால் ஈரானின் இராணுவத் தளபதி கொல்லப்படுவது இது முதல் முறை அல்ல.
2020-ஆம் ஆண்டு, ஜனவரி 03-ஆம் தேதி, ஈரானின் காசிம் சொலைமானி (Qasem Soleimani) அமெரிக்காவின் ஆள் இல்லாத விமானத் தாக்குதல் மூலமாகக் கொல்லப்பட்டார்.
ஈரானை ஒரு அணு ஆயுத நாடாக சித்தரித்து அதன் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வைத்துள்ளது என்பதையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். இதனைக் காரணம் காட்டித்தான் இதுநாள் வரை ஈரான் மீதான அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் அமெரிக்கா நியாயப்படுத்தி வருகிறது.
ஈரானை ஆத்திரமுட்டிய மார்ச் 1-ஆம் தேதி தாக்குதலுக்கு 48 மணி நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் 13-04-2024 அன்று காலை அறிவித்ததைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் மூளும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், இசுரேலுக்கு பக்கபலமாக இருப்போம் என்று அமெரிக்கா தொடர்ந்து அறிவித்து வருகிறது. அதேவேளையில், அமெரிக்க தூதரகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏவுகனைகள், விமானங்கள், ஆளில்லா விமானங்களால் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதேவேளையில், அமெரிக்க அதிகாரிகள் “ஈரான் நடத்த இருக்கின்ற தாக்குதல் நாடுகளுக்கு இடையிலான போர் அல்ல. அமெரிக்காவுக்கு ஈரானுடன் ஒரு போர் நடத்த விருப்பமில்லை. அதனால், அமெரிக்கா படை கொண்டு இறங்காது” என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், சீனா, துருக்கி, சவுதி அரேபியா ஆகிய நாடுகளுடன் தொடர்பு கொண்டு, இசுரேல் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என ஈரானிடம் தெரிவிக்குமாறு எச்சரிக்கை செய்துள்ளது, போருக்கான அனைத்து வேலைகளையும் அமெரிக்கா மேற்கொண்டுவருவதை உறுதிப்படுத்துகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறைத் தொடர்பாளர் மேத்யூ மில்லர், மத்திய கிழக்குப் போரில் தனக்கு நாட்டமில்லை” என்று கூறினாலும் இது உலக மக்களை திசைத்திருப்புவதற்கான ஒரு அணுகுமுறையே அன்றி, உண்மையில், அமெரிக்காதான் மத்திய கிழக்கில் புதிய போர்முனை ஒன்றை உருவாக்குவதற்கான வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளதை நிலமைகள் உணர்த்துகின்றன.
அண்மையில், ஐ.நா. பாதுகாப்பு சபை, பாலஸ்தீனத்திற்கு இரண்டு நாடுகளைப் போன்ற தீர்மானத்தைப் பாதுகாப்பு சபைக்குக் கொண்டுவர இருக்கிறது. ஒன்பது நாடுகள் ஏற்றுக்கொண்டால் இது நிறைவேறும். அமெரிக்காவும் இதனை ஆதரித்துப் பேசிவந்துள்ளது. இருப்பினும், பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது போல அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சி ஒரு நாடகமே.
இப்போதைய நிலையில், ஈரான் இசுரேலைத் தாக்கினால் இதனைக் காரணம் காட்டி, பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் இரண்டு அரசுகள் தீர்மானத்தை அமெரிக்கா மறுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கிவிடும்.
ஒருவேளை, இரண்டு அரசுகள் தீர்மானத்தை அமெரிக்கா ஆதரிக்காமல் போனால், அதனையும் சேர்த்துக் காரணமாக வைத்து ஈரான் இசுரேலைத் தாக்குவதற்கு ஒரு வலுவான முகாந்திரம் கிடைத்துவிடும். எப்படி இருந்தாலும் ஈரானை ஆத்திரமூட்டியிருப்பதால், ஈரான் தாக்குதலை அமெரிக்கா ஆர்வமாக எதிர்ப்பார்த்து வருகிறது. அத்துடன், இதனைக் காரணமாக வைத்து பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் தீர்மானத்திற்கு தனது விட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடை போட்டு பழியை ஈரான் மீது போட்டுவிடலாம் என்பது அமெரிக்காவின் சதித்திட்டமாகும்.
மொத்தத்தில், போர் வெறிப்பிடித்து அலையும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கம் தொடர்ந்து சரிந்து வருகிறது. தனது உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, அது உலகத்தில் பல பகுதிகளில் போர்முனைகளை உருவாக்கி வருகிறது. அதன் ஓர் அங்கம்தான், இப்போது ஈரான் மீது போர்த்தொடுப்பதற்கான முயற்சியாகும். ஈரான், லெபனான் ஆகிய நாடுகள் ஏற்கெனவே பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து வருபவை என்பது முக்கியமான காரணமாகும்.
இசுரேல் என்ற பேட்டை ரவுடிடையை வைத்துக் கொண்டு, அமெரிக்கா மேலும் ஒரு போர்முனையை உருவாக்குவதை உலகத்தின் அனைத்து மக்களும் எதிர்க்க வேண்டும்.
தனது உலக மேலாதிக்க வேட்டைக்காக அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் அமெரிக்காவின் போர் முயற்சிகளுக்கு எதிரான போராட்டங்கள் உலகெங்கும் நடத்தப்பட வேண்டும்.
ஒரு பக்கம் உலகத்தின் அணி சேராத யோக்கியர் போல நாடகமாடிக் கொண்டே, இசுரேலுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க-இசுரேல் போர்வெறி, இரத்தவெறிப் பிடித்த ஓநாய்களின் பாதுகாவலனாக மோடி அரசு செயல்படுவதையும் முறியடிக்க வேண்டும்.
இசுரேல்-அமெரிக்காவின் போர் முயற்சிகளைக் கண்டிக்காமல், அதனை ஒரு விறுவிறுப்பான திகில் படக்காட்சி போலக் காட்டி மக்களை மடமையில் ஆழ்த்தும் அமெரிக்க ஆதரவு ஊடகங்கள், சமூக ஊடகங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.