370 வது பிரிவு என்றால்...?

இன்று இந்திய அளவில் காஷ்மீரின் 370 வது சிறப்பு பிரிவு பற்றி நாடு தழுவிய அளவில் வாத,பிரதிவாதங்கள் நடக்கின்றன.
ஆனால் அதை கேட்கும் நமக்கு அந்த 370 வது பிரிவு என்றால் என்ன?அது கூறுவது ஏன்ன?அதனால் காஷ்மீருக்கு என்ன சிறப்பு கொடுக்கப்படுகிறது?
அந்த 370 வது பிரிவு கொடுக்கப்பட என்ன காரணம்?
என்று பல கேள்விகள் எழுகின்றன.
suran

அதை பற்றி தோழர்.அருணன் தீக்கதிரில் எழுதிய  கட்டுரை உங்கள் பார்வைக்கு:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரும் இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 370 பற்றி ஒரு விவாதம் நடத்த வேண்டுமென்று தேர்தல் பிரச்சாரத்தின் போதே திரு. நரேந்திர மோடி கூறினார். இப்பொழுது அவர் பிரதமர் ஆனதும் அவரது அலு வலக இணையமைச்சர் ஒருவர் அந்த விஷயத்தை கிளப்பியுள்ளார்.
 எந்த ஒன்றைப் பற்றியும் விவாதம் நடத்தலாம் . 
ஆனால் அது திறந்த மனதுடன் நடத்தப்பட்டால்தான் ஏதேனும் பயனிருக் கும்.
இந்தப் பிரிவினைப் பொறுத்த வரை பாஜகவின் மனோநிலை மூடுண்டது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள அந்த மாநிலத்திற்கு எவ்வித தனிச் சலுகையும் காட்டப்படக் கூடாது.
அந்தப் பிரிவையே அரசியல் சாசனத்திலிருந்து தூக்க வேண்டுமென்பதுதான் அதனு டைய நிலைப்பாடு. இதை அந்தக் கட்சிஎத்தனையோ முறை ஏற்கனவே பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறது. அப்படிப் பட்ட ஒரு கட்சியின் இணையமைச்சர் இது பற்றி விவாதம் நடத்தக் கோருவதன் நோக்கமும் அதற்காகத்தான் என ஒருவர் தெளிந்தால் அது தவறாகாது.
இந்தப் பிரிவு நமது அரசியல் சாச னத்தில் இடம்பெற்ற வரலாறைச் சற்றே திரும்பிப் பார்த்துக் கொண்டால் அதன் முக்கியத்துவத்தையும், அது தொடர வேண்டியதன் அவசியத்தையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். 
இறந்த காலம் என்பது முற்றிலுமாக இறந்து போவதுமில்லை, நிகழ்காலம் என்பது முற்றிலுமாகச் சுயம்புவாகப் பிறந்தது மில்லை.
suran

தடுமாறிய மன்னர்
ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் இந்த பூமியை இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகளாகப் பிரித்துத் தந்துவிட்டு வெளியேறியபோது, இங்கிருந்த நூற்றுக்கணக்கான சமஸ்தானங்கள் ஏதேனும் ஒரு நாட்டோடு இணைந்தன. ஜம்மு - காஷ்மீரில் வினோதமான நிலைஏற்பட்டது. அங்கே குடிமக்களில் பெரும் பான்மையோர் முஸ்லிம்களாக இருக்க, மகாராஜாவானவர் இந்துவாக இருக்க, முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது.
1947 அக்டோபர் 26 அன்று இந் தியாவின் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டனுக்கு ஜம்மு - காஷ்மீரின் மகா ராஜா ஹரிசிங் எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டார்; “எந்த நாட்டோடு இணைவது அல்லது தனித்து நிற்பது இரு நாடுகளுக்கும் மற்றும் எனதுஅரசிற்கும் நல்லதில்லையா என்று முடிவு செய்ய எனக்குக் கால அவகாசம் தேவைப்படுகிறது.
” இத்தகைய மனோநிலையில் இருந்த அந்த மகாராஜா பாகிஸ்தானை அணுகி அதனுடன் “தற்போதைய நிலையைத் தொடரும் ஒப்பந்தம்” ஒன்றை உருவாக்கியிருந் தார்.
suran
ஒருபுறம் இப்படியொரு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்த பாகிஸ்தான் அரசு மறுபுறம் ஜம்மு - காஷ்மீரைத் தன்னோடு கட்டாயப்படுத்தி இணைக்க மறைமுக வேலைகளில் இறங்கியது. ஹரிசிங் தனது கடிதத்தில் தொடர்ந்து கூறியது போல “நவீன ஆயுதங்களைத் தாங்கிய பழங்குடி மக்களின் பெரும் ஊடுருவல்” பாகிஸ்தானிலிருந்து வந்தது.இந்தச் சூழலில்தான் இந்திய ராணு வத்தின் உதவியை நாடினார் ஹரிசிங். 
அந்த உதவியை அந்த சமஸ்தானத்திற்கு இந்திய அரசு வழங்க வேண்டுமென்றால் அது இந்தியாவோடு இணைய ஒப்புக் கொண்டிருக்க வேண்டுமென்பது எளியயதார்த்தம்.
இதைப் புரிந்து கொண்டிருந்த ஹரிசிங் இந்தக் கடிதத்தோடு அப்படி யொரு “இணைப்புப் பத்திரத்தை”யும் கையெழுத்திட்டு அனுப்பி யிருந்தார்.
 இந்த ஏற்பாட்டிற்கு ஜம்மு - காஷ்மீர் மக்களின் ஆதரவும் உண்டு எனக் காட்டும் வகையில் அவர் களது தலைவராகிய ஷேக் அப்துல்லாவைக் கொண்டு ஓர் இடைக்கால அரசை ஏற் படுத்த திட்டமிட்டிருப்பதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
suran

இணைப்புப் பத்திரம்
ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஆங்கிலேயே சாம்ராஜியத்திற்குள் தனி சமஸ்தானமாக இருந்தவர்கள். இந்துக்களை ஆகப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவோடு இணைவது எனும்போது அங்கிருந்த முஸ்லிம் மக்கள் நெஞ்சில் எங்கே தாங் கள் இனி இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுவோமோ எனும் சந்தேகம் எழுந்திருந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. 
இந்தியாவிலிருந்த இந்துத்துவா வாதிகளின் பேச்சுக்களும், செயல்களும் அப்படித்தான் இருந்தன. பிரிவினையை ஒட்டி நடந்த கொடூரமான மதக் கலவரங்கள் அப்போது இன்னும் ரத்த சாட்சியாய் இருந்தன.
எனவே, அந்த சந்தேகத்தைப் போக்கும் வகையில் “இணைப்புப் பத்திரத்தில்” ஒரு முக்கிய மான சரத்து இருந்தது.
அது: “இங்குள்ள அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ள விஷயங்கள் தொடர் பாக இந்த அரசுக்கு இந்திய சட்டமன்றம் சட்டம் செய்யலாம் என்பதை நான் ஏற் கிறேன்”. இது மகாராஜா ஹரிசிங்கின் ஒப்புதல். அங்குள்ள அட்டவணையில் நான்கு விஷயங்கள் குறிப்பிடப்பட்டன. அவை: “1. பாதுகாப்பு, 2. வெளிவிவகாரம், 3. தகவல்தொடர்பு, 4. துணை விஷயங்கள்”. இதன் அர்த்தம் இந்த நான்கு விஷயங்கள் தவிர இதரவை பற்றி ஜம்மு - காஷ்மீர் அரசுதான் சட்டம் செய்யலாம் என்பதாகும். இப்படிப்பட்ட விரிந்த மாநில சுயாட்சியை நிபந்தனையாகக் கொண்டுதான் இந்தியாவோடு இணைய ஒப்புக் கொண் டார் ஹரிசிங்.
suran

இத்தகைய “இணைப்புப் பத்திரத்தை” மறுநாள் ஏற்றுக் கொண்டுதான், அன்றே காஷ்மீருக்குத் தனது படைகளை அனுப்பியது இந்திய அரசு. தலைநகரம் ஸ்ரீநகர் உள்ளிட்ட பெரும்பகுதி காப்பற்றப் பட்டது. 
இதிலிருந்த இந்தச் சரத்தைக் கணக்கில் கொண்டுதான் இந்திய அரசியல் சாசனத்தில் பிரிவு 370 உரு வாக்கப்பட்டது. அதில் “இணைப்புப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் மற்றும் அந்த மாநில அரசின் ஒப்புதலோடான விஷயங்கள்” பற்றி இந்திய அரசு சட்டங்கள் செய்யும் என்று குறிப்பாகச் சுட்டப்பட்டது. 
இந் திய அரசியல் நிர்ணய சபை 1949 அக் டோபரில் இதை ஏற்றது என்பது சுதந்திர இந்தியாவின் அரசியல் நேர்மையை, கொடுத்த வாக் குறுதியைக் காப்பாற்றும் தன் மையை எடுத்துக் காட்டியது.
இணைப்பை பலப்படுத்தியது
உண்மை, பிரிவு 370 பற்றி காங்கிரசின் உயர் மட்டக்குழுவில் கருத்து வேறுபாடுகள் எழுந்தன என்பது. ஒரு மாநிலத் திற்கு இத்தகைய தனி அந்தஸ்து தருவது எனும் போது அப்படி எழுவது இயல்புதானே. ஆனால், அதன் தேவைஒரு மாதிரியாகப் பலராலும் உணரப்பட் டது, ஏற்கப்பட்டது. நேருவைத் தாழ்த்தியும், படேலைத் தூக்கியும் பேசிவருகிறார் கள் பாஜக தலைவர்கள். 
ஆனால் பிரிவு370-ஐ பொறுத்தவரை நேரு மட்டுமல் லாது படேலும் ஆதரித்தார் என்பதே சரித்திரம்.
இது பற்றிய விபரங்களை திரு. ஏ.ஜி. நூரனி “பிரிவு 370 : ஜம்மு - காஷ்மீரின் அரசியல் சாசன வரலாறு” எனும் நூலில் தந்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரில் 1951ல் நடந்த தேர்தலில் ஷேக் அப்துல்லாவின் “தேசிய மாநாடு” கட்சி பெருவெற்றி பெற்றது. 
suran
1952 ஜூலையில் மத்திய அரசோடு ஷேக்ஒப்பந்தத்திற்கு வந்தார், அதன் மூலம் பிரிவு 370 இரு தரப்பாலும் உறுதி செய்யப் பட்டது. இப்படியாக நமது அரசியல் சாசனத்தில் இடம் பெற்றது சரித்திரப் புகழ் பூத்த இந்தப் பிரிவு. இதன் மூலம் அந்த மாநில மக்களுக்குத் தரப்பட்ட விரி வான சுயாட்சிதான் இந்தியாவுடனான அதன் இணைப்பை பலப்படுத்தியது, பிரிவினைவாதிகளின் கரங்களைக் கட்டுப்படுத்தியது.
தீர்த்துக் கட்ட பாஜக ஆசை
இதை உணராமல் அந்தக் காலத்து ஜனசங்கமும் சரி, இந்தக் காலத்து பாஜகவும் சரி இந்தப் பிரிவை எதிர்த்துக் கொண்டே வந்தன. மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசும் அவர்கள் தந்த நிர்ப்பந்தத் திற்குப் பணிந்து போகும் வகையில் இந்தப்பிரிவை அவ்வப்போது நீர்த்துப்போகச் செய்யும் வேலையில் இறங்கியது. திரு. எல்.கே. அத்வானி தனது சுயசரிதையில் இப்படி உற்சாகமாக எழுதியிருக்கிறார்: “அந்த வெறுக்கப்பட்ட அனுமதி பெறும்முறையை அரசு நீக்கியது. ஜம்மு- காஷ்மீரில் இந்தியக் குடியரசின் நிறு வனங்களுக்கு இருந்த பல கட்டுப்பாடு களை அரசு ஒழித்தது.
இப்படியாகத் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தணிக்கையாளரின் அதிகாரம் அந்த மாநி லத்திற்கு நீட்டிக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீரின் ‘பிரதமர்’ என்பதும் ஒழிக்கப்பட்டது. எனினும், ‘தோ விதான்’ - இரண்டு அரசியல் சாசனங்கள் - எனும் சரத்து, 370 பற்றிய நமது கவலை அரைநூற்றாண்டுகள் ஆன பிறகும் இன் னும் தீர்ந்தபாடில்லை”. இதன் அர்த் தம் பிரிவு 370-ஐ தீர்த்துக்கட்ட வேண்டுமென்பது தான் பாஜகவின் தீராத ஆசை என்பது.எத்தகைய சரித்திரப் பின்புலத்தில் இந்தப் பிரிவு உருவானது என்பதை அறியாதது போல நடிக்கப்படுகிறது. 
மகாராஜா ஹரிசிங் தயாரித்த “இணைப்புப் பத் திரத்தை” அந்தக் காலத்திலேயே பாகிஸ்தான் ஏற்கவில்லை.
இந்தியா வுடனான இணைப்பையே அவர்கள் ஏற்கவில்லை. 
இந்த நிலையில் அந்தப் பத்திரத்தின்படி உருவான பிரிவு 370 யும் நீக்கினால் ஜம்மு - காஷ்மீர் நம்மோடு இணைந்ததை மேலும் கேள்விக்குறியாக்குவார்கள் உலக அரங்கில். கூடவே அந்த மாநிலத்தில் உள்ள பிரிவினைவாதிகளை இதைச் சொல்லி மேலும் உசுப்பி விடுவார்கள். அனைத்திற்கும் மேலே, அந்த மாநில மக்களுக்கு இணைப்பின் போது தரப்பட்ட உத்தரவாதத்திற்கு இந்திய அரசு துரோகம் செய்ததாகும். ஆகவேதான் பிரிவு 370 தொடர வேண்டியது காலத்தின் காட்டாயமாக உள்ளது.
suran

உத்தரவாதத்தைப் பறிப்பது தொடரலாம்
ஏற்கனவே நமது நாட்டில் அரசியல்சாசனத்தின்படியான மாநில அதி காரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிச்சுருக்கப்பட்டு வருகின்றன. மாநில அதி காரப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப் பட்டியலுக்கு கொண்டு போகப்பட்டது. இப்படி எத்தனையோ அதிகாரங்களை சகல மாநில அரசுகளும் இழந்துள்ளன. இப்படி மத்திய அரசில் அதிகாரங்களைக் குவிப்பதில் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை.
இந்த நிலையில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு தரப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தையும் ரத்து செய்வது குதிரை கீழே தள்ளியது மட்டமல்லாது குழியும் பறித்த கதை யாகும். இன்று ஜம்மு - காஷ்மீருக்கு அநீதி என்றால், நாளை இன்னொரு மாநிலத்திற்கு இத்தகைய அநீதி - அதற்குத் தரப்பட்ட உத்தரவாதத்தைப் பறிப்பது - நடக்கலாம் என்பதைச் சகல ரும் மனதில் கொள்ள வேண்டும்.
காஷ்மீரில் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி இருப்பதாகவும் மத்திய அரசால் உருவாக்கப்படும் சில நல்ல சட்டங்கள் அந்த மாநிலத்திற்கு பொருந்தாமல் போய்விடுவதாகவும் பாஜகதலைவர்கள் வருத்தப்படுகிறார்கள்! 
சம நீதியையும், நல்ல சட்டங்களையும் கொண்டு வர அந்த மாநில சட்டமன்றத் திற்குச் சகல அதிகாரமும் உள்ளது. அப்படி அவற்றைக் கொண்டுவரக் கோரிப்போராட பாஜகவிற்கு வாய்ப்பு உள்ளது.
அதைப் பயன்படுத்தி அது போராடட்டும், 
அந்த மக்களுக்கு நல்லது செய்யட்டும்.
அதை விடுத்து அவற்றைக் கொண்டு போய் பிரிவு 370தோடு சேர்த்து முடிச்சுப் போட்டு, அதையே ரத்து செய்யக் கோரு வது அர்த்தமற்றது, நியாயமற்றது. தனது இந்துத்துவா நோக்கிலிருந்துதான் இந்தக் குரலை அது எழுப்புகிறதே தவிர இந்திய ஒற்றுமை நோக்கிலிருந்தோ, புத்திசாலித்தனமான அரசியல் நோக்கிலிருந் தோ அல்ல என்பதை அதனது சரித்திரத் தை அறிந்த எவராலும் புரிந்து கொள்ள முடியும்.பிரிவு 370 வரலாறு நமக்குக் கட்டித்தந்துள்ள தேன்கூடு. 
அதைக் கலைக்கப்பார்ப்பது நமக்கு நாமே வேதனையை வரவழைப்பது. இந்திய அரசும், அரசியல் வாதிகளும் அந்தத் தவறைச் செய்யக் கூடாது என்று வலியுறுத்துவோம்.
  -அருணன்.
suran
                                                                                                                                           -                                                                                                                                                      
ஆதாரங்கள்
1. Article 370 of the Constitution of India
2. Article 370: A Constitutional History of Jammu and Kashmir - A.G. Noorani
3. Instrument of Accession
4. Maharaja Hari Singh’s letter to Lord Mountbatten - Dated 26-10-1947
5. My Country My Life - L.K. Advani


========================================================================

suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?