இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 1 பிப்ரவரி, 2016

ஸ்மார்ட் நகரங்கள்: 150 பில்லியன் டாலர்,பேரம்?இந்திய மற்றும் உலக கார்ப்பரேட் கம்பெனிகளிடமிருந்து ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க 150 பில்லியன் டாலர் (15 ஆயிரம் கோடி டாலர்) வரை திரட்ட மோடி அரசு முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசின் செய்தி  தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக ‘டிலைட்’ என்ற கார்ப்பரேட் கம்பெனியின் இந்திய கிளையின் மூத்த இயக்குனர் பி.என்.சுதர்சன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
 'எங்கள் கம்பெனி மேற்கொண்ட ஆய்வின்படி பிரதமர் மோடியின் ஸ்மார்ட் நகரங்களை அமைக்க 150 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 
இதில்120 பில்லியன் டாலர்கள் வரை தனியார் கம்பெனிகள் மற்றும் கார்ப்பரேட்டுகளிடமிருந்து திரட்டப்படுகிறது.
எனவே தனியார் துறையும் கார்ப்பரேட்டுகளும்தான் ஸ்மார்ட் நகரங்கள் அமைப்பதில் முக்கிய பங்களிப்பவர்களாக இருப்பர்.இதில் அமையவிருக்கும் நகரங்களில் இணைய தளம், முகநூல் மற்றும் மொபைல் வலைச்சேவைகள் உள்ளிட்ட சேவைத்துறைகளை அமைப்பதில் கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. 
இவற்றில் ரிலையன்ஸ் மட்டும் அமையவிருக்கும் 50 வைபி எனப்படும் இணையதள சேவைகளை கைப்பற்றியுள்ளது.அதேபோன்று ஏர்டெல் பாரதி மற்றும் வோடபோன் போன்ற கம்பெனிகளுக்கும் இச்சேவைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
இன்னும் 10 லிருந்து 15 ஆண்டுகளுக்குள் இந்த நகரங்கள் முக்கிய தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் மற்றும் சமூக தளங்களிலும் சிறந்து விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு சுதர்சன் கூறினார்.
இதற்கிடையே பேஸ்புக் கம்பெனி பிஎஸ்என்எல்லுடன் இணைந்து கிராமப்புறங்களில் வைபி சேவையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
 இதையும் கார்ப்பரேட்டுகள் பயன்படுத்திக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்தில் மோடி அரசின் திட்டமான 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைப்பதில் முதலில் அமைக்கவிருக்கும் 20 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. 
இந்தப்பட்டியலில் புவனேஸ்வர், புனே, ஜெய்ப்பூர், சூரத், கொச்சி, அகமதாபாத்,ஜபல்பூர், விசாகப்பட்டினம், சோலாப்பூர், தேவநாகரி, இந்தூர், புதுதில்லி, கோவை, சென்னை, காக்கிநாடா, பெலாகாவி, உதய்பூர்,கௌஹாத்தி,லூதியானா மற்றும் போபால் உள்ளிட்ட நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
இது தொடர்பாக நகர வளர்ச்சித் திட்ட நிபுணர்களும் சுற்றுச்சூழலியலாளர்களும் சமூக செயல்பாட்டாளர்களும் அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளனர். 
அந்த அறிக்கையில், ஸ்மார்ட் நகரங்கள் அமைப்பதினால் ஏற்படும் பாதிப்புகளை கூறியுள்ளனர். 
அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"முதலாவது அமையவிருக்கும் ஸ்மார்ட் நகரங்களில் தொடக்கத்திலிருந்தே முதலீடுகள் இந்தியமற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளிடமிருந்து வருவதால் அவையே முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் என்பது திட்டவட்டமாகிறது. 
ஸ்மார்ட் நகரங்கள் அமைப்பதிலிருந்து தொடங்கி நீர்,மின்சாரம் உள்ளிட்ட ஒவ்வொரு அடிப்படை கட்டுமானங்கள் அமைக்கப்படுவது வரையும் இக்கம்பெனிகளே ஆதிக்கம்செலுத்தும்.
அவற்றின் கட்டுப்பாட்டிலேயே அனைத்தும் கொண்டு வரப்படும்.
 கோடிக்கணக்கான கீழ்த்தட்டு நடுத்தர மக்கள், உழைக்கும் மக்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்பதை விட அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்பதே உண்மை.
நடுத்தர வர்க்க மக்களும்நாளடைவில் வெளியேற்றப்படுவார்கள்.
முழுமையாக மேல் தட்டுவர்க்கத்தினரும் மிகப்பெரிய பணக்காரர்களும் மட்டுமே குடியிருக்கும்படியான அதிக கட்டணங்களுடன் மிக வசதியான வாழ்க்கைத் தரத்துடன் அமைக்கப்படும். 
இதில் சாதாரண மக்களுக்கு இடமிருக்காது. 
முழுக்க கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவே இந்த ஸ்மார்ட் நகரங்கள் இருக்கும் என்பது அடிப்படை விதியாக அமையும்."
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

======================================================================================
இன்று,
பிப்ரவரி-01.

 • தமிழ் நாடகத்துறை முன்னோடி பம்மல் சம்பந்த முதலியார் இறந்த தினம்(1964)
 • டென்மார்க்-புரூசியா போர் ஆரம்பமானது(1864)
 • ஆசியாவின் முதலாவது தபால் மெயில் கோச், கண்டியில் ஆரம்பமாகியது(1832)
 • உலகின் மிகப் பெரிய ரயில்நிலையம் நியூயார்க்கில் திறக்கப்பட்டது(1913)

 பம்மல் சம்பந்த முதலியார்
வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல அவதாரங்களில் திளைத்தவர் பம்மல் சம்பந்தம் முதலியார். இவர் நாடகக் கலைக்கு ஆற்றிய தொண்டு என்றும் நினைவில் வைக்கத் தக்கது. நாடக மேடை நடிகர்களைக் கூத்தாடிகள் என்றழைக்கப்பட்ட பழக்கத்தை மாற்றி அவர்களைக் கலைஞர்கள் என்ற சிறப்பான நிலைக்கு உயர்த்தியவர்.
பம்மல் சம்பந்த முதலியார் 1873ம் வருடம் ஃபிப்ரவரி 9ம் தேதி சென்னையில் பிறந்தவர். இவரது பெற்றோர் பம்மல் விஜயரங்க முதலியார், மாணிக்கவேலம்மாள் என்பவர்கள். 
விஜயரங்க முதலியார் முதலில் தமிழ் உபாத்தியாயராகவும், பின்னர் இன்ஸ்பெக்டர் ஆஃப் ஸ்கூல்ஸ் என்ற அரசு உத்தியோகத்திலும் இருந்தவர். அவர் தானே தமிழ் வாசக புத்தகங்கள் பல வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்தம் இப்புத்தகங்களையெல்லாம் ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார். 
அவரது சிறு வயதில் அவரது தாயார் உணவு ஊட்டும்போது, ராமாயணம், பாரதம், பெரிய புராணம் போன்ற இதிகாச புராணங்களிலிருந்து தினமும் ஒரு புதுக் கதையும் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தான் நாடக ஆசிரியன் ஆனதற்கு, இவைகளே காரணம் என்று நினைவு கூறுகிறார் சம்பந்தம் தனது நாடக மேடை நினைவுகள் என்ற புத்தகத்தில்.
மாநிலக்கல்லூரியிலும், பின்னர் சட்டக் கல்லூரியிலும் படித்து பி.ஏ., பி.எல். பட்டங்கள் பெற்றார். சில காலம் வழக்கறிஞராகவும், நீதியரசராகவும் பணியாற்றினார்.
உயர்குடியில் பிறந்தவர்களையும், கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம்.கே.ராதாவின் தந்தை), சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர். நாடகம் என்றால் தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டுமே காண்பவர்கள் என்ற நிலையை மாற்றி, நகரங்களிலே நல்ல மேடையமைத்து, பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார்.
அக்காலத்தில் நடை பெற்ற நாடகங்கள் இரவு பூராவும் நடக்கும், மங்களமாகவே முடியும் என்ற பழக்கத்தை மாற்றி, இன்பமும் துன்பமும் கொண்ட முடிவுகளுடன் நாடகங்கள் படைத்தார். ஆங்கில நாடகங்கள், வடமொழி நாடகங்கள் முதலியவற்றை தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து மேடையேற்றினார். இரவு பூராவும் நடந்த நாடகங்களை மூன்று மணி நேரத்துக்குள் சுருக்கிய பெருமையும் அவரதே.
பெல்லாரி கிருஷ்ணமாச்சார்யலு என்பவரது சரச வினோத சபா நாடகக்குழு சென்னையில் நடத்திய சிரகாரி, மற்ற நாடகங்கள் அவரை வெகுவாகக் கவர்ந்தன. மேலும் இக்குழுவில் வழக்கறிஞர்கள், நல்ல வேலையிலிருந்தவர்கள், படிப்பறிவு மிகுந்தவர்கள் தொழில் முறையிலில்லாமல், பொழுதுபோக்குக்கெனவே நடத்தியது சம்பந்தத்திற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே நண்பர்கள் அறுவருடன் சென்னை ஜார்ஜ்டௌனில், 1891ம் வருடம் ஜூலை ஒன்றாம் தேதி, சுகுண விலாச சபை என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.
அதே சமயம் சென்னைக்கு விஜயம் செய்த பார்சி நாடகக் குழு சம்பந்தத்தை ஈர்த்தது. முக்கியமாக அவர்களது மேடை அமைப்புகள், உடை அலங்காரங்கள், பின்னணிப் படுதா, பக்கத் திரைகள், மேலே தொங்கட்டான்கள், ஜாலர்கள் எல்லோரையும் கவரும் வண்ணம் இருந்தன. அவர்களது நேரம் தவறாமையும் ஒரு காட்சிக்கும் மற்றோர் காட்சிக்கும் இடையே இருந்த இடைவெளியும், அவருக்கு மகிழ்ச்சியளித்தன. தன்னுடைய நாடகங்களிலும் இதே போல் அமைப்புகள் இருக்க வேண்டும் என்றெண்ணியவர், பின்னர் இதை நிறைவேற்றிக் காட்டினார் என்பது குறிப்பிடத் தக்கது.
சுகுணவிலாச சபையின் நாடகங்களில் எல்லாம் சம்பந்தமே ஹீரோ – ரங்கவடிவேலு முதலியார்அவர்கள்தான் ஹீரோயின் – இந்த அமைப்பு 1895லிருந்து 1923ம் வருஷம் வரை தொடர்ந்தது. சம்பந்தம் 529 முறை நாடக மேடையில் தோன்றியிருக்கிறார். 109 வெவ்வேறு நாடகப் பாத்திரங்கள் பூண்டுள்ளார். அவர் எழுதி அச்சிட்டுள்ள நாடகங்களின் தொகை 68 – அவரது அனுமதியுடன் 1891லிருந்து, 1934ம் வருடம் வரை சுகுண விலாச சபையாராலும், நகரிலும், வெளியூர்களிலும் உள்ள மற்ற சபைகளாலும், அவரது நாடகங்கள் 4070 முறை மேடையேறியுள்ளன.
அரசு பதவியிலிருந்து 1928ல் ஓய்வு பெற்ற பிறகு, அடுத்த ஏழு வருஷங்கள் வரை சுகுண விலாச சபையில் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட ஒரு மனக்கசப்பின் காரணமாக சபையின் நடவடிக்கைகளில் தனது ஈடுபாட்டைக் குறைத்துக் கொண்டார். ஆனால் நாடக மேடையில் தோன்றும் அவர் ஆர்வம் சற்றும் குறையவில்லை என்பது, ஐம்பதுகளின் ஆரம்பத்தில் எங்களுடைய நடராஜா அமெச்சூர் குழு (தோட்டக்கார விசுவனாதன் தலைமையில்) சுகுண விலாச சபையில் ஒரு நாடகம் நடத்திய போது, தானே வலிய வந்து தோட்டக்காரன் அண்டை வீட்டுக்காரனாக இரண்டு நிமிடம் மேடையில் தோன்றி வசனம் பேசிய போது எழுந்த கரகோஷம் இன்னமும் எனக்கு நினைவிலுள்ளது.
 1967ம் வருஷம் செப்டம்பர் மாதம் 24ம் தேதி மறைந்தார். அவர் மறைந்தாரே தவிர அவரது நாடகத் தொண்டு இன்னமும் எல்லாருடைய நினைவிலும் பசுமையாகவே உள்ளது.
 94 நாடகங்கள் எழுதியுள்ளார்.
அவற்றுள் முக்கியமானவைகள்: 
 1. மனோஹரா (1895 – சுகுணவிலாச சபையிலும், மற்ற இடங்களிலும் 859 முறை நடிக்கப் பட்டது)
 2. லீலாவதி சுலோசனா – (50 தடவை சபையிலும், மற்ற இடங்களில் 286 முறையும்)
 3. புஷ்பவல்லி (சம்பந்தத்தினுடைய முதல் நாடகம்)]
 4. சுந்தரி – (சுகுண விலாச சபையின் முதல் நாடகம்)
 5. சாரங்கதரன் (198 முறை – மேடையில் முதல் முத்தக் காட்சி!)
 6. கள்வர் தலைவன்
 7. காலவ ரிஷி (1899 – 307 முறை மேடையேறியது)
 8. காதலர் கண்கள் (1902 – 190 முறை மேடையேற்றம்)
 9. விரும்பிய விதமே ( As You Like It தமிழாக்கம்)
 10. வாணீபுர வணிகன் (Merchant of Venice தமிழாக்கம்)
 11. அமலாதித்தன் (Hamlet தமிழாக்கம்)
 12. மகபதி ( Macbeth தமிழாக்கம்)
 13. சிம்ஹலநாதன் (Cymbaline தமிழ் வடிவம்)
 14. பேயல்ல பெண்மணியே (La Somnambula தமிழ் வடிவம்)v
 15. காளப்பன் கள்ளத்தனம்
 16. சாகுந்தலம்
 17. மாளவிகாக்கினிமித்திரம்
 18. விக்ரமோர்வசீயம்
 19. ரத்னாவளி
 20. ம்ருச்சகடிகம்
 21. யயாதி
 22. இரு நண்பர்கள்
 23. சபாபதி
 24. விஜயரங்கம்
 25. சர்ஜன் ஜெனரலின் பிரஸ்கிரிப்ஷன்
 26. சதி சுலோசனா
 27. சுல்தான்பேட்டை சப் அசிஸ்டண்ட் மாஜிஸ்ட்ரேட்
 28. நல்லதங்காள்
 29. ஸ்த்ரீ சாஹசம்
 30. விருப்பும் வெறுப்பும்
திரைப்படமான நாடகங்கள்:
 1. காலவரிஷி (1932)
 2. ரத்னாவளி (1935)
 3. மனோஹரா (1936, 1954)
 4. லீலாவதி சுலோசனா (1936)
 5. சபாபதி (1941)
 6. வேதாள உலகம் (1948)

==================================================================================
கத்திரிக்காய்,

 எல்லா காலங்களிலும், குறைந்த விலையில் கிடைக்கும் காய் கத்திரிக்காய். 
நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்களில் மிகவும் ருசியானது. இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், கால்சியம் இதில் நிறைந்துள்ளது. 
வைட்டமின் அதிகமாக இருப்பதால், நாக்கில் ஏற்படும் அலர்ஜியை போக்கும். வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், மலச்சிக்கல், உடல் பருமன் ஆகியவற்றுக்கு நல்லது. கத்தரிக்காயை பிஞ்சாக சாப்பிடுவதே நல்லது. 

முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால், உடம்பில் அரிப்பு ஏற்படும். 
வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும் ஒன்றாகும். 
வெப்ப மண்டல பகுதிகளில் விளையும் காய் என்பதால், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கத்தரிக்காய் முழுமையாக குறைக்கும். 100 கிராம் கத்தரிக்காயில், 24 சதவிதம் கலோரிகள், 9 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. கருநீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது. 
ஆந்தோசயானின் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்ப்புப் பொருளாகும். கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கும், வளர்சிதை மாற்றத்துக்கும் மிகவும் உகந்தவை. 

தக்காளிக்கு இணையான இக்காய், தக்காளியைப் போலவே புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன உள்ளன. 
பசியின்மையை போக்கி, உடல் சோர்வை குறைக்கும். மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவற்றையும் தடுக்கும். பார்வைத் திறனும் அதிகரிக்கும். 
உடல் சூட்டை அதிகரிக்க செய்யும் காய் என்பதால், மழை காலம், குளிர்காலம் மற்றும் இரவு நேரங்களில் கூட சாப்பிடலாம். உடல் கதகதப்பாக இருக்க கத்தரிக்காய் குழம்பு, பொரியல் நல்லது. கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும்.

 நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக் குறைக்கும். உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயை சாப்பிட கூடாது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணி, புண்கள் ஆற அதிக நாள் ஆகி விடும். 
மற்றவர்கள், மருந்தை போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மை பெறலாம். இக்காய் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து ஜீரணம் ஆகிகிறது; சத்தாக மாறி உடலுக்கு பயன் தரும். 

==========================================================================================