ரூ360 கோடிகள் வீணா?

  முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் .

செந்தில் பாலாஜியிடம் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இன்று முதல் விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

மணிப்பூர் விவகாரத்தில்  மோடி பேச வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று முதல் 2 நாட்கள் தொடர் விவாதம் தொடங்க உள்ளது.

சின்ன சேலம் அருகே புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

"ஆம் ஆத்மியை சேர்ந்த ராகவ் சத்தா எம்.பி. அளித்த தீர்மானத்தில் எனது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது என ராஜ்ய சபா சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளேன். அதில் எனது பெயர் எப்படி சேர்க்கப்பட்டது என தெரியவில்லை. தீர்மானத்தில் நான் கையெழுத்து போடாமலேயே தனது பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால் எனது கையெழுத்தை யாரோ முறைகேடாக போட்டுள்ளனர். இதுகுறித்து புகார் அளித்துள்ளேன்"    -தம்பி துரை .

டான்சி கையெழுத்தை தான் போடவே இல்லை என நீதிமன்றத்திலேயே சொன்னவரின் அடியொற்றிய தொண்டன் நீங்கள்.

------------------------------------------

ரூ360 கோடிகள் வீணா?

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக, மக்களுக்கான சேவை வழங்கும் முதல் நிறுவனமாக ரெயில்வே பார்க்கப்பட்டது.
 சேவைத்துறை என்பதிலிருந்து ரெயில்வே சிறிது சிறிதாக நீக்கப்பட்டு, தனியார் நிறுவனமாக மாறி வருகிறது.
இதற்கிடையே, தென்னக ரெயில்வேயில் தென்மாவட்டங்களுக்கான புதிய பாதைகள் கடந்த 50 வருடங்களில் எதுவும் போடப்படவில்லை.
 மீட்டர்கேஜ் பாதை அனைத்தும் அகலப்பாதையாக மாற்றப்பட்டுள்ளன. 

தென்னக ரெயில்வே மண்டலத்துக்குள் உள்ள கேரள மாநிலத்தில் 3-வது ரெயில் பாதை போடப்பட்டு வரும் நிலையில் சென்னை-கன்னியாகுமரி இடையே 2-வது அகலப்பாதை பணிகள் தற்போது வரை முடிக்கப்படாமல் உள்ளது.

பொதுவாக ரெயில்வே திட்டங்கள் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள், வர்த்தக தேவை மற்றும் பிரதமர் அலுவலகத்தின் சிறப்பு கவனம் பெற்ற திட்டங்கள் என்ற அடிப்படையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 
அதன்படி துறைமுகங்களை இணைக்கும் திட்டத்தின் கீழ் தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட மதுரை-தூத்துக்குடி ரெயில்பாதை திட்டம் கடந்த 2007-08 நிதியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

ரெயில்வே அமைச்சகத்தின் கொள்கை முடிவுப்படி, 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்கு புதிய ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்ற திட்டத்திலும் இந்த ரெயில்பாதை கொண்டு வரப்பட்டது.

காரியாபட்டி, விளாத்திகுளம் பகுதி மக்களின் நலனுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. 

அப்போதைய காலகட்டத்தில் ரூ.601 கோடியே 43 லட்சம் திட்ட மதிப்பீடாக தயாரிக்கப்பட்டது. இதற்கான சர்வே பணிகள் முடிந்து கடந்த 2011-12 நிதியாண்டில் ரூ.143.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 

பின்னர் திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டு ரெயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இந்த திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் வைகோ, கனிமொழி, மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் ஆகியோர் தொடர்ந்து ரெயில்வே வாரியத்துக்கு கடிதம் எழுதி வந்துள்ளனர். 

இதற்கிடையே, ரெயில்வே வாரியம் விரிவான திட்ட மதிப்பீட்டுக்கு முழு ஒப்புதல் தர இருந்த சந்தர்ப்பத்தில் சில அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதல்களால் தென்மாவட்ட மக்களின் கனவுத்திட்டமான மதுரை-தூத்துக்குடி புதிய ரெயில்பாதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவரின் தவறான வழிகாட்டுதலால் தென்னக ரெயில்வே பொது மேலாளர் இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் தென்மாவட்ட மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்துக்காக தற்போது வரை ரூ.360 கோடி செலவிட்ட நிலையில் பாதியில் கைவிடுவதா? என வியாபாரிகள், தொழில் நிறுவனத்தினர், ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரெயில்வே அமைச்சகம் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அனைத்து மண்டல ரெயில்வேக்களுக்கும் சரக்கு போக்குவரத்தில் ஒரு இலக்கை நிர்ணயித்தது. 

அதன்படி, நாடு முழுவதும் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 3 ஆயிரம் மில்லியன் டன் சரக்குகளை ரெயில்வே கையாண்டிருக்க வேண்டும். இந்த இலக்கை அடைவதில் மதுரை திருப்பரங்குன்றம்-தூத்துக்குடி புதிய ரெயில்பாதையில் எத்தனை டன் சரக்குகளை கையாள முடியும் என்று வாரியம் விளக்கம் கேட்டது. 

அதற்கான பதிலை தயாரிக்கும் போதுதான், தென்னக ரெயில்வே இயக்கப்பிரிவு உயரதிகாரி ஒருவரின் தலையீட்டால் இந்த திட்டத்தை தற்காலிகமாக முடக்கும் அளவுக்கு சென்றுள்ளது.

அதாவது, திருப்பரங்குன்றம்-மீளவிட்டான் (தூத்துக்குடி) புதிய ரெயில்பாதை மூலம் சரக்கு போக்குவரத்தில் எதிர்பார்க்கும் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியாது.
 சரக்குகளையும் கையாள முடியாது. 
திட்ட மதிப்பீட்டின் படி 12 சதவீதம் வருமானம் கிடைப்பதற்கான சாத்தியம் இல்லை என எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

 அதனை தொடர்ந்து, இந்த திட்டம் பயணிகளுக்கு பயனளிக்கும் என தென்னக ரெயில்வே கருதினால் அந்த கருத்தை தெரிவித்தால், விரிவான திட்ட மதிப்பீட்டு தொகை அனுமதிக்கப்படும் என ரெயில்வே வாரியம் தரப்பில் பதில் கடிதம் அனுப்பியுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
 இதையடுத்து, வணிக ரீதியாக திட்டத்தை பார்க்காமல், சமூக-பொருளாதார காரணிகள் குறித்து ஆராய்ந்து திட்டத்தை தொடரலாம் என கடந்த 2 மாதங்களுக்கு முன் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

அந்த ஆய்வறிக்கையின் படி, திட்டத்தை தொடரலாம் என தென்னக ரெயில்வே பொதுமேலாளர் உயரதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 

ஆனால், வேண்டுமென்றே இந்த திட்டத்தை குறிப்பிட்ட அதிகாரி முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆய்வறிக்கை முடிவை ஏற்காமல் திட்டத்தை நிறுத்துவதற்கு பொதுமேலாளரிடம் ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

எந்த அடிப்படையில் திட்டத்தை முடக்குவதற்கு அந்த அதிகாரி பொதுமேலாளருக்கு நெருக்கடி கொடுத்தார் என்பது ரெயில்வே வட்டாரத்தில் புரியாத புதிராக உள்ளது .

 ரெயில்வே வாரியம் ஒப்புதல் கொடுக்க தயாராக உள்ள ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட 360 கோடிகள் மக்கள் பணத்தை வீணாக்கி, பணியை முடக்குவது எந்த வகையிலும் ஏற்புடையதில்லை.
------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?