தங்கத் தேர் உலா
மிகவும் பழமையானது,புகழ்பெற்றது தூத்துக்குடி பனிமயமாதா கோவில்.
அக்கோவிலில் ஆண்டுதோறும் விழா நடைபெறுவதும் தேர் உலாவும் மிக கொண்டாட்டமானது தூத்துக்குடி,அதன்சுற்றுப்பகுதி மக்களுக்கு.அதில் சில ஆண்டுகள் இடைவெளியில் நடைபெறும் தங்கத்தூர் உலாவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.
தற்போது கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16-வது முறையாக தங்கத்தேர் திருவிழா நடைபெறுகிறது.
441வது திருவிழாவான இந்த ஆண்டு,
தங்கத்தேர் திருவிழாவானது குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிகளில் மட்டுமே நடைபெறுவதால், மிக கோலாகலமாக நடைபெறும்.
இந்த தங்கத்தேர் திருவிழாவில் கலந்துகொள்ள நாட்டின் பல பகுதிகளான இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். மேலும் தொழில் மற்றும் பணி நிமித்தமாக சென்னை மற்றும் நாட்டின் பலபகுதிகளில் குடியேறியுள்ள தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட கடலோர மீனவ மக்கள் ஏராளமானோர் இந்த பனிமய மாதா திருவிழாவில் கலந்து கொள்கின்றனர்.
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த தேவாலயம் போர்த்துக்கீசியர்களால் கட்டப்பட்டது.
இது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இங்கு 11 நாட்களுக்கு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆலயத்தில் சாதி, மத பாகுபாடின்றி அனைவரும் கொண்டாடும் திருவிழாவாக கருதப்படுகிறது.
இந்த திருவிழா ஜூலை 26ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தங்கத் தேரானது, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் இந்திய கலை மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தங்கத்தேரின் உயரம் 53 அடிகளைக் கொண்டுள்ளது.
இந்த தங்கதேரில் 12 கோத்திரங்களைக் குறிக்கும் வகையில் 12 தூண்களைக் கொண்ட தேரில் பனிமய மாதா மாற்கு, லூக்கா, மத்தேயு, யோவான் ஆகிய சுவிஷேகர்கள், ராஜாக்கள், பெண்தேவதைகள் மற்றும் சம்மனசுக்கள் ஆகியோரை சேர்த்து மொத்தம் 53 சொரூபங்கள் இடம் பெற்றுள்ளன.
இவைகள் ஜெபமாலையில் உள்ள 53 மணிகளை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேரிலுள்ள ஆறு சக்கரங்கள் ஆண்டவரின் 6 கட்டளைகளை குறிக்கும் வகையில் அமைந்துள்ளன. செயற்கை வைரக்கற்கள், வண்ணக் கண்ணாடிகள், பாசிமணிகள், வெல்வெட் துணி ஆகியவற்றோடு ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட காகிதங்களைக் கொண்டு தங்கத்தேர் உருவாக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த தேரை தாங்கி நிற்கும் 12தூண்களிலும் இரண்டரை கிலோ எடை கொண்ட அமெரிக்காவில் இருந்து 9,000 வைரக்கற்கள் ஒட்டப்பட்டிருப்பது தங்கத்தேரை மேலும் ஜொலிக்க வைக்க உள்ளது.
முதல் முறையாக 2.2.1806-ல் தூய பனிமய மாதா சொரூபம் தூத்துக்குடிக்கு வந்ததனை அடுத்து, 250-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது.
இரண்டாவது முறையாக 1872ம் ஆண்டிலும்,
மூன்றாம் முறையாக 1879ஆம் ஆண்டிலும்,
நான்காம் முறையாக 1895ஆம் ஆண்டிலும்,
ஐந்தாம் முறையாக 1905ஆம் ஆண்டிலும்,
ஆறாம் முறையாக 1908ஆம் ஆண்டிலும்,
ஏழாம் முறையாக 1926ஆம் ஆண்டிலும்,
எட்டாம் முறையாக 1947ஆம் ஆண்டிலும்,
ஒன்பதாம் முறையாக 1955 ஆண்டிலும்,
பத்தாம் முறையாக 1964ஆம் ஆண்டிலும்,
பதினென்றாம் முறையாக 1977ஆம் ஆண்டிலும்,
பன்னிரெண்டு முறையாக 1982ஆம் ஆண்டிலும், பதின்மூன்றாம் முறையாக 2000ஆம் ஆண்டிலும், பதினான்காம் முறையாக 2007ஆம் ஆண்டிலும், பதினைந்தாம் முறையாக 2013-ம் ஆண்டு பனிமய மாதா பெயரில் புதிய ஆலயம் கட்டப்பட்டதன் 300-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது.
பதினாறாம் முறையாக இந்த ஆண்டு கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16-வது முறையாக தங்கத்தேர் திருவிழா நடைபெறுகிறது.
இந்த ஆண்டு தங்கத்தேர் பவனிக்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்ப்பறையிலிருந்து தேர்பீடம் எடுத்து வரப்பட்டு ஜூன் 9-ஆம் தேதி மாதா சொரூபத்துக்கு தங்க முலாம் பூசுவதற்காக சிறப்பு திருப்பலி, வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் இந்தப் பணி முடிந்து திருச்சொரூபம் வைக்கப்பட்டு ஜூன் 11ஆம் தேதி அன்று போப்பாண்டவரின் இந்திய பிரதிநிதி லெயோபோல்தோ ஜிரெல்லி தங்க முலாம் பூசும் பணியை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து திருவிழாவானது, கடந்த 26ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.
தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது. இளையோர், முதியோர், ஆதரவற்றோர், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மீனவர்கள், கப்பல் மாலுமிகள், உப்பு தொழிலாளர்கள், பனைத் தொழிலாளர்கள், வணிகர்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கான சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு 16வது தங்கத்தேர் திருவிழா என்பதால், விழாவில் தினமும் ஒரு பிஷப் பங்கேற்கின்றனர்.
10-ம் நாள் கோவா உயர்மறைமாவட்ட பேராயர் கர்தினால் பிலிப் நேரி, 11-ம் நாள் கோவை பிஷப் தாமஸ் ஆக்குவினாஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 6மணிக்கு தமிழகத்தில் உள்ள பேராயர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு திருப்பலியும், அதைத்தொடர்ந்து காலை 8மணிக்கு அன்னையின் தங்கத்தேர் பவனியும் நடைபெற இருக்கிறது.