அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் !
மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் Hydroxychloroquine – ஹைட்ராக்சி குளோரோகுயின் என்ற மருந்தை கொரோனா சிகிச்சைக்கு உலகின் பல நாடுகள் கையாள்கின்றன. இது, பலன் அளிக்கிறது என்பதற்கான அறிவியல்பூர்வமான முடிவுகள் இல்லை. இருந்தாலும், ’கிடைக்கும் மருந்துகளில் ஓரளவுக்கு பயன் தரக்கூடியது’ என்ற அடிப்படையில், இந்த மருந்தை பயன்படுத்தி வருகிறது அமெரிக்கா.
இந்த Hydroxychloroquine – ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய அமெரிக்கா ஆர்டர் கொடுத்திருந்த நிலையில், கடந்த மார்ச் 25-ம் தேதி அனைத்துவிதமான மருந்துப் பொருட்கள் ஏற்றுமதிக்கும் இந்தியா தடை விதித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மோடியுடன் பேசி, தாங்கள் ஆர்டர் கொடுத்திருந்த மருந்தை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாக ஆரம்ப கட்ட செய்திகள் வந்தன. ஆனால், இப்போது ட்ரம்ப் அப்பட்டமாக இந்தியாவை மிரட்டியிருக்கிறார்.
ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை விடுவிக்கவில்லை எனில், நிச்சயமாக இந்தியாவுக்கு உரிய பதிலடி இருக்கும்” என்று மிரட்டியிருக்கிறார். நமது 56 இஞ்ச் இப்போது என்ன செய்யப் போகிறார்?
“உனக்கு குடுத்துட்டு, நாளைக்கு எங்க நாட்டுல பிரச்னைன்னா மருந்துக்கு எங்கே போறது? அதெல்லாம் தர முடியாது” என்று சொல்லப் போகிறாரா, அல்லது ‘அனுப்பி வைன்னா அனுப்பிடப் போறேன். அதுக்கு ஏன் இப்படி மிரட்டி, வேஸ்ட்டா எனர்ஜியை வீண் பண்றீங்க என் தெய்வமே..’ என்று கமுக்கமாக மருந்துகளை அனுப்பிவிட்டு, ‘பரஸ்பர நல்லெண்ண அடிப்படையில் அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளை அனுப்பி வைத்தோம்’ என்று சொல்லப் போகிறாரா தெரியவில்லை.
ஏற்கெனவே, அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை அனுப்பி வைப்பதற்கு உரிய வழிகாட்டுதல்கள் வரத் தொடங்கிவிட்டதாக Livemint பத்திரிகையின் இணையச் செய்தி தெரிவிக்கிறது. அதிகாரப்பூர்வமாக இன்னும் வரவில்லை.
இந்தியாவுக்கு உரிய அளவில் கையிருப்பு இருக்கும்பட்சத்தில் இந்த மருந்தை அனுப்பி வைப்பதில் தவறேதும் இல்லை. நமக்கு நாளை, வேறு ஏதேனும் ஒரு மருந்துப் பொருள் தேவையெனில், அமெரிக்காவிடமோ, வேறு எந்த நாட்டிடமோ கேட்கத்தான் வேண்டியிருக்கும். இப்போதே வெண்டிலேட்டர்ஸ் போன்ற உபகரணங்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.
உலகின் அனைத்து நாடுகளும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தாராள மனதுடன் ஒருவருக்கு ஒருவர் அள்ளிக்கொடுக்க முடியாது என்றாலும் இடர்காலத்தில் கொடுத்து உதவுவது அவசியம்தான்.
ஆனால், இப்போது கேள்வி அமெரிக்காவின் அணுகுமுறை குறித்தது. இப்போது உலகிலேயே அதிக கொரோனா பாதித்தவர்கள் இருப்பது அமெரிக்காவில். மரண எண்ணிக்கையில் அந்நாடு மிக விரைவில் உச்சம் தொடும் அபாயமும் இருக்கிறது. இப்படி ஒரு இக்கட்டில் இருக்கும்போது, ‘நான் கேட்டதை குடுக்கலன்னா, விளைவுகள் மோசமாக இருக்கும்’ என்று மிரட்டுகிறது. இது, டொனால்ட் ட்ரம்ப் என்ற தனிப்பட்ட நபரின் அணுகுமுறை அல்ல. இதுதான் அமெரிக்கா.
இந்த திமிருக்கு அடிபணிந்து போகவில்லை எனில், மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை தடுத்து நிறுத்துவார்கள். ஈரானுக்கும், வெனிசூலாவுக்கும், கியூபாவுக்கும் இன்று என்ன நடக்கிறதோ, அது நாளை இந்தியாவுக்கும் நடக்கும்.
ஆனால், நாம் கவலைப்படத் தேவையில்லை. கண்டிப்பாக மோடி இந்தியாவை அப்படிப்பட்ட நிலைக்கு கொண்டுசெல்ல மாட்டார். அடிபணிவார்; ட்ரம்ப் கேட்டதை அனுப்பி வைத்து தன் விசுவாசத்தை பறைசாற்றுவார். சப்இன்ஸ்பெக்டர் சவுண்ட் விடுறது எல்லாம் உள்ளூர் ஸ்டேஷன்லதான். ஐ.ஜி.கிட்ட உதார் விட்டா தூக்கிப்போட்டு மிதிப்பானா இல்லையா? அந்த பயம் வந்து போகும்ல…
குறிப்பு: நமது நம்பிக்கையை மோடி ஏமாற்றவில்லை. இந்தப் பதிவு எழுதப்பட்டு அரை மணி நேரத்தில் வந்திருக்கும் செய்தி, ஏற்றுமதிக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
------------------------------------------------
இந்தியாவில் வரும் புதன்கிழமை முதல் ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் என்று அழைக்கப்படும் அதிவிரைவு பரிசோதனை பயன்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் இந்த சோதனை எப்படி மேற்கொள்ளப்படும் என்பது குறித்தும், தற்போது மேற்கொள்ளபடும் பிசிஆர் பரிசோதனைக்கும் இதற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பது குறித்தும் இப்போது பார்ப்போம்.இந்தியா முழுவதும் வெளிநாடுகளில் இருந்த வந்த 15லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் பல ஆயிரம் பேருக்கு கொரோன அறிகுறி உள்ளது. இவர்களை விரைவாக சோதிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
ஆனால் தற்போது இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனை முறையில் முடிவுகள் தெரிய 2 முதல் 3 மணி நேரம் ஆகிறது. எனவே கொரோனா வைரஸ் பரிசோதனை என்பத நாடு முழுவதும் மிக குறைவாகவே செய்யப்படுகிறது. சரியான புள்ளி விவரங்கள் என்பது இதுவரை அரசால் வெளியிடப்படவில்லை. எனினும் ஒவ்வொரு மாநிலங்களும் எத்தனை பேரை பரிசோதிக்கிறோம் என்பதை வெளியிட்டுள்ளன.
உதாரணமாக தமிழகத்தில் இதுவரை 5000 பேருக்கு கொரோனா வைரஸ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இனி வரும் நாட்களில் கொரோனா வைரஸ் பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஆகும். அப்போது தான் ஊரடங்கின் நோக்கமே நிறைவேறும். எனவே மத்திய அரசு விரைவாக கொரோனா வைரஸ பரிசோதனையை அறிவதற்காக ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கருவியை இறக்குதி செய்துள்ளது. இந்த கருவியை வரும் புதன்கிழமை முதல் பயன்படுத்த .
உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட்க்கு தற்போது மேற்கொள்ளப்படும் ஸ்வாப் டெஸ்க்கும் என்ன வித்தியாசம் என்பதையும் இரண்டும் எப்படி மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதைய நிலையில் எது சிறந்தது என்பதையும் இப்போது பார்ப்போம்-. தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டுபிடிக்க `ஸ்வாப் டெஸ்ட்' என்ற பரிசோதனையை பய்ன்படுத்துகிறார்கள் . இந்த சோதனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதிகளில் சுரக்கப்படும் நீர், ஸ்வாப் பரிசோதனைக்காக எடுக்கப்படுகிறது. அத்துடன், மூக்கு மற்றும் தொண்டைப் பகுதிக்கு இடையில் (Nasopharayngeal Swab) உள்ள மாதிரியும் பரிசோதனைக்காக எடுக்கப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்பட்ட மாதிரிகள் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (Polymerase Chain Reaction- PCR) பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
இந்த பிசிஆர் சோதனையின் சிறப்பு அம்சம் என்னவென்றால் சோதிக்கப்பட்ட நோயாளியின் மாதிரியில் ஒரு வைரஸ் இருந்தால்கூட, அதன் தன்மையை அறியச்செய்ய முடியும். வைரஸின் நோய் தொற்றிய ஆரம்ப காலத்திலேயே (Incubation period), அதாவது அறிகுறிகளற்ற முதல் 14 நாள்களிலேயே இந்த நோய்த்தொற்று ஒருவருக்கு உள்ளதா இல்லையா என்பதை அறிய முடியும். இந்த பரிசோதனை முடிவுகள் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் கிடைத்துவிடும். எனவே நோய் ஒருவருக்கு உள்ளதா இல்லையா என்பதை முழுமையாக அறிய பிசிஆர் பரிசோதனை சிறந்ததாக பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த பிசிஆர் சோதனையை முறையைவிடவும் அதிவிரைவாக சோதிப்பதற்காக ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் முறையை இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இதற்கான ஒரு லட்சம் கிட்டுகள் தமிழகத்திற்கு மட்டும் வந்துள்ளது. இந்த கையடக் கருவியில் மிக எளிதாக அதிவிரைவாக ஒருவருக்கு கொரோனா இருப்பதை கண்டுபிடித்துவிட முடியும்.
கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவலை கண்டுபிடிக்கவும் இப்போது ரேபிட் டெஸ்ட் எனப்படும் பயன்படுத்தப்படுகிறது. இந்த சோதனையின் மூலம் பல்லாயிரம் பேருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை சில நிமிடங்களில் அறிய முடியும்.
இந்த சோதனையை செய்ய மருத்துவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் போது அந்த வைரஸின் Antigenஐ எதிர்க்க, அவர் உடலில் எதிர்ப்புரதம் (Antibody) உருவாகும். அதாவது IgM, IgG என்ற ஆன்டிபாடீஸ் உருவாகும். ரேபிட் பரிசோதனை கருவியில் அந்த இரு ஆன்டிபாடிகளைக் கண்டுபிடிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தப் பரிசோதனைக்கு நோயாளியின் ரத்தம், பிளாஸ்மா மற்றும் சீரம் ஆகியன மாதிரியாகப் பயன்படுத்தப்படுகின்றது. .அந்த மாதிரிகளில் IgM, IgG ஆன்டிபாடீஸ் இருப்பின், அந்த பரிசோதனைப் கருவியில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறம் மாறும். இந்த நிறப் பகுப்பியல் சோதனை மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.
ஒரு பரிசோதனை அட்டையின் விலை 50 ரூபாய்தான். பரிசோதனை முடிவுகளை உடனே தெரிந்துகொள்ள முடியும். காலதாமதம் ஏற்படாது. நிறைய மக்களுக்கு குறைந்த நேரத்தில் பரிசோதனை செய்துவிடலாம். அறிகுறி உள்ளவர், இல்லாதவர்கள், தொற்று உள்ளவர்கள் என அனைவருக்கும் இந்தப் பரிசோதனையைச் செய்ய முடியும். ஆனால் PCR பரிசோதனையை ஒப்பிடும் போது இந்த அதிவிரைவு பரிசோதனையின் நம்பகத்தன்மை குறைவு. ஏனெனில் ஒருவருக்கு வைரஸை எதிர்க்கும் ஆன்டிபாடி இருந்தால் மட்டுமே பாசிட்டிவ் என்று வரும். ஆனால் ஒருவருக்கு கொரோனா த் தொற்று இருந்தும் ஆன்டிபாடி உருவாகும் காலத்துக்கு முன்பே பரிசோதனை செய்தால், பரிசோதனை நெகட்டிவ்வாகத்தான் இருக்கும். எனினும் தற்போதைய சூழலில் அதிகம் பேருக்கு சோதனை செய்ய வேண்டியதிருப்பதால் ரேபிட் டெஸ்ட் நிச்சயம் அவசியமான ஒன்று ஆகும்.
-------------------------------------------------
கொள்ளையடிக்கிறது அமெரிக்கா?
கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் இந்தச் சூழலில் சர்வதேச பதற்றமும் பெருமளவில் அதிகரித்துள்ளது. உலக அளவில் வைரஸ் தொற்று அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும் அடுத்தடுத்த இடங்களில் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் போதிய மருத்துவப் படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்புப் பொருள்கள் இல்லாமலும் வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமலும் அரசுகள் திணறி வருகின்றன.
அதிலும் குறிப்பாக முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவிலும் மருந்துகளுக்கும் பாதுகாப்புக் கவசங்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, தங்கள் பகை அனைத்தையும் மறந்து ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிடமும் இந்தியா, தென்கொரியா போன்ற நட்பு நாடுகளிடமும் உதவி கேட்டு வருகிறார் அதிபர் ட்ரம்ப். கொரோனாவிலிருந்து மீண்டுவிட்ட சீனா தற்போது அதிகளவில் முகமூடிகள், வென்டிலேட்டர்கள், பாதுகாப்பு உடைகள் போன்ற அனைத்து மருத்துவ உபகரணங்களையும் தயாரித்துப் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.
அப்படி சீனாவிடம் 2 லட்சம் மாஸ்க்குகள் ஆர்டர் செய்துள்ளது ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள். இதை அறிந்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கொடுத்த பணத்தைவிட அதிகளவு பணம் கொடுத்து அந்த மாஸ்க்குகளைப் பறிமுதல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
``சீனா தயாரித்த மாஸ்க்குகள் தாய்லாந்து வழியாக ஜெர்மனி வரவிருந்தன. இதை அறிந்த அமெரிக்கா, விமானம் தாய்லாந்தில் தரையிறங்கியதும் அனைத்து மாஸ்க்குகளையும் அதிக விலைகொடுத்து வாங்கியது.
அதனால் தாய்லாந்திலிருந்து ஜெர்மனி செல்லவேண்டிய விமானம் அங்கிருந்து அமெரிக்காவுக்குப் பறந்தது. இதை நவீன திருட்டு, கடல் கொள்ளையாகவே நாங்கள் கருதுகிறோம். அமெரிக்காவின் நட்பு நாடான எங்களிடமே அவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள். உலகளாவிய நெருக்கடிக் காலத்தில்கூட இத்தகைய நடவடிக்கை மூலம் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது" என ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கீசல் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேபோல் பாரிஸ் பிராந்தியத் தலைவர் வலேரி பெக்ரெஸ் கூறியுள்ள குற்றச்சாட்டில், `நாங்கள் ஆர்டர் கொடுத்துள்ள முகமூடிகளுக்குப் பாதி விலை கொடுத்து வாங்குகிறோம். நாங்கள் வாங்கும் பொருள்கள் தரமாக இருக்க வேண்டும் அதனால் பொருளைக் கண்ணில் பார்த்துவிட்டு மீது பணத்தைக் கொடுக்கிறோம். ஆனால் அமெரிக்கா, நாங்கள் ஆர்டர் கொடுத்திருந்த மாஸ்க்குகளைப் பார்க்காமல் மொத்த விலை கொடுத்து ஒரே நேரத்தில் வாங்கிவிட்டது. உலகின் துயருக்குப் பின்னாலும் அமெரிக்கா லாபம் பார்க்க நினைக்கிறது’ எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
-------------------------------------------------
கோவிட் – 19
குளோரோகுயின் முறியடிக்குமா.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 எனும் கொரோனா வைரஸ் கிருமிக்கு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சூழலில் மலேரியா, எய்ட்ஸ், எபோலா உள்ளிட்ட கொள்ளை நோய்களுக்கு ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வரும் மருந்துகளை கோவிட்-19-க்கு பயன்படுத்த பரிசோதனை முயற்சிகளை உலக சுகாதார நிறுவனம் முடுக்கியிருக்கிறது. ஆனால் இதுவரையில் எந்த மருந்தினையும் பரிந்துரைக்கவில்லை.
இந்நிலையில், மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எனும் மருந்தை நோய்த் தொற்று ஆபத்து அதிகம் இருக்கும் நபர்களுக்கு தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரைத்திருக்கிறது. அதாவது நோய்க் கிருமிக்கு ஆளானவர்களை பராமரிக்கும் நலப் பணியாளர்களுக்கும், நோய்த் தொற்று உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு மட்டும் பரிந்துரைக்கலாம் என்று அதன் இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். இதற்கிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது டிவிட் ஒன்றில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அஜித்ரோமைசின் இரண்டையும் பயன்படுத்தினால் கோவிட்-19-ஐ முறியடிக்க இயலும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கட்டுக்கடங்காத கொரோனா தக்குதலால் பீதியடைந்திருக்கும் நகர்ப்புற நடுத்தர மக்கள் ஹைட்ராக்ஸி குளோரோகுயினுடன் மற்றொரு மலேரியா தொற்று எதிர்ப்பு மருந்தான குளோரோகுயின் என்ற மருந்தையும் வாங்கிக் குவிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த மருந்துகள் கோவிட்-19 வைரஸ் தாக்குதலை முறியடிக்கும் என்று எந்தவித மருத்துவ சான்றுமில்லை. ஆயினும் பெரும்பாலான மருந்துக்கடைகளில் இந்த மருந்துகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
இதனால் மலேரியா நோய்வாய்பட்டவர்களுக்கும் இந்த மருந்து கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மலேரியா நோயாளிகளின் நிலையும் ஆபத்தாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இதை தவறாக பயன்படுத்துவதன் மூலம் மலேரியா கிருமிக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக வாய்ப்பிருக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்ல கராச்சியில் உள்ள மருந்தகங்களிலும் குளோரோகுயின் மருந்துகள் காலியாகிவிட்டதாக The Dawn பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மருந்தினை பதுக்கவும், ஏற்றுமதி செய்யவும் இங்கிலாந்து தடை செய்திருக்கிறது.
1934-ல் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா எதிர்ப்பு மருந்தான குளோரோகுயின் உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் உள்ள ஒன்றாகும். கடுமையான சுவாச நோயை ஏற்படுத்தும் கொரோனா வகை வைரஸ் (SARS CoV) பரவுவதைத் தடுப்பதில் குளோரோகுயின் பயனுள்ளதாக இருப்பதாக 2003-ம் ஆண்டு லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரை தெரிவித்துள்ளது.
இந்த மருந்தினை கல்லீரல் அழற்சி, வெறி நாய்க்கடி, சிக்குன்குனியா, எபோலா வைரஸ் நோய், இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பி, மற்றும் டெங்கு வைரஸ் தொற்று போன்றவற்றை கட்டுப்படுத்தவும் ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்டது. இந்த வைரசைக் கட்டுப்படுத்த உயிரணுக்குள் (Cell) அதிகபடியான மருந்தினை செலுத்த வேண்டியிருக்கிறது என்பதுதான் இந்த ஆய்வுகளில் எழுந்த ஒரு சிக்கல். விளைவு – அதிக மருந்து கொடுக்க வேண்டிய அவசியம் இருப்பதும், அதனால் உடலில் அதிக நச்சு சேர்வதும்தான்.
இந்த மருந்து இதயம், கண்பார்வை சிக்கல்களை ஏற்படுத்துவதுடன் இரத்த அணுக்களின் என்ணிக்கையை குறைக்கிறது. தசை வலிமையை குறைத்தல், மனசோர்வு மற்றும் தற்கொலை எண்ணத்தை ஏற்படுத்துகிறது என்றும் ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன. சமீபத்தில் நைஜீரியாவில் குளோரோகுயின் உட்கொண்ட மூவர் அதன் நச்சுத்தன்மையினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கோவிட்-19 சிகிச்சைக்காக 26 பேர்களிடம் நடத்தப்பட்ட சோதனைகளில் ஆறு பேர்களுக்கு இந்த மருந்துகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக ஜேசன் போக் (Jason Pogue) எனும் தொற்றுநோய் நிபுணர் கூறியிருக்கிறார்.
கொரோனா போன்ற ஒரு கொள்ளைநோய் பரவும் சூழலில், அதற்கான மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், மருந்து நிறுவனங்களைக் கண்காணிப்பது, முக்கியமான மருந்துகளை அதிக அளவில் உற்பத்தி செய்வது, மருத்துவர் குறிப்பு இல்லாமல் முக்கிய மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்துவது ஆகியவை அனைத்துமே ஒரு அரசின் கடமையாகும். மக்களுக்கான அரசாக இருந்தால் அதனைத் தானாக முன் வந்து செய்திருக்கும். உலகம் முழுவதும் கார்ப்பரேட்டுகளுக்கான அரசுகள் நடந்து கொண்டிருக்கும் போது இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?
---------------------------8---------------------------