மான் கி பாத் மன்னிப்பும்

மோடியும் ,கொரோனா ஒழிப்பு நடவடிக்கையும்.
டிசம்பர் - 31, 2019 : வூஹான் நகரில், காரணம் தெரியாத நிமோனியாவால் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டு மக்கள் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள் என சீனாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சீன அரசு தகவல் தருகிறது.
ஜனவரி 01., 2020 : முதலில் கண்டறியப்பட்ட நிமோனியா நோயாளிகள் சென்றுவந்த ஹுனான் கடல் உணவு "மொத்த அங்காடி" கிருமி நீக்கத்திற்காக மூடப்படுகிறது.
ஜனவரி 02 : உலக சுகாதார நிறுவனத்தின் நோய் பற்றிய தகவல்களை சேகரிக்கும் கட்டமைப்பு (incident management system) செயல்பட ஆரம்பிக்கிறது. இந்த அமைப்பு உலக நாடுகளுக்கு உடனடியாக நோய் பற்றிய தகவலை கொண்டு சேர்க்கும்.
31 டிசம்பர் முதல் ஜனவரி 3 வரை காரணம் தெரியாத நோயினால்புதிதாக பாதிக்கப்பட்ட 44 பேர் சீனாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த புதிய வைரஸ் ஏற்கனவே வந்துபோகின்ற சார்ஸ் அல்லது மெர்ஸ் வைரஸ் அல்ல என்று உடனடியாக உறுதி செய்யப்படுகிறது.
வைரஸ் பற்றிய மரபணு மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் "ஆழமாக சேகரிக்கும்" (deep sequencing) தொழில்நுட்பம் இப்போது உலகத்திடம் உள்ளதால் உடனைடியாக ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன.


ஜனவரி 07 : புதியவகை கொரோனா வைரஸ் (novel) தான் இந்த புதிய நியூமோனியா தொற்றுநோய்க்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்படுகிறது. முழு மரபணு வரிசை (whole sequencing) கிடைத்தால்தான் சோதனை செய்யஉதவும் முறை/கருவிகள் கண்டுபிடிக்கமுடியும்.
ஜனவரி 12 : புதிய வைரஸின் மரபணு வரிசை வெளியிடபப்டுகிறது. ஆரம்ப கட்டத்தில், நோயறிதல் மற்றும் நோய்க்கான சிகிச்சை நெறிமுறைகள், கண்காணிப்பு, தொற்றுநோயியல் விசாரணை (epidemiological investigation), நெருங்கிய தொடர்புகளை கண்டறிதல் (contact tracing) மற்றும் நோய் கண்டறியும் சோதனை (testing methodology) ஆகியவை உருவாக்கப்படுகிறது.
ஜனவரி13 : தாய்லாந்து நாடு முதல் கொரோனா நோயாளி உறுதிசெய்யப்பட்டதாக அறிவிக்கிறது. அந்த நோயாளி வுஹான் நகரில் இருந்து வந்தவர். சீனாவிற்கு வெளியே அறியப்பட்ட முதல் நோயாளி
ஜனவரி 20 : அமெரிக்காவின் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்படுகிறார். இவர் வாஷிங்டன் நகரத்தை சேர்ந்தவர், வுஹான் சென்று தன்னுடைய குடும்பத்தினரை சந்தித்து திரும்பி வந்தவர்.
கோவிட்19, B வகை தொற்று என அறிவிக்கப்பட்டு, மாகாண எல்லை, நாட்டு எல்லைகளில் தனிமைப்படுத்தும் பணிகள் துவங்குகின்றன. வனவிலங்கு அங்காடிகளை நாடு முழுவதும் மூடுவதற்கு சீன அரசாங்கம் உத்தரவிடுகிறது. சர்வேதேச கண்காணிப்பு அனைத்து நாடுகளிலும் தொடங்குகிறது.


ஜனவரி 23-25 : உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் தலைமையில் அவசரக் கூட்டம் கூட்டப்படுகிறது. கொரோனா தொற்றை சர்வதேச சமூகம் கவனப்படுத்த வேண்டிய நோயாக அறிவிக்க வேண்டுமா என்று விவாதிக்கிறது. கொரோனா தொற்றை தொடர்ந்து கண்காணிக்குமாறு அனைத்து நாடுகளும் அறிவுறுத்தப்படுகின்றன.
ஜனவரி 23 : சீனாவில் பல்வேறு முன்னெடுப்புகள் அறிவிக்கப்படுகின்றன. பொது மக்கள் ஒன்றாக கூடுவது தடை செய்யப்படுகிறது. தொற்று நோயயை கையாள பல்வேறு நெறிமுறைகளை சீன அரசு அறிவிக்கிறது.
ஜனவரி 24: ஐரோப்பியாவின் முதல் கொரோனா நோயாளி பிரான்ஸ் நாட்டில் கண்டறியப்படுகிறார். சீனாவிற்கு வெளியே நோய் பரவல் அதிகமாக ஆரம்பிக்கிறது
ஜனவரி 30 : உலக சுகாதார நிறுவனம் கோவிட் 19 நோயை சர்வதேச கவனத்தைக் கோரும் தொற்றாக (Public Health Emergency of International Concern) அறிவிக்கிறது


ஜனவரி 31 : இந்தியாவின் முதல் கோவிட்19 நோயாளி கண்டறியப்படுகிறார்.
பிப்ரவரி 11 : வைரஸிற்கும் நோய்க்கும் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. வைரஸ் Sars Cov 2 என்றும் அதனால் ஏற்படும் நோய் கோவிட் 19 என்றும் அறியப்படும்.
உலகம் முழுவதிலும் தொற்றை கண்காணிக்கவும், சிகிச்சை முறைகளை மேம்படுத்தவும், அறிகுறிகளை கொண்டு நோயாளிகளை கண்டறியவும், பல்வேறு நெறிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன.
பிப்ரவரி 28 : ஆப்பிரிக்கா கண்டத்தின் முதல் கோவிட் நோயாளி கண்டறியப்படுகிறார்
மார்ச் 11 : கொரோனா தொற்றால் ஏற்படும் கோவிட்19 நோயை உலக கொள்ளைநோயாக (Global Pandemic) அறிவிக்கிறது உலக சுகாதார நிறுவனம்.


இப்படி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருந்தனர். ஜனவரி 31ம் தேதியே முதல் நோயாளி கண்டரியப்பட்டது. அதன்பிறகு அரசு தற்போது மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மோடி அரசாங்கம் எடுத்துள்ளது.
இந்த நேரத்தில் எல்லாம் நமக்கு கிடைத்த வாய்ப்புகளை தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வீணடித்துவிட்டு இன்று கொரோனா பரவுவதை தடுக்கமுடியாமல் இஸ்லாமியர்கள் மீது பழியை போட்டு மோடி அரசு தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறது.
உலக சுகாதார நிறுவனமும், பல்வேறு நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோது இந்திய அரசு என்ன செய்தது என்றால்,
பிப்ரவரி 1 - 20 : தேதி வரைக்கும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் வேலையை மேற்கொண்டு, லட்சக்கணக்கான மக்களை திரட்டி அதிபர் ட்ரம்ப்-க்கு விழா நடத்தினார்.


பிப்ரவரி 24 : டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸாமியர்கள் நடத்திய அமைதி போராட்டத்தில், பா.ஜ.க தலைவரின் சர்ச்சைப்பேச்சால் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்து பெரும் வன்முறை சம்பவம் அறங்கேறியது.
மார்ச் 4 : கொரோனா பற்றி அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் முதல் சந்திப்புக் கூட்டம் நடந்தினர்.
மார்ச் 09 : விமான நிலையங்களில் கொரோனா தொற்று இருப்பதைக் கண்காணிக்கும் பணியை செய்தனர்.
மார்ச் 13 : மோடி அரசு கொரோனா ஒரு சுகாதார அவசரநிலை அல்ல என்று கூறியது.
மார்ச் 14: மத்திய பிரேத அரசாங்கத்தை கவிழ்ப்பதில் பா.ஜ.க ஆர்வமாக இருந்தது.


மார்ச் 16 : கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசிப்பதற்காக காணொலி காட்சி மூலம் சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
மார்ச் 19 : பிரதமர் மோடி கொரோனா தொடர்பாக மக்களிடம் முதன் முதலாக உரையாற்றினார். அப்போது கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள மார்ச் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும். அன்று காலை 7 முதல் இரவு 9 வரை இதை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மார்ச் 20 - 21 : மத்திய பிரதேசத்தில் ஆட்சி கவிழ்ப்பு செய்து புதிதாக பா.ஜ.க தலைமையிலான அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியது.
மார்ச் 24 : மோடி கூறியதன் பேரில் ஒருநாள் தேசிய சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
மார்ச் 25 : மத்திய அரசு நாடுமுழுவதும் விமான சேவையை ரத்து செய்தது. (அதுவரை வெளிநாட்டவர்கள், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என விமான சேவையை பயன்படுத்தினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது)
மார்ச் 26 : நாடுமுழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


ஜனவரியில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 ஆக இருந்தநிலையில் இன்று கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,834 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பாதிப்பு மேலும் அதிகமாகும் என மருத்துவத்துறயைச் சார்ந்த் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது நடவடிக்கையை சரியா செய்யத மோடி அரசு அப்பாவி இஸ்லாமியர்கள் மீது பழிப்போடுகிறது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நடவடுக்கை எடுக்கும் வேலையில் இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு மத சாயம் பூசும் வேலையை மோடி அரசின் ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள இத்தகைய நிலைமைக்கு உலக நாட்டுத் தலைவர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
--------------------------------------------------------;;;;;;;--------------
சயின்ஸ்’ ஆங்கில இதழுக்கு டாக்டர் ஜார்ஜ் காவோ (சீன நோய் தடுப்பு மையத்தின் முதன்மை விஞ்ஞானி) அளித்த பேட்டி.
டாக்டர் ஜார்ஜ் காவோ, அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்களின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பகுதி ஊழியர்களை கொண்டுள்ள சீன நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தலைமை மையத்தின் தலைவர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், ஆராய்ச்சியாளர்கள் இதில் பணியாற்றுகிறார்கள். 2020 ஜனவரியில் சீனாவில் கோவிட் 19 பரவத் துவங்கிய காலத்தில் முதலில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு நேரடியாக சிகிச்சை அளித்த மருத்துவர் குழுவின் தலைவர் இவர். பிரபல மருத்துவ பத்திரிகையான தி லான்செட் மற்றும் இங்கிலாந்து மருத்துவ ஏட்டிலும் கோவிட் 19 தொடர்பாக சமீபத்தில் 2 விரிவான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். கோவிட் 19 தொடர்பாக சீன ஆராய்ச்சியாளர்களுக்கும், சர்வதேச விஞ்ஞானிகளுக்கும் இவர் வழிகாட்டி வருகிறார். கால்நடை மருத்துவராக பணியை துவங்கிய இவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலும், பின்னர் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலும் உயிரி வேதியியல், நோய் எதிர்ப்பியல், நுண் கிருமியியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்த ஆராய்ச்சியாளராக மிளிர்ந்தார். இவருடன் சயின்ஸ் ஏடு, நடத்திய உரையாடல் இது. நேர்காணல்: ஜான் கோகன்.

►கோவிட் 19 வைரஸை தனிமைப்படுத்தியதில் சீனாவின் அணுகுமுறையிலிருந்து மற்ற நாடுகள் எதனை கற்றுக் கொள்ள முடியும்?


எந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவதிலும், குறிப்பாக நுரையீரல் மற்றும் மூச்சுத் திணறல் தொடர்பான தொற்றுகளுக்கு சமூக இடைவெளி என்பது மிக மிக அவசியம். நாங்கள் கீழ்கண்ட ஐந்து நடைமுறைகளை அமலாக்கினோம்:
  1. மருந்துகள் அற்ற அணுகுமுறையை உருவாக்கினோம்; ஏனெனில் இந்த நோய்க்கு மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ இல்லை.
  2. பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி விசேட மருத்துவ சிகிச்சையில் வைப்பது அவசியம்.
  3. பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துவது. இவ்வாறு தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்க நாங்கள் மிக அதிகமான முயற்சிகளையும் நேரத்தையும் செலவிட்டோம்.
  4. பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுத்தோம்.
  5. மக்கள் நடமாட்டத்தை வெகுவாக கட்டுப்படுத்தினோம். இதனையே லாக் டவுன் என அழைக்கின்றனர்.

►லாக் டவுன் என்பது சீனாவில் வுஹான் பகுதியில் ஜனவரி 23ம் தேதி தொடங்கியது. பின்னர் ஹுபெய் மாநிலத்தின் ஏனைய பகுதிகளுக்கு விரிவாக்கப்பட்டது. சீனாவின் மற்ற பகுதிகளில் குறைவான நடவடிக்கைகள்தான் அமல்படுத்தப்பட்டன. எப்படி இது ஒருங்கிணைக்கப்பட்டது?

அந்தந்த பகுதிகளில் அல்லது குடியிருப்புகளில் இதனை கண்காணிக்கும் ஊழியர்களின் முக்கியத்துவம் என்ன?
இதற்கு மக்களின் ஒப்புதலும் சரியான புரிதலும் தேவை. அத்தகைய புரிதலை உருவாக்கும் வல்லமை படைத்த வலுவான தலைமை தேவை. இந்த தலைமை என்பது தேசிய அளவில் மட்டுமல்ல; உள்ளூர் மட்டத்திலும் இருப்பது அவசியம். பொது மக்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றும் ஊழியர்கள் தேவை. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் யார்? என்பதை அறியும் இடத்தில் ஊழியர்கள் இருக்க வேண்டும். சமூகத்தில் இந்த மேற்பார்வை ஊழியர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். அவர்களின் பணியும் திறமையும்தான் இந்த ‘நோய் கண்டறியும்’ சங்கிலியில் மிக முக்கியமான கண்ணி.

► மற்ற தேசங்கள் என்ன தவறுகளை செய்கின்றனர்?


அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நடக்கும் மிகப்பெரிய தவறு, என் கருத்தில் என்னெவென்றால், மக்கள் முக கவசத்தை அணிவதில்லை என்பதுதான்! இந்த வைரஸ் நீர் திவலைகள் மூலமும் நெருங்கிய தொடர்பு மூலமும்தான் பரவுகிறது. நீங்கள் பேசும்பொழுது கூட உங்கள் வாயிலிருந்து நீர் திவலைகள் வெளியில் வரும். எனவே முகக்கவசம் என்பது மிக மிக அவசியம். வைரஸை கொண்டுள்ள பெரும்பான்மையானவர்கள் அந்த நோயின் அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை. எனவே அவர்களை அறியாமலே வைரஸை மற்றவர்களுக்கு பரப்புகின்றனர். இதனை தடுக்க வேண்டும் எனில் முகக்கவசம் அணிவது என்பதுதான் ஒரே வழி.

► மற்ற தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

உதாரணத்திற்கு வணிக வளாகங்கள், பொது போக்குவரத்து,மற்றும் அலுவலகங்கள் போன்ற மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சீனா மிகப்பெரிய அளவிற்கு தெர்மா மீட்டர்களை பயன்படுத்தியுள்ளது.
ஆம்! சீனாவில் நீங்கள் எங்கு சென்றாலும் அங்கு தெர்மா மீட்டர்கள் இருக்கும். மக்களிம் உடல் வெப்ப நிலையை அடிக்கடி எடுக்கப்படுவதை நீங்கள் உத்தரவாதம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அதிக காய்ச்சல் உள்ளவர்களை நீங்கள் கண்டறிந்து தனிமைப்படுத்த முடியும். உண்மையிலேயே மிக முக்கியமான கேள்வி என்னவெனில் இந்த வைரஸ் இயற்கை சூழலில் எவ்வளவு காலத்திற்கு உயிரோடு இருக்கிறது என்பதை நிலைநாட்டுவது அவசியம் ஆகும். இந்த வைரஸ் வெப்பத்திற்கு தாக்குப் பிடிக்காது என சிலர் எண்ணுகின்றனர். இந்த வைரஸ் தன்னைத் தானே பாதுகாப்பாக கேடயத்தை உருவாக்கி கொண்டுள்ள வைரஸ் ஆகும். அமெரிக்க ஆய்வுகள் மற்றும் சீனாவின் ஆய்வுகளை பார்க்கும்பொழுது இந்த வைரஸ் புறச்சூழலில் தன்னை அழிக்கும் சக்திகளிலிருந்து காத்துகொள்கிறது என தெரிகிறது. பல இயற்கை சூழல்களில் உயிர்ப்புடன் இருப்பது போல தெரிகிறது. எனவே இது குறித்து அறிவியல் அடிப்படையிலான பதில்கள் நமக்கு தேவைப்படுகிறது.

►வுஹான் பகுதியில் மருத்துவ பரிசோதனையின் பொழுது மிக குறைவான அளவிற்கு நோய் இருந்தவர்களும் கூட மிகப்பெரிய மருத்துவ வசதிகள் கொண்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். குடும்பத்தினர் கூட பார்க்க அனும்திக்கப்படவில்லை. மற்ற தேசங்களும் இதனை கடைபிடிக்க வேண்டுமா?


தொற்று உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். எந்த தேசமாக இருந்தாலும் அதனை செய்தே ஆக வேண்டும். எங்கே தோன்றியதோ அதன் மூலாதாரத்தை அகற்றுவதன் மூலம்தான் கோவிட் 19 வைரஸை நீங்கள் கட்டுப்படுத்தமுடியும். அதனால்தான் நாங்கள் மிகப்பெரிய விளையாட்டு மைதானங்களை விசேட மருத்துவமனைகளாக மாற்றினோம்.

►எப்பொழுது இந்த நோய் தொடங்கியது என்பது குறித்து பல கேள்விகள் உள்ளன. முதல் நோயாளி டிசம்பர் முதல் நாளே கண்டுபிடிக்கப்பட்டார் என சில சீன ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சவுத் சைனா மார்னிங்க் போஸ்ட் எனும் ஹாங்காங் இதழ்( சீனாவை விமர்சிக்கும் பத்திரிக்கை இது) நவம்பர் மாதமே நோய் உருவாகிவிட்டது என கூறுகிறது. உங்களது கருத்து என்ன?


நவம்பர் மாதமே நோய்களை உருவாக்கிய குவி மையங்கள் இருந்தன என கூறுவதற்கு எந்த உறுதியான தகவல் அல்லது தரவுகள் இல்லை. நாங்கள் இதன் தோற்றம் குறித்த பல விவரங்களை புரிந்து கொள்ள முயன்று கொண்டு இருக்கிறோம்.
►வுஹான் மருத்துவ அதிகாரிகள் வைரஸின் மையம் ஒரு கடல் உணவு விற்கும் சந்தை என மதிப்பிட்டு அந்த சந்தையை ஜனவரி 1ம் தேதி மூடினர். அதன் ஊகம் என்னவெனில் அந்த சந்தையில் விற்கப்பட்ட ஒரு விலங்கின் மாமிசத்திலிருந்து மனிதனுக்கு இந்த வைரஸ் பரவியிருக்கும் என்பது! ஆனால் உங்களது ஆய்வு அறிக்கையில் நோய் தொற்றிய முதல் ஐந்து பேரில் நான்கு பேருக்கு அந்த கடல் மாமிச உணவு சந்தையுடன் தொடர்பு இல்லை என கூறினீர்கள். கடல் உணவு விற்பனையகம் தோற்றுவாயா அல்லது வேறு இடத்தில் தோன்றி அந்த விற்பனையகத்தில் வைரஸ் பெருகியதா?
இது ஒரு நல்ல கேள்வி. தொடக்கத்திலிருந்தே ஒவ்வொருவரும் அந்த விற்பனையகம்தான் வைரஸின் பிறப்பிடம் என எண்ணுகின்றனர். என்னைப் பொறுத்த வரை அந்த இடம் வைரசின் பிறப்பிடமாக இருக்கலாம். அல்லது அந்த இடத்தில் வைரஸ் பெருகியிருக்கலாம். இரண்டு சாத்தியக் கூறுகளும் உள்ளன.

வால் ஸ்ட்ரீட் இதழின் ஊகம் மிக நன்று எனக் கூறலாமா? அந்த கட்டுரை வெளியிடப்பட்டதற்கும் வைரஸின் விவரங்கள் உலக சுகாதார அமைப்புக்கு சீனாவால் அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டதற்கும் இடையே இருந்த கால அளவு சில மணி நேரங்கள்தான்! அது ஒரு நாளுக்கு மிகாது என நான் நினைக்கிறேன்.

►இந்த வைரஸின் உட்கூறுகள் குறித்த விவரங்களை மற்றவர்களுடன் உடனடியாக பகிர்ந்து கொள்ளவில்லை எனும் விமர்சனம் சீனா மீது உள்ளது. ஜனவரி 8ம் தேதி இந்த வைரஸின் விவரங்களை வால்ஸ்ட்ரீட் ஜர்னல்தான் வெளியிட்டது. ஏன் சீன அரசாங்கம் அல்லது விஞ்ஞானிகள் வெளியிடவில்லை?

►சீன ஆய்வாளர்கள் ஜனவரி 5ம் தேதியே வைரஸ் குறித்த விவரங்களை சமர்ப்பித்துவிட்டனர். உலக சுகாதார அமைப்புக்கு 8ம் தேதி தெரிவிக்கப்படுகிறது. இந்த 3 நாட்கள் இந்த தொற்று நோய் பரவலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவது இல்லை. எனினும் ஏன் இந்த 3 நாள் தாமதம்?
இது பெரிய தாமதம் என நான் நினைக்கவில்லை. இந்த தகவல்களை உடனடியாக மற்ற அறிவியல் நிபுணர்களுக்கு பகிரப்பட்டது. அவர்களது கருத்துகளையும் அறிய வேண்டிய அவசியம் இருந்தது. மேலும் இது பொது மக்களின் உடல் ஆரோக்கியம் குறித்த ஒன்று. எனவே எடுத்தேன் கவிழ்த்தேன் என அவசர கதியில் செயல்பட இயலாது. மக்களை திடீரென பீதியில் ஆழ்த்த முடியாது. மேலும் இது குறித்த கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு பின்னர் அதனை பகிரங்கமாக அறிவிக்க வேண்டியிருந்தது.
எந்த ஒரு தேசத்திலும் அந்த கட்டத்தில் இது உலகம் முழுதும் பெரும் தொற்றை உருவாக்கும் வைரஸ் என மதிப்பிட்டிருக்க இயலாது. உலகம் கண்ட குளிர் காய்ச்சல் அற்ற பெரும் தொற்று உருவாக்கும் முதல் வைரஸ் இது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

►ஜனவரி 20ம் தேதி வரை இது மனிதர்களுக்கு இடையே பரவும் தன்மை கொண்டது என சீன விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. இதனை உணர்வதில் அப்படி என்ன முட்டுக்கட்டைகள் இருந்தன?


மிக விவரமான உறுதியான நோய் பரவல் தரவுகள் உடனடியாக கிடைக்கவில்லை. தொடக்கத்தில் இதுவும் பல வைரஸ்கள் போல ஒரு வழக்கமான வைரஸ்தான் என அனைவரும் நினைத்தனர். நாங்கள் ஒரு கொடூரமான, கணிக்க இயலாத, மறைந்திருந்து தாக்கும் வல்லமை கொண்ட ஒரு வைரசுக்கு எதிராக போராடிக் கொண்டு இருந்தோம். இதுதான் இத்தாலி அல்லது அமெரிக்கா அல்லது ஐரோப்பாவிலும் நிலைமை.
►சீனாவில் இந்த தொற்று அனேகமாக குறைந்துவிட்டது. தற்பொழுது உருவாகும் புதிய தொற்றுகள் என்பது வெளிநாடுகளிலிருந்து வரும் மக்களிடம்தான் என்பது சரியா?
ஆம்! இந்த தருணத்தில் உள்ளூர் மக்களிடம் தொற்று பரவல் இல்லை. இப்பொழுது தொற்று என்பது வெளியிலிருந்து வரும் பயணிகளிடமிருந்துதான்! தொற்று உள்ள பலர் சீனாவிற்குள் வந்து கொண்டுள்ளனர்.

►சீனா வழக்கமான நிலைக்கு திரும்பும் பொழுது என்ன நிகழும்? மீண்டும் வைரஸ் தாக்க இயலாத அளவிற்கு போதுமான மக்களிடம் இந்த வைரஸ் தொற்று உருவாகி குணப்படுத்தப்பட்டுள்ளதா? சமூக கூட்டு எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என நினைக்கிரீர்களா?


இன்னமும் சமூக கூட்டு எதிர்ப்பு சக்தி உருவாகிவிடவில்லை. பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடந்துள்ளன. வைரஸ் தாக்கியிருந்தாலும் அதன் அறிகுறிகள் வெளியே தெரியாமல் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்தும் பல சோதனைகள் நடந்துள்ளன. அவற்றின் முடிவுகளுக்காக காத்து கொண்டு உள்ளோம். அந்த முடிவுகள்தான் எத்தனை பேருக்கு உண்மையிலேயே இந்த வைரஸ் தாக்குதல் இருந்தது என்பதை சொல்ல முடியும்.

►இப்பொழுது அணுகுமுறை என்ன? இந்த கால இடைவெளியை புதிய மருந்துகள் கண்டுபிடிக்க பயன்படுத்திகொள்ளப்படுமா?


ஆம்! எங்களது விஞ்ஞானிகள் புதிய மருந்துகள் மற்றும் புதிய தடுப்பூசிகள் இரண்டையுமே கண்டுபிடிப்பதில் முனைப்பாக உள்ளனர்.

►பல விஞ்ஞானிகள் ‘ரெம்டெசிவிர்’ எனும் மருந்து மிகவும் பயனுள்ளதாக தெரிவிக்கின்றனர். சீனாவில் இது தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனைகளின் விவரங்கள் எப்பொழுது கிடைக்கும்?


ஏப்ரல் மாதத்தில்!

►சீன விஞ்ஞானிகள் பிராணிகளிடம் பரிசோதனைகளை செய்துள்ளனரா? அதன் அடிப்படையில் இந்த வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்டும் வாய்ப்பு உள்ளதா?


தற்பொழுது குரங்குகள் மற்றும் சில விசேட எலிகளிடம் பரிசோதித்துக் கொண்டுள்ளோம். எலிகளிடம் செய்யும் பரிசோதனைகள் சீனாவில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. குரங்குகளிடம் செய்யப்பட்ட பரிசோதனைகள் குறித்து சில ஆய்வுக் கட்டுரைகள் விரைவில் வெளியிடப்படும். குரங்குகளிடம்செய்யப்பட்ட சோதனைகள் பலனுள்ளதாக இருக்கும் என்பதை நான் கூறமுடியும்.

►இந்த வைரசை “சீன வைரஸ்” என டொனால்டு டிரம்ப் குறிப்பிடுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


அப்படி குறிப்பிடுவது நல்லது அல்ல. இந்த வைரஸ் பூமிக்கு சொந்தமானது. எல்லா வைரஸ்களும் பூமிக்குத்தான் சொந்தமானவை. கோவிட் 19 எனும் இந்த வைரஸ் ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் விரோதாமானது. எந்த ஒரு தனி மனிதனுக்கும் அல்லது தேசத்துக்கு மட்டுமே எதிரி அல்ல.
தமிழில்: அ.அன்வர் உசேன்
----------::::::::::::::---------------
ஒருங்கிணைந்த மருத்துவத்தால் கொரோனாவை ஒழிப்போம்.

ஆங்கில மருத்துவத்துடன், சித்த மருத்துவத்தையும் சேர்த்து, ஒருங்கிணைந்த சிகிச்சை அளித்தால், கொரோனா முற்றிலும் விரட்டலாம்; உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்து, உலகிற்கே தமிழகம் வழிகாட்ட முடியும்,'' என, சென்னையை சேர்ந்த சித்தா டாக்டர் வீரபாபு தெரிவித்தார்.

ஒருங்கிணைத்த சிகிச்சை அளிக்க, தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.கொரோனா என்ற கொடிய வைரஸ் நோய், உலகம் முழுவதும் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த, உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. சளி, இருமல், நுரையீரல் பாதிப்பு, மூச்சு திணறல் போன்ற பாதிப்புகளை, கொரோனா வைரஸ் ஏற்படுத்துகிறது. இந்த நோய்க்கு நேரடியான மருந்து, இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
காய்ச்சல், சளிக்கான மருந்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை வழங்கி, நோயாளிகளை குணப்படுத்துகின்றனர். மலேரியாவைக் கட்டுப்படுத்தும், 'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மருந்தும் கொடுக்கப்படுகிறது.இந்நிலையில், ஆங்கில மருத்துவத்துடன், சித்த மருத்துவத்தையும் சேர்த்து, ஒருங்கிணைந்த கூட்டு சிகிச்சை அளித்தால், கொரோனா வைரஸ் நோயை ஒழிப்பதில், எளிதில் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என, சித்தா டாக்டர்கள் உறுதிபட கூறுகின்றனர்.

இது குறித்து, சென்னையை சேர்ந்த சித்தா டாக்டர் வீரபாபு கூறியதாவது: 

சிறப்பு வார்டுகளில், கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டோருக்கு, அலோபதி எனப்படும், ஆங்கில வழி மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து வழங்கலாம். அதனுடன், சித்த மருத்துவ உணவு முறைகளையும், இணைத்துக் கொண்டால் நோயாளிகளின் உடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, அவர்களை மிக விரைவிலேயே, பூரண நலம் பெற வைக்க முடியும்.
கபசுரக்குடிநீர்

காலை, மதியம், இரவு ஆகிய நேரங்களில், உணவு சாப்பிடும் முன், கபசுரக் குடிநீரை, 50 மி.லி., வழங்க வேண்டும். காலை, மதியம், இரவில் மூலிகைகள் அடங்கிய உணவையும் சேர்த்து வழங்க வேண்டும். அவை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நுரையீரலை பாதுகாத்து, விரைவில் நலம் பெற வழி வகுக்கும். கபசுர குடிநீரை, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, 5 முதல், 10 மில்லி வரை வழங்கலாம். 10 முதல், 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு, 25 மில்லி; 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 50 மில்லி வழங்க வேண்டும்.
எந்த உணவு தேவை?

காலை: டீக்கு பதிலாக, ஆடா தோடை, மஞ்சள், மிளகு, அதிமதுரம், சித்தரத்தை ஆகியவை கலந்து, கஷாயம் தயாரித்து கொடுக்க வேண்டும். காலை உணவில், துாது வளை, மஞ்சள், மிளகு, சீரகம் ஆகியவற்றை கலந்து, தோசையாக செய்து, நோயாளிக்கு வழங்க வேண்டும். நண்பகலில் சுக்கு; மாலையில் கடுக்காய் ஆகியவற்றையும், உணவில் சேர்க்கலாம். காலையில், தோல் நீக்கிய இஞ்சி தேநீர் கொடுக்கலாம்.

மதியம்: வழக்கமான மதிய உணவுடன், துாதுவளை ரசம், வேப்பம்பூ ரசம், மிளகு ரசம் ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை தரலாம். தினமும் மதிய உணவில், இது போன்ற ரசத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். தற்போது, பூக்கும் காலம் என்பதால், வேப்பம்பூ எளிதாக கிடைக்கிறது. இஞ்சி, -பூண்டு, மிளகு மற்றும் வேப்பம் பூவை கலந்து கொதிக்க வைத்து, இந்த வேப்பம் பூ ரசத்தை தயாரிக்க வேண்டும். இது, சுவையாக இருக்கும். நச்சுகளை உடலில் இருந்து வெளியேற்றும் பண்பு கொண்டது. பிஞ்சு நாட்டு கத்தரிக்காய் அடங்கிய உணவையும், சுவையாக தயாரித்து தர வேண்டும். கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு, நுரையீரலை சீராக இயக்குவதற்கு, இந்த உணவு பலன் தரும்.

மாலை மற்றும் இரவு: மாலையில், துாதுவளை சூப் வழங்க வேண்டும். இரவில் வழக்கமான உணவுடன், ஆங்கில மருந்துகளை கொடுக்கலாம். மாலையில், முசுமுசுக்கை அடை தயார் செய்தும் வழங்கலாம். சித்த மருத்துவ உணவுகளை நாம் இவ்வாறு நோயாளிகளுக்கு தரும்போது, அவர்களின் நுரையீரலில் சளி தேங்கி, காற்று பையை அடைக்காமல், மூச்சுத்திணறல் வராமல் பாதுகாக்கும். இது, நுரையீரலில் தேங்கி சளியை இளகச் செய்து, மூச்சுத்திணறலை தடுக்கும்.
துாதுவளையின் சிறப்பு

அனைவரும் துாதுவளையை பயன்படுத்தலாம். அது உடலுக்கு எவ்வித கெடுதலையும் தராது. கொரோனா பாதித்தோருக்கு, அனைத்து நாட்களிலும், துாதுவளை உணவுகளை தரலாம். நுரையீரலில் காற்று ப்பையை அடைத்து, மூச்சு திணறல் ஏற்படுத்தும் சளியை, வெளியேறச் செய்யும் தன்மை துாதுவளைக்கும் உண்டு.பாரம்பரிய சித்த மருத்துவத்துடன் இணைந்து, ஆங்கில மருத்துவத்தையும் மேற்கொண்டால், கொரோனா நோயால் ஒருவர் கூட, உயிர் இழக்கவில்லை என்ற நிலையை ஏற்படுத்தலாம்.

இதன் வாயிலாக உலக நாடுகளுக்கே, தமிழகம் வழிகாட்ட முடியும். ஏற்கனவே, டெங்கு, சிக்குன் குனியா நோய் பாதிப்புக்கு, ஒருங்கிணைந்த சிகிச்சையால் சாதிக்க முடியும் என, நாம் நிரூபித்துள்ளோம். இதற்கு, தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இது தொடர்பான சந்தேகங்களுக்கும், கூடுதல் தகவல்களுக்கும், டாக்டர் வீரபாபுவை, 98402 78009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மூலிகை ஆவி பிடியுங்கள்!

கொரோனா வைரஸ் நோய் பாதித்து, சிகிச்சை பெறும் நோயாளிகள், தினமும் ஆடா தோடை, நொச்சி, வேப்ப இலை, தழுதாளை ஆகியவற்றை, நீரில் கொதிக்க வைத்து, ஆவி பிடிக்க வேண்டும். இந்த மூலிகை ஆவியானது, சுவாச மண்டல பாதையிலுள்ள நோய் தொற்றுக் கிருமிகளை அழிக்க உதவும். சுவாச மண்டலத்தையும், நுரையீரலையும் மிகவும் எளிதாக இயங்க வைக்கும்.

டாக்டர்களுக்கு தடுப்பு முறை

கொரோனா வைரஸ் நோய் பாதித்த நோயாளிகளுக்கு, சிகிச்சை தரக்கூடிய டாக்டர்களும், செவிலியர்களும், கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளலாம். இதற்கும், சித்த மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது.ஓமம், பச்சை கற்பூரம், கருஞ்சீரகம், மஞ்சள் ஆகியவற்றை அரைத்து பொடியாக்கி, அதை சாதாரண வேட்டி துணியில், சிறு பொட்டலமாக கட்டி, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை நுகர்ந்து பார்க்க வேண்டும். இந்த தடுப்பு முறையால், நோய்க் கிருமிகள் மூக்கு வழியாக நுரையீரலுக்கு செல்லும் வாய்ப்பு, ஓரளவு குறையும்.


குழந்தைகளுக்கு உணவு

சிறு குழந்தைகளுக்கு பாரம்பரிய மருத்துவ உணவு முறைகள் பிடிக்காவிட்டால், வேறு வகைகளில், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவை கலந்த, திரிகடுகு சூரணத்தை கால் தேக்கரண்டிக்கும் குறைவாக எடுத்து, அதில் தேன் கலந்து, காலை உணவுக்கு பின் குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. இதை ஒரு வாரம் தொடர்ந்து கொடுத்த பின் வாரம் இருமுறை மட்டுமே வழங்க வேண்டும். கற்பூரவல்லி செடியின் இலையை அரைத்து, அதைசாறு எடுத்து வாரம் இரு முறை கொடுக்கலாம்

எங்கே கிடைக்கும்

பாரம்பரிய உணவு மற்றும் சிகிச்சை முறைகளை, 'உணவே மருந்து: மருந்தே உணவு' என்று அடிப்படையில், மேற்கொள்ளும்போது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டாலும், மிக எளிதாக நோயை பூரண குணமாக்கலாம். இந்த உணவுமுறைக்கான பொருட்கள் சாதாரண காய்கறி கடைகள் மற்றும் மளிகை கடைகளிலேயே கிடைக்கிறது. அவற்றில் இல்லாத, பொருட்களை நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கி கொள்ளலாம். சுபசுர் குடிநீர் அரசின் சித்த மருத்துவமனை ஆராய்ச்சி மையம், டாம்ப்கால், இம்காப்ஸ் மருந்தகங்களில் கிடைக்கும்.
---------------------------::::::::::::::-------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?