முதல்வர் மு.க.ஸ்டாலின்

 தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் மு.க. ஸ்டாலின் ஒரு நீண்ட, கடினமான பயணத்தின் முடிவில் இந்தப் பொறுப்பை ஏற்கவிருக்கிறார். மிக நெருக்கடியான சூழலில் கட்சியை வழிநடத்திய பொறுமையும் துணை முதல்வராக இருந்த அனுபவமும் அவரது புதிய பதவியில் உதவக்கூடும்.

1960களின் பிற்பகுதியில் சென்னை கோபாலபுரத்தில் அப்பகுதி இளைஞர்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சிகளை நடத்தியதில் துவங்கி, தி.மு.கவின் தலைவராகவும் முதலமைச்சராகவும் உயர்ந்திருக்கும் மு.க. ஸ்டாலினின் பயணம் மிக நீளமானது, கடினமானது என்பதை அவரது அரசியல் எதிரிகள்கூட ஒப்புக்கொள்வார்கள்.

மு.க.ஸ்டாலின் சென்னையின் மேயராகவும் தமிழ்நாட்டின் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தபோது அவரது செயல்பாடுகள் பல மட்டங்களிலும் கவனிப்பையும் பாராட்டுதல்களையும் பெற்றன. இதன் தொடர்ச்சியாக, 2016ன் பிற்பகுதியில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி உடல்நலம் குன்றிய பிறகு, கட்சியின் பொறுப்பை மு.க. ஸ்டாலின் கையில் எடுத்துக்கொண்டபோது, கட்சித் தொண்டர்களின் கவனம் மட்டுமல்லாமல் அரசியல் எதிரிகளின் பார்வையும் அவர் மீது தீவிரமாகக் குவிந்தது.

2018ல் மு.கருணாநிதி மறைந்த பிறகு, தி.மு.கவின் தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றார். 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களை மனதில் கொண்டு கட்சியின் நடவடிக்கைகளைத் திட்டமிட ஆரம்பித்தார். அந்த பொதுத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 39 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களைக் கைப்பற்றியது.

மு க ஸ்டாலின், திமுக தலைவர்

பட மூலாதாரம்,

2016ல் கருணாநிதியின் உடல்நலம் குன்றியதிலிருந்து 2019ஆம் ஆண்டுத் தேர்தல்வரை கட்சியை வழிநடத்துவது, தேர்தல் கூட்டணிகளை அமைப்பது, பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வது என அவர் முன்னெடுத்த விஷயங்கள் அனைத்திலும் அவர் வெற்றி பெற்றிருந்தார். இருந்தபோதும், எதிர்க்கட்சிகள் அவரது வெற்றியைப் புறம்தள்ளின.

எதிர்க்கட்சித் தலைவர்களை எள்ளி நகையாடுவது, அவர்கள் எதையும் சாதிக்க இயலாதவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்குவது என அகில இந்திய அளவில் சில அரசியல் கட்சிகள் கடைப்பிடித்துவரும் போக்கின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் குறிவைக்கப்பட்டார். ஜெயலலிதா இல்லாத சூழலில் ஆட்சியைக் கைப்பற்ற இயலாதவர் என்றும் கருணாநிதி இருந்திருந்தால் அதைச் செய்திருப்பார் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

எழுதுவதற்கே தகாத வார்த்தைகளால் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டார். கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்கள் மட்டுமல்லாது, சில கட்சியின் தலைவர்களே, அவரை துண்டுச் சீட்டு இல்லாமல் பேச முடியாதவர் என்று கீழிறங்கி விமர்சித்தார்கள். அவர் தேர்தல்களில் பெற்ற பிரம்மாண்டமான வெற்றிகள் கணக்கில் கொள்ளப்படவில்லை.

"மு. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அவர் தொடர்ந்து பொறுப்புகளை ஏற்றும், அவற்றை செயல்படுத்தியும் காட்டியிருக்கிறார். எல்லோரும் அவரை கருணாநிதியுடன் ஒப்பிட முயல்கிறார்கள். அவர் சிறப்பாகப் பேசவில்லை என்கிறார்கள். ஆனால், நவீன தலைமை என்பது மேடையில் சிறப்பாக பேசுவது கிடையாது. எந்த அளவுக்கு பொறுப்புகளை ஏற்று, அதை நிறைவேற்றிக் காட்டுகிறார்களோ அதுதான் சிறந்த தலைமை.

இப்போது கட்சியை நடத்துவது என்பது, ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாகத்தை நடத்துவதுபோலத்தான். அதை வெற்றிகரமாகச் செய்ய திறமை தேவை. அதுதான் மு.க.ஸ்டாலினின் பலம்.

மு க ஸ்டாலின், திமுக தலைவர்

பட மூலாதாரம்,

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் இப்போது சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று அதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்" என்கிறார் தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரான ஆழி செந்தில்நாதன்.

மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை, அவர் தனது அரசியல் வாழ்வைத் துவங்கியதிலிருந்தே வாரிசு என்கிற சுமை அவருக்கு இருந்திருக்கிறது. ஆகவே அவர் தொடர்ந்து தன்னை நிரூபிக்க வேண்டியிருந்தது. அதற்காக, பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு அதனை அவர் நிறைவேற்றிக் கொண்டே இருந்தார். பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது என்பது அவரது ஆளுமையின் ஓர் அடையாளமாகவே ஆகிவிட்டது என்கிறார் செந்தில்நாதன்.

மு.க.ஸ்டாலின் தி.மு.கவிற்குள் முக்கியமான தலைவராக உருவெடுக்க ஆரம்பித்த காலத்தில் அவர் முன்பாக இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று கட்சியைக் கட்டமைக்கும் வேலை. மற்றொன்று மக்களைச் சென்றடையும் பணி. மக்களை அணுகும் பணியில் மு.கருணாநிதியும் க. அன்பழகனும் ஏற்கெனவே இருந்தனர். ஆகவே அவர் கட்சியைக் கட்டமைப்பது என்ற கடினமான பணியைத் தேர்வுசெய்தார்.

தமிழ்நாட்டில் உள்ள வேறு சில வாரிசு அரசியல்வாதிகளோடு ஸ்டாலினை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் அவரது வெற்றியின் அளவு புரியும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வன். "பெரும்பாலான வாரிசுகள் மக்களைச் சந்திக்காமல் மாநிலங்களவை உறுப்பினர்களாகவே தொடர்கிறார்கள். ஆனால், மு.க. ஸ்டாலின் 1984ல் முதன்முதலில் களத்தில் இறங்கும்போதே கே.ஏ. கிருஷ்ணசாமி என்ற பிரபல அரசியல்வாதியை எதிர்த்துத்தான் களமிறங்கினார். அவர் அடிமட்டத்திலிருந்து மேலே வந்தவர்" எனச் சுட்டிக்காட்டுகிறார் பன்னீர்செல்வன்.

மு க ஸ்டாலின், திமுக தலைவர்

பட மூலாதாரம்,

சென்னையின் மேயராக மு.க. ஸ்டாலின் வந்த பிறகு, அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் குறிப்பிட்டுச் சொல்வது, விஷயங்களை அவர் மிகவும் கவனம் கொடுத்துக் கேட்பார் என்பதைத்தான். ஒரு விஷயத்தைப் பற்றி முடிவெடுக்க சில சமயங்களில் நேரம் எடுத்துக்கொள்வார். ஆனால், அது தொடர்பான விஷயங்களைக் கேட்காமல் முடிவெடுக்க மாட்டார். "இந்தியா கடந்த சில ஆண்டுகளாக எதிர்கொண்டுவரும் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியின் தவறான அமலாக்கம், கோவிட் சிக்கல்கள் ஆகியவற்றுக்குப் பின்னால் இருப்பது கேட்பதற்கு மனமில்லாத நிலைதான் முக்கியக் காரணம். இந்தப் பின்னணியில் பார்க்கும்போது ஸ்டாலின் மிகச் சிறந்த நிர்வாகி" என்கிறார் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் மு.க. ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, நகராட்சி நிர்வாகத் துறையின் முதன்மைச் செயலராக இருந்தவருமான அஷோக் வர்தன் ஷெட்டி இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கிறார்.

"பல முதலமைச்சா்கள் கோப்புகளை பார்த்து, கையெழுத்திட தாமதம் செய்வார்கள். ஆனால், மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை கோப்புகளை மிக வேகமாக பார்த்து ஒப்புதல் அளிப்பார். மு.க. ஸ்டாலின் வந்தால், குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் வருமோ என்று பலரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால், 2006 முதல் 2011வரை குடும்ப உறுப்பினர்களை மு.க.ஸ்டாலின் தன் அலுவலகத்திலிருந்து விலக்கியே வைத்திருந்தார்" என்கிறார் அசோக் வர்தன் ஷெட்டி.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்கிறார் அசோக் வர்தன். ஒரு முறை மு.க.ஸ்டாலினின் துறையில் பணியாற்றிய அவருடைய நெருங்கிய உறவினரை, ஒரு தவறுக்காக இடைநீக்கம் செய்து கோப்பை மு.க.ஸ்டாலினிடம் அனுப்பினார் ஷெட்டி. மு.க. ஸ்டாலின் எந்தக் கேள்வியும் கேட்காமல், அந்தக் கோப்பில் கையெழுத்திட்டார் என்கிறார் அவர்.

மு க ஸ்டாலின், திமுக தலைவர்

பட மூலாதாரம்,

"மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை அவர் செய்த பணிகளுக்கான பெயர் அவருக்குக் கிடைக்கவில்லை. 2006-2011க்குள் தமிழ்நாட்டில் இருந்த 12,500 கிராமங்களிலும் நூலகம், கிராமப்புற விளையாட்டு மையம், சுடுகாடுகள் அமைக்கப்பட்டன. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நிலை கிடையாது. அதை உள்ளாட்சித் துறை அமைச்சராக ஐந்தாண்டுகளில் செய்தார் ஸ்டாலின். ஆனால், அதற்கான பெருமை அவருக்குக் கிடைக்கவில்லை" என்கிறார் ஷெட்டி.

மற்றொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறார் ஷெட்டி. 2006 - 11 காலகட்டத்தில் உலக வங்கியின் உதவியுடன் 717 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் `வாழ்ந்து காட்டுவோம்' என்ற பெயரில் 16 மாவட்டங்களில் சுமார் 2,500 கிராமங்களில் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன்களை வழங்கி சுயமேம்பாட்டிற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2010ல் இந்தத் திட்டத்தை ஆய்வுசெய்த உலக வங்கி, தாங்கள் உலகம் முழுவதும் செயல்படுத்திவரும் திட்டங்களில், சிறப்பாக செயல்படுத்தப்பட்டுவரும் திட்டம் இதுதான் என கடிதம் ஒன்றை அனுப்பியது. அந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு வந்த உலக வங்கியின் தலைவர் நடாஷா ஹோவர்ட் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பாராட்டினார். இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஒரு சிறிய செய்திக் குறிப்பாக இந்த நிகழ்வு சென்றுவிட்டது என்கிறார் அசோக் வர்தன் ஷெட்டி.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டமும் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்டதுதான். தமிழ்நாட்டில் இருந்த 12,500 கிராமங்களில் ஒவ்வொரு வருடமும் 2,500 கிராமங்கள் தேர்வுசெய்து திட்டத்தைச் செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டது. ஒவ்வொரு வருடமும் தங்கள் கிராமத்தை அந்த வருட பட்டியலில் சேர்க்க கட்சிக்காரர்கள் முயல்வார்கள். ஆனால், மிக ஏழ்மையான கிராமங்களில் இருந்து, வசதியான கிராமங்கள் என்ற வரிசையில் கிராமங்களைத் தேர்வுசெய்து திட்டத்தைச் செயல்படுத்துவதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருந்தார்.

சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கும்போது, பொதுவாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் உள்ள பஞ்சாயத்துகள் சிறப்பாக செயல்பட்டாலும் அவற்றுக்கு விருதுகள் வழங்க மாட்டார்கள். அமைச்சர்கள் விருதுப் பட்டியலை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள் பட்டியலில் இல்லை என்பதை உறுதிசெய்வார்கள். ஆனால், மு.க.ஸ்டாலின் சரியான பஞ்சாயத்துகள் விருதுகளைப் பெறுவதை உறுதிசெய்தார் என்கிறார் அசோக் வர்தன்.

அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார் அவர். மு.க. ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, கோயம்புத்தூரில் மேட்டுப்பாளையத்திற்கு அருகில் இருந்த ஒரு பஞ்சாயத்து மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தது. அப்போது கட்சியின் மாவட்டச் செயலாளரின் எதிர்ப்பையும் மீறி, அந்தப் பஞ்சாயத்தைச் சென்று பார்வையிட்டார் மு.க. ஸ்டாலின். அந்த ஆண்டு விருது பெற்ற 15 பஞ்சாயத்துத் தலைவர்களின் பட்டியலில் அந்த பஞ்சாயத்துத் தலைவரின் பெயரும் இருந்தது. அவர் அமைச்சராக இருந்தபோது அ.தி.மு.கவைச் சேர்ந்த பல பஞ்சாயத்துத் தலைவர்கள் மாநில விருதுகளுக்கும் மத்திய அரசின் நிர்மல் கிராம் புரஸ்கார் விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டார்கள் என்று சுட்டிக்காட்டுகிறார் ஷெட்டி.

ஆனால், இதையெல்லாம் மீறி அவர் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டார். பல சமயங்களில் பேசும்போது வார்த்தைகள் தவறுவதை வைத்து கேலி செய்தார்கள். இருந்தபோதும், இதுபோன்ற முத்திரைகள் இந்திய அளவில் பலித்ததைப் போல தமிழ்நாட்டில் பலிக்கவில்லை.

ஸ்டாலினை தொடர்ந்து தாக்குவதற்கும் கேலி செய்வதற்கும் காரணம் அவருடை சித்தாந்த நிலைப்பாடுதான். மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம், இந்தி எதிர்ப்பு ஆகியவற்றில் அவர் உறுதியாக இருக்கிறார். இந்த சித்தாந்தங்களுக்கு எதிராக ஏதாவது சொன்னால், மாட்டிக்கொள்வோம் என்பதற்காகத்தான் அவரைக் கேலி செய்கிறார்கள். இப்படி கேலி செய்பவர்கள், மத்திய - மாநில உறவு, மதச்சார்பின்மை ஆகியவை குறித்து என்ன நிலைபாடு எடுத்தார்கள் என்று பார்த்தால் அவர்கள் ஏன் மு.க.ஸ்டாலினை நோக்கி இந்த அவதூறுகளைச் சொல்கிறார்கள் என்பது புரியும் என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

மு க ஸ்டாலின், திமுக தலைவர்

பட மூலாதாரம்,

"அவரை தத்தி என்று சமூக வலைதளங்களில் குறிப்பிடுவது மு.க. ஸ்டாலின் மீதான அப்பட்டமான காழ்ப்புணர்வுதான். ஒருவர் தொடர்ச்சியாக தன் பணிகளை வெற்றிகரமாக செயல்படுத்தினாலும் அவரை கேலி செய்கிறார்கள் என்றால் அது காழ்ப்புணர்ச்சியல்லாமல் வேறு அல்ல. அவர் தனக்கு கொடுத்த பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறார். அவரை இவ்வாறு குறிப்பிடுவது முழுக்க முழுக்க சாதி சார்ந்த வன்மம்" என்கிறார் ஆழி செந்தில்நாதன்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக அவர் கூட்டணியை உருவாக்கியபோது கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களைக் கொடுக்கிறார்கள் என விமர்சித்தார்கள். சட்டமன்றத் தேர்தலில் குறைவாகக் கொடுத்தபோது, மிகக் குறைவாகக் கொடுப்பதாக விமர்சிக்கிறார்கள். ஆனால், இரண்டு தேர்தல்களிலுமே வெற்றி கிடைத்திருக்கிறது. இருந்தபோதும் விமர்சிக்கிறார்கள் என்கிறார் ஆழி செந்தில்நாதன்.

"சிறப்பாக பேசும் தலைவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படியல்ல. அதிகாரிகள் அளிக்கும் ஆலோசனைகளைக் காதுகொடுத்துக் கேட்டு, அரசியல் ரீதியாக எது சரியாக வரும் என்று யோசித்து முடிவெடுப்பவர்களே சிறந்த தலைவர்கள். 

அதன்படி, காமராஜர்,கலைஞர், கோ.சி.மணி ஆகியோரின் வரிசையில் மு.க. ஸ்டாலினைச் சொல்லலாம்" என்கிறார் அசோக் வர்தன். 2026ல் மு.க. ஸ்டாலின் தன் பதவிக்காலத்தை முடிக்கும்போது இந்தியாவின் சிறந்த ஐந்து முதல்வர்களில் அவரும் ஒருவராக இருப்பார் என்கிறார் அசோக் வர்தன் ஷெட்டி.

நன்றி: பி.பி.சி.தமிழோசை.

-----------------------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?