மாசுக் கட்டுப்பாடு
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் 1982-ம் ஆண்டிலேயே துவங்கப்பட்டது. இதற்குப் பல பொறுப்பார்கள் வந்துவிட்டனர். தற்போதைய நிலையில், திரு.சிவ.வீ. மெய்யநாதன் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக உள்ளார். சுற்றுச்சூழல் அரசு முதன்மை செயலாளராக வனத்துறை அதிகாரி திருமதி. சுப்ரியா சாஹுவும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.ஏ.வி.வெங்கடாசலமும் உள்ளனர்.
வெட்டி வீழ்த்தப்பட்ட 300 மரங்கள்! யார் தவறு? மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அலட்சியத்தால் ஏற்படும் விளைவுகள்!
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு 7 மண்டல அலுவலகங்கள் மற்றும் 38 மாவட்ட அலுவலகள் செயல்பட்டு வருகிறது. மேலும் சுற்றுச்சூழல் பொறியாளர்கள் தலைமையில் ஈரோடு மற்றும் திருப்பூரில் 2 பறக்கும் படைகளும் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் மிக முக்கிய பணிகளில் நீர், காற்று மற்றும் நில மாசுகளைச் சரியாகக் கண்காணித்து தரவுகள் வெளியிட வேண்டும். தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, கழிவு நீர் ஆகியவற்றை முறையாகக் கண்காணித்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
தொழிற்சாலைகள் அவற்றிலிருந்து வெளியேறும் கழிவுகளைப் பொறுத்துப் பரிசோதிக்கும் தன்மை வேறுபடுகிறது. அதன் அடிப்படையிலேயே கால இடைவெளியில் பரிசோதிக்கின்றனர்.
ஒரு தொழிற்சாலை சட்ட வரைமுறைக்கு உட்பட்டுச் செயல்படாமல், அதை மீறும் அளவு மாசு வெளியிட்டால், முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதன் அடிப்படையில் தொழிற்சாலையை மூடுதல், மின் இணைப்பு துண்டித்தல், நீர் வழங்குவதை நிறுத்தல் போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
நீர் கண்காணிப்பு!
நீர்தர கண்காணிப்பு 1984-ஆம் ஆண்டிலிருந்து புவி சுற்றுப்புறச்சூழல் கண்காணிப்பு திட்டம் மற்றும் 1988-ஆம் ஆண்டிலிருந்து இந்தியத் தேசிய நீர்வள ஆதாரங்கள் கண்காணிப்பு திட்டம் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தற்போது 55 இடங்களில் நீரின் தன்மையைக் கண்காணித்து வருகிறது. இந்த திட்டங்களுக்கு டெல்லியிலுள்ள மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் நிதி உதவி செய்கிறது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு மையத்தின் தகவல்படி,
ஏ- குடி நீர் ஆதாரம் முறையான சுத்திகரிப்பின்றி ஆனால் நோய்க்கிருமி நீக்கப்பட்டபின்
பி - வெளிபுறக்குளியல் (நெறிமுறை படுத்தப்பட்ட)
சி - குடி நீர் ஆதாரம் முறையான சுத்திகரிப்பு மற்றும் நோய்க் கிருமி நீக்கப்பட்டபின்
டி - வன மற்றும் மீன்வள அபிவிருத்திக்கு உகந்தது
இ-நீர்ப்பாசனத்திற்கும், தொழிற்சாலை வெப்ப குளிர்விப்பிற்கும், கட்டுப்படுத்தப்பட்ட கழிவுகளை அகற்றுவதற்குமான நீர்
‘இ’க்கும் கீழ் - மேற்கண்ட ஏ முதல் இ ஆகியவற்றுக்கு உட்படாத தரம்
ஆகியவற்றின் அடிப்படையில், நீரின் தரத்தைக் பிரிக்கின்றனர். இந்த வரைமுறை, கொசஸ்தலை ஆற்றில் கலக்கும் கழிவைச் சுத்திகரிக்கிறது என்பதையும், மாசு கலக்காமல் தடுக்கிறது என்பதையும் உறுதிப்படுத்தவில்லை. சமீபத்தில் கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்பட்டபின், திருப்பி எடுக்கப்பட்ட மணலில் ஆர்சனிக் 14.96 மி.கி, காட்மியம் 15.23 மி.கி, தாமிரம் 23.54 மி.கி, குரோமியம் 106.1 மி.கி இருப்பதாக அறிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. அந்த மணலிலிருந்து இந்த கழிவுகள் ஆற்றில் கலப்பதால், அங்கு வளரும் மீன் இனங்கள் அழிவைச் சந்தித்து வருவதாக, அப்பகுதி மீனவர்கள் தெரிவித்திருந்தனர்.
அரசு சார் நிறுவனமான TANGEDCO கொசஸ்தலை ஆற்றில் தொடர்ந்து கழிவுகளைக் கொட்டி வருவதும், அதற்கு எதிராகப் போராட்டங்கள் நடப்பதும் வாடிக்கையாக உள்ளது. எனினும் இத்தகைய நடைமுறைக்கு எதிராகத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. கொசஸ்தலை ஆற்றில் 20 ஆண்டுகளுக்கு மேலாக TANGEDCO சாம்பல் கழிவுகளைக் கொட்டி வருகிறது என்பதுதான் உண்மை. அந்த பகுதியில் உள்ள நீரின் தன்மையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்யாமல் தவிர்க்கிறது என்றும், ஒருவேளை ஆய்வு செய்யப்பட்டாலும் அது பற்றிய விவரங்கள் வெளியிடவில்லை என்றும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதேபோல் கொடைக்கானல் யூனிலீவர் நிறுவனத்திலிருந்து வெளியேறும் பாதரசம், அப்பகுதியில் உள்ள பம்பர் சோல ஆற்றில் கலந்து நீரை மாசடையச் செய்கிறது. இதுஐஐ பற்றிய ஆய்வை முறையாக மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை அப்பகுதி மக்கள் சமீபத்தில் முன்வைத்து வருகின்றனர். அதேபோன்று நொய்யலாற்றில் கலக்கும் சாயக் கழிவுகள் பற்றியும் பல ஆண்டுகளாக மக்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்தும் இதுவரை முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
காற்றின் தரம் கண்காணிப்பு!
1981-ம் ஆண்டு காற்று மாசு தடுப்பு சட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, காற்றின் தரம் குறிப்பிட்ட வரைமுறைக்குள் இருக்க வேண்டும். healthy energy initiative india என்ற அமைப்பு நடத்திய ஆய்வின்படி, TANGEDCO வெளியிடும் மாசு சராசரி அளவை விட 53 சதவீதம் அதிகம் என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த ஆய்வை மேற்கொண்ட பூஜா கூறுகையில், “தற்போதுவரை நாங்கள் ஒரு அனல்மின் நிலையத்தை மட்டுமே கணக்கிட்டுப் பார்த்துள்ளோம். தமிழகம் முழுவதும் பல அனல்மின் நிலையங்கள் உள்ளன. அவற்றைப் பரிசோதித்தால் மாசுபடும் அளவை முழுவதும் தெரிந்துகொள்ளலாம். காற்று மாசை கட்டுப்படுத்த, தொழிற்சாலைகளைப் பரிசோதித்து அரசோ, மாசுக்கட்டுப்பாட்டு வாரியமோ நடவடிக்கை எடுப்பது கிடையாது” என்று பதிலளித்திருந்தார்.
அதேபோல் தமிழ்நாடு முழுக்க பல தொழிற்சாலைகளும் முறையான பரிசோதனைகள் இல்லாமல் இயங்கி வருவதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மண் தரம் கண்காணிப்பு!
மண் பராமரிப்பு என்பது நீருடன் இணைந்ததாகவே இருக்கிறது. மண் தரம், காற்று மற்றும் நீரினால் ஒருவகையில் பாதிப்படைந்து வருகிறது. மற்றொருபுறம், நிலத்தில் மக்காத பொருட்களினாலும் மண்ணில் பெரும் பாதிப்பு சந்தித்து வருகிறது. கொசஸ்தலை ஆற்றில், TANGEDCO அமைக்க இருக்கும் பாதைக்காகக் கடலிலிருந்து எடுக்கப்பட்ட மணல் கொட்டப்பட்டது. அந்த மணலில், ஆர்சனிக் 14.96 மி.கி, காட்மியம் 15.23 மி.கி, தாமிரம் 23.54 மி.கி, குரோமியம் 106.1 மி.கி இருப்பது கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் தேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து அறிக்கை அளித்திருந்தது. அதிலும் மண்ணில், மெக்னீசியம், அலுமினியம், பொட்டாசியம், குரோமியம், ஈயம், கால்சியம் ஆகியவை அதிக அளவிலிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலைக்கு, “எண்ணூர் துறைமுகத்தில் பெட்ரோலியம், கெமிக்கல், குருடாயில், கோல் போன்ற பொருட்கள் கையாளப்பட்டு வருகிறது. அதிலிருந்து கூட கடலில், விஷத்தன்மை பரவ காரணமாக இருக்கலாம்” என்கிறார் பூஜா.
அதேபோல் உலகம் முழுவதும் உள்ள முக்கிய பிரச்சனை பிளாஸ்டிக் கழிவுகள். அது நிலத்தைப் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி, மலட்டுத்தன்மையை உருவாக்கி வருகிறது.
முறையான ஆய்வும், கட்டுப்பாட்டையும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் கையாண்டால் இதைத் தடுக்கலாம்.
“நாளைய தினம் மாசுக்கட்டுப்பாடு வாரியம் காணாமல் போனால் கூட ஒன்றும் தெரியாது. கூவம் எந்த அளவிற்கு நாறுகிறதோ, அந்த அளவில்தான் நாறிக்கொண்டிருக்கும். மாசுக் கட்டுப்பாடு வாரியம் குறிப்பிட்ட தினத்தில் கண்காணிக்க வேண்டும் என்ற வரைமுறையையே பின்பற்றுவது இல்லை. அனைத்தையும் நிறுவனங்களுக்கே பொறுப்பு கொடுத்துவிடுவர். வாரத்திற்கு இரண்டுமுறை வெளிவரும் கழிவை எடுத்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும், மற்ற மாதிரிகள் சேகரித்து என் ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும், என்று எல்லாம் வரைமுறையை வைத்திருப்பர். ஆனால் எதையும் நடைமுறைப்படுத்துவதில்லை. அவர்களும் எதையும் கேட்பதில்லை.
கொடைக்கானல் விவகாரத்தில் மாசுகட்டுப்பாடு வாரியம், யூனிலீவர் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அதை முறையாகச் செய்யவில்லை.
தமிழ்நாட்டில் மாசு கட்டுப்படுத்த பல சட்ட விதிமுறைகள் உள்ளது.