கோரத்தாண்டவமே கொரோனா !
இலாப வெறியை நோக்கமாகக் கொண்ட ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின்
கொள்ளை லாபம் தேடும்
முதலாளித்துவ
கோரத்தாண்டவமே கொரோனா ! – பகுதி 1
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கொரோனா கொள்ளை நோயிலிருந்து மீள மனித சமூகம் முயன்று வருகிறது. 2019-ம் ஆண்டின் கடைசி மாதங்களில் பரவ ஆரம்பித்த சார்ஸ்–கொரோனா வைரஸ்-2ல் இருந்து வேறுபட்ட, 9 வகையான உருத் திரிந்த (Virus Variants) சார்ஸ்–கொரோனா வைரஸ்-2 வைரஸ்கள் உருவாகியுள்ளது.
இந்தியாவிலும் B.1.617, B.1.617.1, B.1.617.2, B.1.617.3, போன்ற உருத் திரிந்த (Virus Variants) சார்ஸ்–கொரோனா வைரஸ்கள் உருவாகி பரவி வருகிறது. இதனால், பல்வேறு நாடுகளில் கோவிட்-19 கொள்ளை நோயின் இரண்டாம், மூன்றாம் அலைகள் உருவாகியுள்ளன. இதுவரை உலகளவில் 17 கோடி மக்கள் இக்கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 35 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவிலும் கிட்டதட்ட 2.5 கோடிக்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 லட்சம் பேர் இறந்துள்ளதாகவும் அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் பார்வைக்கு, இப்படிப்பட்ட கொள்ளைநோய்கள் ஊகிக்க முடியாததாகவும், மனித இனத்திற்கு இயற்கையால் வழங்கப்பட்ட தண்டனை போலவும் இருப்பதாக பலர் கருதலாம். தற்போது பரவிவரும் கோவிட்-19 கொள்ளைநோயும் அப்படிப்பட்ட இயற்கை பேரிடர் என்று கருதலாம். ஆனால், கொள்ளைநோய்களை உண்டாக்கும் கிருமிகளின் தோற்றம் மற்றும் அதன் வேகமான உருத் திரிபு மாற்றம் ஆகியவற்றிற்கு பொருத்தமான சமூக, பொருளாதார நிலைமைகளும் இருக்கும்போதுதான் இத்தகைய பெருந்தொற்று கொள்ளைநோயாக அவை உருவாகின்றன, என்பது இன்னும் சற்றும் ஆழமாக ஆய்வு செய்தால் நமக்குத் தெரியவரும்.
தற்போது ஏற்பட்டுள்ள கோவிட்-19 என்னும் உலகளாவிய கொள்ளைநோய் மற்றும் இதற்கு முன்னால் உருவாகிய ஆந்த்ராக்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களின் உருவாக்கத்திற்கான அடிப்படைக் காரணத்தை சற்று ஆழமாக ஆய்வு செய்தால், அதன் அடித்தளத்தை தற்காலத்திய முதலாளித்துவ உற்பத்திமுறையிலும், உலக முதலாளித்துவ நெருக்கடியிலும் கண்டுகொள்ள முடியும்.
இன்றைய சூழலில், உலக முதலாளித்துவம் சிக்கியுள்ள கட்டமைப்பு நெருக்கடியை கோவிட்-19 மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த கோவிட்-19 நோயின் பரவலை தடுக்க’ உலகின் பல அரசுகள் ஊரடங்கு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளன. ஏற்கெனவே, நெருக்கடியின் விளிம்பை தொட்டுவிட்ட பொருளாதாரம் இதனால் இருண்ட ஆழமான சுழலில் விழும் என்று முதலாளித்துவ அறிவுஜீவிகள் கூறுகின்றனர்.
ஆனால், இவர்கள் அனைவருமே தீர்வே காணமுடியாத பொருளாதார நெருக்கடிக்கு மட்டுமல்ல, இக்கொள்ளைநோய் உருவானதற்கும் முதலாளித்துவ இலாப வெறிதான் காரணம் என்பதை வசதியாக பேச மறுக்கின்றனர். பொதுவாக, இப்படிப்பட்ட கொள்ளைநோய்கள் உருவாகுவது முதலாளித்துவ உற்பத்தி முறையின் இலாபவெறி கொண்ட இயக்கத்தில் எப்படி உள்ளார்ந்து இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள இக்கட்டுரை பயன்படும் என்று கருதுகிறோம். வாசகர்களின் வசதி கருதி இந்தக் கட்டுரையை சிறு சிறு பகுதிகளாக பிரித்து வெளியிடுகிறோம்.
கொள்ளைநோய்கள் பற்றிய ஒரு சுருக்கமான வரலாறு :
கொள்ளை நோய்கள் உருவாகுவதும், அதனால் மனித சமூகம் பாதிப்படைவதும் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே ஆரம்பமாகிவிட்டது. இருந்தபோதிலும், கொள்ளைநோய்களில் ஒருவகையான கோவிட்-19 போன்ற ஃபுளு கொள்ளைநோய்களை (Pandemic flu) உருவாக்கும் வைரஸ்களின் தோற்றத்தை தற்காலத்திய இலாபவெறி கொண்ட முதலாளித்துவ உற்பத்திமுறை அதிகளவில் சாத்தியப்படுத்துகிறது. இதை பார்ப்பதற்கு முன்பு, மனித சமூகம் இதுவரை சந்தித்துள்ள கொள்ளைநோய்களைப் பற்றி ஒரு வரைக்கோட்டு சித்திரத்தை பார்த்துவிடுவோம்.
ஆரம்ப கால மனித சமூகம் வேட்டை மற்றும் உணவு தேடும் சிறு குழுக்களாக இருந்தது. அப்போது சில சமயங்களில் விலங்கு மற்றும் சுற்றுசூழலில் இருந்து அச்சமூக குழுக்கள் தொற்று நோய்களை எதிர்கொண்டன. ஆனால், அச்சிறு குழுக்களில் இருந்து மற்ற குழுக்களுக்கு அந்நோய்கள் பரவ மிக குறைவான வாய்ப்புகளே இருந்தது. சில காலத்தில், அந்நோய் தொற்றுக்கு உட்பட்ட சமூக குழுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுக்கொண்டன. இந்த நிலைமை, கிட்டதட்ட 10,000 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட புதிய கற்கால புரட்சிக்கு பிறகு மாற்றமடைந்தது.
புதிய கற்கால புரட்சி நிலையான இருப்பிடத்தைக் கொண்ட விவசாய சமூகத்தை படைத்தது. மக்கள்தொகை பெருகியது; அவ்விருப்பிடங்களில் மனிதக் கழிவுகளும் பெருகின; காட்டு விலங்குகள் வளர்ப்புப் பிராணிகளாக மாற்றப்பட்டு, மனிதன் கால்நடை வளர்ப்பில் ஈடுபடத் துவங்கிய பிறகு மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. இந்நிலைமைகள் வைரஸ் கிருமிகளும் மற்ற நோய் ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகளும் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கும், மனிதனிடமிருந்து விலங்குகளுக்கும் பரவ அதிகமான வாய்ப்புகள் ஏற்பட்டன. மேலும், வாணிபத்தின் வளர்ச்சி, போர் மற்றும் இடப்பெயர்வு மூலமாக மற்ற மக்கள் சமூகத்திற்கும் பரவ வாய்ப்புகள் ஏற்பட்டன.
இங்ஙனம் பரவிய நோய்களை “நாகரிக நோய்கள்” என்கிறார் வில்லியம் மக்நில். ஏதாவது புதிய வாணிப தொடர்புகளோ போர்களோ இம்மக்கள் சமூகத்திற்கு ஏற்பட்டால் புதிய நோய்கள் பரவும் வாய்ப்புகளும் ஏற்பட்டன. உதாரணமாக, கி.பி. 165-ம் ஆண்டில் ரோமப் பேரரசின் ஒரு படைப் பிரிவு மெசப்பொட்டாமியாவில் முகாமிட்டபோது ஒரு கொள்ளை நோய் (பெரியம்மையாக இருக்கலாம் என்கிறார் மக்நீல்) பரவியது1. இது கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு நீடித்து அப்பகுதியில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையை அழித்தது.
மெடிட்டெரியன் பகுதியில் கி.பி. 541-767 வரை மீண்டும் மீண்டும் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றான புபானிக் பிளேக் நோய் எலிகளை கொண்டு வந்த வணிக கப்பல்கள் மூலம் பரவ வாய்ப்பு ஏற்பட்டது2. இது சில கோடி மக்களை பலி வாங்கியது. 13-ம் நூற்றாண்டில் மங்கோலிய பேரரசு கண்டடைந்த வணிக வழித்தடங்கள் மூலமாக ஸ்டெப்பி பகுதிகளுக்கு புபானிக் பிளேக் நோய் பரவியது. பிறகு, கேரவன் வணிக வழித்தடம் மூலமாக கிரிமியாவை 1346-ம் ஆண்டு அதே பிளேக் நோய் தாக்கி ஐரோப்பா முழுவதும் பரவியது. இதைத்தான் ஐரோப்பிய வரலாற்றில் கருப்புச் சாவு (பிளாக் டெத் – Black Death) என்று கூறப்படுகிறது. இது 1346-50 ஆண்டுகளில் மட்டும் ஐரோப்பிய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களின் இறப்புக்கு காரணமாகியது.
மக்கள் தொகை அடர்த்தியின் வளர்ச்சி, மற்றும் குப்பைகள், கழிவுகள் குவிவது, மக்கள் வாழும் தெருக்களில் எலிகளின் பெருக்கம் ஆகியவை நோய் தொற்று வேகமாக பரவுவதை உறுதிபடுத்தின. ஐரோப்பாவில் 1670-ம் ஆண்டுவரை இந்த பிளேக் நோய் தொடர்ச்சியாக வெடித்தெழுந்து கொண்டிருந்தது.
பிறகு, காலனியாதிக்க காலக்கட்டத்தில் இக்கொள்ளை நோய்கள் இன்னும் தீவிரமான முகமெடுத்தன. பெரியம்மை, பொன்னுக்குவீங்கி, தட்டம்மை ஆகிய கொள்ளை நோய்கள் காலனியாதிக்க கொடுமைகளுடன் சேர்ந்துகொண்டன. கி.பி.1568-ம் ஆண்டிலிருந்து கிட்டதட்ட அரைநூற்றாண்டில் மத்திய மெக்சிகோ மக்கள் தொகையில் 90 சதவீதத்தினரை கொள்ளைநோய்கள் துடைத்தெறிந்தன. அமெரிக்க கண்டம் முழுவதும் இதே நிலைமைதான் இருந்தது. இதனால், பெரு நாட்டின் பூர்வகுடி மக்களின் எண்ணிக்கை 70 லட்சத்திலிருந்து 5 லட்சமாக குறைந்தது.
18-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் (குறிப்பாக இங்கிலாந்தில்) தோன்றிய தொழில்துறை முதலாளித்துவம் நகரமயமாக்கலை புதிய வேகத்தில் துரிதப்படுத்தியது. மோசமான, சுகாதாரமற்ற சேரிகளில் அதிக எண்ணிக்கையிலான உழைக்கும் மக்களைக் கொண்ட நகரங்கள் பரவலாக தோன்றின. வறுமை, மன அழுத்தம் மற்றும் கூட்டநெரிசலான வாழ்விடங்கள் ஆகியவை தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்பை மேலும் அதிகப்படுத்தியது. ஒரு முறை தொற்றுநோய் உண்டானால் அது வேகமாகப் பரவியது. மேலும், இந்த பெருநகரங்களுக்கு ஒரு முறை தொற்றுநோய் வந்துவிட்டால் அந்நகரங்களுடன் தொடர்புடைய வணிக வலைபின்னல்கள் அனைத்திலும் அத்தொற்றுநோய் பரவியது.
19-ம் நூற்றாண்டில், நகரமயமாக்கல், வறுமை மற்றும் காலனியாதிக்கம் எல்லாம் சேர்ந்து புது அச்சுறுத்தல்களை உருவாக்கின. காலரா நோய் இந்தியாவில்தான் பல நூற்றாண்டுகளாக இருந்தது. 1817-ம் ஆண்டு இந்தியாவில் உருவான இக்கொள்ளை நோய் ரஷ்யாவையும் சீனாவையும் தாக்கியது. மூன்று வருடங்களுக்கு பிறகு, பிரிட்டிஷ் படைகள் கிழக்கு மெடிட்டேரியன் பகுதிக்கு இந்நோயை கொண்டு சென்றன. 1832, 1848 மற்றும் 1866 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் ஆரம்பித்த கொள்ளை நோய்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பரவியது. பிரிட்டிஷ் பேரரசுடன் இந்தியா இணைக்கப்பட்ட பிறகு, மக்கள் மற்றும் உற்பத்தி பண்டங்களின் போக்குவரத்துடன் காலராவும் பரவியது. இது பாதிக்கப்பட்டவர்களில் கிட்டதட்ட பாதி பேரை கொன்றது. காலரா பாக்டீரியா தண்ணீரில் பரவும் என்பதால், இந்நோய் ஏழைகள் வாழும் பகுதிகளையே வெகுவாக பாதித்தது.
19-ம் நூற்றாண்டு மான்செஸ்டரில் கொள்ளைநோய்கள் பரவிய நிலைமையை ஏங்கெல்ஸ் விரிவாக பதிவு செய்துள்ளார்:
“கொள்ளை நோய் எதிர்வரும் போது, நகர முதலாளிகளை ஒர் அனைத்தும் தழுவிய பயம் பற்றிக்கொள்கிறது. ஏழைகள் வாழும் அழுக்கான குடிசைகளை அவர்கள் ஞாபகப்படுத்தி கொள்கிறனர். உறுதியாக, இந்த சேரிகள் கொள்ளைநோய்க்கான மையாக உருவாகும் என்பதையும், அந்த கோரம் எல்லா திசைகளிலும் பரவி சொத்துடைத்த வர்க்கங்களின் வீடுகளையும் வந்தடையும் என்பதையும் கண்டு நடுக்கமுறுகின்றனர்.
6,951 மான்செஸ்டர் நகர வீடுகளில் நடத்தப்பட்ட ஒர் ஆய்வு தெரிவிப்பது குறித்து மேலும் சொல்கிறார், “2,565 வீடுகளுக்கு உடனடியாக வெள்ளையடிக்க வேண்டுயுள்ளது… 960 வீடுகள் சிதலமடைந்துவிட்டன, 939 வீடுகளில் போதுமான வடிகால் வசதி இல்லை, 1,435 வீடுகள் பூஞ்சை பிடித்துள்ளன, 452 வீடுகளில் காற்றோட்ட சூழல் இல்லை, 2,221 வீடுகளில் கழிப்பறை இல்லை” 3.
1872ல் மீண்டும் இதே கொள்ளை நோய் பிரச்சினையை தனது குடியிருப்புப் பிரச்சினை பற்றிய கட்டுரையில் எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். முதலாளிகள் தொழிலாளர்களின் குடியிருப்பு பிரச்சினையில் ஏன் அக்கறை கொண்டுள்ளனர் என்பதை விளக்கும்போது,
“தொழிலாளர்கள் பெருந்திரளாக நெருக்கமாக வசிக்கின்ற “ஏழ்மையான வட்டாரங்கள்” என்று கூறப்படுகின்ற பகுதிகள் நம்முடைய நகரங்களில் அடிக்கடி ஏற்படுகின்ற எல்லாவிதமான கொள்ளை நோய்களும் உற்பத்தியாகின்ற இடங்களாக இருக்கின்றன என்று நவீன இயற்கை விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. காலரா, டைபஸ், நச்சுக்காய்ச்சல், அம்மை மற்றும் இதர ஆபத்தான நோய்களின் கிருமிகள் இந்த தொழிலாளிவர்க்கக் குடியிருப்புக்களின் நச்சுக் காற்றிலும் அசுத்தமான தண்ணீரிலும் பரவுகின்றன. இங்கே இக்கிருமிகள் அநேகமாக முற்றிலும் அழிவதில்லை. சாதகமான சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட உடன், அவை கொள்ளை நோய்களாக வளர்ந்து உற்பத்தியான இடங்களுக்கு அப்பால், நகரத்தில் முதலாளிகள் வசிக்கின்ற அதிக காற்றோட்டமான, ஆரோக்கியமான பகுதிகளுக்குப் பரவுகின்றன.
தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் கொள்ளை நோய்கள் உற்பத்தியாவதை முதலாளித்துவ வர்க்கம் ஆபத்தில்லாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதன் விளைவுகளினால் அதற்கு ஆபத்தேற்படுகிறது. மரண தேவன் தொழிலாளர்களின் அணிகளைத் தாக்குவதைப் போலவே ஈவிரக்கமின்றி அதன் அணிகளையும் தாக்குகிறது. இந்த உண்மை விஞ்ஞானரீதியாக நிறுவப்பட்ட உடன் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதில் போட்டியிடுகின்ற மேன்மையான உணர்ச்சி பரோபகார முதலாளிகளைத் தூண்டியது… எனினும் முதலாளித்துவ சமூக அமைப்பு அகற்றப்படவேண்டிய தீமைகளை மீண்டும் மீண்டும் மறு உற்பத்திச் செய்கிறது; அதிலும் தடுக்கமுடியாத அவசியத்துடன் அதைச் செய்வதால் – இங்கிலாந்தில் கூட – அவற்றை அகற்றுதல் ஒரு காலடி அளவுகூட முன்னேற்றமடையவில்லை.”4.
பல நாடுகளில், எங்கெல்ஸ் குறிப்பிடும் நிலைமைகள் இன்னும் கடந்த காலத்திற்கு உரியனவாகவில்லை. உதாரணமாக, 2018-ல் ஏமனில் போரும் பஞ்சமும் ஏற்பட்ட போது காலரா பரவி கொள்ளை நோயாக உருவெடுத்தது. தமிழகத்தில் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் சமீப ஆண்டுகளில் தலையெடுத்தன. இந்தியாவில் காசநோயின் காரணமாக தினமும் கிட்டதட்ட 1000 பேர் இறக்கின்றனர் 5.
பொதுமைபடுத்தி பார்த்தால், துரிதமாக்கப்பட்ட நகரமயமாக்கல், அதனுடன் சேர்ந்து உருவாகும் தொழிலாளர் சேரிகள் ஆகிய பொது நிலைமைகள் ஆரம்ப கால தொழில்துறை கட்டத்தில் கொள்ளை நோய்கள் உருவாக காரணமாக இருந்தன. தீவிரமான கொள்ளைநோய்கள், நாட்பட்ட நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு, இவற்றுடன் பொது மருத்துவத்திற்கான நிதிகள் ஒதுக்காமை மற்றும் சுகாதாரமின்மை ஆகியவை எல்லாம் நவீன உலகத்தில் அகற்றப்பட முடியாமல் நீடிப்பவைதான்.
இப்படிப்பட்ட கொள்ளை நோய்கள் உருவாக காரணமாக இருக்கும் நிலைமைகள் சற்று மேம்பட்ட போதிலும் (வளர்ந்த நாடுகளில் இது நடந்துள்ளது, பின்தங்கிய நாடுகளில் அந்த அளவு கூட நிறைவேறவில்லை), புதிய அச்சுறுத்தல், ஃபுளு கொள்ளை நோய் (Pandemic flu) முன்னுக்கு வந்துள்ளது. ஃபுளு காய்ச்சலால் ஏற்படும் கொள்ளைநோய்கள் வரலாற்றில் ஏற்கெனவே ஏற்பட்டுள்ளன என்றாலும், இப்போது புது ஆற்றலுடன் அவை முன்னுக்கு வந்துள்ளன.
முதலாம் உலக போர் முடிவுற இருந்த சமயத்தில் ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃபுளுவை (Spanish Flu) பார்த்தாலே போதும். 1918-ம் ஆண்டு வசந்த காலத்தில் ஏற்பட்ட இக்கொள்ளைநோயின் முதல் அலையில் எண்ணிக்கையில் குறைவான இறப்புகளே ஏற்பட்டன. ஆனால், போரின் தாக்கத்தில் அது பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. இரண்டாவது அலையில், அவ்வைரஸ் மேலும் சடுதி–மாற்றமடைந்து, பெரிய இழப்புகளை ஏற்படுத்தியது. உலக போர் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் போக்குவரத்தை அத்தியாவசியப்படுத்தியது.
பல கோடிக்கணக்கான மக்கள் கூட்டமாக மோசமான நிலைமைகளில் வாழத் தள்ளப்பட்டனர். இந்நிலைமைகள் கொள்ளைநோய் உருவாவதற்கான அடிப்படையை உருவாக்கி கொடுத்தது. ஸ்பானிஷ் ஃபுளு மூன்றாவது அலையாகவும் 1919-ல் பரவியது. இந்த மூன்று அலைகளிலும் கிட்டதட்ட 5 முதல் 10 கோடி மக்கள் இறந்ததாக இப்போது கணிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை, போரில் இறந்தவர்களைவிட அதிகம். எல்லா நிலைமைகளிலும் நேரடியாக ஸ்பானிஷ் ஃபுளு வைரஸால் மக்கள் இறக்கவில்லை. அது ஏற்படுத்திய உடல்நலக் குறைவு பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுத்து, நிமோனியா ஏற்பட்டும் இறந்தனர்.
இக்கொள்ளை நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டது ஏழை மக்களும், காலனிய நாடுகளும்தான். இந்தியாவில் மட்டும் 1.5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். பசி, சுகாதாரமற்ற வீடுகள், பிரிட்டன் அரசு அதன் படைகளுக்கு உணவளிக்க உணவு தானியங்களை பறித்துச் சென்றதால் ஏற்பட்ட பஞ்சத்தில் மக்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தது என எல்லா சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகளும் இக்கொள்ளை நோயுடன் கைக்கோர்த்ததால்தான் அவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டது.
பிறகு, பல பத்தாண்டுகள் அறிவியலாளர்கள் ஃபுளு காய்ச்சலின் தன்மையையும் அது ஏன் பெரிய இழப்புகளை ஏற்படுத்துகிறது என்பதையும் ஆராய உலகளாவிய ஃபுளு கண்காணிப்பு திட்டம் (Global Influenza Surveillance Programme) ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டம் உலக சுகாதார நிறுவனம் அமைக்கப்பட்ட பிறகு அதன் பகுதியானது. 1957-ல் ஆசிய ஃபுளு கொள்ளை நோய் ஏற்பட்டது; இதில் 20 லட்சம் மக்கள் இறந்தனர். 1968-ல் ஹாங்காங் ஃபுளு கொள்ளை நோய் ஏற்பட்டது; இதில் 10 லட்சம் மக்கள் இறந்தனர்.
குறிப்பாக, கொள்ளைநோய்களில் ஒரு வகையான ஃபுளு கொள்ளைநோய்கள் சமீப ஆண்டுகளில் அடிக்கடி தோன்றி மனித சமூகத்தை தாக்கிவருகிறது; சார்ஸ்-1, மெர்ஸ், பன்றிக் காய்ச்சல் போன்றவை இதற்கு உதாரணங்கள். கடந்த 50 ஆண்டுகளாக உயிர்வேதியியல், வைரஸ்–உயிரியல், மூலக்கூறு–உயிரியல், நுண்ணுயிரியல் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் காரணமாக ஃபுளுக்காய்ச்சல் வைரஸ்கள் பற்றி மேலும் பருண்மையான, நுட்பமான ஆய்வுகள் செய்ய வழி ஏற்பட்டிருக்கிறது.
இத்துறைகளின் துணைக்கொண்டு நுண்ணுயிர்கள் அடையும் பலவிதமான சடுதி–மாற்றங்கள் (சீரோடைப், ஜீனொடைப், கீனோடைப், பீனோடைப் மாற்றங்கள்) பற்றியும், அதன்மூலம் ஏற்படும் சூனாசிஸ் தாவல் குறித்தும் பல ஆய்வுகள் கடந்த 25 ஆண்டுகளாக செய்யப்பட்டுள்ளது.
அதாவது, பொதுவாக மனிதர்களை தாக்கும் புதிய கொள்ளைநோய்கள், குறிப்பாக இந்த ஃபுளு கொள்ளைநோய்களை உருவாக்கும் வைரஸ்கள்/கிருமிகள் சூனாடிக் தாவல் என்னும் வைரஸ்–உயிரியல் நிகழ்ச்சிபோக்கு மூலம் தோற்றமெடுப்பதை நவீன அறிவியல் ஆதாரத்துடன் நிறுவியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள, கோவிட்-19 கொள்ளைநோயும் இப்படிதான் (அதாவது, சூனாடிக் தாவல் மூலம்தான்) மனிதர்களை தாக்கும் வைரஸ்களாக உருவாகியிருக்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர் 6.
தொடரும்
அடிக்குறிப்பு :
1. McNeill, William H, 1976, Plagues and People
2. McNeill, William H, 1976, Plagues and People
3. Engels, Friedrich, 1975 [1845], The Condition of the Working Class in England, in Karl Marx and Frederick Engels, Collected Works, volume 4.
4. மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் பன்னிரண்டு பகுதிகளில், தொகுதி 8, பக். 62-64; அழுத்தம் நம்முடையது.
5. Global TB Report, WHO, 2019. 2018-ல் மட்டும் 4,49,000 பேர் காசநோயால் இந்தியாவில் இறந்துள்ளனர்.