ச்ச்சீ..வசங்கர் பாபா

 தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவசங்கர் பாபா என்று அழைக்கப்படும் சிவசங்கருக்கு எதிராக அவர் நடத்தி வரும் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவிகள் அளித்துள்ள பாலியல் தொந்தரவு புகார்கள், நாளுக்கு நாள் புதிய சர்ச்சைகளை தோற்றுவித்து வருகின்றன. யார் இந்த சிவசங்கர் பாபா? இவருக்கு எதிராக வலுத்து வரும் சர்ச்சைகள் என்ன?

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் 1949ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பிறந்தவர் சிவசங்கர். இவரது தந்தை நாராயண சர்மா, தாய் விஜயலட்சுமி. இவரது தந்தை பள்ளி ஆசிரியர். பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலேயே முடித்த இவர், வேதியியல் துறையில் பட்டப்படிப்பும், சரக்குகள், போக்குவரத்து கையாளல் பிரிவில் முதுகலை படிப்பும் படித்தார்.

கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு சொந்தமாக போக்குவரத்து நிறுவனமொன்றை நடத்திய சிவசங்கர் 1978 முதல் 1983 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட், கட்டட ஒப்பந்ததாரர், ஆவணப்பட தயாரிப்பாளர் போன்ற பன்முக அடையாளங்களுடன் தொழில் உலகில் வலம் வந்தார். இவரது தொழிற்துறை தொடர்புகள் மற்றும் செல்வாக்கு இவருக்கு ரோட்டரி கிளப் ஆஃப் அண்ணாநகர், ஆந்திர வர்த்தக சம்மேளன நிர்வாகக் குழு, இந்தியன் வங்கி நிர்வாக குழு, ரயில்வே ஆலோசனை வாரியம் ஆகியவற்றில் உறுப்பினர் அந்தஸ்தையும், சரக்கு போக்குவரத்து சங்க தலைவர் போன்ற பதவிகளையும் பெற்றுக் கொடுத்தது.

இடையே திருமணம் செய்து கொண்ட சிவசங்கருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 1980களின் பிற்பகுதியில், சென்னை மண்ணடியில் சிறிய இடத்தை நிறுவி அங்கு தன்னை நாடி வருவோருக்கு போதனைகளை வழங்கினார் சிவசங்கர்.

உடல்நலம், திருமணம், வேலைவாய்ப்பு, குழந்தைப்பேறு என தன்னை நாடி வந்த பலருக்கும் அருளுரை எனப்படும் தமது போதனைகளை வழங்கிய அவர், ஏற்கெனவே தமக்கு சமூகத்தில் இருந்த செல்வாக்கு மூலம் வேண்டியவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்க பாலமாக செயல்பட்டார். இதனால், இவரது புகழ் பல நிலைகளில் பரவியது.

விரிவடைந்த சிவசங்கரின் சாம்ராஜ்ஜியம்

சிவசங்கர் பாபா

பட மூலாதாரம்

இந்த கால கட்டத்தில் சென்னை நீலாங்கரையில் தனி பங்களாவில் குடியேறிய அவர், சிறு வயதிலிருந்தே ஆன்மிக ஈடுபாடு உள்ளதாகவும் அதற்கு ரத்னகிரி கோயிலில் உள்ள பாலமுருகன் சுவாமியின் அருளே காரணம் என்றும் கூறத் தொடங்கினார். தமது ஆன்மிக பாதையை வலுப்படுத்தும் நோக்குடன் சம்ரட்சணா என்ற இயக்கத்தை இவர் தொடங்கினார்.

இவரது ஆன்மிக சொற்பொழிவுகளுக்கு 1990களில் தனி ஆதரவாளர்கள் இருந்தனர். இவரது வீட்டுக்குள்ளேயே கோயில் அமைத்திருந்ததால் அவரது வீட்டுக்கு அருகே இருப்பவர்கள், நண்பர்கள், அவர்கள் மூலம் அறிமுகமானவர்கள் என வருகை தந்த பலருள் சிலர் இவரது பக்தர்களாயினர். ஆன்மிக தொடர்புடன் அரசியல் தொடர்பும் இவருக்கு அதிகமானதால், 2001இல் சென்னை கேளம்பாக்கத்தில் சர்வதேச உறைவிட பள்ளியொன்றை எழுப்பினார் சிவசங்கர். பிறகு அதே கேளம்பாக்கத்தில் பல்நோக்கு மருத்துவமனையை கட்டினார் சிவசங்கர்.

ரியல் எஸ்டேட் தொடர்பும் பின்புலமும் இருந்ததால், சிவசங்கரின் ஆன்மிக இயக்கத்துக்கு நன்கொடைகள் பல முனைகளில் இருந்து குவிந்தன. அதனால், கேளம்பாக்கத்தில் இவரது இயக்கத்தின் தொண்டுக்காக இவர் எழுப்பிய கட்டுமானங்கள் விரிவடைந்தன.

இது தவிர முதியோர் இல்லம், கிராமப்புற பயிற்சியகம், வேலைவாய்ப்பு முகாம்கள், மருத்துவ முகாம்கள் போன்றவற்றை அடிக்கடி நடத்தினார் சிவசங்கர்.

இறைவனின் அவதாரம் என்று தன்னை அழைத்துக் கொள்ளத் தொடங்கிய அவர், ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இறைவனுடன் கலப்பதை ஆன்மிகம் என்று போதித்தார். அவரது போதனையால் கவரப்பட்டவர்கள், அவரது பெயருடன் சேர்த்து சிவசங்கர் பாபா என அழைக்கத் தொடங்கினர்.

சிவசங்கரை எதிர்த்த யாகவா முனிவர்

சிவசங்கர் பாபா

பட மூலாதாரம்

1990களில் யதார்த்தமான ஆன்மிகத்தில் ஈடுபாடு மிக்கவராக அறியப்பட்ட யாகவா முனிவர் சென்னை மேடவாக்கத்தில் வசித்து வந்தார். ஆடம்பரமும் ஆர்ப்பரிப்பும் மிக்கவராகவும் ஆடிப்பாடி ஆன்மிக உணர்வை வெளிப்படுத்தக் கூடியவராக சிவசங்கர் பாபா இருக்க, யாகவா முனிவர், மிகப்பெரிய பங்களாவில் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். தனது வீட்டுக் கிணற்றில் புண்ணிய தீர்த்தம் உள்ளதாகவும் பட்சிகளுடன் பேசுவேன் என்றும் கூறி யதார்த்த கருத்துகளை தன்னை பார்க்க வருவோரிடம் வழங்கினார் யாகவா முனிவர்.

இந்த இருவரும் கொள்கை, கருத்துகளில் முரண்பாடு கொண்டிருந்த வேளையில், 1990களின் கடைசி காலகட்டத்தில் இருவரையும் ஒரு நேருக்கு நேர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எதிரெதிரே அமரவைத்தார் தனியார் ஊடக நிகழ்ச்சி இயக்குநரும் தொகுப்பாளருமான வீரபாண்டியன்.

அந்த நிகழ்ச்சியில் சிவசங்கரின் கருத்துகளை கடுமையாக எதிர்த்த யாகவா முனிவர், ஒரு கட்டத்தில் தனது கையில் வைத்திருந்த துண்டால் அவரை அடிக்கவும் செய்ய, அந்த நிகழ்ச்சி, அன்றைய காலகட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசக்கூடியதாக மாறியது. அதன் பிறகு இந்த இருவரின் புகழும் பட்டி, தொட்டியெல்லாம் பரவியது.

இதன் பிறகு சில ஆண்டுகளில் யாகவா முனிவர் காலமானார்.

யாகவா முனிவருக்குப் பிறகு சிவசங்கர் பாபாவை எதிர்த்தவர் பேராசிரியரும் திரைப்பட நடிகருமான பெரியார்தாசன். இருவரும் நேருக்கு நேராக சந்தித்ததை தவிர்த்தபோதும், இவர்களின் கருத்து மோதல்கள் தொடர்பான பல கட்டுரைகளை இந்த செய்தியை எழுதும் நிருபர் 2000ஆம் ஆண்டுகளில் பதிவு செய்திருக்கிறார்.

பெரியார் தாசன் எழுப்பிய பல கேள்விகளுக்கும் தன்னை இறைவனின் அவதாரம் என்பதை தன்னை நம்புபவர்கள் உணருவார்கள். பெரியார் தாசன் அதை நேரில் அனுபவிக்க வேண்டும் என்று கூறுவார் சிவசங்கர்.

அந்த காலகட்டத்திலேயே சிவசங்கர் மீது ஆள் கடத்தல், பாலியல் புகார்கள் போன்ற சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், அது தொடர்பான வழக்குகள் திடீரென விசாரிக்கப்பட்டு பிறகு அவை தொடரப்படாமல் போன நிகழ்வுகள் அதிகம்.

இது குறித்து பெரியார்தாசன் எழுப்பிய கேள்விக்கு, சிவசங்கர் நேரடியாக பதில் தரவில்லை. தொழில்களில் போட்டி இருப்பது போல தனக்கு ஆன்மிக உலகில் நிலவும் போட்டியால் பரப்பப்பட்ட வதந்திகளே அவை என்று சிவசங்கர் கூறினார்.

இப்போது சிவசங்கர் மீது என்ன சர்ச்சை?

@SriSivaShankarBaba

பட மூலாதாரம்,

சிவசங்கர் நடத்தி வரும் தனியார் உறைவிட பள்ளியில் மாணவிகளிடம் அவர் தவறாக நடந்து கொண்டது, வரம்பு மீறி அவர்களை கட்டிப்பிடித்து முத்தமிட்டது, பாலியல் தொந்தரவு செய்தது போன்ற புகார்களை அவரது பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சிலர் எழுத்துபூர்வமாக கொடுத்துள்ளனர்.

சென்னை நகர காவல்துறையிடமும் தமிழ்நாடு குழந்தைகள் நலக்குழுவினரிடமும் இது தொடர்பான புகார்களை அந்த மாணவிகள் அளித்துள்ளனர்.

பல மாணவிகள் தங்களுடைய பதின்ம வயதில் அனுபவித்ததாக கூறப்படும் பள்ளிகால பாலியல் கொடுமைகளை இப்போது மனம் திறந்து வெளிப்படுத்த முன்வந்துள்ளனர். சமூக ஊடகங்களில் பலர் இது குறித்து பகிர்ந்து வருகிறார்கள்.

சிவசங்கர் பாபா

பட மூலாதாரம்,

சில மாணவிகள், சிவசங்கரின் இந்த செயல்பாடுகள் தொடர்பாக பல பெற்றோருக்கும் தெரியும் என்று கூறியுள்ளனர். ஒரு மாணவி அளித்த நேர்காணலில், சிவசங்கரின் அழைப்புக்கு இணங்க மாணவிகளுக்கு பல வகையில் அழுத்தம் தரப்படும் என்றும் உதாரணமாக, முதல் இரண்டு பருவ தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைத்து வழங்கப்படும் என்று கூறுவர். இதனால், சிவசங்கர் பாபாவின் ஆன்மிக நிகழ்வுக்கு சென்று அவரை வணங்குமாறு மாணவிகள் வற்புறுத்தப்படுவார்கள் என்றும் அவ்வாறு செல்லும் மாணவிகளிடம் நெருங்கிப் பழகி பாலியல் தொந்தரவு கொடுப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் கூறியுள்ளார்.

பெரும்பாலான மாணவிகள் உறைவிட பள்ளி விடுதியில் தங்கிப்படித்ததால் அவர்களே சிவசங்கரால் அதிகம் இலக்கு வைக்கப்பட்டதாகவும் இது பற்றி பள்ளி ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்தபோது, அவர்கள், சிவசங்கரை இறைவனின் அவதாரம் என்றும் அவரே கிருஷ்ணர் என்றும் கூறியதாக அந்த மாணவி கூறியுள்ளார்.

வேறு சில மாணவிகள், சிவசங்கர் தன்னை கிருஷ்ணரின் அவதாரம் என்று அழைத்துக் கொள்வதாகவும், அவரை தேடி வரும் பெண்கள் கோபிகைகள் என்றும் தங்களை கருதி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதுபோன்ற புகார்கள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளன. இருப்பினும் புகார்களின் தீவிரம் கருதி அவற்றில் சில தமிழ்நாடு காவல்துறையின் குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த புகார்கள் ஆபாசத்தை தூண்டும் வகையிலும் பாலியல் செயல்களுக்கு முகாந்திரமாக இருப்பதாகவும் கருதுவதால், சிவசங்கரை விசாரணைக்கு அழைக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், சிவசங்கர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், தனக்கு எதிரான வழக்குகளில் ஜாமீன் கேட்டு அவரது தரப்பு நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது. அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "சிவசங்கருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்," என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்த சென்னை காவல்துறையின் தனிப்படையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, சிவசங்கருக்கு எதிரான புகார்கள் அதிகரித்து வருவதால், அவர் டேராடூனில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க அவரது கடவுச்சீட்டை முடக்கவும், அவரை விமான நிலையங்களில் வேறு மாநில காவலர்கள் பார்த்தால் தமிழக காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள், தற்காப்புக்கலை பயிற்றுநர் போன்றோருக்கு எதிராக பல்வேறு பாலியல் தொந்தரவு வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், 72 வயதாகும் சிவசங்கருக்கு எதிராகவும் வலுத்து வரும் பாலியல் தொடர்புடைய புகார்கள், மக்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளன..

---------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?