ஒன்றியம் என்றால் கோபம் வருவதுஏன்!
கடந்த சில தினங்களாக தமிழ் ட்விட்டர் பயனாளிகள் தங்கள் பெயர்களை பல்வேறு மிருகங்களின் பெயர்களைப்போல மாற்றிக்கொண்டு பேசி வருகிறார்கள். இது எப்படித் துவங்கியது?
இதில் பா.ஜ.க. கோபமடைவது ஏன்?
மனிதர்களைத் தவிர்த்து பிற உயிரினங்களும் தங்களுக்கென ட்விட்டர் கணக்குகளை வைத்திருந்தால் என்ன ஆகும்? கூடுதலாக அவற்றுக்கு அரசியல் சார்பும் இருந்தால், அவை எப்படிப் பேசிக்கொள்ளும்? கடந்த சில நாட்களாக தமிழ் ட்விட்டர் சந்தில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
ஆனால், இதில் எதிர்பாராத அம்சம், இந்த விளையாட்டை பாரதிய ஜனதா கட்சியினர் சிலர் தங்கள் கட்சிக்கு எதிரான போக்காக பார்க்க ஆரம்பித்திருப்பதுதான்.
இதெல்லாம் எப்படித் துவங்கியது?
தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு அறிக்கைகளில் மத்திய அரசு என்பதற்குப் பதிலாக ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்டு வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என அழைப்பதா அல்லது தமிழகம் என அழைப்பதா என விவாதம் எழுந்தது.
இந்த நிலையில், இந்து மக்கள் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து "இவனுக பேசுற பேச்சைப் பார்த்தா டைனோசர்கூட தமிழில்தான் பேசிச்சின்னு சொல்லுவானுங்க போல இருக்கு" என்று ட்வீட் செய்யப்பட, அதற்கு, DinosaurOffcial என்ற ட்விட்டர் கணக்கிலிருந்து, "ஆமாடா, நான் தமிழில்தான் பேசினேன்" என்று பதில் தரப்பட்டது.
இதையடுத்து, ஒவ்வொருவராகத் தங்கள் ட்விட்டர் கணக்கின் அடையாளத்தை மிருகங்களின் பெயராக மாற்றிக்கொள்ள ஆரம்பித்தனர். ஜூன் 7ஆம் தேதி துவங்கிய இந்தப் போக்கு ஒரே நாளில் சூடுபிடித்தது.
ஆயிரக்கணக்கான ட்விட்டர்வாசிகள் தங்கள் ஐடிகளை மிருகங்களின் பெயர்களின் மாற்றிக்கொண்டனர். #ஒன்றியஉயிரினங்கள் மற்றும் #ஒன்றிய_உயிரினங்கள் என்ற ஹேஷ்டேகுடன் தங்கள் பதிவுகளை வெளியிட ஆரம்பித்தனர்.
இதையடுத்து ஜூன் எட்டாம் தேதி #ஒன்றியஉயிரினங்கள் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முன்னிலை பெற்றது. ஒன்றிய எலி, மண்புழு, புலி, கலர் கோழிக்குஞ்சு, நட்டுவாக்காலி, ஒன்றிய சிங்கம், உ.பி. மாடு என பல பெயர்களில் இவர்கள் உரையாட ஆரம்பித்தனர்.
இதில் பல உரையாடல்கள் ஜாலியாக அமைந்திருந்தன. பல உரையாடல்கள் தற்கால அரசியலை விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்தன.
இந்த நிலையில் ஜூன் பத்தாம் தேதியன்று, இந்த உயிரினங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தங்கள் காட்டை சிலர் ஆக்கிரமிப்பதாகக் கூறி #காடு_எங்கடா_ஜக்கி என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர். இந்த ஹேஷ்டேகும் நாள் முழுவதும் ட்ரெண்டிங்கில் இருந்தது. இதற்குப் பிறகு ஒருவர் ஒன்றிய உயிரினங்களுக்கு என சங்கம் ஒன்றைத் துவங்கினார்.
ஆனால், இந்த விவகாரத்தில் தொடர்பே இல்லாத பா.ஜ.க. திடீரென இதில் ஆத்திரம் அடைந்தது. பா.ஜ.கவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவரான சிடிஆர் நிர்மல் குமார், "Dravidian Stock, ஒன்றிய உயிரினங்கள் என பல திட்டங்கள் திடீரென உருவாக்கப்படுவதற்கு பின்னால் திமுகவின் 1962ம் ஆண்டு கோரிக்கை போன்ற ஏதேனும் சதித் திட்டம் தற்போது உள்ளதா?" என்று கேள்வியெழுப்பினார். இதையும் ஒன்றிய உயிரினங்கள் என அழைக்கப்படுபவர்கள் கேலி செய்து ட்விட்டர் பதிவில் ஈடுபட்டனர்.
சில ட்விட்டர்வாசிகள் மிருகங்களைப் போலப் பேசிக் கொள்வதற்கு பா.ஜ.க ஏன் ஆத்திரமடைகிறது என நிர்மல் குமாரிடம் கேட்டபோது, "ஒன்றியம்" என்ற சொல்லை பிரபலப்படுத்தவே இவர்கள் இதுபோலச் செய்கிறார்கள் என்றார்.
"தி.மு.க. சில ஆண்டுகளுக்கு முன்பாக, பிரிவினை பேசியதைப் போல இப்போதும் செய்ய நினைக்கிறது. மத்திய அரசு என்பதற்குப் பதிலாக, ஒன்றியம் என்ற சொல்லை ஒரே வாரத்தில் எல்லோரிடமும் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். Dravidian Stock என்ற சொல்லையும் அவர்கள் இப்படித்தான் பிரபலப்படுத்தினார்கள். இப்போது தி.மு.க. ஆதரவு சேனல்களும் ஒன்றியம் என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகின்றன. இவர்களுடைய அரசியலுக்காக இளைஞர்களிடம் பிரிவினை எண்ணத்தைக் கொண்டு சேர்க்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான் இந்த ஒன்றிய மிருகங்கள் என்ற பிரசாரம்" என யிடம் தெரிவித்தார் நிர்மல்குமார்.
யாரோ சிலர் ட்விட்டரில் மிருகங்களைப் போலப் பேசிக் கொள்வதை இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமா எனக் கேள்வியெழுப்பியபோது, "இது தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம்தான். இதெல்லாம் டிஜிட்டல் வியூகத்தில் ஒரு பகுதி. பெரிய அளவில் பணம் செலவு செய்யாமல் இது நடந்திருக்காது. 1962க்கு முன்பு இருந்ததைப் போல பெரிய அளவில் பிரிவினை எண்ணத்தைத் தூண்ட நினைக்கிறார்கள். அதை ஆரம்பத்திலேயே தடுக்க நினைக்கிறோம்" என்கிறார் நிர்மல்குமார்.
ஆனால், ஒன்றிய உயிரினங்கள் இதைப் பற்றிக் கவலைப்படுவதாக இல்லை. வழக்கம்போல அவை தங்கள் உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன.
தமிழ் ட்விட்டர் பரப்பில் இதுபோல விந்தையான ட்ரெண்டிங் நடப்பது இது முதல் முறையல்ல.
2019ஆம் ஆண்டு மே மாத இறுதியில் வடிவேலுவை வைத்து #Pray_for_Nesamani என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. அந்தத் தருணத்தில் மீண்டும் நரேந்திர மோதி மீண்டும் பிரதமராகியிருந்த நிலையில் #ModiSarkar2 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால், #Pray_for_Nesamani ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகத் துவங்கியதும், மோதி தொடர்பான ஹேஷ்டேக் பின்தங்கியது. அப்போதும் தமிழக பா.ஜ.கவினர் இந்தப் போக்கு குறித்து தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்.
தமிழக பா.ஜ.கவினர் இந்தப் போக்கு குறித்து
புலம்பி வருகின்றனர்.
----------------------------------------------------------------------------
கடுமையாக உடற்பயிற்சி
செய்பவரா?
இதைக் கவனியுங்கள்!
இந்த நோயால் மூளையிலிருந்து தசைகளுக்கு செய்தி கொண்டு செல்லும் மோட்டார் நியூரான்கள் பழுதடைவதால் நடப்பது, அசைவது மற்றும் மூச்சுவிடும் திறன் பாதிக்கப்படும். அதேபோல ஒருவரின் ஆயுளையும் குறைத்துவிடும்.
இதனால் யார் பாதிக்கப்படுவார்கள் எதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதை புரிந்து கொள்வது கடினம். மரபணு ஆபத்துகளுடன் பிறந்தவர்களும் மற்றும் பிற சூழலியல் காரணங்களும் இந்த நோய்க்கான காரணிகளாக அமைகிறது.
உடற்பயிற்சிக்கும் நோய்க்கும் எப்போதும் தொடர்புகள் உண்டு. ஆனால் இது எதேச்சையாக பேசப்படுகிறதா, இல்லை உண்மையான காரணங்கள் உள்ளனவா என்பதுதான் நீண்ட காலமாக நடைபெறும் விவாதம். இந்த நோய் குறித்து இத்தாலிய கால்பந்து வீரர்களிடம் நடத்திய சோதனையில் அவர்களுக்கு வழக்கத்தை காட்டிலும் ஆறுமடங்கு அதிகமான ஆபத்து இருப்பது தெரியவந்தது.
ரக்பி வீரர் ராப் பரோ, கால்பந்து வீரர் ஸ்டீஃபென் டர்பி, ரக்பி கூட்டமைப்பை சேர்ந்த டூடி வெர் ஆகியோர் இந்த நோய் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளனர்.
இது எல்லாம் வைத்து உடற்பயிற்சி, மோட்டார் நியூரான் நோய்கான காரணமாக உள்ளது என நாங்கள் தெரிவித்தோம், என்கிறார் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஜோனத்தன் கூப்பர் நாக்.
புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் பலர் இந்த மோட்டார் நியுரான் நோயால் பாதிக்கப்படுவது எதேச்னையான விஷயமல்ல.
5 லட்சம் பேரின் மரபணு மாதிரிகளை சேகரித்துள்ள பிரிட்டன் பயோபேங்க் திட்ட தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர்.
அதில் தீவிர உடற்பயிற்சி செய்யத்தூண்டும் டிஎன்ஏ கொண்டவர்களுக்கு இந்த நோய் வரும் ஆபத்து அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு இபயோமெடிசன் என்னும் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.
இதில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்
உடற்பயிற்சி செய்யும்போது, மோட்டார் நியூரான் நோயை அதிகரிக்கும் மரபணுக்கள் தங்கள் செயல்பாட்டை மாற்றுகிறது.
மோட்டார் நியூரான் நோயுடன் தொடர்புடைய திரிபை கொண்டவர்கள், தீவிரமாக உடற்பயிற்சி செய்தால் இளம் வயதிலேயே இந்த நோய்க்கு ஆளாகின்றனர்.
இதில் தீவிரமாக உடற்பயிற்சி என்பது ஒரு வாரத்தில் 2-3 நாட்களுக்கும் மேலாக 15-30 நிமிடங்களுக்கு மேல் உடற்பயிற்சி செய்வது. ஆனால் இவ்வாறு உடற்பயிற்சி செய்யும் அனைவருக்கும் இந்த நோய் வருவதில்லை.
"யாரெல்லாம் ஆபத்தில் உள்ளார்கள், யாரெல்லாம் உடற்பயிற்சி செய்யலாம் செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கும் அளவிற்கு ஆய்வு செல்லவில்லை" என கூப்பர் நாக் தெரிவிக்கிறார்.
"அனைவரும் உடற்பயிற்சியை நிறுத்திவிட்டால் அது நன்மையைக் காட்டிலும் கெடுதலையே உண்டாக்கும்" என்கிறார் அவர்.
இந்த ஆய்வு மேலும் விரிவடையும் என தான் நம்புவதாக அவர் தெரிவிக்கிறார்.
"மரபணு ரீதியாக பாதிக்கப்படும் ஆபத்து உள்ளவர்களில் அதீத உடல் பயிற்சி மற்றும் மோட்டார் நியூரான் நோய்க்கு உண்டான தொடர்பு குறித்த படிப்பினையை இந்த ஆய்வு கொடுத்துள்ளது" என்கிறார் ஷெஃபீல்டில் உள்ள நியூரோ சயின்ஸ் இன்ஸ்டியூட்டின் இயக்குநர் பேராசிரிய பமீலா ஷா.
இதுதொடர்பான மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
"மோட்டார் நியூரான் நோய்க்கான மரபியல் மற்றும் புறக்காரணிகள் தனித்தனியாக ஆராயப்பட்டன ஆனால் தற்போது இந்த ஆய்வு இந்த இரண்டையும் சேர்த்து நடத்தப்பட்டுள்ளது ஒரு புதிய பாதைக்கு வித்திடுகிறது." என மோட்டார் நியூரான் கூட்டமைப்பை சேர்ந்த மருத்துவர் ப்ரியன் டிக்கி தெரிவித்துள்ளா