தரஷன் செய்த கொலை
தமிழில் இருக்கும் முன்னணி ஹீரோக்களான விஜய், அஜித் போல கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர், தர்ஷன் தூகுதீபா.
பழம்பெரும் நடிகர் தூகுதீபா ஸ்ரீனிவாசின் மகனான இவர், 90களில் திரையுதிர்க்குள் நுழைந்தார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஹிட் அடித்து இருக்கின்றன.
இதனாலேயே இவருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் உண்டு. 47 வயதாகும் இவருக்கு 2003 ஆம் ஆண்டு விஜயலக்ஷ்மி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடிக்கு வினீஷ் என்ற மகனும் இருக்கிறார்.
தர்ஷனும், முன்னாள் கன்னட நடிகை பவித்ரா கௌடாவும் கடந்த 10 வருடங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை எனினும், இவர்களது உறவு கன்னட திரை உலகில் அனைவருக்கும் தெரிந்ததாக இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது தர்ஷன்-பவித்ரா ஆகிய இருவர் மீதும் கொலை வழக்கு ஒன்று பாய்ந்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்த 33 வயது நபர் ரேணுகா சாமி என்பவரை தர்ஷன் ஆட்களை விட்டு கொன்றதாக கூறப்படுகிறது.
பிரபல மருந்து கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த ரேணுகா சாமியின் உடல் பெங்களூரில் இருக்கும் சுமன்ஹலி பாலத்திற்கு அருகே ஜூன் 9ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.
இவர் instagram பக்கத்தில் பொய் கணக்கு தொடங்கி, தர்ஷனின் காதலி என கூறப்படும் பவித்ராவிற்கு தகாத வகையில் குறுந்தகவல்கள் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக தனது ரசிகர் மன்ற ஆட்களை வைத்து ரேணுகா சாமியை தர்ஷன் கொன்றதாக அவர் மீது வழக்குப்பாய்ந்துள்ளது.
இந்த வழக்கில் தர்ஷன்-பவித்ரா உள்பட 13 பேர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலில், ரேணுகா சாமியை பண விவகாரம் காரணமாக தாங்கள் கொலை செய்ததாக கூறி இருவர் காமாக்ஷி பாளையா காவல் நிலையத்தில் இருவர் சரண் அடைந்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சரண் அடைந்த இருவர் உட்பட, தர்ஷன்-பவித்ராவிற்கும், இன்னும் 11 பேருக்கும் இதில் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
அதுமட்டுமின்றி கொலை சம்பவம் நடந்த ஜூன் 8ஆம் தேதி (ரேணுகா சாமி கொலை செய்யப்பட்ட தினம்) இரவு என்னென்ன நடக்கிறது என்பதை தர்ஷனுக்கு whatsapp மூலம் கொலை செய்தவர்கள் தெரிவித்துக் கொண்டே இருந்துள்ளனர்.
இந்த whatsapp உரையாடலும் போலீசாரால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கொலை வழக்கு குறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, ரேணுகா சாமி கொலை செய்யப்படுவதற்கு முன் தர்ஷன் அவரை பெல்டால் அடித்ததாகவும் கொலை செய்யும் ஆட்கள் வந்தவுடன் அவர் அங்கிருந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இவரை கொலை செய்வதற்காக 30 லட்சம் ரூபாயை தர்ஷன் வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
போலீசில் சரணடைபவர்களுக்கு ஆளுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்து தர்ஷன் செட்டில் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் நடிகர் தர்ஷன் மைசூரில் இருக்கும் தனது பண்ணை வீட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதை எடுத்து இவரை விசாரணைக்காக பெங்களூருவிற்கு போலீசார் அழைத்து வந்துள்ளனர்.
இதே போல அவருடன் காதல் உறவில் இருப்பதாக கூறப்படும் பவித்ரா கௌடாவும் தற்போது போலீசாரின் பிடியில் இருக்கிறார்.
தர்ஷனின் மனைவி விஜயலக்ஷ்மி, 2011ஆம் ஆண்டு அவர் மீது கொலை முயற்சி வழக்கு தொடுத்திருக்கிறார். இதே போல, தர்ஷன் பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.