வெறும் சங்கம் மட்டுமே
நாடு தழுவிய அளவில் பல லட்சம் மாணவ, மாணவியரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நீட், ஜேஇஇ, யுஜிசி நெட் உள்பட 15-க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ – நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி) என்பது உள்ளபடியே சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (சொசைட்டீஸ் ரெஜிஸ்ட்ரேஷன் ஆக்ட்) கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு சாதாரண சங்கம் மட்டுமே (அடுக்குமாடிக் குடியிருப்போர் நலச் சங்கத்தைப் போல)!
2018 செப்டம்பர் அரசு ஆணையில், ‘உலகத் தரத்தில் தொழில்நுட்பங்களை உள்வாங்கித் தேர்வுகளை நம்பகத்தன்மை கொண்ட, வெளிப்படையான, தரமிக்கதாக’த் தேர்வுகளை முகமை நடத்தும் என்று குறிப்பிட்டுள்ளது.
உருவாக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தேசிய தேர்வுகள் முகமை செயல்பட்டிருக்கிறதா? என்றால் கேள்விக்குறிதான். 2021-ல் முதன்முதலாக ஒரு சர்ச்சை வெளிப்பட்டது. 2020 ஜேஇஇ தேர்வு வினாத் தாள் கசிந்ததில் மூளையாகச் செயல்பட்டதாக ரஷியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவ்வப்போது குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிவந்தபோதிலும், தற்போது பெரியளவில் நீட் தேர்வுகள் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, இந்தத் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை பற்றியும் இதன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றியும் சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி வருகின்றன.
எக்ஸ் தளப் பதிவொன்றில் தேசிய தேர்வுகள் முகமை பற்றியும் முகமையின் செயல்பாடுகள் பற்றியும் திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
பத்து நபர்களைக் கொண்ட ஆட்சிக் குழுவால் நடத்தப்படும் தேர்வு முகமைக்கென ஒரு பொதுக்குழுவும் இல்லை. இந்த முகமையை எந்தவொரு நாடாளுமன்ற சட்டமும் நிர்வகிக்கவில்லை, மேலும் இது அரசு ஊழியர்களின் நடத்தையை நிர்வகிக்கும் விதிகளுக்கு உட்பட்டதாகவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டி வியப்புத் தெரிவித்துள்ளார் வழக்கறிஞர் வில்சன்.
பதிவில் வில்சன் குறிப்பிட்டிருப்பதாவது:
“நீட், க்யூட், யுஜிசி-நெட், சிமேட், ஜிபேட், ஸ்வயம் மற்றும் பிற குறிப்பிடத்தக்க தேர்வுகளை நடத்துவதற்கு பொறுப்பான, பாரதிய ஜனதா அரசின் சிந்தனையில் உதித்த தேசிய தேர்வுகள் முகமையானது, சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுயாதீனமான, பொறுப்புரைக்க வேண்டியில்லாத ஓர் அமைப்பாக இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இது குடியிருப்பு சங்கங்களைப் போன்றதொரு தோற்றத்தையே தருகிறது.
தேசிய தேர்வுகள் முகமையானது, தினமும் மூன்று லட்சம் தேர்வுகளை நடத்தும் திறன் கொண்ட உலகின் மிகப் பெரிய தேர்வு முகமைகளில் ஒன்றாகும். இந்த தேர்வு முகமையின் மூலம் ஏறத்தாழ 1.30 கோடி மாணவர்கள் தேர்வுகளுக்காகப் பதிவு செய்துள்ளனர். இந்த முகமையின் செயல்பாடுகளுக்கான ஆரம்ப நிதியாக முதல் வருடம் ரூ.25 கோடியும், 2023-ம் வருடம் ரூ.35 கோடியும் ஒதுக்க ஒன்றிய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்தது. ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் இந்த முகமைக்கு நிதியளிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையானது சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் 2018-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இது கல்வி அமைச்சகத்தின் கீழான ஒரு தன்னாட்சி மற்றும் தன்னிறைவு மிக்க தேர்வு முகமை என்று கூறுகிறது. பத்துப் பேர் கொண்ட நிர்வாகக் குழு தேசிய தேர்வு முகமையை வழிநடத்துகிறது மற்றும் இதற்கென ஒரு பொதுக்குழு என்பது இல்லை. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த முகமையை எந்தவொரு நாடாளுமன்ற சட்டமும் நிர்வகிக்கவில்லை, மேலும் இது அரசு ஊழியர்களின் நடத்தையை நிர்வகிக்கும் விதிகளுக்கு உட்பட்டதாகவும் இல்லை. சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தும் யுபிஎஸ்சி-யானது, 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது. தேசிய தேர்வு முகமையானது 2018-ல் தேர்வுகளை நடத்துவதற்கான பொறுப்பினை ஏற்றது.
ஆனால் இந்த முகமையின் முறைகேடுகள் மற்றும் தவறான நடத்தை குற்றச்சாட்டுகள் போன்றவை இந்த முகமை நடத்திய 12 தேர்வுகளைச் சிதைத்துள்ளன. அந்த வகையில், நீட் மற்றும் யுஜிசி - நெட் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் அம்பலப்படுத்தப்பட்டது உட்பட இந்த முகமை தொடங்கப்பட்டதிலிருந்து இதுபோன்ற பிரச்சினைகள் குறித்த புகார்கள் தொடர்ந்து வருகின்றன.
கடந்த பத்தாண்டுகளில், அதாவது 2014 முதல் 2024 வரை, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கமானது சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் மசோதாக்கள் உள்பட, மக்களவையில் 427 மசோதாக்களையும், மாநிலங்களவையில் 365 மசோதாக்களையும் நிறைவேற்றியது. இருப்பினும், மாணவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமைக்கு சட்டப்பூர்வ ஆதரவை வழங்குவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு எந்த ஆர்வமும் காட்டவில்லை.
இந்தச் சட்டம் இல்லாததால், தேசிய தேர்வுகள் முகமை பொறுப்பு கூறலைத் தவிர்க்கவும், ஊழல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக எந்த எதிர்விளைவுகளையும் சந்திக்காமல் இருக்கவும் அனுமதிக்கப்படுகிறது. 2018 முதல் இந்த முகமை நடத்தும் தேர்வுகளில் நம்பிக்கை வைத்துள்ள பல லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த ஒழுங்குபடுத்தப்படாத மற்றும் பொறுப்பற்ற முகமையால் அவர்களின் ஒன்றுமறியா வாழ்க்கையைச் சிதைத்துக் கொள்ள வேண்டுமா? கல்வித் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்ன கூறப் போகிறார்?” என்று குறிப்பிட்டுள்ளார் வில்சன்.
இதனிடையே, நீட் தேர்வு கேள்வித் தாள்கள் கசிந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டிருக்கும் பிகார் மாநில காவல் துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவிடம் முக்கியமான தகவல்களைப் பகிர்வதில் தேசிய தேர்வுகள் முகமை மிகவும் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
முகமையையும் தங்களுடைய விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ள பிகார் காவல்துறை, இந்த வினாத் தாள்கள் கசிவு விவகாரத்தில் முகமையின் உயர் அலுவலர்களும் சம்பந்தப்பட்டிருக்கூடிய வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை எனக் கருதுகிறது.
பிகார் காவல் துறையிடமிருந்து விசாரணைப் பொறுப்பேற்றுள்ள மத்திய புலனாய்வுத் துறையும் இதே கோணத்தில் முகமையுடன் தொடர்புள்ளதாகக் கருதப்படும் பிரமுகர்கள், பள்ளிகள், நிறுவனங்களில் சோதனைகளையும் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகிறது. ராஞ்சியில் தேர்வு ஒருங்கிணைப்பாளர் ஒருவரையும் கைதுசெய்துள்ளது.
ஆண்டுதோறும் நாட்டின் எதிர்காலமான பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் தேர்வுகளை நடத்திவந்த தேசியத் தேர்வுகள் முகமை பற்றித் தொடர்ந்து வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்றன.