கையாலாகாத
பழனிசாமி
“ஆடத் தெரியாதவள், தெரு கோணல் என்றாளாம்” என்று ஒரு
பழமொழி உண்டு. அது இன்றைய சூழலில் அ.தி.மு.க. பழனிசாமிக்குத்தான் பொருந்தும்.
எடப்பாடி பழனிசாமி வசம் அ.தி.மு.க. வந்தது முதல் அவர் எதிர்கொண்ட தேர்தல்கள் அனைத்திலும் தோல்வி. தோல்வியைத் தவிர வேறு இல்லை.
அப்படி ஒரு அரசியல் வரலாறு அவருக்கு இருக்கிறது.
2019 - – நாடாளுமன்றத் தேர்தல்
2019 - – சட்டமன்ற இடைத் தேர்தல்
2019- – 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்
2021 - – ஊரக உள்ளாட்சித் தேர்தல்
2021 - – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
2022 - – நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
2023 - – ஈரோடு இடைத்தேர்தல்
2024 - – நாடாளுமன்றத் தேர்தல் .
ஆகிய 8 தேர்தல்களிலும் தோற்றவர்தான் பழனிசாமி. விக்கிரவாண்டி இடைத் தேர்தலிலும் நின்றால் தோற்கத்தான் போகிறார்.
அதனால்தான், ‘தேர்தல் நேர்மையாக நடக்காது’ என்று சொல்லி தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார் பழனிசாமி.
இவரது தேர்தல் புறக்கணிப்புக்குப் பின்னால் இரண்டு தந்திரங்கள்இருக்கின்றன.
ஒன்று, அ.தி.மு.க. போட்டியிட்டால் நிச்சயம் தோற்றுப் போகும். எனவே அந்தத் தோல்வி முகத்தை மறைக்கலாம் என்பது!
இரண்டு, தனது எஜமானன் பா.ஜ.க.வின் வேட்பாளருக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து தனது அடிமை விசுவாசத்தைக் காட்டிக் கொள்ளலாம்என்பது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் முழுமையாக தி.மு.க. கூட்டணிக்கு போகவிடாமல் தடுக்க பழனி
சாமியை பயன்படுத்தியது பா.ஜ.க. அதிலும் வெற்றி பெற முடியாமல் மண்டை உடைந்தது தான் மிச்சம்.
அதேதான் விக்கிரவாண்டி இடைத் தேர்தலிலும் நடக்கப் போகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டசபைத் தேர்தலிலும் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிட்டன.
கூட்டணியாகத்தான் தோற்றன. எனவே, இவர்கள் சேர்ந்து வந்தாலும், பிரிந்து நின்றாலும் தோல்வி தான்.
பா.ஜ.க.வுக்கு மட்டுமல்ல, பா.ஜ.க.வுக்கு பல்லக்குத் தூக்கிகளாக யார் இருந்தாலும் அவர்களைத் தமிழ்நாட்டு மக்கள் தோல்வி அடையச் செய்வார்கள்.
இதனை மறந்து விட்டு பா.ஜ.க. பா.ம.க. – அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் பகல்வேஷம் கட்டி ஆடும் பம்மாத்து அரசியலை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பா.ஜ.க.வின் பத்தாண்டுகால அழிவு நடவடிக்கைகள் அனைத்துக்கும் துணை போன கட்சிகள்தான் அ.தி.மு.க.வும் பா.ம.க.வும். குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க.வும் பா.ம.க.வும் மாநிலங்களவையில் வாக்களிக்காமல் இருந்திருந்தால் அந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது.
சிறுபான்மை இசுலாமிய இன மக்களுக்கும், ஈழத் தமிழ் மக்களுக்கும் பச்சைத் துரோகம் இழைத்தவர்கள்தான் அ.தி.மு.க.வும் பா.ம.க.வும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை.
கடைசி வரையில் பா.ஜ.க.வின் அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களுக்கும் ஆதரவாக இருந்ததால்தான் ஒடிசாவில் நவீன் பட்நாயக்கும், ஆந்திராவில் ஜெகன் மோகனும் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பதை அ.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் மறந்து விடக் கூடாது.
இந்தக் கட்சியின் தலைமைகளை விட மக்கள் விழிப்பானவர்கள், விபரம் ஆனவர்கள். அவர்களுக்கு கட்சிகள்
எடுக்கும் நிலைப்பாடுகள் யாரைக் காப்பாற்ற என்பது நிச்சயமாகத் தெரியும்.
தேர்தல் தேதி அறிவித்ததும் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக அன்னியூர் சிவா என்ற சிவசண்முகத்தை அறிவிக்கிறார் தி.மு.க. தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.
அ.தி.மு.க. கூட்டணியும் பா.ஜ.க. கூட்டணியும் அதன்பிறகும் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் திணறுகிறது.
பா.ம.க. தலையில் கட்டித் தப்பித்துக் கொண்டது பா.ஜ.க.. தோல்வி நிச்சயம் என்று பா.ஜ.க.வுக்குத் தெரியும். அதனால் பா.ம.க.வை பலியாடாக பயன்படுத்திக் கொண்டது பா.ஜ.க..
அ.தி.மு.க.வுக்கு அப்படி எந்தப் பலியாடும் அந்தக் கூட்டணியில் இல்லை. உடனே, ‘தேர்தல் நேர்மையாக நடக்காது’ என்று சொல்லி தேர்தலைப்
புறக்கணித்து விட்டார்கள். தேர்தலில் நின்றால் தானே ஒன்பதாவது தோல்வி என்பார்கள், தேர்தலிலேயே நிற்கவில்லை என்றால் சொல்ல முடியாது
அல்லவா என்று புத்திசாலித்தனமாக முடிவெடுத்து விட்டதாகக் காட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
‘நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு அராஜகங்களையும் தில்லுமுல்லுகளையும் செய்து தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர்’ என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார்.
என்ன தில்லுமுல்லு செய்தார்கள்?
எங்கே அராஜகங்கள் நடந்தன என்பதைப் பழனிசாமி சொல்ல வேண்டாமா? நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியது தி.மு.க. அரசு அல்ல. மத்திய தேர்தல் ஆணையம் நடத்தியது.
அதில் உட்கார்ந்து இருப்பவர்கள் அனைவரும் நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்டவர்கள். நரேந்திர மோடிக்கு எதிராக, தி.மு.க.வை தேர்தல் ஆணையர்கள் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற வைத்து விடுவார்களா?
வெற்றி பெற வைத்தால் அவர்களால் அந்தப் பதவியில் இருக்க முடியுமா?
தேர்தல் ஆணையர்கள் மோடியின் ஆட்கள் என்பது சாதாரணக் குழந்தைக்குக் கூடத் தெரியுமே? இந்த மாநிலத்தை ஆண்ட பழனிசாமிக்கு இது கூடத் தெரியாதா?
தமிழ்நாட்டில் எந்தத் தொகுதியிலாவது, எந்த ஊரிலாவது சிறு வன்முறை நிகழ்ந்ததா?
பூத் கைப்பற்றப்பட்டதா?
கள்ள வாக்கு செலுத்தியதாக யாராவது கைது செய்யப்பட்டார்களா?
பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில்தான் அது அதிகம் நடந்தது. அப்படி ஏதும் நடக்காத நிலையில் இட்டுக் கட்டி, பொய்மூட்டைகளை அவிழ்க்கிறார் பழனிசாமி.
தேர்தலைப் புறக்கணிப்பதாக இருந்தால் நேர்மையான காரணத்தை பழனிசாமி சொல்லட்டும், அதைவிட்டு விட்டு தி.மு.க. மீது அவதூறுகளை எதற்காக அள்ளி வீசவேண்டும்?
தேர்தல் அரசியல் களத்தில் இல்லாமல் தன்னைத்தானே தோல்வி அடைய வைத்துக் கொண்டுள்ளார் பழனிசாமி. மக்கள் தான் அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமா?
இதோ, பழனிசாமியே தனக்கான தோல்வியைத் தழுவிக் கொள்கிறார்.
இது பாதம் தாங்கியின் அடுத்த பாணியாக பதிவு செய்வோம்.