வணங்குகிறோம்!
அவர்தாம் கலைஞர்!
நூற்றாண்டின் தலைவராம் தமிழினத் தலைவர் கலைஞருக்கு 101 பிறக்கிறது.
95 ஆண்டுகள் வாழ்ந்தார். அதில் 80 ஆண்டுகள் பொதுவாழ்வில் கழித்தார்.
70 ஆண்டுகள் இதழாசிரியராக இருந்தார். 70 ஆண்டுகள் எழுத்தாளராக வலம் வந்தார். 60 ஆண்டுகள் திரையுலகத்தில் இருந்தார். 50 ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்.
60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர். 5 முறை இந்த தாய்த்தமிழ்நாட்டின் முதலமைச்சர். இப்படி வாழ்ந்த காலம் முழுவதும்
வரலாறாய் வாழ்ந்தவருக்கு சூன் -– - 3 பிறந்தநாள். இந்த ஆண்டு நூற்றாண்டு விழா நிறையும் ஆண்டும். நிறைவாழ்க்கை வாழ்ந்தவரை நினைவு கூறி, நன்றி தெரிவிக்கும் ஆண்டு.
அவர் வாழ்ந்த காலம் முழுவதும் நேர்வழிப் பாதை தான். “என் பாதை சுயமரியாதைப் பாதை. தமிழின நலன் காக்கும் பாதை. தமிழ்நெறி காக்கும் பாதை. பெரியார் பாதை. அண்ணாவின் பாதை.
அறவழிப்பாதை. அமைதிப்பாதை. ஜனநாயக நெறிமுறைப்பாதை. பாடையே தயார் எனப் பயமுறுத்தினாலும் அந்தப் பாதையிலிருந்து மாற மாட்டேன்” என்று சொன்னார் கலைஞர்.
சொல்லியபடி வாழ்ந்தார் கலைஞர். வாழ்ந்த வாழ்க்கைப் பாதை தான் இன்று அவரது
நூற்றாண்டு விழாக் கொண்டாடும் புகழில் கொண்டு போய் உயர்த்தி நிறுத்தி இருக்கிறது. அவர் தாம் கலைஞர்!
அவரது வாழ்க்கையே போராட்டக் களமாக அமைந்திருந்தது. போராட்டமே வாழ்க்கை என்பார்கள் சிலர், எனக்கு வாழ்க்கையே போராட்டமாக இருந்தது என்று சொன்னார் கலைஞர். அவர் எழுதிய நெஞ்சுக்கு நீதியும், தமிழ்நாட்டு மக்கள் நெஞ்சில் எழுதிய நீதியும் ஒன்று தான்.
அவரது வாழ்க்கையே போராட்டம்தான்.
மேலோட்டமாகப் பார்த்தால் மிகமிக உயர்வான பதவிகளில் அவர் அமர்ந்து இருந்ததைப் போலத் தெரியலாம்.
அந்தப் பதவிகளுக்கு முன்னும், பதவிகளில் அமர்ந்திருந்த போதும் எதிர்கொண்ட சொல்லடியும், கல்லடியும் அதிகம்.
“நீங்கள் ஒருமுறை இறப்பதற்காகப் பயப்படுபவர்கள். ஆனால் நானோ பலமுறை கொல்லப்பட்டவன். சூழ்ச்சிகளாலும் நயவஞ்சகத்தாலும் என் உடல் மட்டுமே மரணத்தைக் காணவில்லையே தவிர எனது உயிர் பலமுறை மரணித்து உயிர்ப்பித்துள்ளது” என்று தலைவர் கலைஞர் ஒருமுறை சொன்னார்.
கொள்கைக்காரர்கள் -– அந்தக் கொள்கையை விடாப்பிடியாகக் கடைப்பிடிப்பவர்கள் -– அந்தக் கொள்கையைக் காக்க எதையும் செய்யத் தயாராக இருக்கும் தியாகிகள் ஆகிய அனைவரது வாழ்க்கையும் உலக வரலாற்றில் இப்படித்தான் இருந்துள்ளது. கலைஞரின் வாழ்க்கையும் அப்படித்தான் அமைந்திருந்தது.
அவர் செய்த நன்மைக்கான புகழைப் போலவே, பழிச் சொற்களையும் அதிகம் தாங்கினார். பாராட்டு மாலைகளை விட, பழிச் சொற்களாம் கற்கள் மூலமாகவே அவர் அதிக உரம் பெற்றார்.
அவரை அவரது எதிரிகளே, கூர்மையாக வைத்திருந்தார்கள்.
வலிமையாக ஆக்கினார்கள். எதிர்ப்பே அவரைப் பலப்படுத்தியது. எதிர்ப்பே அவரைத் தலைவராக ஆக்கியது. பழிச் சொற்களே தலைவர்களுக்கு எல்லாம் தலைவராக ஆக்கியது. அவர் தாம் கலைஞர்!
கல்லும் முள்ளும் தாண்டுவதாகவே அவரது பயணம் அமைந்திருந்தது. தீயைத் தாண்டியே திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்தார்.
பாழ்பட்டுக் கிடந்த தமிழ்நிலத்தை பண்படுத்தி –- நவீன தமிழ்நாடாக உருவாக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளும், திட்டங்களும், உழைப்பும் சாதாரணமானது அல்ல. பல பத்தாண்டுகள் ஆகி இருக்க வேண்டிய செயல்களை, சில பத்தாண்டுகளுக்குள் செயல்படுத்திக் காட்டினார்.
ஒவ்வொரு நொடியும் தமிழ்நாட்டுக்காகச் சிந்திப்பவரால் மட்டுமே இத்தனை பெரிதினும் பெரிதான செயல்களைச் செய்திருக்க முடியும். அவர் தாம் கலைஞர்!
‘அட்சய பாத்திரம் இல்லாமலே ஐந்து கோடி தமிழ் மக்களையும் அரவணைத்து நல்வாழ்வு நல்கிட அன்றாடம் சிந்தனை செய்வோம்’ என்று சொன்னவர் மட்டுமல்ல, அட்சய பாத்திரமாகவே இருந்தவர் கலைஞர்.
மேற்கு வங்க எழுத்தாளர் கர்க் சட்டர்ஜி சொல்லி இருக்கிறார்: “எங்கள் மாநிலத்துக்கு இப்படி ஒரு கலைஞர் கருணாநிதி இல்லையே என்று ஏங்கினோம்” என்கிறார். அத்தகைய ஏக்கத்தை எல்லா மாநிலங்களுக்கும் உருவாக்கியவர் கலைஞர். அவர் தாம் கலைஞர்!
“இரவு என்பதைத் தனது உழைப்பிற்கென நீட்டிக்கப்பட்ட பகல் பொழுதாக்கிக் கொண்டு தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்றிடும் பாட்டாளியே கலைஞர்” என்று சொன்னார் திரைப்பட இயக்குநர் மகேந்திரன்.
“ஒரு நாளைக்கு கருணாநிதி எத்தனை மணி நேரம் தூங்குகிறார் என்பதை மறைந்திருந்து பார்த்தால் தான் தெரியும், இந்த உயர்வுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பு” என்று கலைஞருக்கு 44 வயது இருக்கும் போதே பாராட்டிப் பேசி இருக்கிறார் பேரறிஞர் அண்ணா.
தமிழின இயக்கத்தின் தலைவரான பிறகும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆன பிறகும் இந்த உழைப்பை நிறுத்தவில்லை கலைஞர். அவர் தாம் கலைஞர்!
இவ்வளவு சூறாவளி அரசியலுக்கும் மத்தியில் எழுதினார். 6 பாகங்கள் ‘நெஞ்சுக்கு நீதி’.
4 ஆயிரத்து 171 பக்கங்கள். 54 தொகுதிகளாக வெளிவந்துள்ளது அவர் எழுதிய கடிதங்கள். சட்டமன்ற உரைகள் 12 தொகுதிகளாக வெளியாகி உள்ளது.
அவரது மொத்த எழுத்துக்களையும் தொகுத்தால் 500 தொகுதிகளுக்கும் மேலே வரும். பேச்சுகளைத் தொகுத்தால் அதைவிட இரண்டு மடங்கு வரும். 18 நாடகங்கள் எழுதி இருக்கிறார். 75 திரைப்படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார்.
சின்னத் திரையையும் விட்டு வைக்கவில்லை. கையெழுத்து இதழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.
கையெழுத்து போடும் அளவுக்கு பலம் இருக்கும் வரை எழுதினார்.
கார்ட்டூன் போட்டார். ரயிலில் எழுதினார். ஜெயிலில் எழுதினார். கோட்டையில் எழுதினார். கோபாலபுரத்தில் எழுதினார். தனிமையிலும் எழுதினார். பெருங்கூட்டத்துக்கு மத்தியிலும் எழுதினார்.
துணுக்கு எழுதினார். பாக்ஸ் கட்டினார். பலரது பல்லையும் பதம் பார்த்தார்.
எழுதுகோல், பதினோராவது விரலாக இருந்தது. அந்த விரலையே அதிகம் பயன்படுத்தினார். அவரது சிந்தனை ஏதோ ஒரு விதத்தில் வியர்வையைப் போல வெளியே வந்து கொண்டே இருந்தது.
பல பிறவிகளை ஒரு பிறவியில் வாழ்ந்தவர் கலைஞர்.
பலரது செயல்களையும் ஒரே காலத்தில் செய்து காட்டியவர் கலைஞர்.
அவர் தாம் கலைஞர்.