டிரம்ப் வரியால் சிக்கல்!
டிரம்ப்புக்கு எதிராக போராட்டம் !
அமெரிக்க அதிபரான டிரம்ப் அதிபரானது முதலே பிறப்பித்து வரும் உத்தரவுகள் பெரும் சர்ச்சையைக் கிளப்புவதாக இருக்கிறது. அமெரிக்காவை மீண்டும் முதன்மையான நாடாக மாற்றப் போகிறேன் என சொல்லி, அவர் வெளியிடும் வரி அறிவிப்புகள் சர்வதேச அளவில் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.
இப்படி தான் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு உலக நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். கடந்த ஏப்ரல் 2ம் தேதி இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ரெசிப்ரோக்கல் வரி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதில் உலக நாடுகள் மீது 10% முதல் 50% வரை வரிகள் விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கம்போடியா மீது 49% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது 27% வரி விதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் எந்தவொரு நாடும் அமெரிக்காவின் இந்த வரி விதிப்பில் இருந்து தப்பவில்லை. மேலும், அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் டிரம்ப் 10% வரியை அறிவித்துள்ளார். தங்கள் பொருட்களுக்கு வரி இருக்கக்கூடாது என நினைக்கும் நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்கள் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தினார்.
டிரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. டிரம்பின் இந்த வரி அறிவிப்பை கிட்டதட்ட ஒரு வர்த்தக போர் போலவே வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
ஏற்கனவே டிரம்ப் வரிக்கு எதிராகச் சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் வரியை அறிவித்துள்ளன. வரும் நாட்களில் மேலும் பல நாடுகள் வரிகளை அறிவிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.
அதேநேரம் மற்ற நாடுகளைக் காட்டிலும் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அமெரிக்கா தான். அனைத்து இறக்குமதிகளுக்கும் வரி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் பல்வேறு பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்க மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இப்போதே பொருட்களை வாங்கி குவித்து வருகிறார்கள்.
அமெரிக்க பொருளாதாரத்தையே டிரம்ப் நாசம் செய்வதாகச் சொல்லி, டிரம்பிற்கு எதிராக அமெரிக்காவில் இப்போது மாபெரும் போராட்டங்கள் நடந்து வருகிறது. டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு அவருக்கு எதிராக நடக்கும் மிகப் பெரிய போராட்டம் இதுவாகும்.
எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி அவரது சொந்த கட்சியான குடியரசு கட்சி உறுப்பினர்களும் கூட இந்த போராட்டங்களில் பங்கேற்றதாகச் சொல்லப்படுகிறது.
பெடரல் அரசு ஊழியர் ஆட்குறைப்பு நடவடிக்கை முதல் இறக்குமதி வரி உட்பட பல விஷயங்களுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அமெரிக்காவின் வாஷிங்டன், நியூயார்க், ஹூஸ்டன், புளோரிடா, கொலராடோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் என பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெறுகிறது.
இது தொடர்பாக அமெரிக்க மக்கள் கூறுகையில், "நான் டிரம்ப் மீது மிகவும் கோபமாக இருக்கிறேன். யாரோ சில பணக்காரர்கள் பலன் பெற இந்த நடவடிக்கைகளை எடுக்கிறார். இதனால் உழைக்கும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அமெரிக்க மக்களுக்கு இது பேரழிவை ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாகவே போராட்டத்திற்கு மிகப் பெரியளவில் மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது" என்றார்.
அமெரிக்காவின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் டிரம்பிற்கு நடக்கிறது. பிரிட்டன் தலைநகர் லண்டன், ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரங்களிலும் வாழும் அமெரிக்க மக்கள் டிரம்பிற்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அமெரிக்காவைப் பாதிக்கும் நடவடிக்கைகளை டிரம்ப் எடுக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.