மானியம் தரலாமே?
தற்பாதைக்கு எந்த மாநிலத்திலும் தேர்தல் இல்லை என்பதை மக்கள் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?
பெட்ரோல்-டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டிருப்பதுடன், சமையல் கேஸ் விலையையும் சிலிண்டருக்கு ஐம்பது ரூபாய் உயர்த்தியிருக்கிறதே மோடி அரசு.
அத்தோடு தேர்தல் இல்லாத காலம் என்பதை இந்திய மக்கள் எளிதாகப் புரிந்துகொள்வார்கள். கடந்த 11 ஆண்டுகளாக அந்தளவுக்கு மக்களைப் பழக்கியிருக்கிறார் பிரதமர் மோடி.

காங் ஆட்சிக் காலத்தில் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராகப் போராடிய பா.ஜ.கட்சியினர்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தற்பாதைய விலையைவிட பாதி விலையில்தான் சமையல் சிலிண்டர்களின் விலை இருந்தன. அப்போது பா.ஜ.க.வினர் தெருவில் உருண்டு புரளாத குறையாகப் போராட்டங்களை நடத்தினர்.
குறிப்பாக, பா.ஜ.க.வின் பெண் அடையாளங்களான ஸ்மிருதி இரானி, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் எனப் பலரும் ரோட்டில் சிலிண்டரை வைத்தும், விறகு அடுப்பு எரித்தும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மோடி ஆட்சிக்கு வந்தததிலிருந்து முந்தைய ஆட்சியைவிட ஏறத்தாழ இருமடங்கு அளவிற்கு கேஸ் சிலிண்டர் விலை ஏறிவிட்டது.
சர்வதே சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய்யின் விலை குறைந்திருந்த காலத்திலும் பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்திக்கொண்டே வந்தது மோடி அரசு. இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதால், விலையை நிர்ணயிக்கும் உரிமை அந்த நிறுவனங்களிடமே தரப்பட்டிருக்கிறது என விளக்கமும் அளிக்கப்பட்டது.
ரூபாய் 60, 70 என்ற நிலையில் இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயைத் தாண்டி விற்கப்படுகிறது. பெட்ரோல் விலைக்கும் டீசல் விலைக்குமான இடைவெளி பெருமளவில் குறைந்துவிட்டது. இரண்டின் விலையும் தாறுமாறாக உள்ளது.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்தால் சரக்குப் போக்குவரத்தை நடத்துபவர்கள் நெருக்கடியை எதிர்கொள்வார்கள். அவர்களின் சரக்குக் கட்டணம் உயர்த்தப்படும்.
அப்படி உயர்த்தப்படுகிற சரக்கு கட்டணத்தை, பொருட்களின் விலை மீது வைப்பார்கள் வணிகர்கள். மொத்த விற்பனை முதல் சில்லரை விற்பனை வரை இந்த விலையுயர்வு நீடிக்கும். இறுதியில், டூவீலரில் ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டுக்கொண்டு, டவுனுக்கு சென்றால் குறைந்த விலைக்குப் பொருட்களை வாங்கலாம் என நினைக்கும் நடுத்தர மக்கள், பெட்ரோலுக்கும் கூடுதலாக செலவழித்து, பொருட்களையும் அதிக காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
மற்ற பொருட்களின் விலை உயர்வுக்கு பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வே அடிப்படையாகும். மோடி அரசு அமைந்ததிலிருந்தே பெட்ரோல்-டீசல்-கேஸ் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்புவரை மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்தது. தங்கம் விலையை அறிந்துகொள்வதுபோல, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பை அறிந்துகொள்வது போல ஒவ்வொரு நாளும் பெட்ரோல்-டீசல் விலை என்ன என்று தெரிந்துகொண்டுதான் வெளியே போகக்கூடிய நிலையில் மக்கள் இருந்தார்கள்.
தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பெட்ரோல்-டீசல்-கேஸ் விலை பெரியளவில் மாற்றமில்லாமல் இருந்தது. கடந்த சில மாதங்களாகவே அதே நிலை நீடித்து வந்த நிலையில், கேஸ் சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தி, ஏறத்தாழ 1000 ரூபாய்க்கு ஒரு சிலிண்டர் என்ற நிலையைக்கு கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு.
பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து நட்டத்தை சந்திப்பதால் இந்த விலை உயர்வு என்று தெரிவித்திருக்கிறார் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்.
சமையல் கேஸ் சிலிண்டருக்கு ஏழை -நடுத்தர மக்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த மானியம், வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று உத்தரவாதம் தந்த மோடி அரசு, எங்கே அந்த மானியம் என்று தேடக்கூடிய நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது.
கடந்த முறை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, பெட்ரோல்-டீசல்-கேஸ் ஆகியவற்றுக்கு மானியம் அளிக்கப்படும் என தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.
பெட்ரோலுக்கு மட்டும் ஓரளவு மானியம் வழங்கப்பட்டதால், மற்ற மாநிலங்களில் அப்போது நூறு ரூபாயைக் கடந்திருந்த பெட்ரோல் விலை, தமிழ்நாட்டில் மட்டும் சற்று குறைவாக இருந்தது.
ஆனால் டீசல், கேஸ் ஆகியவற்றுக்கான மானியத்தை தி.மு.க. அரசு வழங்கவில்லை. குறிப்பிட்ட அளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிலையாக இருந்தால் மானியம் என்பது பயன்தரக்கூடியதாக இருக்கும்.
ஒன்றிய அரசு இவற்றின் விலையைக் கூட்டிக்கொண்டே போகும் நிலையில், மாநில அரசின் மானியம் எந்த சுமையையும் குறைக்காது என்றாலும், தூக்குகின்ற சுமையால் ஏற்படும் அழுத்தத்திற்கு ஒத்தடமாக அமையும்.
தமிழ்நாட்டு மக்கள் அத்தகைய ஒத்தடத்தை எதிர்பார்க்கிறார்கள்.