மோ(ச)டி கணக்கு

 இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக இருப்பதை மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 

2024-25ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 9.69% என்ற அளவில் உயர்ந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு இந்தளவு உயரமான வளர்ச்சியை அடைந்திருப்பது இப்போதுதான். கொரோனா காலகட்டத்திற்கு முன்பே, முந்தைய அ.தி.மு.க .ஆட்சியில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்திருந்த நிலையில், கடந்த நான்காண்டுகால தி.மு.க. ஆட்சியில் அது பல துறைகளில் முன்னேற்றத்தைக் கண்டு, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நல்ல முறையில் உயர்ந்திருப்பதால் இந்தளவுக்கு வளர்ச்சி பெற்றிருப்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஒன்றிய அரசிடமிருந்து வரிப்பங்கீடு சரியாக கிடைப்பதில்லை என்பதைத் தமிழ்நாடு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. 

கஜா புயல், வர்தா புயல் தொடங்கி மிக்ஜாம் புயல் வரை தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரின் போது போதியளவில் நிவாரணம் கிடைக்கவில்லை என்பதை முந்தைய அ.தி.மு.க அரசும் தற்போதைய தி.மு.க. அரசும் தெரிவித்து வருகின்றன.

 தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானத் திட்டங்கள் மத்திய அரசால் அறிவிக்கப்படவில்லை என்பதும், ரயில்வே போன்ற ஒன்றிய அரசின் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்பதும் தொடர் குற்றச்சாட்டாக உள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 2152 கோடி ரூபாயை, மும்மொழிப்பாடத்தை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் வழங்க முடியும் என மத்திய அரசு எதேச்சதிகாரமாகத் தெரிவித்துவிட்டதால், அந்த நிதியுமின்றிதான் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக நிதியை இந்த பட்ஜெட்டில் ஒதுக்கியிருக்கிறது.

சென்னை, கோவை போன்ற நகரங்களுக்கான அடுத்த கட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான நிதியும் வந்து சேரவில்லை என்பதும், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கவேண்டிய ஊதியத்திற்கானத் தொகையை வழங்கவில்லை என்பதும் கண்டனக் குரல்களாக வெளிப்பட்டு வருகின்றன.

இத்தனை நெருக்கடிக்கிடையிலும் தமிழ்நாடு தன்னுடைய பொருளாதார வளர்ச்சியில் மகாராஷ்ட்ரா, குஜராத் போன்ற அதிக தொழிற்சாலைகளையும், வணிகத்தையும் கொண்டுள்ள மாநிலங்களைவிட முன்னேறியிருப்பது பெரிய சாதனை என்று தமிழ்நாடு முதலமைச்சர், நிதியமைச்சர், தொழில்துறை அமைச்சர் உள்ளிட்டோர் குறிப்பிட்டுள்ளனர்.

 தமிழ்நாடு தன் சாதனைகளை சொல்லும்போது, அதற்கு ஏற்படும் சோதனைகளையும் குறிப்பிட்டுக்காட்டுவது இன்று நேற்றல்ல. 1952ல் முதல் பொதுத்தேர்தல் நடந்து பிரதமர் நேரு தலைமையிலான ஆட்சி அமைந்தபோதே சொல்லப்பட்டதுதான்.

 வடமாநிலங்களுக்கானத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது தென்னிந்திய மாநிலங்களுக்கு, அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டுக்கு அதிகளவில் திட்டங்கள் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இதற்கு முன் பிரதமர்களாக இருந்தவர்கள் இத்தகைய குரல்களை அக்கறையுடன் அணுகுவார்கள். மாநிலத்தில் ஆட்சி செய்பவர்களை அழைத்துப் பேசுவார்கள். முழுமையாக நிறைவேறாவிட்டாலும் முடிந்தளவுக்கு கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். 

தமிழ்நாடு அரசு சொல்வதற்குப் போட்டியாக லாவணிக் கச்சேரி நடத்த மாட்டார்கள். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் அவரும், உள்துறை அமைச்சரும், நிதியமைச்சரும், அவர்களது கட்சியின் மாநில-மாவட்ட நிர்வாகிகளும் தமிழ்நாட்டின் கோரிக்கையை இழிவு செய்வதையே கொள்கையாக வைத்திருக்கிறார்கள்.

ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கு முந்தைய ஒன்றிய அரசைவிட மூன்று மடங்கு நிதி கொடுப்பதாகவும், ஆனாலும் நிதி தரவில்லை என்று தமிழ்நாட்டில் சிலர் அழுதுகொண்டே இருப்பதாகவும், அவர்கள் அழட்டும் என்றும் பேசியிருக்கிறார். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்களும் அந்த மேடையில் இருந்த நிலையில்தான், அவர்கள் பதில் சொல்ல வாய்ப்பில்லாத நிலையில், பிரதமரின் இந்த எகத்தாளப் பேச்சு வெளிப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் மோடியின் அழுகுணி ஆட்டத்திற்கு சரியான பதிலடியைப் பதிவு செய்துள்ளார். 

பொருளாதாரத்தில் ஆரம்பக் கல்வி கற்பவர்களுக்குக்கூட, ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் திட்டங்களுக்கானத் தொகையும், செலவுகளுக்கானத் தொகையும் கூடிக்கொண்டே இருக்கும் என்பது தெரியும். 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட பட்ஜெட்டின் மதிப்பு எவ்வளவு, தற்போது போடப்படும் பட்ஜெட்டின் மதிப்பு எவ்வளவு, ஜி.டி.பி. என்கின்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு என்ன, இவற்றின் அடிப்படையில் பார்த்தால் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டிருக்கிற மத்திய அரசின் நிதி என்பது குறைவுதான் என்பதைப் பொட்டில் அடித்தாற்போல சொல்லியிருக்கிறார்.

தொகை எவ்வளவு என்பதைவிட, ஒதுக்கீட்டின் விகிதம் எவ்வளவு என்பதுதான் சரியான கணக்காக இருக்க முடியும். 

பிரதமர் சொன்னது மோ(ச)டி கணக்கு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

15000 கோடி வீட்டை காலி செய்ய