அமுக்கப்பட்ட தூத்துக்குடி

அதானியின் கட்டுப்பாட்டிற்குச் சென்ற

தூத்துக்குடி துறைமுகம்.

'

மது நாட்டிலுள்ள முக்கிய துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை உலகளாவிய பரிமாற்ற மையமாக மேம்படுத்தும் நோக்கில், கடந்த 2013-ஆம் ஆண்டு 7,056 கோடி நிதியில் “வெளித் துறைமுக மேம்பாடு” என்ற துறைமுக விரிவாக்கத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இதற்கான ஏலம் 2024-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் வேதாந்தா மற்றும் பிரீமியர் அறிவியல் தொழில்நுட்பம் (Premier Science and Technology FZE) ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டும் கலந்துகொண்டன.


எனினும் தெளிவான விளக்கம் ஏதுமின்றி இந்த ஏலத்தை இரத்து செய்தது தூத்துக்குடி துறைமுக நிர்வாகம். இதனையடுத்து இந்தாண்டு ஜனவரி மாதத்தில் இரண்டாம் சுற்று ஏலத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது.

அதில் அதானி குழுமத்தின், “அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம்” (APSEZ) நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து அதானி குழுமத்திற்கு டெண்டர் கொடுக்கும் நோக்கத்துடனே முதல் சுற்று ஏலம் இரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


ஏற்கெனவே, ஓஷன் ஸ்பார்க்கில் லிமிடெட் (OSL – Ocean Sparkle Limited) என்பது இந்தியாவில் கடல்சார்ந்த சேவைகளை வழங்கும் நிறுவனம் ஆகும்.

இந்த ஓ.எஸ்.எல். நிறுவனமானது


தூத்துக்குடி துறைமுகத்தில் துறைமுக இழுவை, நங்கூரமிடுதல், பைலட்டேஜ், கப்பல் போக்குவரத்து தொடர்பு, தீ கட்டுப்பாடு, அகழ்வாராய்ச்சி, பாதுகாப்பு, மாசு கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை வழங்கி வந்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஓஷன் ஸ்பார்க்கில் நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளை வாங்கியதன் மூலம் அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த உரிமத்தையும் “அதானி துறைமுகம் சேவைகள் லிமிடெட்” (TAHSL) கைப்பற்றியது.

இதனால் தூத்துக்குடி துறைமுகம் நேரடியாக அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.


மேலும், வ.உ.சி. துறைமுகமானது மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது.‌ இப்பகுதி மீன்வளமிக்கதோடு முத்துச் சிப்பிகள், பவளப்பாறைகள், சதுப்புநிலங்கள், ஆலிவ் ரிட்லி ஆமைகள், பாறை இறால்கள், கடல் குதிரைகள் போன்ற அரிய வகை விலங்கினங்கள் மற்றும் தாவரங்களைக் கொண்ட கடல் பல்லுயிர் பெருக்கத்திற்குப் பெயர்பெற்ற பகுதியாகும். அதுமட்டுமின்றி இராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி கடற்கரைகளுக்கு இடையில் உள்ள 21 தீவுகள் இந்தியாவின் முதல் கடல்சார் உயிர்க்கோள காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இங்கு துவங்கப்பட்டிருக்கும் துறைமுக விரிவாக்கப் பணிகளால் கடலின் பல்லுயிர் தன்மை பெரிதாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது துறைமுக நிர்வாகம். பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா ஆலைகளை நிறுவுவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.


புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்த பசுமை ஹைட்ரஜனை, போக்குவரத்து, தொழிற்சாலைகள் மற்றும் எரிசக்தி சேமிப்புக்கு சுத்தமான எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது வருங்காலத்தில் எரிபொருள் சந்தையில் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கருதப்படுவதால் பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள், பசுமை எரிபொருள் உற்பத்தியைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன.


இதனால் தூத்துக்குடியில் மீன்பிடித் தொழிலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. ‘வளர்ச்சி’ என்ற பெயரில் கடலில் உள்ள கனிமங்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்ட இயற்கை வளங்களைச் சூறையாடுவதன் மூலம், பன்முகத்தன்மை கொண்ட கடல் சூழலமைப்பை அழித்து உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கார்ப்பரேட்டு நிறுவனங்கள் சிதைத்து வருகின்றன.


இவர்கள் முன்னெடுக்கும் கடல்சார்ந்த வளர்ச்சிப் பணிகள் எதுவானாலும் சரி, அவை சுரண்டலுக்குள்ளாகும் உழைக்கும் மக்களின் மேம்பாட்டிற்கானதல்ல, மாறாக அவர்களின் வாழ்க்கையை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் நடவடிக்கை என்பதையே காட்டுப்பள்ளித் துறைமுகம் நமக்கு உணர்த்துகிறது.


மேலும், அதானி நடத்திவரும் முந்த்ரா, நவிமும்பை, ஹசிரா உள்ளிட்ட துறைமுகங்களில் ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் பல கோடி மதிப்பில் சிக்கிய செய்திகளைக் கேட்டிருப்போம். உலகளவில் கப்பல் போக்குவரத்து செய்வதற்கு தூத்துக்குடி துறைமுகத்தின் அமைவிடம்‌ முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


எனவே இனிவரும் காலத்தில் வ.உ.சி. துறைமுகத்தின் வாயிலாக பெரியளவிலான போதைப்பொருள் பரிமாற்றமும் நடைபெறும் அபாயம் எழுந்துள்ளது. இது தமிழ்நாடு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் புழக்கம் தீவிரமடையவே வழிவகுக்கும்.

இந்த சதித்திட்டங்களை மூடிமறைப்பதற்காக அதானி குழுமம் தூத்துக்குடி மாநகராட்சியுடன் கைகோர்த்து வேலை செய்துவருகிறது. சுகாதாரம், கல்வி வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சியுடன் இணைந்து செயல்படுவதாக விளம்பரப்படுத்தி, சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதாகத் தன்னை காட்டிக் கொள்கிறது.

இதற்கு முன்னர் ஸ்டெர்லைட் நிறுவனம் கல்வி, திறன் மேம்பாடு என்ற பெயரில் முத்துச்சரம், தாமிர முத்துக்கள், இளம் மொட்டுக்கள் போன்ற பல கவர்ச்சிகரத் திட்டங்களைக் கொண்டுவந்தது.


ஆனால் தனது லாபவெறியைத் தீர்த்துக்கொள்ள தூத்துக்குடி மண்ணை நாசமாக்கியபோது மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு, 13 உயிர்களை காவுவாங்கி, தனது கோரமுகத்தை உலகிற்குக் காட்டியது‌.


அதே‌போல, ஒருபுறம் சி.எஸ்.ஆர். பணிகளை மேற்கொண்டாலும், மறுபுறம் துறைமுக விரிவாக்கம்‌ மட்டுமின்றி கோஸ்டல் எனர்ஜெனின் கடலோர எரிசக்தி திட்டத்தைக் கைப்பற்றி நடத்திவருவதோடு தேசிய நெடுஞ்சாலை திட்டம் ஒன்றையும் கையகப்படுத்தி சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுத்தும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதானி குழுமம்.

இதனால் மீனவச் சமுதாயம் மட்டும்தானே பாதிக்கப்படுகிறது என்று எண்ணி எளிதாகக் கடந்துவிடாதீர்கள்.


இயற்கைவளச் சுரண்டலின் விளைவால் ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களும் பாதிக்கப்படுவோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நன்றி:வினவு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

15000 கோடி வீட்டை காலி செய்ய