ஸ்டாலின் வழியில் பினராயி...
ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாட்டுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மசோதாக்கள் நிறுத்திவைத்த ஆளுநரின் செயல் சட்டவிரோதம் என கண்டனம் தெரிவித்தது.
ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியது.

தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கும் அனைத்து ஆளுநர்களுக்கும் பொருந்தக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வரவேற்பு தெரிவித்திருந்தார். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று அவர் கூறினார்.
தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் முன்னாள் ஆளுநர் ஆரிப் முகம்மது கான் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தினார். மேலும் சில மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கும் அவர் அனுப்பி வைத்தார்.
கடந்த ஆண்டு கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 6 மசோதாக்களை ஆளுநர் ஆரிப் முகம்மது கான் திருப்பி அனுப்பினார். தற்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இந்த மசோதாக்களை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்ற கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, சிறப்பு சட்டசபை கூட்டத் தொடரை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் 6 மசோதாக்களை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.