தாஜ்மகல் எனக்கே சொந்தம்!
இந்தியாவில் எண்ணற்ற குறுநில மன்னர்கள் இருந்தனர்.
அவர்களில் மொகலாய மன்னர்கள் இந்தியாவை பல நூறு ஆண்டுகள் ஆட்சி செய்ததோடு, இந்தியாவின் பெரும்பாலான வட பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. அதன் பிறகு உயிரோடு இருந்த மன்னர்களின் வாரிசுகள் மட்டும் அவர்களது சொத்துகளை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. பெரும்பாலான சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மட்டும் மத்திய தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் வந்தது. இப்போதும் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் மன்னர் வாரிசுகள் இருக்கின்றனர்.
மொகலாய மன்னர்களின் ஆட்சியில் கட்டப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதன சின்னங்கள் இருக்கிறது.
அதில் மொகலாய மன்னன் ஷாஜகான் தனது மனைவியின் நினைவாக கட்டிய வெள்ளை மார்பிள் மாளிகையான ஆக்ரா உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மகாலை பார்க்க உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தாஜ்மகாலை இப்போது ஒருவர் உரிமை கொண்டாடி இருக்கிறார். ஐதராபாத்தில் வசிக்கும் யாகூப் ஹபீபுதீன் டூசி என்பவர் தன்னை மொகலாய மன்னர்களின் வாரிசு என்று கூறியுள்ளார்.
இந்தியாவை ஆண்ட கடைசி மொகலாய மன்னரான பகதூர் ஷா ஷாபர் என்பவரின் 6-வது வாரிசு என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தாஜ்மகால் தனக்குத்தான் சொந்தமானது என்று கூறி இருக்கிறார்.
தான் மொகலாய மன்னரின் வாரிசு என்பதை நிரூபிக்க தனது டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கையையும் ஐதராபாத் கோர்ட்டில் தாக்கல் செய்து இருக்கிறார். அதனை கோர்ட்டும் ஏற்றுக்கொண்டுள்ளது. இது தனக்கு கிடைத்த வெற்றி என்று இளவரசர் யாகூப் தெரிவித்துள்ளார்.
அதோடு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு இருக்கும் நிலமும் தனக்குத்தான் சொந்தம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டதில் தனக்கு எந்தவித பிரச்னையும் இல்லை என்று யாகூப் தெரிவித்துள்ளார்.
அதோடு ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1.80 கோடி மதிப்புள்ள செங்கலை காணிக்கையாகவும் கொடுத்து இருக்கிறார்.
2019ம் ஆண்டு ராஜஸ்தானை சேர்ந்த இளவரசி தியா குமாரி தாஜ்மகாலுக்கு உரிமை கொண்டாடினார். அதனை எதிர்த்து யாகூப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் உங்களிடம் ஆவணங்கள் இருந்தால் கோர்ட்டில் தாக்கல் செய்யுங்கள் என்று யாகூப் கூறி இருந்தார்.
எப்போதும் மொகலாய மன்னர்கள் போன்று உடை அணிந்தே யாகூப் காட்சியளிக்கிறார். அதோடு தனது பாட்டனாரான இந்தியாவை ஆண்ட ஒளரங்கசீப் கல்லறையை பராமரிக்கும் பொறுப்பாளராகவும் இருக்கிறார்.
ஒளரங்கசீப் கல்லறை இப்போது மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி மாவட்டத்தில் உள்ள குல்தாபாத் என்ற இடத்தில் இருக்கிறது. அதனை அகற்ற வேண்டும் என்று மகாராஷ்டிராவில் கோரிக்கை எழுந்திருக்கிறது.
இதையடுத்து ஒளரங்கசீப் கல்லறைக்கு மாநில அரசு பலத்த பாதுகாப்பு போட்டு இருக்கிறது. அங்கு செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஒளரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டும் என்று கோரி நாக்பூரில் இந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.
இதையடுத்து இப்பிரச்னை தொடர்பாக யாகூப் இப்போது ஜனாதிபதிக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் வலது சாரி இந்து அமைப்புகளிடமிருந்து வரலாற்று சின்னங்களை பாதுகாக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.