வெள்ளி, 11 அக்டோபர், 2013

சொத்துக்குவிப்பு : ஜெயாவின் கைப்பாவையா உச்ச நீதிமன்றம் ?


ஜெயாவும் மற்ற மூவரும் தங்களது தரப்பில் 133 சாட்சியங்களை விசாரிக்க வேண்டுமெனக் கூறிவிட்டு, பிறகு அதனைத் திடீரென 99 ஆகக் குறைத்துக் கொண்டனர்.  இதற்கு பவானி சிங்கும் உடந்தையாக நடந்து கொண்டார் என்பதோடு, இந்த 99 சாட்சியங்களையும் அவர் முறையாக குறுக்கு விசாரணை செய்யவில்லை.  இதில் 99-ஆவது சாட்சியமாக இலஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. சம்பந்தம் நிறுத்தப்பட்டார்.  அரசு தரப்பில் சாட்சியம் அளிக்க வேண்டிய டி.எஸ்.பி. சம்பந்தம் குற்றவாளிகளின் தரப்பில் சாட்சியம் அளித்ததையும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக  ஆவணங்கள் அளித்ததையும் அரசு வழக்குரைஞர் மட்டுமல்ல, நீதிபதி பாலகிருஷ்ணாவும் அனுமதித்தார்.


பாலகிருஷ்ணா, பவானி சிங்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா-சசி கும்பலுக்கு சாதகமாக நடந்து கொண்ட நீதிபதி பாலகிருஷ்ணா மற்றும் அரசு வழக்குரைஞர் பவானி சிங்.

ஜெயா-சசி கும்பலுக்கு எதிராக பெங்களூருவில் நடந்துவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டிருந்த பவானி சிங்கை நீக்கி கர்நாடகா அரசு கடந்த செப்.16 அன்று உத்தரவு பிறப்பித்திருந்தது.  இதனை எதிர்த்து ஜெயா-சசி கும்பல் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், கர்நாடகா அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதோடு, அவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக் காலம் செப்.30-ஆம் தேதியோடு முடிவடைவதால், இவ்வழக்கை விரைந்து முடிப்பதற்காக அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.  பவானி சிங்கை நீக்கும் கர்நாடகா அரசின் உத்தரவை ரத்து செய்தும்; கர்நாடகா உயர் நீதிமன்றம் கர்நாடகா மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து நீதிபதி பாலகிருஷ்ணாவிற்குப் பதவி நீட்டிப்பு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தும் இவ்வழக்கில் செப்.30 அன்று தீர்ப்பளித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.
‘‘வழக்கை விசாரிக்க புதிய அரசு வழக்குரைஞரும் புதிய நீதிபதியும் நியமிக்கப்பட்டால், அவர்கள் 34,000 பக்கங்கள் கொண்ட  இந்த வழக்கின் சாட்சியங்களைப் படித்துப் புரிந்துகொள்ளவே நீண்ட காலம் எடுக்கும்; எனவே, பவானி சிங் நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்; நீதிபதி பாலகிருஷ்ணாவிற்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும்” என வாதிட்டது, ஜெயா கும்பல்.  இதே காரணத்தை வேறு வார்த்தைகளில், ”அசாதாரணமான சூழ்நிலையையும் பல தொகுதிகளைக் கொண்ட சாட்சியங்களையும்” கருத்தில் கொண்டு இத்தீர்ப்பை அளிப்பதாகக் கூறியிருக்கிறது, உச்சநீதி மன்றம். டான்சி வழக்கின் தீர்ப்பில் ஜெயாவின் மனசாட்சிக்கு வேண்டுகோள் விடுத்த உச்சநீதி மன்றம், சொத்துக்குவிப்பு வழக்கிலோ ஜெயாவின் மனம் எதை விரும்பியதோ, அதனையே தீர்ப்பாக அளித்திருக்கிறது.
‘‘18 ஆண்டு காலமாக நடந்துவரும் இவ்வழக்கு முடிவடையும் தருணத்தில், சிறப்பு அரசு வழக்குரைஞர் பவானி சிங் தனது இறுதி வாதத்தை நடத்திக் கொண்டிருந்த வேளையில், தமிழ்நாட்டிலுள்ள தனது அரசியல் எதிரிகள் தூண்டிவிட்டுத்தான் கர்நாடகா அரசு பவானி சிங்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டது” என வாதிட்ட ஜெயா, இதன் மூலம் பவானி சிங்கைத் திரும்பப் பெற்றதைத் தனக்கு எதிராக நடத்தப்பட்ட சதியாகக் காட்டினார்.
suran
  ஆதாரமற்ற, அபாண்டமான குற்றச்சாட்டுக்களை வீசுவதில் கைதேர்ந்தவரான ஜெயா, தி.மு.க.வின் மேல் இப்படிபட்ட பழியைப் போட்டிருப்பது ஆச்சரியம் கொள்ளத்தக்கதல்ல.  ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை, நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றுச் செல்வதற்கு முன்பே தனக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்றுவிட வேண்டும் என ஜெயா கும்பல் பல சதிகளை அரங்கேற்றியதும், இதற்கு நீதிபதி பாலகிருஷ்ணாவும், வழக்குரைஞர் பவானி சிங்கும் ஒத்துழைப்பு கொடுத்து வந்ததும்தான் உண்மை.  உச்ச நீதிமன்றம் இந்த உண்மைகளைத் தெரிந்தே புறக்கணித்து, ஜெயாவிற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்திருக்கிறது.
சொத்துக்குவிப்பு வழக்கு போடப்பட்ட நாள் தொடங்கி கடந்த பதினேழு, பதினெட்டு ஆண்டுகளாகப் பல்வேறு சப்பையான, மோசடியான காரணங்களை முன்வைத்து மனுவிற்கு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடித்து வந்த ஜெயா கும்பல், பவானி சிங் அரசு வழக்குரைஞராகவும், பாலகிருஷ்ணா நீதிபதியாகவும் நியமிக்கப்பட்ட பிறகு, வழக்கை இழுத்தடிப்பதையெல்லாம் கைவிட்டு, நல்ல பிள்ளையைப் போல நடந்து கொண்டது.  எலி காரணமில்லாமல் அம்மணமாக ஓடாதே! இந்த நிலையில்தான், ”அரசு வக்கீலுக்கு உதவத் தங்களையும் வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன் சார்பில் மனு போடப்பட்டு, அதற்கு சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியும் பெறப்பட்டது.  அதன் பிறகுதான் நீதிபதி பாலகிருஷ்ணாவும் அரசு வழக்குரைஞர் பவானி சிங்கும் குற்றஞ்சாட்டப்பட்ட எதிர்த்தரப்பிற்குச் சாதகமாக நடத்தியிருக்கும் தகிடுதத்தங்கள் அம்பலத்திற்கு வந்தன.
பவானி சிங் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டவுடனேயே, அரசு தரப்பு சாட்சியங்களான 259 பேர் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் படித்துத் தெரிந்துகொள்வதற்குத் தனக்கு இரண்டு மாத அவகாசம் வேண்டும் எனக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்தார்.  ஆனால் நீதிபதி பாலகிருஷ்ணா,கால அவகாசம் அளித்தால், தான் நீதிமன்றத்தில் வேலையில்லாமல் உட்கார்ந்திருக்க நேரும் என்ற மொன்னையான காரணத்தைக் கூறி, அவகாசம் அளிக்க மறுத்து விட்டார்.  பவானி சிங் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வாப்பிருந்தும் அதனைப் புறக்கணித்தார்.  இதன் மூலம் ஆவணங்களைப் படித்துப் பார்க்காமலேயே இறுதி வாதங்கள் நடைபெறுவதை பவானி சிங்கும் பாலகிருஷ்ணாவும் கூட்டுச் சேர்ந்து அனுமதித்தனர்.
தமிழக இலஞ்ச ஒழிப்பு துறைதான் இந்த வழக்கையே நடத்தி வருகிறது.  ஆனால், தமிழக முதல்வராக ஜெயா பதவியேற்றவுடனேயே, இத்துறையைச் சேர்ந்த வழக்கு விசாரணை அதிகாரியான சம்பந்தம், ”இவ்வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும்” எனக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயாவிற்குச் சாதகமாக மனு போட்டு, நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  எனவே, டி.எஸ்.பி.சம்பந்தத்தை ஜெயா தரப்பு சாட்சியமாக நீதிமன்றம் விசாரித்திருப்பது வழக்கையே குழிதோண்டி புதைக்கும் தீய உள்நோக்கம் கொண்டதாகும்.
இப்படியாக இவ்வழக்கு விசாரணை குற்றவாளிகளுக்குச் சாதகமான முறையில் நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டித்தான், பவானி சிங்கை நீக்கக் கோரி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் அன்பழகன் வழக்கு தொடுத்தார்.  இதன் அடிப்படையில்தான் பவானி சிங்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் முடிவை கர்நாடகா அரசு எடுத்தது.  இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பவானி சிங் அரசு வழக்குரைஞராக நியமனம் செய்யப்பட்டதே முறைகேடாக நடந்திருக்கிறது.  இது இவ்வழக்கில் ஜெயாவிற்குச் சாதகமாக நடைபெற்றிருக்கும் மிகப் பெரிய மோசடியாகும்.
பவானி சிங்கிற்கு முன்பு இவ்வழக்கின் சிறப்பு அரசு வழக்குரைஞராக நீண்ட காலம் பணியாற்றிவந்த பி.வி. ஆச்சார்யாவிற்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி கொடுத்து, அவரைத் தாமே பதவியிலிருந்து விலகுமாறு செய்தது, ஜெயா கும்பல்.  அவரது பதவி விலகல் கடிதத்தை, அப்பொழுது கர்நாடகா உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக இருந்த விக்ரமஜித் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறார்.  விக்ரமஜித் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் சென்ற பிறகு, பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்ட சிறீதர் ராவ் என்பவர்தான் ஆச்சார்யாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டார்; ஆச்சார்யாவுக்கு அடுத்து வேறொருவரை நியமிக்க அரசு அளித்த பட்டியலில் இல்லாத ஒருவரை – பவானி சிங்கை – அரசு சிறப்பு வழக்குரைஞராக நியமித்திருக்கிறார்.  அப்பொழுது கர்நாடகாவை ஆண்டுவந்த ஜெயாவின் பங்காளியான பா.ஜ.க. அரசு இந்த முறைகேட்டைத் தெரிந்தே அனுமதித்ததோடு, பவானி சிங்கிற்கு ஒரு பெரும் தொகையைச் சம்பளமாகவும் நிர்ணயம் செய்திருக்கிறது.
பவானி சிங் சட்டவிரோதமான முறையில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது அம்பலமான பிறகும், அம்முறைகேடு குறித்து விசாரிக்காமல் ஒதுக்கித் தள்ளிவிட்டது உச்ச நீதிமன்றம். இன்னொருபுறம், பவானி சிங் நீக்கத்தை ரத்து செய்திருப்பதன் மூலம், அவரது முறைகேடான நியமனத்தையும் அவர் குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்து கொண்டதையும் சட்டபூர்வமாக்கி விட்டது.  ஜெயாவைக் காப்பாற்றப் போய், இப்பொழுது நீதிமன்றமே குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.  இனி, இந்த வழக்கில் நியாயமான முறையில் நீதி வழங்கப்படும் என எவரேனும் நம்ப முடியுமா?
-ஆர்.ஆர்.
 
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013
----------------------------------------------------------------------------------------------------------------------------------

6 மாதங்களில் 2 லட்சம்ஊழியர்கள்  ஓய்வு.
---------------------------------------------------------------------------------------------------
தமிழக அரசுப் பணியில் ஏ, பி, சி, டி என்ற 4 பிரிவுகளில், அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை வேலை பார்க்கின்றனர்.
4 பிரிவுகளிலும் சேர்த்து 13 லட்சத்து 30 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.

அடுத்த 6 மாதத்திற்குள், குறிப்பாக 2014-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள், மொத்த ஊழியர்களில் 20 சதவீதம் பேர் ஓய்வுபெற இருக்கின்றனர்.
அதாவது, 2 லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர். இதனால், மற்றவர்களுக்கு பணிச் சுமை அதிகமாகும்.

அரசுக்கு தற்போதுள்ள நிதிச் சுமையால், ஒரே நேரத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக பணியாளர் தேர்வு நடத்தி, காலிப் பணியிடங்களை நிரப்ப முடியும்.

  இதே அளவிலான பணியாளர்கள் 2016-ம் ஆண்டும் ஓய்வுபெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
suran