2013இல் சிறந்த மனிதர் ?
பாரதி ஒரு பார்வை.
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் -\
வீணில்உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்”
-என உழைப்போரை பாராட்டியும் உழைப்பாளிகளை ஏமாற்றி ஏய்ப்போரையும் நிந்தனை செய்தும் பாடுகிறார் பாரதியார். அதேபோல், “விழலுக்கு நீர்ப்பாய்ச்சி மாயமாட்டோம் - வெறும்வீணருக் குழைத்துடலம் ஓயமாட்டோம்”என உழைப்பாளிகளின் உரிமை முழக்கத்தினை சங்கநாதமிடுகிறார்.
“செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்சேர்ந்திடலாம் என்று எண்ணி யிருப்பவர்பித்த மனிதர்; அவர் சொல்லும் சாத்திரம்பேயுரையாம் என்று இங்கு ஊதடா சங்கம்”இவ்வுலகத்தில் இன்புற்று வாழ்வதற்கான வழியுண்டு. இதை மறந்து செத்த பிறகு சிவலோகத்தில் இன்பம் உண்டு: வைகுந்தத்திலே வாழ்வுண்டு என்று நம்புகின்றவர்கள் பொய்யர்கள். அவர் காட்டும் சாத்திரங்கள் பேயுரைகள் என பிற்போக்குத் தனங்களைச் சாடுகிறார்.“சாதிக் கொடுமைகள் வேண்டாம் அன்புதனில்செழித்திடும் வையம்”என சாதியக் கொடுமைகளைச் சாடியதோடு தன் வாழ்க்கையில் கனகலிங்கம் என்ற தலித் சிறுவனுக்கு பூணூல் போட்டு அவனை இன்று முதல் நீ பிராமணன் என கூறினார். பெண்ணியம் போற்றியவர் பாரதி.
“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவிபேணி வளர்த்திடும் ஈசன்மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்லமாதர றிவைக் கெடுத்தார்”.என்று கோபாவேசம் கொள்கிறார். இது அடுக்குமா? சரியா? இல்லை!கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக்காட்சி கெடுத்திடலாமோ? என்று கேட்கிறார். ஆணும் பெண்ணும் இரு கண்களைப் போல என்ற சம உரிமைப் பண்பாடு செழித்து நிற்கிறது.இங்கே அதோடு“பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்பேதமை யற்றிடும் காணீர்”என்று கூறுகிறார்.“பாதகஞ் செய்பவரை கண்டால்பயங் கொள்ளல் ஆகாது பாப்பாமோதி மிதித்துவிடு பாப்பாஅவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா”என குழந்தைகளிடம் தீயவர்களை எதிர்த்துப் போரிடச் சொன்னார் பாரதி. பேச்சுடன், பாட்டுடன் நிற்காத பாரதி தனது வாழ்விலும் துணிச்சலை கடைப்பிடித்து உள்ளார். “ஜாலியன் வாலாபாக் படுகொலை” நடந்த நேரம் - ஆக்ரோஷம் கொண்ட பாரதி வெள்ளையர்களிடம் ஆத்திரம் கொண்டு சென்னை மண்ணடியில் உள்ள பிரபல வக்கீல் துரைசாமி ஐயர் வீட்டுக்குச்சென்று சாப்பிட்டுக் கொண்டிருந்த அவரை சாப்பிட விடாமல் கையும் பிடியுமாய் இழுத்துக்கொண்டு சென்றார். பாரதி கையில் கத்தியுடன் ஆக்ரோஷத்துடனும், ஆத்திரம் கொப்பளிக்க சென்னை வீதிகளில் வெள்ளையரை பழிவாங்க வேண்டும்.
வெள்ளைக்காரச் சிப்பாய்களை பழிவாங்கவேண்டும். சண்டைக்கு இழுக்க வேண்டும் என செயிண்ட் ஜார்ஜ் கோட்டை நோக்கிச் சென்றாராம். தன்னந்தனியாக அந்நியரை ஒழிப்பது முடியாது என துரைசாமி ஐயர் சமாதானப்படுத்தி பாரதியை அழைத்து வந்தாராம். இப்படி ஆங்கிலேயர் காலத்தின் அடக்குமுறையை எதிர்த்து பாதகஞ் செய்பவரைக் கண்டு பயங்கொள்ளாமல் உறுதியுடன் சென்றவர் பாரதியார். அதைப்போல் புதுச்சேரியில் பாரதியார் உள்ளிட்ட சுதேசிகளான வ.வே.சு. அய்யர், அரவிந்தர், சீனிவாச்சாரியார் ஆகியோர் வசித்த போது அவர்களை பிடிப்பதற்காக போலீசார் ரகசிய போலீசாரை விட்டு கண்காணித்தனர். ஒரு சமயம் ரகசிய போலீசார் ஒருவர் மாறுவேடம் அணிந்து பாரதியாரை சந்திக்க வந்தார். மற்ற சுதேசிகளை பற்றி கேட்ட போது பாரதியார் சுதேசிகள் இருக்கும் இடம் பற்றியோ சுதேசிகள் என்ன செய்கிறார்கள் என்றோ எதுவும் கூற மறுத்துவிட்டார்.
அத்துடன் நில்லாமல் ரகசியப் போலீசாரை பார்த்து இகழ்ச்சியாக தன்னுடைய மறவர் பாட்டின் ஒரு வரியான ‘ச்சீ! ச்சீ! நாயும் பிழைக்கும் இந்தப்பிழைப்பு’ எனக்கூறி விரட்டிவிட்டார்.நாட்டின் நடப்புகளையும், உலக நடப்புகளையும் சொல்ல வேண்டிய பத்திரிகைகள் ஐரோப்பா கண்டத்தில் ரஷ்யப்புரட்சி உள்ளிட்ட நிகழ்வுகளை இருட்டடிப்புச் செய்தன. ஆனால் துணிச்சலாக பாரதி தன்னுடைய சுதேசமித்திரன் பத்திரிகையில், “இடிபட்ட சுவர் போலே கலி வீழ்ந்தான்;கிருத யுகம் எழுக மாதோ!”என்ற நம்பிக்கையில் ஆடினார், பாடினார்.
ஆயுத பலம் கொண்ட வளரும் நாடுகளை அடிமைப்படுத்துவதை பின்வருமாறு சாடியவர்.“தம்பி சற்றே மெலிவானால்அண்ணன் தானடிமை கொள்ளலாமோசெம்புக்கும் கொம்புக்கும் அன்றி மக்கள் சிற்றடிமைப்படலாமோ”இங்கு செம்பு என்பது டாலரையும், கொம்பு என்பது அணுகுண்டையும் குறியிட்டு, இப்படி டாலர், அணுகுண்டு ஆகியவற்றை வைத்து மிரட்டும் ஏகாதிபத்தியத்தை எச்சரிக்கிறார்.
- மா.முருகன்,
தூத்துக்குடி