தமிழின் மீது மும்முனைத் தாக்குதல்!
தமிழ்நாட்டிலேயே தமது தாய்மொழிக்காகத் தமிழர்கள் போராட வேண்டிய அவலநிலை இருக்கிறது. தமிழின் மீது மும்முனைத் தாக்குதல் நடப்பது கண்டு அவர்கள் நொந்து போயிருக்கிறார்கள்.
எந்த மொழியையும் தமிழர்கள் வெறுத்தது இல்லை. ஆனால் சொந்த மொழி துவண்டு போவது கண்டு அவர்கள் துடித்துப் போகிறார்கள்.மோடி அரசு பதவி ஏற்ற உடனேயேபோட்டது ஓர் உத்தரவு. சமூக வலைத்தளங்களில் மத்திய அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்தியைப் பயன்படுத்த வேண்டும்; ஆங்கிலத்தைப் பயன்படுத்தினாலும் இந்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றது அது.
இந்தித் திணிப்பு வேலையை இந்துத்துவா வாதிகள் துவங்கிவிட்டது நிச்சயமானது. பெரும் எதிர்ப்புகிளம்பிய பிறகு தான் சற்றே பின்வாங்கி அந்த உத்தரவு இந்திப் பிரதேசங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றார்கள் ஆட்சியாளர்கள். சமூக வலைத்தளங்கள் உலகளாவியவை. அவற்றை எப்படி இந்திப் பிரதேசம், இந்தி அல்லாத பிரதேசம் என்று பிரிப்பார்களோ தெரியவில்லை!. மத்திய அரசின் சாய்மானம் இந்தித் திணிப்பின் பக்கமே என்ற சமிக்கை கொடுத்துவிட்டார்கள்.
அதிகாரிகளைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
அவர்கள் இந்தித் திணிப்பை வேகப்படுத்தினால் ஆச்சரியப்பட வேண்டாம்.அடுத்த ஓர் உத்தரவு மத்திய மனிதவளத் துறையிடமிருந்து வந்தது. சிபிஎஸ்இஎனப்படும் மத்திய அரசுப் பள்ளிகளில் எல்லாம் ‘சமஸ்கிருத வாரம்’ கொண்டாடப்பட வேண்டும் என்றது அது.
அதற்குச் சொல்லப்பட்ட காரணம். ‘சமஸ்கிருதம் அனைத்து மொழிகளின் தாய்” என்பதாகும். இந்தியாவில் பல மொழிக் குடும்பங்கள் உள்ளன என்கிற ஞானமே இல்லாதவர்கள் போட்ட உத்தரவு அது. அல்லது வேண்டுமென்றே அந்த உண்மையை மறைத்து எழுதப்பட்ட வார்த்தைகள் அவை.கேட்டால் சமஸ்கிருதம் செம்மொழியாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.
ஆனால் அது மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடிசா என்று மேலும் ஐந்து மொழிகள் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கொண்டாடுவது என்றால் இந்த அனைத்து செம்மொழிகளையும் அல்லவா மத்திய அரசு கொண்டாட வேண்டும்?
ஏன் சமஸ்கிருதத்திற்கு மட்டும் தனிச் சலுகை?
தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் “செம்மொழி வாரம்” கொண்டாட உத்தரவு போடட்டும் மத்திய அரசு, அவரவருக்குப் பிடித்தமான செம்மொழியை அந்தந்த மாநிலம் கொண்டாடிக்கொள்ளட்டும் என்று வேண்டுகோள் விடுத்து மோடி அரசுக்கு கடிதம் போட்டார்.
அதை மத்தியஅரசும் கண்டுகொள்ளவில்லை, இந்த அம்மையாரும் மேற்கொண்டு வலியுறுத்தவில்லை.
.ஆகஸ்ட் 7 தொடங்கி 13 வரை நாடுமுழுவதிலும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட்டு விட்டது. 84 ஆயிரம் மாணவர்கள் அதில் பங்கேற்றார்கள்.
அதன் நிறைவு விழாவில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி 29 ஆயிரம் பரிசுகளை வழங்கினார் - இப்படி ஒரு செய்தி கூறுகிறது (பிசினஸ் ஸ்டேண்டர்டு 21-8-2014). “சமஸ்கிருத வாரத்தின் போது தினசரி நடைபெறும் கட்டாய பிரார்த்தனை, உறுதிமொழிகள், சிறு நாடகங்கள், உரைகள் எல்லாம் சமஸ்கிருதத்திலேயே நடந்தப்பட்டன” என்று மேலும் அந்தச் செய்தி கூறுகிறது.
இத்தகைய பெருமை தமிழ் உள்ளிட்ட வேறு எந்த மொழிக்கும் மோடி அரசு தரவில்லை என்பதை நினைவில் கொள்க. புதிய ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை சமஸ்கிருதம்தான் ஒரே செம்மொழியே தவிர இதர மொழிகள் இல்லவே இல்லை.நமது நாடு பல பழமையான இலக்கிய வளமிக்க மொழிகளைக் கொண்டது எனும் வரலாற்று உண்மையை ஏற்றவர்கள் அல்ல பாஜக தலைமையினர். அவர்களது குரு பீடமாம் ஆர்எஸ்எஸ் மொழிக் கொள்கை அத்தகையது.
1958ல் அந்த அமைப்பு நிறைவேற்றிய தீர்மானத்தை நோக்குங்கள்: “ மாகாணங்களுக்கு இடையிலான தொடர்பு மொழியாக அண்மைக்காலத்தில் இந்தி உருவாகிவிட்டது. இப்படியாகவே அனைத்து அலுவல் நோக்கங்களுக்கும் அவற்றையே பயன்படுத்த வேண்டும்.
பிராந்திய மொழிகள்அந்தந்த பிராந்திய அளவில் பயன்படுத்தவேண்டும். சமஸ்கிருதத்தின் அடிப்படையிலேயே அனைத்து மொழிகளையும் வளர்க்க முடியும் என்பதால் அதன் படிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும்” (ஆதாரம்: ‘ஆர்எஸ்எஸ் ரிசால்வ்ஸ்’என்று அந்த அமைப்பு வெளியிட்டுள்ள நூல்). இந்தியை ஏன் மோடி அரசு திணிக்கிறது, சமஸ்கிருதத்திற்கு மட்டும் ஏன் விழா கொண்டாடுகிறதுஎன்பது இப்போது புரிந்து போயிருக்கும்.இந்திய துணைக்கண்டத்தில் சமஸ்கிருதம் பிற மொழியினர் மீது வெகுவாகத் திணிக்கப்பட்டு வந்தது என்றால், இந்தியானது காங்கிரஸ் ஆட்சியாளர்கள் காலத்தில் திணிக்கப்பட்டது.
அதைத் தடுக்கிற ஒரே கேடயம் என்று ஆங்கிலத்தை ஆதரித்ததில் ஒரு வாளாக மாறி தமிழ் உள்ளிட்ட நமது தேசிய மொழிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளது.
மத்தியஅரசுப் பணிக்காக தேர்வுகளில் அதுவேஒரு ஆங்கிலப் பகுதி தங்களுக்கு இடையூறாக உள்ளது என்று இந்தி பேசும் மாணவர்கள் சமீபத்தில் போராடியதைக் கண்டோம். அவர்களுடைய ஆங்கில எதிர்ப்பும், தாய்மொழி கோரலும் நியாயமே. ஆனால் பிரச்சனைக்கு நியாயமான தீர்வுஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி, தமிழ் உள்ளிட்ட அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் தேர்வு இருக்க வேண்டும் என்பது தான்.
ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி என்று விஷயத்தைக் குறுக்கு வழியில் தீர்க்கக் கூடாது.ஆக இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் என்று மும்முனையிலிருந்தும் தமிழின் மீது கட்டாரிகள் வீசப்படுகின்றன. இந்தமூன்றையும் சமாளித்துத் தமிழை வளர்க்கவேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.
அதற்கான உடனடி மற்றும் நீண்ட கால மொழிக் கொள்கை மாநில அரசுக்கு வேண்டும். ஆனால், அம்மையார் அரசுக்கு அப்படியொரு சரியான தெளிவானக் கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை. ஆங்கில வழிப் படிப்பு வேண்டியே தனியார் பள்ளிகளில் நம் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள் பெற்றோர்கள் என்று சொல்லி அரசுப் பள்ளிகளிலும் அதைப் பரவலாக்கி வருகிறது இந்த அரசு.
போகிற வேகத்தைப் பார்த்தால் அரசுப் பள்ளிகளிலும் தமிழ் வழிப் படிப்பு இல்லாமல் போகும் போலத் தெரிகிறது!. “மெல்லத் தமிழினிச் சாகும் என்று அந்தப் பேதை உரைத்தான்” என்று பாடினானே பாரதி, அது உண்மையாகி விடுமோ என்று நெஞ்சு பதறுகிறது.
தனியார் பள்ளிகளில் தம் பிள்ளைகளைப் பெற்றோர் சேர்ப்பதன் முக்கியமான காரணம் அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகளைப் பார்த்துத்தான். அரசுப் பள்ளிகளிலும் அதைக் கொண்டுவந்தால் நிச்சயம் பிள்ளைகளை அங்கு சேர்ப்பார்கள். ஆனால் நமது அரசுப் பள்ளிகள் கைவிடப்பட்ட சத்திரங்கள் போலப் பரிதாபமான நிலையில் உள்ளன.
போதியவகுப்பறைகள் இல்லை, போதிய ஆசிரியர்கள் இல்லை, போதிய பரிசோதனை கூடங்கள் இல்லை. நவீன போதன முறைகள் இல்லை. இல்லாத இவற்றைக்கொண்டு வர போதிய நிதி ஒதுக்கி அதைச் செலவு செய்து பள்ளிகளின் இந்த ‘இல்லாமையைப்’ போக்க வேண்டும் தமிழக அரசு. அதைச் செய்யாமல் ஆங்கிலவழி படிப்பு என்று குறுக்குசால் ஓட்டுகிறது.ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிடவில்லை.
ஒரு மொழி என்ற வகையில் அதை அரசுப் பள்ளிகளில் அவசியம் சொல்லித்தர வேண்டும்.
தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நன்கு பேசக்கூடியவர்களாக நமது மாணவர்களைத் தயார் செய்ய வேண்டும்.இப்போது அவர்கள் இரண்டுங்கெட்டான்களாக உருவாக்கி அனுப்பப்படுகிறார்கள். அதை மாற்றி இரு மொழி விற்பன்னர்களாக அவர்கள் ஆக வேண்டும். நவீன கல்வி முறை மற்றும் கருவிகள் மூலம் அத்தகைய பேச்சுப் பயிற்சியைத் தர நமது அரசுப் பள்ளிகளைத் தயார் செய்ய வேணடும்.
அத்தகைய உள்கட்டமைப்பு வசதிகளை அவற்றுக்குச் செய்து தர வேண்டும் அரசு.இது உடனடியாகச் செய்ய வேண்டிய வேலை என்றால் , தொலைநோக்குப் பார்வையில் தமிழ் உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளுக்கும் மத்தியில் சம அந்தஸ்து கேட்கிற வேலையில் தீவிரம் காட்ட வேண்டும். இந்த அறிவியல் யுகத்தில் ஒரு மத்திய அரசு பல மொழிகளையும் தனது பயன்பாட்டில் கொண்டுவர முடியும்.
நிர்வாகத்துறை , நீதித்துறை, கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை என்று சகலத்திலும் அனைத்து மொழிகளையும் பயன்படுத்தி, வளர்த்தெடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தவேண்டும் தமிழக அரசு.
மத்திய அரசுப் பள்ளிகளின் தேர்வுகளில் வினா - விடை எல்லாம் அனைத்து தேசிய மொழிகளிலும் வேண்டும்.
உயர் மருத்துவ தொழில்நுட்பக் கல்வியிலும் தேசிய மொழிகள்வழி கல்விவேண்டும். உயர்நீதிமன்றங்களில் எல்லாம் அந்தந்த மாநில மொழியே அலுவல் மொழியாக இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அவரவர் தாய்மொழியில் பேசவும், அதை இதர மொழிகளில் உடனுக்குடன் பெயர்க்கவும் ஏற்பாடு வேண்டும்.
மாநிலங்களில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் அந்தந்த மாநில மொழியே செயல் மொழியாக இருக்கவேண்டும். மாநில அரசுடன் மத்திய அரசுகொண்டுவரும் தொடர்பு எல்லாம் அந்தந்த மாநில மொழியிலேயே நடக்க வேண்டும். இத்தகைய சம இடம் மத்தியில்22 தேசிய மொழிகளுக்கும் தரப்பட்டால் ஆங்கிலத்திற்கான கிராக்கி தானாகக் குறையும்.இவற்றையெல்லாம் செய்வதற்குப் பதிலாக தமிழக அரசுப் பள்ளிகளிலும் தமிழ்வழிப் படிப்பைப் பின்னுக்குத் தள்ளுகிற முயற்சியில் அம்மையார் அரசு இறங்கியுள்ளது.
போகிற போக்கைப் பார்த்தால் தமிழைக் கூட ஆங்கில வழிசொல்லித் தருவார்கள் போலும்! இன்னொரு மொழியைப் படிப்பதில் தவறுஇல்லை. ஆனால் அந்த இன்னொருமொழியிலேயே சகல பாடங்களையும் படிப்பது தான் கேடு. வரலாற்றையும் பொருளாதாரத்தையும், விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் தாய்மொழியில் படிக்கும் போதுதான் ஒருவரால் எளிதாக உள்வாங்க முடியும்.
அது பற்றி சுயமாக சிந்திக்கமுடியும், சொந்தமாக புதுமைகளைக் கண்டுபிடிக்க முடியும், அவற்றை சுலபமாக வெளிப்படுத்த முடியும். இந்த அறிவியல்பூர்வ கல்வியைப் புறக்கணிப்பது தமிழுக்குப் பாதகம்என்பதை விடத் தமிழர்கள் அனைவருக்கும் மகாபாதகம் என்பதுதான் உண்மை.இந்தியாவில் ஆங்கிலத்திற்கு இருக்கும் வினோத செல்வாக்கால் தமிழைத் தமிழர்களே புறக்கணிக்கும் ஆபத்தான சூழல் எழுந்திருக்கிறது. இதை அவர்கள் விரும்பிச் செய்யவில்லை.
அருணன் |
கையறு நிலையில் நின்று செய்கிறார்கள். அந்த அவல நிலையைப் போக்கி அவர்களைத் தமிழின்பால், தமிழ்வழிப் படிப்பின்பால் ஈர்க்க வேண்டிய தமிழக அரசும், மென் மேலும் கெடுத்துக் குட்டிச்சுவராக்குகிறது. அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வியைப் பரவலாக்குவதற்குப் பதிலாகத் தமிழ் வழிக் கல்வியை மேலும் தரமாக்க வேண்டும்.
அதன்படி படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் உள்ள முன்னுரிமையை மேலும் அதிகரிக்க வேண்டும். இதுவே அரசுப் பள்ளிகளை நோக்கிப் பெற்றோர்களைஈர்க்கும் ஒரே வழி.தமிழின் மீது தொடுக்கப்பட்டுள்ள மும்முனைத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தவும், தவறான மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வரும் மத்திய - மாநில அரசுகளைத் தட்டிக் கேட்கவும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் களத்தில் இறங்கியுள்ளது.
ஆகஸ்டு 24 அன்று மதுரையில் அது உண்ணா நிலைப் போராட்டத்தை நடத்துகிறது. அதில் பங்கு கொள்வதும்,அதை ஆதரித்து நிற்பதும் அன்னைத் தமிழுக்கு அதன் பிள்ளைகள் செய்யும் அரிய தொண்டு. தமிழ் தானாய் தழைத்து நிற்கும் என்று தப்புக் கணக்குப் போட வேண்டாம். மனித முயற்சி இன்றி எதுவும் இல்லை என்ற சரித்திர உண்மையை மறக்க வேண்டாம்.
-- அருணன்
எபொலோ நோய் தாக்கி இறந்தவரின் உடலை கிருமிகளின்றி சுத்தம் செய்கிறார். |
----------------------------------------------------------------------------------------------------------
சென்னை நகருக்கு இன்றோடு 375 ஆண்டுகள் நிறைவடைகிறது.
ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் வரலாறு தொடங்கியது இங்குதான் என்பது வர லாற்றுப் பதிவாகும். அன்று ஒரு சிறு கோட்டையாக வங்காள விரிகுடாவின் கடலோரத்தில் அமைந்திருந்த இந்த நகரம் இன்று பரந்து விரிந்த பன்மொழி பேசும் மக்களும், பல நாட்டவரும் கூடி நல்லிணக்கத்தோடு வாழும் நகரமாக மாறி நிற்கின்றது. இந்த நக ரத்தில் தமிழகத்தின் மரபுகளும், இன்றைய நவீனமும் கலந்து மணக்கிறது.
சென்னையின் தொடக்கம்
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் முதலில் வாங்கிய நிலம் சென்னைதான். இந்த நிலத்தை கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரிகளான பிரான்சிஸ் டே என்பவரும், ஆண்ட்ரூ ஹோகனும் ஒரு ஆங்கிலேயக் குடியிருப்பை அமைக்க இடம் தேடி அலைந்தனர். அவர்களுக்கு விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த சந்திரகிரியில் இருந்த சிற்றரசருக்குக் கட்டுப்பட்ட குறு நில மன்னரான வந்தவாசியில் இருந்த வெங்கடாத்ரி நாயக் ஒரு சிறு துண்டு நிலத்தைகொடையாக அளித்தார்.
அவர் நன் கொடையாக நிலத்தை அளித்த நாளான ஆகஸ்ட் 22, 1639ஐ சென்னையின் பிறந்தநாளாக மக்கள் கொண்டாடத் தொடங்கி யுள்ளனர். கடலின் முகப்பில் கூவம் நதிக்கும், இளம்பூர் நதிக்கும் இடையில் இருந்த நிலத்தில் ஒரு கோட்டை கட்டிக் கொள்ள வெங்கடாத்ரி நாயக் ஆங்கிலேயர்களுக்கு அனுமதி அளித்தார். சென்னப்ப நாயக்கரின் பெயரில் புதிதாகத் தோன்றும் ஊர் அழைக்கபட வேண்டும் என்பதற்காக இப்பகுதியை சென்னப்பட்டினம் என்று வெங்கடாத்ரி நாயக் அழைத்தார்.கடல் வணிகத்துக்கு வந்த ஆங்கி லேயர்கள் தங்கள் மக்கள் தங்கவும், விற் பனைப் பொருட்களைப் பாதுகாக்கவும் ஒருகோட்டையை அங்கு நிறுவினர். 1640ம்ஆண்டு மார்ச் முதல் நாளன்று கோட்டை யின் முதல் கல் ஊன்றப்பட்ட போது நவீனஇந்தியாவின் முதல் நகரமான சென்னை பிறந்தது. அந்தக் கோட்டையின் பெரும்பகுதி தூய ஜார்ஜின் தினமான 23.4.1640அன்று முடிந்ததால் அந்தக் கோட்டைக்கு தூய ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப் பட்டது. அந்த கோட்டைக்குள் தூய மேரி ஆலயமும் கட்டப்பட்டது. இதுதான் இந்தியாவில் நிறுவப்பட்ட முதலாவது ஆங்கிலிக்கன் தேவாலயமாகும்.
ஆங்கிலேயர்கள் அங்கு குடியேறிய பின் இயல்பாக நெசவாளர்கள், வண்ணம் பூசுவோர், தச்சர்கள், குயவர்கள் என உள் ளூர் மக்கள் குடியேறத் தொடங்கினர். ஆங்கிலேயரின் குடியிருப்புக்கு வெளியே உருவான இந்தக் குடியிருப்பு கறுப்பர் நகரம் என்று பெயரிடப்பட்டது. பிரான்ஸ் படை களின் தாக்குதலின் போது இந்த கறுப்பர் நகரம் அழிக்கப்பட்டது. பிரான்சிஸ் டேக்கும், ஹோகனுக்கும் சைகை மொழிபெயர்ப்பாளராக இருந்த பெரி திம்மப்பா இந்த நகரில் குடியேறிய முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கோட்டைக்குள்ளே 1664ல் உருவான ஆங்கில மருத்துவமனை பின்னர் கோட்டைக்கு வெளியில் வந்தது. 1842 முதல் அங்குஇந்தியர்களுக்கும் சிகிச்சை அளிக்கப் பட்டது. அதுதான் இன்றைய அரசு பொது மருத்துவமனை.
மெரினா கடற்கரை
மவுண்ட் ஸ்டூவர்ட் 1870ம் ஆண்டில் சென்னை வந்தார். அவருடைய நண்பர் கூறியபடி அவர் சென்னை கடற்கரையைப் பார்த்து வியந்துவிட்டார். குளிர்ந்த காற்றை இனிமையாக அள்ளித்தரும் கடற்கரை இன்னும் அழகாக இருக்க வேண்டும் என அவர் விரும்பினார்.1881ம் ஆண்டில் அவர் சென்னை ராஜதானியின் ஆளுநராக வந்தார். தாம் இளமையில் நினைத்தபடி சென்னை கடற்கரையை அழகுபடுத்தினார்.அழகுபடுத்தும் பணிகள் முடிந்தவுடன் சிசிலித்தீவில் இருந்த ஓவியம் ஒன்றின் பெயரான மெரினா என்ற பெயரை கடற் கரைக்கு சூட்டினார். அது இன்று வரை நிலைத்துவிட்டது.இன்றைய சென்னை பல கிராமங்களை விழுங்கி உருவானது. நவாப்புகளின் குடியிருப்புகள் இருந்த சையதுகான் பேட்டை இன்று சைதாப்பேட்டையாகி விட்டது. திரு அல்லிக் கேணி என்ற திருவல்லிக்கேணியும், பிராமணர்கள் குடியிருப்பு நிறைந்த மயிலாப்பூரும், கிறிஸ்தவர்கள் நிறைந்த சான் தோமும் சென்னை யின் விரிவாக்கத்தில் விழுங்கப்பட்ட பகுதிகளாகும்.
தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, திருவொற்றியூர், கத்திவாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம், வேப்பேரி. கோடம்பாக்கம், புலியூர் என பல கிராமங்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னையோடு இணைக்கப்பட்டன. பின்னர் பல்லாவரம் என்று அழைக்கப் படும் பல்லவபுரம், கிண்டி, வேளச்சேரி போன்றவை சென்னையுடன் சேர்க்கப் பட்டன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத் தின் அருகில் இருந்த மத்திய சிறை ஒரு வரலாற்று சிறப்பு மிக்கதாகும். சுபாஷ் சந்திரபோஸ், சாவர்க்கார் உள்ளிட்ட வரலாற்று தலைவர்கள் இங்கு சிறை வைக்கப் பட்டிருந்தனர். ராயபுரம் ரயில்வே நிலை யம் தென்னிந்தியாவில் நிறுவப்பட்ட முதலாவது ரயில் நிலையமாகும். சென்னையின் வரலாறு மிக நீண்டது. நாட்டின் முதல் நகரம் என்பதால் நாட்டின் முதல் நிகழ்வுகள் பல இங்கு நடந்துள்ளன. 1635ம் ஆண்டில் கவர்னர்’ஸ் பேங்க் என்ற பெயரில் நாட்டின் முதல் வங்கி இங்கு நிறுவப்பட்டது. இந் திய ராணுவத்தின் முதல் படைப்பிரிவு சென்னையிலும், கடலூரிலும் இந்திய மக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
சென்னை நகரின் பிரச்சனைகள் ஏராள மாக உள்ளது. குடிநீர், பாதாள சாக்கடை, சிற்றேவல் புரிவோரை முப்பது கிலோ மீட்டர் தொலைவில் குடியமர்த்தி சிங்காரச் சென்னை உருவாக்கப் போகிறோம் என்பது ஏற்க முடியாததொன்றாகும். ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. நீர்நிலைகள் அழிக்கப்பட்டு வருகிறது. இதற்கு உதாரண மாக பள்ளிக்கரணை படும்பாட்டைச் சொல்லலாம். இன்னும் சில வருடங்களில் இதுவும் ஒரு குடியிருப்பாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது. நகரை அழகுபடுத்த வேண்டாம் என்று நாம் கூறவில்லை. நகரம் என்பது வெறும் கான்கிரீட் காடுகள் அல்ல. மக்களும், இயற்கையும் சேர்ந்து வாழவேண்டிய இடமாகும். அங்குமரங்களும், சோலைகளும் இருக்க வேண்டும். பறவைகளும், விலங்குகளும் இணைந்து வாழவேண்டும். ஒரு வளமான சென்னையை உருவாக்க இந்த நாளில் அனைவரும் உறுதி ஏற்பது அவசிய மாகும்.