ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்.
2004 -2007 காலகட்டத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தார்.
அப்போது, ஏர்செல் தனது சேவையை விரிவாக்கம் செய்வதற்காக பல்வேறு இடங்களுக்கான உரிமம் கேட்டு தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு விண்ணப்பம் செய்தது. ஏர்செல் நிறுவனத்தோடு மேலும் இரு நிறுவனங்களும்உரிமம் கேட்டு விண்ணப்பித்தன.
உரிமம் வழங்குவதற்காக, ஏர்செல் நிறுவனத்திடம், தேவையில்லாத, முக்கியத்துவம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டன. விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த நடைமுறையை மற்ற இரு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம், அமைச்சகம் மேற்கொள்ளவில்லை.
அவர்களுக்கு உடனடியாக உரிமம் வழங்கப்பட்டுவிட்டது. அதே நேரம், ஏர்செல்லுக்கு உரிமம் வழங்குவதில் இழுத்தடிப்பு நடந்தது.
இவ்விவகாரத்தில் சி.பி.ஐ., யின் முதற்கட்ட விசாரணையில், தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர், ஏர்செல் நிறுவனத்திற்கு நிர்பந்தம் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளைவிற்கும்படி, ஏர்செல்லின் அப்போதைய அதிபர் சிவசங்கரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இறுதியில் மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் பங்குகளை விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை.
அந்த நெருக்கடியின் விளைவாக, ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்ற பின்தான், ( 2006, மார்ச் மாதத்திற்கு பின்) ஏர்செல் நிறுவனத்திற்கான ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கும் நடவடிக்கைகள் துவங்கின.
ஏர்செல் நிறுவனம் விற்கப்பட்டதும் , ஸ்பெக்ட்ரம் கைமாறியதும், மேக்சிஸ்ஸின் துணை நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் 600 கோடியை முதலீடு செய்தது.
இந்த முதலீடு என்ன காரணத்தினால் எந்த ரூபத்தில் நடந்தது என்பது கேள்வி எழுப்ப பட்டது. சி.பி.ஐ,., தொடர்ந்து பல மாதங்களாக தயாநிதி தொடர்பான விவரத்தை சேகரித்து வந்தது. அவருக்கு நெருங்கிய தொலை தொடர்பு அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர். இவர்களும் தயாநிதி காலம் தாழ்த்திய விஷயத்தை ஒத்துக்கொண்டனர். இந்த அடிப்படையில் வழக்கு முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மேக்சிஸ் நிறுவனம், தயாநிதிக்கு வேண்டிய நிறுவனம் என்றும், ஏர்செல் பங்கு, அந்த நிறுவனத்துக்கு கிடைத்ததும், ஆறு மாத காலத்துக்குள் அந்த நிறுவனத்துக்கு, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சகம் உரிமம் அளித்ததாகவும், அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது
.இது தொடர்பாக, தயாநிதியிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தியது.
அப்போது, தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது என, அவர் தெரிவித்தார். ஆனாலும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில், 'ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் விசாரணை முடியும் முன், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது; அதற்கு தடை விதிக்க வேண்டும்' என, தயாநிதி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்
. இந்த மனு, நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை நடக்கும், டில்லி சிறப்பு கோர்ட்டில், சி.பி.ஐ., நேற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.இதில், தயாநிதி, அவரின் சகோதரர் கலாநிதி, மேக்சிஸ் நிறுவனத்தை சேர்ந்த அனந்த கிருஷ்ணன், அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ரால்ப் மார்ஷல் ஆகியோர் பெயர்களும், சன் டைரக்ட் டிவி பி.லிட்., - மலேசியாவின் மேக்சிஸ் கம்யூனிகேஷன், மொரீஷியசைச் சேர்ந்த சவுத் ஏசியா என்டர்டெயின்மென்ட் ஹோல்டிங், ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்ஒர்க் ஆகிய நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன
. இவர்கள் மீது, கிரிமினல் சதி, ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.செப்டம்பர் 11ல் இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்க துவங்கும்..
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கலைவாணர்என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாள்
இன்று .(30/08/2014) கலைவாணர் இயற்கை எய்திய தினம்.
அவர் குறித்த நினைவலைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார் அவரது பேரன் என்.எஸ்.கே.கே.ராஜன்.
இவர் ‘நாகரீக கோமாளி’ திரைப்படத்தில் அறிமுகமானவர். இப்போது எழில் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பகல்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக உள்ளார்.
‘’தாத்தா ஆரம்ப காலத்தில் டென்னிஸ் கிளப்ல பந்து பொறுக்கி போடுற வேலைகூட பார்த்திருக்காங்க. பிற்காலத்தில் பெரிய நடிகனானதும் நாகர்கோவில் நகராட்சி சார்பில் ஒரு பாராட்டு விழா நடத்துனாங்க. அப்போ தாத்தாவுக்கு தனியா பெரிய நாற்காலி போட்டிருந்தாங்க. ஆனா அவர் அதில் உட்காரல. தரையில் போடப்பட்டிருந்த கடல் மண்ணில் போய் உட்கார்ந்தாரு. எல்லாரும் இது பத்தி கேட்டப்போ இந்த இடம்தான் எப்போதும் நிரந்தரம்ன்னு சொல்லிருக்காரு. அந்த எளிமைதான் அவரோட சிறப்பே. நாடகக் கொட்டகையில் சோடா விற்பவராக இருந்து படிப்படியாக உயர்ந்ததால்தான் அத்தனை பக்குவம்.
கலைவாணருக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஆழ்ந்த நட்பு இருந்தது. கலைவாணர் உச்ச நடிகராக இருந்தபோதே எம்.ஜி.ஆர். பெரிய நடிகராக பிற்காலத்தில் வருவார் என தட்டிக் கொடுத்திருக்கின்றார். கலைவாணர் மறைவுக்கு பின்பு அவரது தாயார் இசக்கியம்மாள் உயிருடன் இருந்தவரை எம்.ஜி.ஆர். பண உதவி செய்தார்.
கலைவாணர் ஈகை பண்பால் சேர்த்து வைத்த செல்வத்தையெல்லாம் கரைத்துவிட்டு மரண படுக்கையில் இருந்தார். அப்போதும் எம்.ஜி.ஆர் வந்து பார்த்து சென்றார்.
கலைவாணர் இறந்த பிறகு அவரது மகன் கோலப்பனையும் ‘பெரியஇடத்து பெண்’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.
கலைவாணருக்கு சென்னையில் கலைஞர் சிலை திறந்தார்.
கலைவாணரின் 2 மகள்களுக்கும் எம்.ஜி.ஆர்.தான் திருமணம் செய்து வைத்தார். கலைவாணரின் மறைவுக்கு பின்பு இந்த வீடு ஏலத்துக்கு போனபோதும் எம்.ஜி.ஆரே மீட்டுக் கொடுத்தார்.
கலைவாணர் இருந்த சமயம் குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தது. அப்போது சித்திரை திருநாள் மகாராஜா மன்னராக இருந்தார். சமஸ்தானத்தில் உள்ள சில பகுதிகள் புயலால் பாதிக்கப்பட்டபோது நாடகம் நடித்து அந்த பணத்தை சமஸ்தானத்துக்கு கொடுத்தார். மன்னருக்கு கலைவாணரின் நடிப்பு, சமூக சேவை பிடித்துப் போய் என்.எஸ்.கே.வுடன் படம் பிடித்துக் கொண்டார்.
அது இன்றும் இந்த வீட்டில் பொக்கிஷமாய் உள்ளது. தியாகராஜ பாகவதர்கூட இந்த வீட்டில் வந்து பாடல் பாடியுள்ளார். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள நகராட்சி பூங்காவில் தாத்தா காந்தியடிகளுக்கு நினைவாக கட்டிக் கொடுத்த நினைவுத் தூண், இந்த வீடு ஆகியவை தாத்தா எங்களுடனே இருப்பதைப்போல் உணர்வை தருகின்றது” என்றார்.
நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள மணிமேடை சந்திப்பில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை கம்பீரமாக நின்று அவரது புகழை பரப்பிக் கொண்டிருக்கிறது.
நாகர்கோவில் சுடலையாண்டி பிள்ளை கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. அவர் வாழ்வும் 49 ஆண்டுகளில் சுருக்கமாக முடிந்தாலும் வரலாறு அவர் பெயரை வாரி அணைத்துக் கொண்டது என்பது மட்டும் உண்மை.
முகனூலில் வைரஸ்?
நீங்கள் ஃபேஸ்புக் வலைத்தளத்தில் எப்போதாவது உங்களுடைய நிறத்திட்டத்தை (Colour Scheme) மாற்ற முயற்சித்திருக்கிறீர்களா?
ஆம் எனில், உடனடியாக உங்கள் கருவியிலிருந்து நீக்கிவிடவும்.
இந்த நிறம் மாற்றும் தீம்பொருள்தான் (Malware) இன்று ஃபேஸ்புக்கில் உலவும் புது விதமான வைரஸ். இதனால், உலகம் முழுவதும் கிட்டதட்ட 10,000 பேரின் ஃபேஸ்புக் கணக்கு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸை ஃபேஸ்புக் நிறுவனம் பலமுறை சரிசெய்தாலும், மீண்டும் மீண்டும் உருவாக்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வைரஸ், பயனீட்டாளர்கள் தங்களது கணக்கின் நிறத்தை மாற்றமுடியும் என்ற செய்தியுடன் இருக்கும் செயலியின் விளம்பரமாக தொடங்குகிறது.
இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்தபின், வைரஸுடன் கூடிய வலைதளத்திற்கு திசைத்திருப்பப்படுகிறது. இங்குதான் வைரஸ் தாக்கும் ஆபாயம் ஏற்படுகிறது. ஃபேஸ்புக் கணக்கில் எப்படி நிறம் மாற்றுவது என்பதை விளக்கும் வீடியோவைப் பார்க்குமாறு கூறும் இந்த வலைதளம், பயனீட்டாளர்களின் கணக்கையும், பயன்பாட்டையும் திருடுகிறது.
இந்த வைரஸின் தற்காலிக பயன்பாடு, அவர்களது ஃபேஸ்புக் நண்பர்களின் கணக்கையும் ஹாக்கர்கள் தொடர்பு கொள்ள உதவுகின்றது.
ஒருவேளை பயனீட்டாளர் இந்த வீடியோவை பார்க்கவில்லையெனில், இந்த வலைதளம் அவர்களை வைரஸுடன் கூடிய செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு தெரிவிக்கிறது.
"ஒருவேளை இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தால், அதனை உங்களுடைய கணினியிலிருந்தோ அல்லது ஸ்மார்ட்போனில் இருந்தோ நீக்கிவிட்டு, ஃபேஸ்புக்கின் பாஸ்வோர்ட்டை மாற்றவும்”, என்று சீனாவில் இணையம் நிறுவனமான ‘சீட்டா மொபைல்’ தெரிவித்துள்ளது.