நமது அந்தரங்கம் அமெரிக்காவிற்குச் சொந்தமா ?
துணிக்கடைகளில் உடை மாற்றும் அறைகள், ஹோட்டல்களில் தங்கும் அறைகள், விடுதிகள், குளியலறைகள் ஆகிய இடங்களில் இரகசிய கேமராவை வைத்து ஆபாசப் படம் எடுக்கும் வக்கிரக் கும்பல்கள் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த இடங்களுக்குச் செல்லும் போது எச்சரிக்கையாக சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ’நமது வீட்டிற்குள் மட்டும் தான் நமது தனியுரிமைக்கும், அந்தரங்கச் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு’ என்று எண்ணியிருந்திருப்பீர்கள். அப்படி ஒரு எண்ணத்தை அடியோடு மாற்றிக் கொள்ளுங்கள். அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., இந்த நொடியிலும் கூட உங்களை ஸ்மார்ட் ஃபோன், அதிநவீன தொலைக்காட்சி மற்றும் கணினி மூலமாக உங்களின் அந்தரங்கங்களை பதிவு செய்து கொண்டிருக்கலாம். அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா ?
உங்கள் வீட்டில் உள்ள மின்னணு சாதனங்கள் அனைத்தின் இயங்குதளங்களுக்குள் (Operating System) புகுந்து, உங்களது செயல்பாடுகளை ஒன்று விடாமல் பதிவு செய்து சி.ஐ.ஏ.வின் சர்வருக்கு அனுப்பிவைக்கத்தக்க வகையில் மால்வேர்கள்(Malwares) என்றழைக்கப்படும் தீய மென்பொருள்களை உருவாக்கி அதனை வைத்து கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறது சி.ஐ.ஏ. இதனை மறுக்க முடியாத ஆதாரங்களோடு சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது விக்கிலீக்ஸ் இணையதளம்.
விக்கிலீக்ஸைப் பற்றி பெரியதாக அறிமுகம் செய்யத் தேவையில்லை. முதன்முதலில், கடந்த 2010ம் ஆண்டு உலகப் பெரியண்ணன் அமெரிக்காவின் வண்டவாளங்களை அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ். ஆப்கனிலும், ஈராக்கிலும் அமெரிக்கா நடத்திய போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த இரகசிய ஆவணங்கள் மற்றும் வீடியோப் பதிவுகளை அமெரிக்க இராணுவத்தின் சர்வர்களில் இருந்து ’ஹேக்’ (Hack) செய்து வெளியிட்டது விக்கிலீக்ஸ்.
விக்கிலீக்ஸ் நிறுவனரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சேவைப் பிடிக்க அமெரிக்காவும், இங்கிலாந்தும் வெறி கொண்ட ஓநாய்களைப் போல இலண்டனில் இருக்கும் ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தின் வாயிலில் எச்சில் வழியும் நாக்கோடு இன்றும் காத்துக் கொண்டிருக்கின்றன.
அசாஞ்சேவைத் தொடர்ந்து அமெரிக்க இராணுவத்தின் காண்ட்ராக்ட் ஊழியரான எட்வர்ட் ஸ்நோடன், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமையின் ( NSA) ‘ப்ரிஸ்ம்’ என்னும் இரகசிய உளவு நடவடிக்கை குறித்து கடந்த 2013-ம் ஆண்டு அனைத்து ஆவணங்களையும் ஆதாரத்தோடு வெளியிட்டார். அதன் மூலம் பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், முக்கிய தொழிலதிபர்கள், பிரதமர், ஜனாதிபதி, அமைச்சர்கள் போன்ற முக்கியஸ்தர்களின் கணினியிலிருந்து தகவல்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை திருடியதை அம்பலப்படுத்தினார். உடனடியாக அவரையும் கைது செய்யத் துரத்தியது அமெரிக்கா. ஸ்நோடன் வெளியிட்ட ஆவணங்களில், ரசிய அதிபர் புதினை ‘நாய்’ எனத் திட்டி ஒரு அமெரிக்காவின் தூதரக அதிகாரி அனுப்பிய மின்னஞ்சலையும் சேர்த்து அம்பலப் படுத்தியதாலோ என்னவோ, ரசியா அவருக்கு அடைக்கலம் கொடுத்தது.
அதன் பிறகு தற்போது விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆவணங்கள் சி.ஐ.ஏ எவ்வாறு நாம் உபயோகிக்கும் மின்னணு சாதனங்களின் மூலம் நம்மை வேவு பார்த்து, நமது அனுமதியின்றியே நமது அந்தரங்கங்களைப் பதிவு செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது. இதன் முதல் பகுதியை வால்ட்-7 என்ற பெயரில் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது விக்கிலீக்ஸ்.
நமது கணினியில் செயல்படும் விண்டோஸ் (Windows), மாக்(MAC), லினக்ஸ்(Linux) ஆகிய இயங்கு தளங்களில் உட்புகும் வகையில் மால்வேர்களை (Malware) உருவாக்கி, அதனையே நம்மைக் கண்காணிக்க உபயோகித்து வருகிறது சி.ஐ.ஏ. . நமது கணினியின் அனைத்துத் தகவல்களையும் திருடவும், அதன் வெப்கேமராவையும் , மைக்கையும் எப்போது வேண்டுமானாலும் நமக்கே தெரியாமல் உபயோகித்து ஒலி, ஒளிப்பதிவு செய்து, தனது சர்வருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுப்பிக் கொள்ளவும் ஏற்ற வகையில் இந்த மால்வேர்களை சி.ஐ.ஏ, உருவாக்கியிருக்கிறது.
கணினியைப் போலவே நமது ஸ்மார்ட் போன்களின் (Smart Phone) இயங்குதளங்களாகிய ஆண்டிராய்ட் (Android), ஐ.ஓ.எஸ் (IOS), ஆகியவற்றிற்குள் புகுந்து ஆக்கிரமிக்கும்படியான மால்வேர்களையும், செயலிகளையும்(Apps) உருவாக்கியிருக்கிறார்கள். இந்தச் செயலிகளும் மால்வேர்களும் நமது அலைபேசியின் தகவல்களைத் திருடுவதோடு, நமக்குத் தெரியாமலேயே நமது செல்போனின் கேமராவையும், மைக்கையும் எப்போது வேண்டுமானாலும் ’ஆன்’ (ON) செய்து ஒளிப்பதிவு செய்து சி.ஐ.ஏ.வின் சர்வருக்கு அனுப்பி வைக்கும்.
அது தவிர “ஜீரோ டேஸ்”(Zero Days) எனப் பெயரிடப்பட்ட இரகசிய நடவடிக்கைகளின் மூலமாக கடந்த ஆண்டு மட்டும் 24 ஆண்ட்ராய்ட் இரகசிய ஆப்களை சி.ஐ.ஏ. உருவாக்கியுள்ளது. இந்தச் செயலிகள் வாட்ஸப், டெலிகிராம், சிக்னல், வீபோ ஆகிய சமூக தகவல் பரிமாற்ற செயலிகளில் நாம் பகிர்ந்து கொள்ளும் குறுஞ்செய்திளையும், தொலைபேசி அழைப்புகளையும், வீடியோ அழைப்புகளையும், சி.ஐ.ஏ. சர்வருக்கு இரகசியமாக அனுப்பி வைக்கும். இதைப் போலவே ஐ.ஓ.எஸ்.-க்கான செயலிகளையும் சி.ஐ.ஏ. உருவாக்கியிருக்கிறது.
அடுத்தபடியாக, உங்கள் வீட்டு ஸ்மார்ட் தொலைக்காட்சியின்(Smart Television) மூளைக்குள்ளும் கையை விட்டிருக்கிறது சி.ஐ.ஏ. கடந்த 2014-ம் ஆண்டிலேயே, சாம்சங் நிறுவனத்தின் எஃப் 8000 ரக ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை ஊடுறுவுவதற்குத் திட்டமிட்டு, அத்திட்டத்திற்கு ”அழும் தேவதை” (Weeping Angel) எனத் திருநாமம் சூட்டியிருக்கிறது. ஸ்மார்ட் தொலைக்காட்சிகளில், பயனாளரின் வாய் வழி உத்தரவிற்கிணங்க சேனல்களை மாற்றுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் ‘மைக்’கின் கட்டுப்பாட்டை தனது கையில் எடுத்துக் கொள்கின்றன சி.ஐ.ஏ. மால்வேர்கள். இந்த மைக்கை நமக்கே தெரியாமல் எப்போது வேண்டுமானாலும் ’உயிர்ப்பித்து’ நாம் தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பதிவு செய்து இணையத்தின் மூலம் சி.ஐ.ஏ. சர்வருக்கு நேரடியாக அனுப்பும் வகையில் ஸ்மார்ட் தொலைக்காட்சிகளின் மென்பொருளிலும் மால்வேர்களின் மூலம் மாற்றம் செய்திருக்கிறது அமெரிக்கா. இதெல்லாம் ஹாலிவுட் படங்களில் கற்பனையாக பார்த்திருப்போம். இனிமேல் அவை வெறும் கற்பனையல்ல.
உங்கள் கணினியையோ, அலைபேசியையோ நீங்கள் அதில் உள்ள இயங்குதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகள் மூலம் அணைத்து(Shut down) வைத்தாலும், அவற்றை உண்மையாகவே அணைய விடாமல், அவை அணைந்தது போன்ற ஒரு போலித் தோற்றத்தை இந்த மால்வேர்கள் ஏற்படுத்தும். ஆனால் பின்னணியில் மைக் மற்றும் கேமரா ஆகிய உபகரணங்கள் சி.ஐ.ஏ.வால் உபயோகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். அதைப் போலவே தொலைக்காட்சியை நீங்கள் ரிமோட் மூலம் அணைத்தாலும், அதன் மைக்குகள் உயிர்ப்பிக்கப்பட்டு, உங்கள் பேச்சுக்கள் பதியப்பட்டு சி.ஐ.ஏ.விற்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும்.
இதை விட முக்கியமாக, ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவரை ஒரு சாலை விபத்தில் மரணமடைந்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொலை செய்யும் அளவிற்கு தொழில்நுட்பத்தைக் கேடாகப் பயன்படுத்தியிருக்கிறது அமெரிக்கா. பல நவீன கார்களில், கார் தயாரிப்பு நிறுவனங்கள், கார்களின் கட்டுப்பாட்டகத்தின் மென்பொருளை இணையத்தின் வழியாகவே மேம்படுத்தும் வசதியை வைத்திருக்கின்றன. அந்த வசதியைப் பயன்படுத்தி, கார்களின் மென்பொருளை ஹேக் செய்து அதனைத் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் வேலையையும் சி.ஐ.ஏ. செய்திருக்கிறது. இதன் மூலம் சி.ஐ.ஏ.-வால் காரின் கட்டுப்பாடுகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் தளர்த்தி தமக்கு எதிரானவர்களை சந்தேகத்திற்கிடமில்லாத படி கொலை செய்யவும் முடியும்.
சி.ஐ.ஏ.வின் இந்த பொறுக்கித்தன்ங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸின் நிறுவனர் அசாஞ்சே, சி.ஐ.ஏ.வின் இந்த நடவடிக்கைகளின் பின்விளைவுகளையும் சுட்டிக் காட்டுகிறார். சி.ஐ.ஏ இவ்வாறு உருவாக்கி வைத்திருக்கும் மால்வேர்களால் பாதிக்கப்பட்ட மின்னணு சாதனங்களைச் சிறிது ஹேக்கிங் தொழில்நுட்பம் தெரிந்த யார் வேண்டுமானாலும் எளிதில் தவறாக உபயோகித்துக் கொள்ள முடியும். அடுத்தவர்களின் அந்தரங்கத் தகவல்களை சேகரிப்பது, அதனைக் கொண்டு மிரட்டுவது, பணப் பரிவர்த்தனையை முடக்குவது, வங்கிக்கணக்கில் இருந்து பணத்தைத் திருடுவது என அனைத்து வகையான மோசடிகளையும் செய்ய முடியும். ஆகவே தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் போக்கு மட்டுமல்ல, இது பெரும் இழப்பையும், துயரையும் ஏற்படுத்தப் போகும் செயல் ஆகும் என்று எச்சரிக்கிறார் அசாஞ்சே.
இதற்கு முன்னர் எட்வர்ட் ஸ்நோடன், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையின் ’பிரிஸ்ம்’ என்னும் தூதரகத் தகவல் திருட்டு நடவடிக்கை குறித்த ஆவணங்களை வெளியிட்டபோது, அதில் தமது நாட்டையும், தமது கணினியையும் உளவு பார்த்ததற்காக பிரேசில் நாட்டின் அப்போதைய அதிபர் தில்மா ரூசப், அமெரிக்காவிற்குப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். ரசிய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தார். ஆனால் அப்போதைய மத்திய அரசு என்ன சொன்னது தெரியுமா? “ இதெல்லாம் சர்வதேச அரசியலில் சாதாரணமாக நடக்கக் கூடிய விசயங்கள் தான்” எனக் கூறியது. சட்டீஸ்கரில் நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளையை எதிர்த்து, ’மக்களின் உரிமைகளைப் பறித்து கனிம வளங்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்காதே’ எனப் போராடினால், ”அது இந்திய இறையான்மைக்கு எதிரானது” என சவுண்டு கொடுக்கும் இதே அரசு தான் அமெரிக்க ஆண்டை தம்மை வேவு பார்ப்பதை அங்கீகரித்து, ”அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!” என மம்மியைப் பார்த்த எம்.எல்.ஏ.-வாகப் பம்மியது.
தற்போது உலக மக்கள் அனைவரையும் வேவுபார்க்கும் அமெரிக்காவின் திட்டம் அம்பலப்படுத்தப்பட்ட போதும், ’தேஷாபிமானி’ மோடி தலைமையிலான மத்திய அரசு இது குறித்து எந்த ஒரு கண்டனத்தையும் பதிவு செய்ய வில்லை. தங்களது மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை வேவு பார்ப்பது அயோக்கியத்தனம் என்றோ, இது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான செயல் என்றோ வாய் திறக்கவில்லை.
அதற்குப் பதிலாக, அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்கும் அமெரிக்காவின் இணைய வலைக்குள் இந்திய மக்கள் அனைவரையும் கொண்டு வந்து சேர்ப்பதற்கான ’மாமா’ வேலையைத் தீவிரமாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார் மோடி. அது தான் மோடியின் ”டிஜிட்டல் இந்தியா” திட்டம். ஊர் ஊருக்கு சாலை இருக்கிறதோ இல்லையோ, வை-ஃபை யும், இண்டெர்நெட்டும் கொண்டு வந்துவிட வேண்டும் என மோடி கும்பல் துடியாய் துடிப்பதன் நோக்கம், மக்கள் அனைவரையும் தமது கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது தான்.
ஏற்கனவே, ஒட்டு மொத்தக் குடிமக்களுக்கும் ‘மாட்டிற்குச் சூடு போடுவது’ போல் கை, கண் அடையாளங்களை எடுத்து ஆதார் அட்டையைக் கொடுத்து அதனை அவரவர் வங்கிக் கணக்கோடு இணைத்திருக்கிறது இந்திய அரசு. நமது அன்றாட நடவடிக்கைகளில் அவசியமானதாக மாற்றப்பட்டுள்ள ஆதார் அட்டைக்கு நம்மிடமிருந்து எடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களால் தவறாக உபயோகிக்கப்பட்டிருப்பது சமீபத்தில் அம்பலமானது.
நமது தனித்தன்மை வாய்ந்த தனிப்பட்ட தகவல்கள் எப்படி தனியார் நிறுவனங்களுக்கு கசியவிடப்பட்டன என்பது குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஸ்க்ரோல்.இன்(scroll.in) என்னும் இணையதளம் கேட்ட போது, அது அரசு இரகசியம் எனக் கூறி அது குறித்த தகவலை வெளியிட மறுத்தது மத்திய அரசு.
முதலாளிகளுக்கு நமது சேமிப்பை அள்ளிக் கொடுக்க, தற்போது நம்மைப் பணமில்லாப் பரிவர்த்தனையை நோக்கி முட்டித் தள்ளிக் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. பணமதிப்பு நீக்கத்தின் மூலமும், பணப் பரிவர்த்தனைக்கு எதிரான வங்கிகளின் அதிரடி நடவடிக்கைகள் மூலமும், இணையம் மற்றும் மொபைல் ஆப்புகளின் வழியான பரிவர்த்தனைகள் மூலமும் நம்மை அமெரிக்காவின் இணைய கண்காணிப்பு வலைக்குள் தள்ளிவிடுகிறது மோடி அரசு.
நாம் நமது அண்டை வீட்டுக்காரரைக் கூட நமது தனிப்பட்ட விவகாரங்களுக்குள் தலையிட அனுமதிப்பதில்லை. ஆனால் எங்கோ இருக்கும் அமெரிக்கா நமது படுக்கையறை வரை நமது ஒப்புதல் இன்றியே வந்து நமது அந்தரங்கங்களைப் படமெடுத்துக் கொள்ள அனுமதிக்கப் போகிறோமா? அமெரிக்க ஆண்டையின் அத்துமீறல்களுக்கு இந்திய ஆளும் வர்க்க அடிமைகள் வேண்டுமானால் ஒத்துழைக்கலாம், உழைத்து உணர்வோடு வாழும் நாம் ஒத்துழைக்கலாமா?
– நந்தன்,
நன்றி:வினவு.