போராட்டம் ஏன்?

பெட்ரோலை வைத்து 
ஈரானில் போராட்டம்.
ஏன்?
ஈரான் நாட்டில், 1979ம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமிய புரட்சி போன்றதொரு நிகழ்வு, தற்போது அங்கு நடைபெற்று கொண்டுள்ளது. பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் விலையுயர்வுக்கு எதிராக மக்கள், சாலைகளில் இறங்கி போராட துவங்கியுள்ளதால், அங்கு அசாதாரணமான சூழல் நிலவுகிறது.
இஸ்லாமிய புரட்சியின்போது குறைந்தது 180 பேர் பலியாயினர். அதுபோன்றதொரு நிகழ்வு தற்போது நடந்து வருதாக நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நவம்பர் மாத பிற்பகுதியில், பெட்ரோல் விலை அதிகரிப்பு மற்றும் தனிநபர் பெட்ரோல் பயன்பாட்டு அளவு நிர்ணயம் உள்ளிட்டவைகளாலேயே, மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் நிலை உருவாகியுள்ளது. போராடும் மக்களை ஒடுக்கும்பொருட்டு, பாதுகாப்புப்படையினர் ஆங்காங்கே, துப்பாக்கிச்சூடு உள்ளிட்டவைகளை நடத்தி வருவது அண்டை நாடுகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல், அண்டைநாடுகளான லெபனான் மற்றும் ஈராக் நாட்டின் பொருளாதாரத்தை பதம்பார்க்க தவறவில்லை.
ஈரான் நாட்டில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்த நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், நவம்பர் 15ம் தேதியிலிருந்து 4 நாட்கள் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் 180 முதல் 450 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டில் நிலவும்பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு அதிபர் ஹசன் ரெளஹானி, புதிய எரிசக்தி கொள்கையை வகுத்துள்ளார். அமெரிக்கா விதித்துள்ள திடீர் தடைகள் மற்றும் ஏற்றுமதி தடைகளால், கச்சா எண்ணெய் ஏற்றுமதி பெருமளவு குறைந்துள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் நாட்டின் வருடாந்திர பட்ஜெட்டில் 45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், இந்த விலையுயர்வு என்று அதிபர் ரெளஹானி குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் டிவி வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த விலையுயர்வின் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு 60 மில்லியன் ஈரானிய மக்கள் ( மக்கள் தொகையில் 75 சதவீதம்) பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலையுயர்வுக்கும், பட்ஜெட்டுக்கும் சம்பந்தமில்லை என்று அதிகாரப்பூர்வ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடத்தி வரும் மேசம் ஷெரீபி, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, அரசின் கருவூலம் காலியாகி விட்டது. மக்களின் பாக்கெட்களில் இருந்து எடுப்பதே ஒரே வழி என்ற எண்ணத்திலேயே இந்த விலையுயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மறுசீரமைப்பின் ஒருபகுதியாக, ஈரான் சமீபகாலமாக எரிசக்தி பிரிவில் வழங்கப்பட்டு வரும் மானியங்களை கணிசமாக குறைத்துக்கொண்டே வருகிறது. முன்னாள் அதிபர் மகமூத் அகமதிநிஜாத், மானியங்களை, நேரடி பணம் பரிமாற்றம் ஆக மாற்றினார். இந்த புதிய எரிசக்தி கொள்கை வெற்றியை தராது என்று அப்போதே வல்லுனர்கள் கணித்திருந்தனர்.
இந்த விலையுயர்வால், பொருளாதாரத்தில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்துவிடாது, ஆனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதே நிதர்சனமான உண்மை.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வரும் பொருளாதார நிபுணர் அலிரேஜா சலாவதி, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, ஈரான் பொருளாதாரம் தற்போதைய நிலையில் முன்னேற்றம் அடைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இந்த புதிய எரிசக்தி கொள்கை சரியாக திட்டமிடப்படாமல் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நாட்டின் பணவீக்கம் மேலும் சரிவடையும், பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையே நிலவும் என்று அவர் தெரிவித்தார்.

எண்ணெய் வளமிக்க ஈரானில், இந்த விலையுயர்விற்காகவா போராட்டம் நடைபெறுகிறது?
ஈரான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக எரிபொருள் பயன்பாட்டில் அதிகளவில் மானியங்கள் ரத்து செய்யப்பட்டதால், சட்டத்திற்கு புறம்பான பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது.
ஈரானில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 ஆயிரம் ரியால்கள் என்ற அளவிலிருந்து 15 ஆயிரம் ரியால்கள் ( இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.17 லிருந்து ரூ.26 ) என்ற அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனிநபர் பெட்ரோல் பயன்பாடு மாதம் ஒன்றுக்கு 60 லிட்டர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரியால்கள் ( ரூ.51) என்ற அளவில் இருந்தபோது கூட, இந்த கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை.
இந்தியர்களுக்கு இந்த பெட்ரோல் விலை சாதாரணமானது தான் என்றாலும், அதிகளவில் எரிபொருள் மானியங்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ள ஈரானியர்களுக்கு இந்த விலையுயர்வு, பெரும் சுமையாகவே கருதப்படுகிறது.
எண்ணெய் வளங்களை ஒப்பிடுகையில், ஈரான் அதிக எண்ணெய் வளங்கள் கொண்ட நாடுகளில் நான்காவது இடத்தையும், இயற்கை எரிவாயு வளங்களை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
அதிபர் ரெளஹானி, தென்மேற்கு ஈரான் பகுதியில் 53 பில்லியன் பேரல்கள் அளவிலான கச்சா எணணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.இந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், எண்ணெய் வளமிக்க நாடுகளில் ஈரான், மூன்றாவது இடத்துக்கு உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------++----------------------
அளவுக்கு அதிகமாக
ஆன்டிபயாடிக்.
தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவுக்கு நோயுயிர்முறிகளை (antibiotics) பரிந்துரைக்கப்படுவதாகச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆயிரம் பேரில் 412 பேருக்கு நோயுயிர்முறிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இதில் 0-4 வயதுள்ள குழந்தைகளுக்குத்தான் 1,000 பேரில் 636 பேர் என்ற அளவில் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ஆய்வை இந்திய பொதுச் சுகாதார நிறுவனம் மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.
நோயுயிர்முறிகள் என்பவை அற்புதம் செய்யும் மருந்துகள்தான். அதேநேரத்தில், அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டியுள்ளது. தேவையில்லாத, அதீதப் பயன்பாடு உடலில் பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது.
இவற்றில் முக்கியமானது நோய்த் தடுப்புச் சக்தி குறைந்துபோவது. சாதாரண ஜலதோஷம், சுவாசக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகளுக்குக்கூட நோயுயிர்முறிகள் அதிகமாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. மருந்து நிறுவனங்களின் வணிக லாபிதான் இதற்குப் பெருமளவில் காரணம் என்று கருதப்படுகிறது. இந்த லாபிக்குப் பலியாவது பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலன்தான்.
---------------------------------------------------------------------
நித்திலோகம்?
சாமியார் நித்தியானந்தா, தனி தீவில் ஹிந்துக்களுக்கான தனி நாடு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நித்தியானந்தாவுக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் உள்ளன. உலகம் முழுவதும் நித்தியானந்தாவின் சிஷ்யர்கள், ஆசிரமங்களில் பணிவிடை செய்து வருகின்றனர். இந்நிலையில், 

ஹிந்துக்களுக்காக 'கைலாசா' என்ற நாட்டை உருவாக்குவதாகவும், அது எல்லைகள் அற்ற ஹிந்து நாடாக இருக்கும் எனவும் நித்தியானந்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்காக 'கைலாசா' என்ற இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஹிந்து மதத்தை பின்பற்றும் அனைவரும் இந்த கைலாசா நாட்டின் குடிமகன் ஆகலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நாட்டிற்கு செல்ல தனி பாஸ்போர்ட், கொடி, ஆகியவற்றையும் உருவாக்கியுள்ளனர். இந்த நாட்டின் பிரதமராக நித்தியானந்தா இருப்பார் எனவும் அவரின் கீழ் 10 துறைகள் இருக்கும் எனவும் அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
--------------------+----------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?