நூறாண்டு கண்ட அரசாணை.

 தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுக்கும் கம்யூனல் ஜி.ஓ. எனப்படும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டு இன்றோடு 100 ஆண்டுகள் ஆகின்றன, வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணையின் வரலாறும் முக்கியத்துவமும் என்ன?

கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் மெட்ராஸ் மாகணத்தில், கல்விக்கூடங்களும் அரசு வேலை வாய்ப்புகளும் மெல்லமெல்ல அதிகரிக்க ஆரம்பித்த காலகட்டத்தில், கல்வி பயிலும் வாய்ப்புகளையும் அரசில் பணியாற்றும் வாய்ப்புகளையும் ஒரு சாரரே பெறுகிறார்கள் என கவனம் ஏற்பட ஆரம்பித்தது. அதன் உச்சகட்டமாகவே, கம்யூனல் ஜி.ஓ. எனப்படும் இடஒதுக்கீட்டிற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

1916ல் டாக்டர் சி. நடேசன், டி.எம். நாயர், தியாகராய செட்டி ஆகியோரால் உருவாக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation, சவுத் இந்தியன் லிபரல் ஃபெடரேசன்) கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் பிராமணரல்லாதோரின் பிரதிநிதித்துவம் குறித்து தொடர்ந்து பேசிவந்தது.

1916 நவம்பரில் வெளியிடப்பட்ட பிராமணரல்லாதோர் கொள்கை அறிக்கை, இதனைத் தெளிவாகக் குறிப்பிட்டது. பெரும்பாலான வேலைவாய்ப்புகள் பிராமணர்களுக்கே செல்வதாக இந்த அறிக்கை கூறியது. எல்லா சமூகத்தினருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் மாண்டெகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்தன. இதையடுத்து மாகாண சட்டமன்றங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட நீதிக் கட்சி, தனது அறிக்கையிலேயே, எல்லோருக்குமான சம வாய்ப்புகள் குறித்து குறிப்பிட்டது.

1921ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையை வெளியிட்ட மெட்ராஸ் மாகாண பிரதமர் பனகல் அரசர் ராமராயநிங்கர்.
படக்குறிப்பு,

1921ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையை வெளியிட்ட மெட்ராஸ் மாகாண பிரதமர் பனகல் அரசர் ராமராயநிங்கர்.

இந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற நீதிக்கட்சி, 1920 டிசம்பர் 17ஆம் தேதி சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் பதவியேற்றது. அடுத்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சுப்பராயலு ரெட்டியார் உயிரிழந்துவிட்டார். இதற்கடுத்ததாக, பனகல் அரசர் ராமராயநிங்கர் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

இதற்குப் பிறகு, நீதிக் கட்சியின் முக்கியமான திட்டங்களை செயல்படுத்தும் பணிகள் துவங்கின. இந்தத் தருணத்தில், மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவையில் பிராமணரல்லாதார் யார் என்பது குறித்து விவாதம் நடைபெற்றது. பெரும் விவாதத்திற்குப் பிறகு, "பார்ப்பனர் அல்லாதார் என்றால் முகமதியர் , இந்திய கிறிஸ்தவர், பார்ப்பனர் அல்லாத இந்துக்கள், ஜைனர்கள், பார்சிகள், ஆங்கிலோ இந்தியர் ஆகிய மற்றுமுள்ளோர் என்று பொருள்" என சி. நடேசனார் விளக்கமளித்தார்.

இந்த விளக்கமே வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை வெளியாவதற்கு அடிப்படையாக அமைந்தது. பார்ப்பனரல்லாதார் என்றால், இந்துக்கள் அல்லாத மற்றவர்களும் அடங்குவர் என்பதையும் இந்தத் தீர்மானம் உறுதிப்படுத்தியது.

1921 ஆகஸ்ட் ஐந்தாம் தேதி சட்டப்பேரவையில் பேசிய ஓ. தணிகாசலம் செட்டியார் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். ஒரு அரசு அலுவலகத்தில் 100 ரூபாய் அளவுக்கு சம்பளம் வாங்கும் எல்லா அதிகாரிகள் மட்டத்திலும் 66 சதவீதம் அளவுக்கு பிராமணரல்லாதார் இடம்பெறும்வரை, கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பிராமணரல்லாத வகுப்பினருக்கு பணிகளில் முன்னுரிமை தர வேண்டும். பிராமணர்களைவிட, அவர்கள் சற்று தகுதிக்குறைவாக இருந்தாலும் இதைச் செய்ய வேண்டும். 100 ரூபாய்க்கு கீழே ஊதியம் பெறுபவர்களில் 77 சதவீதம் பிராமணரல்லாதவர்களாக இருக்கும் நிலை ஏற்பட வேண்டும். 7 ஆண்டுகளில் இதை எட்ட வேண்டும் என அந்தத் தீர்மானம் கூறியது.

இந்தத் தீர்மானத்தை நடேச முதலியார் வழிமொழிந்தார். "பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் வரி இல்லை" என்று முழங்கினார். அதே நாளில் மேலும் ஒரு தீர்மானத்தையும் தணிகாச்சலம் செட்டியார் கொண்டுவந்தார். அதன்படி, தலைமைச் செயலகத்தில் ஐ.சி.எஸ். பிரிவு அதிகாரிகளைத் தவிர, பிற பிரிவுகளுக்கு பிராமணரல்லாதவர்களையே நியமிக்க வேண்டும் என அந்தத் தீர்மானம் கூறியது.

அவையிலிருந்த பி. சிவாராவ், எல் ஏ. கோவிந்தராகவ ஐயர் போன்ற பிராமண உறுப்பினர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். "உலகமே நம்மைப் பார்த்துச் சிரிக்கும்" என்று குறிப்பிட்டனர். ஆனால், ஆர்.கே. சண்முகம் செட்டியார் இதனை ஆதரித்தார். "இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் நாட்டிற்கே விடுதலை அளித்த மனிதர்களாக எதிர்கால சந்ததி நம்மைக் கருதும்" என்றார். இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கம்யூனல் ஜி.ஓ. சொல்வதென்ன?

பிறப்பிக்கப்பட்ட கம்யூனல் ஜி ஓ
படக்குறிப்பு,

பிறப்பிக்கப்பட்ட கம்யூனல் ஜி ஓ

இதன் தொடர்ச்சியாகவே, Communal GO என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கான அரசாணை பனகல் அரசர் தலைமையிலான அரசால் செப்டம்பர் 16, 1921ல் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில் பின்வரும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன:

"பிராமணரல்லாதவர்கள் அரசு அலுவலகங்களில் பெற்றுள்ள இடங்களை அதிகரிக்க, பல்வேறு ஜாதியினருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக வருவாய்த் துறையில் பிறப்பிக்கப்பட்ட நிலை ஆணை 128 (2)ல் தெரிவிக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை அரசின் எல்லாத் துறைகளுக்கும், எல்லா மட்டங்களுக்கும் செயல்படுத்த வேண்டும். எல்லாத் துறைகளின் தலைவர்களும், பணி நியமனம் செய்யும் அதிகாரம் படைத்த அதிகாரிகளும் எதிர்காலத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது இந்த வழிமுறையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

துறைகளின் தலைவர்கள், ஆட்சியர்கள், மாவட்ட நீதிபதிகள் ஆகியோர் ஒவ்வொரு அரையாண்டிற்கும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையில், கடந்த அரையாண்டு காலத்தில் தங்களுடைய அலுவலகத்திலும் தங்களுக்குக் கீழுள்ள அலுவலகங்களிலும் புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்பதை குறிப்பிட வேண்டும். அவர்களைப் பின்வருமாறு பிரித்துக் காட்ட வேண்டும்:

1. பிராமணர்கள்

2. பிராமணரல்லாத இந்துக்கள்

3. இந்திய கிறிஸ்தவர்கள்

4. இஸ்லாமியர்கள்

6. ஐரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்கள்

7. மற்றவர்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15, ஜூன் 15ஆம் தேதிக்குள் இந்த அறிக்கையை அனுப்ப வேண்டும். முதலாவது அறிக்கையை 1921 டிசம்பர் 31க்குள் அளிக்க வேண்டும்

(ஆளுநரின் ஆணைப்படி)

என்.இ. மேஜர்ஐபாங்ஸ்,

(தலைமைச் செயலர்) "

அரசு அலுவலகங்களில் வேலை வாய்ப்புகளை அளிக்கும்போது, 12 இடங்களாக அவற்றைத் தொகுத்து வேலை வாய்ப்புகளை அளிக்க வேண்டும். அதன்படி, 12 இடங்களில் 2 இடங்கள் பிராமணர்களுக்கும் ஐந்து இடங்கள் பிராமணரல்லாதவர்களுக்கும் இரண்டு இடங்கள் இஸ்லாமியர்களுக்கும் இரண்டு இடங்கள் கிறிஸ்தவர், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ - இந்தியர்களுக்கும் அளிக்க வேண்டும். ஒரு இடம் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவருக்குத் தரவேண்டும்.

இதன்படி, ஒரு அரசு அலுவலகத்தில் வேலை வாய்ப்புகள் உருவாகும்போது, பின்வரும் வரிசையில் அவை நிரப்பப்பட்டன. 1. பிராமணரல்லாத இந்து 2. இஸ்லாமியர் 3. பிராமணரல்லாத இந்து 4. ஆங்கிலோ - இந்தியர் அல்லது இந்திய கிறிஸ்தவர் 5. பிராமணர் 6. பிராமணரல்லாத இந்து 7. ஓடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் 8. பிராமணரல்லாத இந்து 9. இஸ்லாமியர் 10. பிராமணரல்லாத இந்து 11. ஆங்கிலோ - இந்தியர் அல்லது இந்திய கிறிஸ்தவர் 12. பிராமணர். சதவீதப்படி பார்த்தால், பிராமணர் அல்லாதவர்களுக்கு 44%, பிராமணர்களுக்கு 16%, முஸ்லிம்களுக்கு 16%, ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு 16%, பட்டியல் இனத்தவர்களுக்கு 8% என இடஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்திய உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்திய உச்ச நீதிமன்றம்

இந்த ஆணை ஒழுங்காக செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இதற்குப் பிறகு, 1922 ஆகஸ்ட் 15ஆம் தேதி கல்வி நிலையங்களிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அளிக்கும் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், 1928 டிசம்பர் 15ஆம் தேதி வெளியிடப்பட்ட மூன்றாவது கம்யூனல் ஜி.ஓ. மூலம்தான், இந்த இட ஒதுக்கீடுகள் அமலுக்கு வந்தன.

உண்மையில், இந்த அரசாணைகள் பிராமணரல்லாதவர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்கும் அரசாணைகளாக கருதப்பட்டாலும், இவை பிராமணர்களுக்கும் 16 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கின.

முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை இந்த அரசாணை குறித்துக் குறிப்பிடும்போது, "தென்னாட்டைப் பொறுத்தவரை கம்யூனல் ஜி.ஓ. திராவிட சமுதாயத்தின், ஏன் - பார்ப்பனர் உள்பட மனித சமுதாயத்தின் சுதந்திர சாசனம் ஆகும். கம்யூனல் ஜி.ஓ. ஒரு மானுட சுதந்திர சாசனம்" என்று குறிப்பிட்டார்.

இந்தியா சுதந்திரம் பெற்று, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்த அரசாணையை எதிர்த்து இரு மாணவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றபோது, இந்த கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் பிறகு, இட ஒதுக்கீடு அளிக்க ஏதுவாக, இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.

-------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?