ஒவ்வொரு அடியும் அதிரடி

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக அரசியலில் ஒப்பற்ற தலைவராகவும், நாட்டிலேயே ஒரு முன்மாதிரி முதலமைச்சராகவும் திகழ்கிறார்” என்று கேரளத்தின் முன்னணித் தொலைக்காட்சி “மனோரமா நியூஸ்” புகழாரம் சூட்டியுள்ளது.

‘மலையாள மனோரமா’ கேரளத்தின் தலையாய நாளிதழ். ‘மனோரமா நியூஸ்’ கேரளத்தின் முதன்மையான செய்தித் தொலைக்காட்சிகளுள் ஒன்று. ‘மனோரமா நியூஸ்’ : ஸ்டாலின் அரசு' என்கிற பொருளில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதன் பிரதானப் பகுதிகள் வருமாறு :

எம்.கே.ஸ்டாலினின் அரசு 100 நாட்களைக் கடந்துவிட்டது. பாராட்டுகள் குவிகின்றன. மொத்த இந்தியாவும் தமிழகத்தைக் கவனிக்கிறது. இதுவரை தமிழகம் கண்டிராத அரசியல் நாகரிகத்துடன் அவரது ஆட்சி நடந்து வருகிறது. அவரது ஆட்சியும், திட்டங்களும் மக்கள் தொடர்புத் தந்திரங்களா? என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?



முதல் 100 நாட்களைத் தேனிலவு என்பார்கள். அது ஒரு ஆட்சியை மதிப்பீடு செய்யப் போதுமானதில்லை என்றாலும் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று நெருங்கிப் பார்க்கலாம். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான்... என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டபிறகு அவர் நேரே தான் ஓடியாடி வளர்ந்த கோபாலபுரம் வீட்டுக்குச் சென்றார். இங்கேயிருந்துதான் தனது 14வது வயதில் தி.மு.க.வின் இளைஞர் அணியைத் துவக்கினார் ஸ்டாலின். தாயாரிடம் ஆசி பெற்றார். அண்டை வீட்டாரின் நலம் விசாரித்தார். கட்சியிலும், அரசியலிலும் கரடுமுரடான பாதைகளைக் கடந்துவந்த போதும் தனது ஒவ்வோர் அடியையும் அவர் நினைவு வைத்திருக்கிறார்.

முதல் நாளே வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கினார்!

தனது தேர்தல் பரப்புரையின்போது நமது மனோரமா நியூஸுக்கு மு.க.ஸ்டாலின் ஒரு நேர்காணல் வழங்கினார். தேர்தல் அறிக்கையை நடப்பில் ஆக்குவதற்காகத்தான் தயாரித்திருக்கிறோம் என்றார்.

கோபாலபுரத்திலிருந்து அவர் கோட்டைக்குச் சென்றார். முதல்நாளே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் துவங்கினார். பாலின் விலையை லிட்டருக்கு மூன்று ரூயாய் குறைத்தார். இது நடுத்தர வர்க்க மக்களுக்கு வரமாய் அமைந்தது. பெண்களுக்குப் பேருந்துப் பயணத்தை இலவசமாக்கினார். இந்த அறிவிப்பு பெண் வாக்காளர்கள் அதிகமுள்ள தமிழகத்தில் பெண்களைச் சுதந்திரமானவர்கள் ஆக்கியது. எல்லோருக்கும் நான்காயிரம் ரூபாய் வழங்கினார். கட்சிக்கு அப்பாற்பட்டவர் ஸ்டாலின் என்பது ஒவ்வொரு நாளும் உறுதியாகிக் கொண்டிருக்கிறது.

முதல் நாளே சில தி.மு.க தொண்டர்கள் அம்மா உணவகத்தைச் சூறையாடிய சம்பவம் நடந்தது. இதையறிந்த முதல்வர் உடன் தொகுதி எம்.எல்.ஏ.யை அனுப்பினார். மீண்டும் பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டன. ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரப்பட்டது. வன்முறையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதிசயங்களும் நடந்தன!

ஆட்சி மாறியதும் முந்தைய தி.மு.க அரசு உருவாக்கிய புதிய சட்டசபைக் கட்டிடத்தை மருத்துவமனை ஆக்கியது அ.தி.மு.க. அதே தமிழகத்தில்தான் இப்படியான அதிசயங்களும் நடந்தன.

ஸ்டாலின் பதவியேற்றபோது கோவிட் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. நாளொன்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,000ஆக இருந்தது. இதுமேலும் அதிகரிக்கும் என்ற ஆருடங்களைப் பொய்ஆக்கினார் ஸ்டாலின். வல்லுனர்கள் அளித்த ஆலோசனைகளின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இப்போது பாதிப்பு 1500 ஆகக் குறைந்திருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்த காலம் போய் இப்போது எல்லா மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் போதுமான கையிருப்பு இருக்கிறது. 230 மெட்ரிக் டன் கையிருப்பு இருந்த இடத்தில் இப்போது 1000 மெட்ரிக் டன் கையிருப்பு இருக்கிறது என்கிறார் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தடுப்பூசி செலுத்துவதிலும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகி இருக்கிறது தமிழ்நாடு. கார்ப்பரேட் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதியைப் பயன்படுத்திப் பல தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை 3,20,00,000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் மறைந்தபோது முன்னாள் முதல்வர் பழனிச்சாமி, முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையில் அமர்ந்து ஆறுதல் சொன்னார் ஸ்டாலின். அதேபோல பன்னீர்செல்வத்தின் துணைவியார் மறைந்தபோது, அவரது கரம் பற்றி ஆறுதல் சொன்னார்.

எதிர்க்கட்சியினரிடம் நாகரீகமாக நடந்து கொள்ளும் அதே வேளையில் அவர்களது ஊழலையும், குற்றச்செயல்களையும் அவர் சகித்துக்கொள்வதில்லை. பழனிச்சாமிக்கு தொடர்பு உண்டு என்று சந்தேகப்படும் கொடநாடு கொலை வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் மீது ஊழல் விசாரணை இறுகுகிறது. ஆறு முன்னாள் அமைச்சர்கள் ஊழல் ஒழிப்புத்துறையின் விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்கள். அமித்ஷாவைக் கைது செய்த கந்தசாமி ஐ.பி.எஸ். ஊழல் ஒழிப்புத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஒரு மலையாளத் தொலைக்காட்சியில் பி.கே.விஸ்வநாதன் எனும் அரசியல் தலைவர், ஸ்டாலினின் 100 நாள் சாதனைகளைப் பட்டியலிட்டார். அந்தக் காணொலி வைரலானது.

ஆன்மீகத் துறையிலும் ஸ்டாலின் சாதனை!

ஆன்மீகத் துறையிலும் ஸ்டாலினின் சாதனைகள் குறிப்பிடத்தக்கன. கோடிக் கணக்கான மதிப்புள்ள கோவில் சொத்துக்களை மீட்டெடுத்திருக்கிறார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றியுள்ளார். பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அகில இந்திய அளவில் கவனிக்கப்படுகிறார். அயல்நாடுகளில் நிதித் துறையில் உயர்ந்த பதவிகளை வகித்தவர். தமிழ்நாட்டின் நிதிநிலையை உயர்த்துவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். மதுக்கடைகளை தமிழ்நாட்டில் மட்டும் தடை செய்வது நடைமுறை சாத்தியமல்ல என்றும் பி.டி.ஆர். தெரிவித்திருக்கிறார்.

மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் ஆகியோரைப் போல் பி.ஜே.பிக்கு எதிரான முதல்வராக இருந்த போதும், ஒன்றிய அரசோடு இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கிறார் ஸ்டாலின். கூடுதல் தடுப்பூசி பெறுவதிலும் வைரசின் மரபுக் கட்டமைப்பைக் கண்டறியும் சோதனைச் சாலைகளை நிறுவுவதிலும் அவர் பிரதமரைச் சந்தித்து உதவி கோருகிறார். அதே நேரத்தில் தி.மு.க.வின் ஆதாரக்கொள்கைகளில் அவர் எந்தச் சமரசமும் செய்து கொள்வதில்லை. இந்தி எதிர்ப்பில் இப்போதும் முன்னணியில் நிற்கிறது தி.மு.க. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கும் ‘நீட்’ தேர்வுக்கும் எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியது.

முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும், காவிரிப் பிரச்சினையிலும் தமிழக அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இராது என்று உறுதிபடச் சொல்லி இருக்கிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

இந்தக் காட்சிகளுக்கிடையில் அ.தி.மு.க. முகாமில் குழப்பம் நிலவுகிறது. பழனிச்சாமி, பன்னீர்செல்வம் இடையே தலைமையைக் கைப்பற்ற போட்டி நடைபெறுகிறது. முன்னாள் ஊழல் அமைச்சர்கள் மீது வழக்குகள் அணி வகுக்கப்போகின்றன. கலங்கிய குளத்தில் மீன் பிடிக்கத் தயாராகிறார் சசிகலா. தேர்தலுக்குப் பிறகு சினிமா வசனம் பேசுவது போலல்ல அரசியல் என்பது கமலஹாசனுக்குப் புரிந்திருக்கும்.

ஆக, தமிழக அரசியலில் மு.க.ஸ்டாலின் ஒப்பற்ற தலைவராகத் திகழ்கிறார். கேரள மக்களிடையே ஸ்டாலின் ஒரு நட்சத்திரமாய் உயர்ந்து வருகிறார். இவ்வாறு ‘மலையாள மனோரமா நியூஸ்’ கூறியுள்ளது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?