ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

தானாகவே குறையும் மனித வாழ்நாட்கள்

 சிகரெட் பிடிப்பதோ அல்லது காசநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற வியாதிகளை விட காற்று மாசுபாடு மனித ஆயுளை வெகுவாகக் குறைக்கிறது என AQLI (Air Quality Life Index) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்பொழுது நிலவிவரும் காற்று மாசின் அளவுகள் அப்படியே தொடர்ந்தால், ஏற்கனவே மோசமான காற்று மாசுபாட்டில் உள்ள இந்தியப் பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்நாளில் 9 ஆண்டுகளை இழக்க நேரிடும் என்கிறது அண்மையில் வெளியான AQLI (Air Quality Life Index ) ஆய்வறிக்கை.

உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு இருக்கும் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகள் மிக மோசமாக காற்று மாசடைந்த நாடுகளின் பட்டியலில் தொடர்ச்சியாக முதல் ஐந்து இடங்களில் உள்ளன. உலகின் மிகவும் மாசுபட்ட 40 நகரங்களின் பட்டியலில் 37 நகரங்கள் தெற்காசியப் பிராந்தியத்தில்தான் உள்ளது. குறிப்பாக இந்த மிகவும் மோசமான காற்று மாசுபட்ட நகரங்களில் 185 கோடி மக்கள் வசிக்கிறார்கள்.

இவர்கள் தங்கள் ஆயுட்காலத்தில் சராசரியாக 5 ஆண்டுகளை இழப்பதாகவும், உலகம் முழுவதும் காற்று மாசு காரணமாக மனித ஆயுள் சராசரியாக 2.2 ஆண்டுகள் குறைவதாகவும், டெல்லி , கொல்கத்தா போன்ற இந்திய நகரங்களில் காற்று மாசு காரணமாக மனித ஆயுள் காலம் 9 ஆண்டுகள் வரை குறைவதாகவும் இந்த AQLI ஆய்வறிக்கை கூறுகிறது. இது சிகரெட் பிடித்தலை விட, காச நோய் அல்லது எயிட்ஸ் போன்ற வியாதிகளை விட அதிகமாகப் பாதிப்பாகும். காற்றிலிருக்கும் நச்சு வாயுக்களைக் காட்டிலும் நுண் துகள்களை சுவாசிப்பத்தன் மூலமே மக்களின் ஆயுள் காலம் குறைவதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

காற்றில் நுண்துகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது அனல் மின் நிலையங்கள் மற்றும் வாகனப் புகை, என்ற அடிப்படையில் இந்த காற்று மாசினால் ஏற்படும் உயிரிழப்புகள், புதைப்படிம எரிபொருள் பயன்பாட்டினால் உந்தப்படும் ஒரு பேராபத்தாகதான் கருதப்பட வேண்டும். இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளில் காற்றில் நுண்துகள்களின் பெருக்கம் அபாயகரமான அளவுகளில் நாடு முழுவதும் பரவலாக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் உள்ள 480 மில்லியன் மக்கள் உலகத்தில் பிற இடங்களில் இருப்பதைக் காட்டிலும் பத்து மடங்கு அதிக மாசடைந்த காற்றை சுவாசிக்கிறார்கள்.

வட இந்திய மாநிலங்கள் மட்டுமல்லாமல் தற்பொழுது மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் மக்களும் தற்பொழுது நுண்துகள் காற்று மாசின் பேராபத்தால் தங்களில் வாழ்நாளில் 2.2 முதல் 2.9 வருடங்களை இழக்கிறார்கள் என்று இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. இது நுண்துகள் அளவுகள் பல மடங்கு அதிகரித்துக் காணப்படும் சென்னைப் போன்ற தமிழக நகரங்களுக்கும் சேர்த்தே விடப்பட்டிருக்கும் எச்சரிக்கை ஆகும். இந்திய காற்று தர நிர்ணய அளவீட்டின் படி காற்றில் நுண்துகளின் அளவு 60 µg/m3 க்கு உள்ளாக இருத்தல் வேண்டும். இதுவே உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) காற்று தர நிர்ணய அளவீட்டின் படி 25 µg/m3 க்கு உள்ளாக இருத்தல் வேண்டும்.

ஆனால் சென்னையின் பல பகுதிகளில் நுண் துகளின் அளவு 60 µg/m3 அளவை விட அதிகமாக உள்ளதாக Health Energy Initiative நடத்திய ஆய்வின் முடிவில் நமக்கு தெரிகிறது. குறிப்பாக திருவொற்றியூர், காசிமேடு, மீஞ்சூர், கொடுங்கையூர், வல்லூர், எண்ணூர், மணலி, அம்பத்தூர், தி.நகர், வேளச்சேரி, ஆகியப் பகுதிகளில் இந்த ஆய்வின் பொழுது நுண்துகள் 60 µg/m3 முதல் 128 µg/m3 வரை இருந்துள்ளன. அதே போல் பாரிமுனை , வியாசர்பாடி போன்ற பகுதிகளில் நுண்துகளில் அளவு 176 µg/m3 முதல் 228 µg/m3 வரை பதிவாகியுள்ளது. சென்னையின் காற்றின் தரம் இப்படி இருக்கையில், நுண்துகளின் அளவை உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள 25 µg/m3 அளவுக்கு குறைத்தால் தற்பொழுது இருப்பதை விட மனித ஆயுளை 5 ஆண்டுகள் அதிகரிக்கலாம் என்று AQLI அறிக்கை வலியுறுத்துகிறது.

இது நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்விக்கு, சீனாவின் காற்று மாசுக்கு எதிரான நடவடிக்கைகள் நமக்கான பதிலாக நிற்கின்றன. 2013ம் ஆண்டு தொடங்கி காற்று மாசை சீன அரசு தீவிரமாக கட்டுப்படுத்தியதன் விளைவாகத் தற்பொழுது 29% வரை நுண்துகளைக் கட்டுப்படுத்தியுள்ளது. இதேப் போல இந்தியாவும் அனல் மின் நிலையங்கள் மற்றும் வாகனப் புகை ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வருமானால் இந்திய மக்களின் ஆயுட்காலமும் 5 ஆண்டுகள் அதிகரிக்க கூடும். இதற்கு பல்வேறு ஒருங்கிணைந்த காற்று மாசுக் குறைப்பு முன்னெடுப்புகள் தேவை என்றாலும் காற்று மாசு குறைக்க குறிப்பிட்ட சில துறை சார்ந்த கொள்கைகளை வகுப்பதும் இந்தியாவிற்கு அவசியாமாக உள்ளது. முக்கியமாக இந்தியாவின் மின் கொள்கை புதைப்படிம எரிசக்தியில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி மாறுவது தற்போதைய அவசரத் தேவையாக உள்ளது.

----------------------------------------------------------------------------------,பழைய கொள்ளை மறைக்கப்பட்டது.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும் கொடநாடு எஸ்டேட்டில் ஒருமுறை கொள்ளை சம்பவம் நடைபெற்றதாகவும், அப்போது கொள்ளையர்களால் கொள்ளையடிக்க முடியாததால் தப்பி ஓடியதாகவும் இதுகுறித்து சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அப்போது காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் வழக்குப்பதிவு செய்யவில்லை என கொடநாடு பகுதியை சேர்ந்த, அப்போதைய கொடநாடு ஊராட்சி மன்றத் தலைவர் பொன்தோஸ் பரபரப்பு தகவலைத் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருந்தார். அவர் மறைவிற்குப் பின் 2017 ஏப்ரல் 24ஆம் தேதி கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் பங்களாவில் கொலை செய்யப்பட்டார். அங்கிருந்த சில முக்கியப்பொருட்கள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கொள்ளை போயின.

கொலையில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் எடப்பாடியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அடுத்து, காவலாளி கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்பட்ட சயான் குடும்பத்துடன் காரில் செல்லும்போது விபத்திற்குள்ளாகி மனைவி, மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்தனர். சயான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேபோன்று கொடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அதே ஆண்டில், ஜூலை 5 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். 5 தொடர் மரணங்களை உள்ளடக்கிய கொடநாடு காவலாளி கொலை வழக்கு 10 பேர் மீது பதிவு செய்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் எந்தவித நகர்வும் இல்லாத நிலையில், கடந்த 13ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, இந்த வழக்கில் அரசு தரப்பில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்ற சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி சில முக்கிய விவகாரங்கள் தொடர்பாக வாதிட்டுள்ளனர்.

அதன்படி, வழக்கு விசாரணையின்போது, சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதுதொடர்பாக கூடுதல் விசாரணை நடத்த காவல்துறை உதவி வேண்டும் என்றும், 173/8 குற்றவியல் விசாரணை முறை சட்டப்படி கூடுதல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ள முதல் நபரான கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சயானிடம் விசாரணை நடத்த காவல்துறை சம்மன் அனுப்பியது.

அதன்படி, உதகை பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சயானிடம் விசாரணை நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் நேரடியாக விசாரணை நடத்தியுள்ளனர். அவருடன், டி.எஸ்.பி., சுரேஷ், கோத்தகிரி காவல் ஆய்வாளரான வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர். சுமார் 3 மணி நேர விசாரணையில், சயானிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த முன்னாள் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே நேற்று இரண்டாம் தேதி வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், அரசு வழக்கறிஞர்கள் இவ்வழக்கு குறித்த கூடுதல் தகவல்களை சேகரிக்க கால அவகாசம் வேண்டும் என நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் ஷாஜகான் மனு தாக்கல் செய்தார், இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி நான்கு வார காலத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து அடுத்த மாதம் இரண்டாம் தேதி விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார்.

இதனிடையே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக சுதந்திரமாக விசாரணை மேற்கொள்ளவும் அனுமதியளித்தார். இதனைத் தொடர்ந்து கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்க மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படை அமைத்து விசாரணை உறுதிப்படுத்தப்பட்டுள்விசாரணை

இந்நிலையில் இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொள்ளை போன பொருட்கள் மற்றும் கோப்புகள் குறித்து காவல்துறையினர் கேட்டனர். அதற்கு எஸ்டேட் மேலாளர் நடராஜன் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், விசாரணையில் திருப்தியடையாத காவல்துறையினர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது தவறாமல் வரவேண்டுமென கூறி நடராஜனை அனுப்பி வைத்தனர்.

இதனிடையே இன்று பிற்பகல் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மூளையாகச் செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜின் மனைவி கலைவாணி மற்றும் மைத்துனர் தினேஷ் ஆகியோரை கோவையில் ரகசிய இடத்தில் வைத்து சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் கொடநாடு எஸ்டேட் பகுதியில் உள்ள ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவின் பங்களாவில், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது ஒரு நாள் இரவு பங்களாவிற்குள் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அப்போது கொடநாடு எஸ்டேட்டில் தேயிலை தொழிற்சாலை இரவு இயங்கி கொண்டிருந்த நிலையில், சில பணியாளர்கள் எஸ்டேட் பகுதிக்குச் சென்றபோது கொள்ளையர்களை பார்த்து விரட்டி அடித்துள்ளனர். இதை அப்போது காவல்துறையிடம் தெரிவித்தும், அதுகுறித்து சோலூர்மட்டம் போலிஸார் எவ்வித வழக்கும் பதிவு செய்யாமல் மூடி மறைத்துள்ளனர்.

அத்துடன் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது 21ஆம் தேதி கோடநாடு பகுதிக்கு போடப்பட்டிருந்த காவல்துறையினரின் பாதுகாப்பை, அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உத்தரவின்பேரில் சோலூர்மட்டம் போலிஸார் விலக்கிக் கொண்டுள்ளனர்.

மேலும் கொடநாடு எஸ்டேட் நிர்வாகத்தில் பகலில் 15 பேர், இரவுக் காவலர்கள் 15 பேர் தொடர்ந்து காவல் பணியை மேற்கொள்ளும் நிலையில் கொள்ளை சம்பவம் நடைபெற்ற அன்று இரண்டு பேர் மட்டுமே கொடநாடு எஸ்டேட் நிர்வாகம் சார்பில் இரவு காவல் பணியை மேற்கொண்டது எப்படி என்று சந்தேகம் வலுத்து வருவதால், இவ்வழக்கு விசாரணையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, அப்போதைய டி.ஜி.பி ராஜேந்திரன், கோவை மண்டல ஐ.ஜி ,சோலூர்மட்டம் காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணி ஆகியோரிடம் தனிப்படை போலிஸார் விசாரணை நடத்தினால் பல உண்மை சம்பவங்கள் வெளிவரும் என முன்னாள் கொடநாடு ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான கொடநாடு பகுதியை சேர்ந்த பொன்தோஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், கொலை கொள்ளை சம்பவத்தில் போலிஸார் 4 கைகடிகாரம் ஒரு கிறிஸ்டல் கரடி பொம்மை மட்டுமே திருட்டுப் போனதாக வழக்குப் பதிவு செய்ததையும், ஆனால் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான், தாங்கள் பல்வேறு ஆவணங்களை திருடிச் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் அப்போதைய காவல்துறையின் உயர் அதிகாரிகள் மிக முக்கிய பிரமுகரை இவ்வழக்கில் இருந்து தப்புவிக்க உடந்தையாக இருந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது என்றும் எனவே கட்டாயம் அப்போது இருந்த காவல்துறை அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்நிலையில் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை நடத்தும் அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது.

------------------------------------------------------------------------------------