வியாழன், 9 செப்டம்பர், 2021

முடக்கு

 சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 187 இடங்களில், 2017ல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். ஐந்து நாட்கள் நீடித்த சோதனையில், சசிகலா குடும்பத்தினர் 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை துவக்கி, 1,500 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.


ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துக்களில் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும் சோதனையில் சிக்கின. அந்த ஆவணங்களின் அடிப்படையில் சொத்துக்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன.இதன்படி, 2019ல் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. 2020ல் ஐதராபாதில் உள்ள, 'ஸ்ரீ ஹரிசந்தனா எஸ்டேட்' நிறுவன பெயரில் இருந்த 65 சொத்துக்கள், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டன.அதில், சென்னை போயஸ் தோட்டத்தின் வேதா நிலையம் எதிரே, 22 ஆயிரத்து 460 சதுர அடி நிலத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டடமும் அடங்கும்
ஆலந்துார், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 200 ஏக்கர் நிலங்கள் உட்பட 300 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துக்கள் கையகப்
படுத்தப்பட்டன.இந்த சொத்துக்களின் பரிமாற்றம், 2003 - 2005ல் நடந்துள்ளது. சொத்துக்களை கையகப்படுத்தியது தொடர்பாக, சசிகலாவிற்கு ஏற்கனவே, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.இது குறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:சசிகலா உட்பட அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில், அவரது சொத்துக்கள் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், முடக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, செங்கல்பட்டு மாவட்டம் பையனுார் பகுதியில் 49 ஏக்கரில் அமைந்துள்ள 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களா முடக்கப்பட்டுள்ளது.


பங்களா முடக்கப்பட்டதற்கான காரணத்தை விவரிக்கும் வகையில், 10 பக்கங்கள் உடைய நோட்டீஸ், அதன் வாசலில் ஒட்டப்பட்டுள்ளது.அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 90 நாட்களுக்குள், இந்த சொத்தின் வாயிலாக ஆதாயம் பெறவோ, பிறருக்கு மாற்றவோ கூடாது. இது குறித்து சசிகலா, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா, மகன் தீபக் மற்றும் திருப்போரூர் சார் - பதிவாளர் ஆகியோருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்ட சொத்து வாங்கிய விபரங்களை தெரிவித்து, 'நான் பினாமி இல்லை' என, சசிகலா நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுஉள்ளது.கடந்த 2019 முதல் தற்போது வரை, சசிகலாவுக்கு சொந்தமான 2,000 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள சொத்துக்கள்முடக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.எப்போதெல்லாம் சசிகலா அரசியலில் குதிக்கத் தயாராகிறாரோ, அப்போதெல்லாம் வருமானவரித்துறையின் ரெய்டில் சிக்கிய ஆவணங்களில் ஒன்றை எடுத்து விடுவார்கள். சொத்தை முடக்கியதாக செய்திகள் வரும். அப்படித்தான், தற்போது சசிகலா, கொடநாடு கொலை,கொள்ளை வழக்கின் விசாரணைக்கு வருவார். எடப்பாடி பழனிசாமி மீது அவர் பகிரங்க சந்தேகத்தைக் கிளப்பப்போகிறார் என்று சசிகலா தரப்பினர் சொல்ல ஆரம்பித்தனர். இன்று (செப்டம்பர் 8) மத்திய அரசின் வருமானவரித்துறை அதிகாரிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சசிகலா தொடர்புடையய பையனூர் பங்களா வாசலில் நோட்டீஸ் ஒட்டி சொத்தை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த நிலத்தை தன்னிடம் இருந்து மிரட்டி வாங்கப்பட்டதாக பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சசிகலா சிறையில் இருந்தபோது, நீதிமன்ற அனுமதியோடு அவருக்கு தெரியாமல் போயஸ்கார்டன் வீட்டின் பூட்டை உடைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. அதன்படி, பண மதிப்பிழப்பு நேரத்தில், போயஸ்கார்டனில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தனியார் நிறுவனங்களிடம் கொடுத்து மாற்றச் சொன்னதோடு, அதற்கு ஈடாக அவர்களது சொத்துக்களை தங்கள் பினாமிகளின் பெயருக்கு வாங்கி ஆவணங்களாக வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில், சுமார் 1600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கினர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள 10 கிரவுண்ட் நிலம் உள்ளிட்ட ரூ. 300 கோடி ரூபாய் சொத்துக்களைக் கண்டறிந்து பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கினர். அடுத்தகட்டமாக, இன்று ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களாவை முடக்கியுள்ளனர். இதுவரை 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடக்கிறது. விசாரணை முடிவின் அடிப்படையில், முடக்கப்பட்ட சொத்துக்கள் உரிமையாளரிடம் திருப்பித்தரப்படும் அல்லது அரசு ஏலம் விடும்.

--------6------------------------+-------