ஒரே நாளில் தீர்ப்பு!
உலகளவில் இந்திய உச்ச நீதிமன்றம் வழக்கு ஏற்று விசாரணை ஒருநாள் மட்டுமே நடத்தி மறுநாளே தீர்ப்பும் வழங்கி சாதனை புரிந்துள்ளது எத்தனை பேர்களுக்குத் தெரியும்?
நீட் தேர்வு வழக்குதான் அது.
வழக்கு நீதிபதி அனில் ஆர். தாவே தலைமையிலான மூன்று பேர் அடங்கிய அமர்வின் முன்பாக 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அடுத்த நாளே, அதாவது ஏப்ரல் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்தியாவில் மருத்துவக் கல்வியைக் கட்டுப்படுத்தும் இந்திய மருத்துவக் கவுன்சில் 2010 டிசம்பர் 21ஆம் தேதி ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதேபோல பல் மருத்துவக் கவுன்சிலும் 2012 மே 31ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. தேசிய அளவிலான தகுதித் தேர்வு ஒன்றை நடத்தில் அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் மூலமாகவே மருத்துவச் சேர்க்கையை நடத்த வேண்டுமென அந்த அறிக்கைகள் கூறின.
இந்த அறிக்கைகளை எதிர்த்து வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. இந்த இரு அறிவிப்புகளும் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளின் சேர்க்கை உரிமையைப் பறிப்பதாக குற்றம்சாட்டியது.
அதேபோல, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள், மருத்துவக் கவுன்சிலுக்கு இதுபோன்ற அறிக்கையை விடுவதற்கான அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தி தங்கள் மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடர்ந்தன. இந்த எல்லா வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்படுவதற்காக உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், விக்ரம்ஜித் சிங், அனில் ஆர். தாவே ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2013 ஜூலை 18ஆம் தேதி ஒரு தீர்ப்பை அளித்தது. இதில் அல்டமாஸ் கபீர், விக்ரம்ஜித் சிங் ஆகியோர் நீட் தேர்வுக்கு எதிராகவும் அனில் ஆர். தாவே நீட்டிற்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்தனர். இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கோ பல் மருத்துவக் கவுன்சிலுக்கோ மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைகளை கட்டுப்படுத்த அதிகாரம் இல்லை என பெரும்பான்மைத் தீர்ப்பு கூறியது.
தகுதியில்லாத மாணவர்கள் பெரிய அளவில் நன்கொடை அளித்து, மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடிப்பதை நீட் தேர்வு தடுக்கும் என நீதிபதி ஆனில் ஆர். தாவே தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு மருத்துவ இடங்களை விற்பதை தடுப்பதற்காகவே பொதுவான தகுதித் தேர்வு அவசியம் என அவர் கூறினார்.
ஆனால், தேசிய அளவில் தகுதித் தேர்வுகளை நடத்துவது என்பது மாநிலங்கள், மாநிலங்கள் நடத்தும் பல்கலைக்கழகங்கள் ஆகியவை தங்கள் விருப்பங்கள், முன்னுரிமைகளின் அடிப்படையில் மாணவர்களை மருத்துவப் படிப்புகளில் சேர்ப்பதைத் தடுக்கும் என பெரும்பான்மைத் தீர்ப்பு கூறியது.
மேலும் இந்தத் தீர்ப்பின் மூலம் தமிழ்நாடு அரசு இயற்றிய 2007ஆம் ஆண்டின் 3வது சட்டத்தை, மருத்துவக் கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சிலின் அறிக்கைகள் பாதிக்காது என்றும் கூறியது. "இந்த விதிமுறைகள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானவை. மேலும் இந்த அறிக்கைகள் டி.எம்.ஏ. பய் ஃபவுண்டேஷன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு முரணாக இருப்பதோடு, மாநிலங்கள் மற்றும் மாநிலங்கள் நடத்தும் பல்கலைக்கழகங்களின் உரிமைகளைப் பறிக்கின்றன" என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறியது.
ஆகவே, இந்தத் தீர்ப்பின் மூலம் மருத்துவக் கவுன்சிலும் பல் மருத்துவக் கவுன்சிலும் நீட் தேர்வை வலியுறுத்த முடியாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திய மருத்துவக் கவுன்சில் மேல் முறையீடு செய்தது. 2013ல் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்ப்பளித்திருந்த அல்டமாஸ் கபீரும் விக்ரம்ஜித் சிங்கும் அதற்குள் ஓய்வு பெற்றிருந்தனர். இதனால், நீட் தேர்வுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய அனில் ஆர். தாவே தலைமையில் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு உருவாக்கப்பட்டது. இந்த வழக்கு அந்த அமர்வுக்கு மாற்றப்பட்டது. 2016 ஏப்ரல் 11ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
"வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பைக் கவனமாக ஆராய்ந்தபோது, அதனை மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பது தெரியவந்தது. இந்தத் தருணத்தில் அதற்கான காரணங்களை விளக்க வேண்டிய அவசியம் இல்லையென நினைக்கிறோம்.
அந்தத் தீர்ப்பை அளிப்பதற்கு முன்பாக, அமர்வில் இருந்த நீதிபதிகளுக்குள் எந்த கலந்தாய்வும் நடக்கவில்லை. சரியான முன்னுதாரணங்கள் பின்பற்றப்படவில்லை. ஆகவே இந்த மறுசீராய்வு மனுக்கள் ஏற்கப்படுகின்றன. 2013ல் அளிக்கப்பட்ட தீர்ப்பு திரும்பப்பெறப்படுகிறது" எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஏழைகளுக்கும் மருத்துவக் கல்வியை அளிப்பதை நோக்கமாகச் சொல்லிக்கொள்ளும் சங்கிகள் நடத்தும் சங்கல்ப் சாரிட்டபிள் ட்ரஸ்ட் என்ற அமைப்பு ஒரு பொது நல மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், "2016-17ல் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கோரியது.
இந்த வழக்கு நீதிபதி அனில் ஆர். தாவே தலைமையிலான மூன்று பேர் அடங்கிய அமர்வின் முன்பாக 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அடுத்த நாளே, அதாவது ஏப்ரல் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீட் தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கருத்துகள் இந்த வழக்கில் கேட்கப்படவில்லை. மேலும், டி.எம்.ஏ. பய் ஃபவுண்டேஷன் தொடர்பான வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில்தான் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. டி.எம்.ஏ. பய் ஃபவுண்டேஷன் வழக்கில் 11 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்கியிருந்தது. அந்த வழக்கில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை அளிக்கும் பிரிவுகள், சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கு அந்தக் கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் போன்றவையெல்லாம் பரிசீலிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இருந்தபோதும், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வழக்கில் நீட்டிற்கு ஏதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு, திரும்பப் பெறப்பட்டதால், 2010 டிசம்பர் 21ஆம் தேதி இந்திய மருத்துவக் கவுன்சில் விடுத்த அறிவிப்பு தற்போது செயல்பாட்டில் இருக்கிறது என தீர்ப்பளிக்கப்பட்டது.
இப்படியாக, மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற விதி நடைமுறைக்கு வந்தது.