அமைச்சராகும் உதயநிதி
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேரன்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன்... கட்சியில் இளைஞர் அணி செயலாளர்,
சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்
திரைப்படத் தயாரிப்பாளர்
. இப்படி பலவற்றிக்கும் சொந்தக்காரர் உதயநிதி ஸ்டாலின்.
2006 - 2011 திமுக ஆட்சிக்காலத்தில் திரையுலக தயாரிப்பாளராக பொதுமக்களிடம் அறிமுகம் ஆனார் உதயநிதி ஸ்டாலின்.
Red Giant Movies என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி, குருவி, சிவா மனசுல சக்தி உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.
2009-ம் ஆண்டு வெளியான ஆதவன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராகவும் அறிமுகமானார் உதய். 2012-ல் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து, கதிர்வேலன் காதல், மனிதன், நண்பேண்டா, நெஞ்சுக்கு நீதி, கலக தலைவன் என்று வரிசையாக பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது மாமன்னன் படத்திலும்,
ராஜ்கமல் நிறுவனத்தின் பெயரிடப்படாத படத்திலும் நடிக்க உள்ளார்.
அரசியலைப் பொறுத்தவரை 2019-ல் திமுகவின் இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டார் உதயநிதி. 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.
தேர்தல் நேரத்தில் கலைஞரைப் போல் அடுக்குமொழியில் பிரச்சாரம், அனல் கக்கும் பொதுக்கூட்ட பேச்சுக்களை திமுகவில் இன்று யாரும் செய்ய முடியாத போது, மாறிவரும் தலைமுறைகளுக்கு ஏற்ப உதயநிதி தனது பிரச்சாரத்தை தனித்துவமான பாணியில் மேற்கொண்டார்.இவரது காமெடி கலந்த சமயோஜித பேச்சாற்றால் இளைஞர்களை மட்டுமல்லாது, பெரியவர்களையும் வெகுவாக கவர்ந்தது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் செய்த பிரச்சாரத்தில் குறிப்பிடத்தக்கது "ஒற்றை செங்கல்" பிரச்சாரம்.
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு, 93,285 வாக்குகள் பெற்று சட்டமன்ற உறுப்பினரானார் உதயநிதி.
இப்படியாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து வந்த உதயநிதி ஸ்டாலின், 2021-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், விக்ரம், லவ் டுடே உள்ளிட்ட பெரும்பாலான திரைப்படங்களை தயாரித்து, விநியோகமும் செய்து வருகிறார்.
2021 மே மாதம் முதல் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று தீர்மானம், கோரிக்கை என்று பல வடிவில் வலியுறுத்தினர் வந்தனர்.
இந்த நிலையில், திமுகவின் உட்கட்சி தேர்தலில் இளைஞரணி செயலாளராக இரண்டாவது முறையாக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக, தற்போது அமைச்சராக பொறுப்பேற்கிறார் உதயநிதிந ஸ்டாலின்...இவருக்காக, சட்டப்பேரவையில் பிரத்யேக அறை தயார் செய்யப்பட்டுள்ளது.
திரையுலகிலும், கட்சியிலும், சட்டமன்ற உறுப்பினராகவும் பல பொறுப்புகளை வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின் தற்போது, அமைச்சராக பயணத்தை தொடங்கியுள்ளார்.
--------------------------------------------------------------